கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...—பலன் தராத பைபிள் படிப்புகளை நிறுத்திவிடுங்கள்
ஏன் முக்கியம்: மீட்புப் பெற வேண்டுமென்றால், மக்கள் யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ள வேண்டும். (ரோ 10:13, 14) இருந்தாலும், பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளும் எல்லாரும் யெகோவாவின் தராதரங்களின்படி வாழ விரும்புவதில்லை. யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவுவதன் மூலம் நேரத்தைச் சிறந்த விதத்தில் செலவிடுகிறோம். போதுமான காலத்துக்குப் பிறகும், ஒருவர் நல்ல முன்னேற்றம் செய்யவில்லை என்றால், அவருக்கு பைபிள் படிப்பை நிறுத்துவது ஞானமானது. அதோடு, தன் பக்கமாகவும் தன் அமைப்பின் பக்கமாகவும் யெகோவா யாரை ஈர்க்கிறாரோ, அவர்களுக்கு உதவுவதற்காக நேரத்தைச் செலவு செய்வது ஞானமானது. (யோவா 6:44) ஒருவேளை, பைபிள் படிப்பு படிப்பவர் ‘முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையை’ எதிர்காலத்தில் காட்டினால் மறுபடியும் படிப்பை ஆரம்பிக்கலாம்.—அப் 13:48.
எப்படிச் செய்வது:
-
திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதற்காக அவரைப் பாராட்டுங்கள்.—1தீ 2:4
-
கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரியவையுங்கள்.—லூ 6:46-49
-
இயேசு சொன்ன விதைக்கிறவனைப் பற்றிய உவமையை அவரோடு கலந்துபேசுங்கள். மாற்றங்கள் செய்யாதபடி எது அவரைத் தடுக்கிறது என்று யோசித்துப்பார்க்கும்படி அவரிடம் சொல்லுங்கள்.—மத் 13:18-23.
-
பைபிள் படிப்பை நீங்கள் ஏன் நிறுத்தப்போகிறீர்கள் என்பதைச் சாதுரியமாகச் சொல்லுங்கள்
-
அவரை உற்சாகப்படுத்துவதற்காக அவ்வப்போது அவரைச் சந்திப்பீர்கள் என்றும், அவர் மாற்றங்களைச் செய்தால் திரும்பவும் பைபிள் படிப்பைத் தொடர்வீர்கள் என்றும் சொல்லுங்கள்
வீடியோவைப் பார்த்த பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
பைபிள் படிப்பு படிப்பவர் மாற்றங்களைச் செய்யவில்லை என்பது அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து எப்படித் தெரிகிறது?
-
மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள, பைபிள் படிப்பு படிப்பவருக்கு அந்தப் பிரஸ்தாபி எப்படி உதவினார்?
-
எதிர்காலத்தில் மறுபடியும் பைபிள் படிப்பைத் தொடருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை அந்தப் பிரஸ்தாபி எப்படித் தெரியப்படுத்தினார்?