தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம் 1:1-18

  • வாழ்த்துக்கள் (1, 2)

  • தீமோத்தேயுவின் விசுவாசத்துக்காகக் கடவுளுக்கு பவுல் நன்றி சொல்கிறார் (3-5)

  • கடவுள் தந்த வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இரு (6-11)

  • பயனுள்ள வார்த்தைகளை மாதிரியாக வைத்துப் பின்பற்று (12-14)

  • பவுலின் எதிரிகளும் நண்பர்களும் (15-18)

1  கிறிஸ்து இயேசுவின் மூலம் கிடைக்கிற வாழ்வைப்+ பற்றிய வாக்குறுதியை அறிவிக்கும்படி, கடவுளுடைய விருப்பத்தால்* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கிற பவுல்,  அன்பான பிள்ளை தீமோத்தேயுவுக்கு+ எழுதுவது: பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்தும் நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் உனக்கு அளவற்ற கருணையும் இரக்கமும் சமாதானமும் கிடைக்கட்டும்.  சுத்தமான மனசாட்சியோடு என் முன்னோர்களைப் போல் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்துவருகிற நான், அவருக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் அவரிடம் இரவும் பகலும் மன்றாடியபோது உன்னை நினைக்காமல் இருந்ததே இல்லை.  நீ கண்ணீர் விட்டது என் ஞாபகத்தில் இருக்கிறது, அதனால் உன்னைப் பார்க்க வேண்டுமென்று ஏங்குகிறேன். அப்போதுதான் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.  வெளிவேஷமில்லாத உன் விசுவாசம்+ என் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படிப்பட்ட விசுவாசம் முதலில் உன் பாட்டி லோவிசாளுக்கும் உன் அம்மா ஐனிக்கேயாளுக்கும் இருந்தது; அது உனக்கும் இருக்கிறதென்று உறுதியாக நம்புகிறேன்.  அதனால்தான், உன்மேல் நான் கைகளை வைத்தபோது கடவுள் உனக்குக் கொடுத்த அந்த வரத்தை நெருப்புபோல் மூட்டிவிட்டுக்கொண்டே இருக்கும்படி உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்.+  கடவுள் தருகிற சக்தி* நமக்குக் கோழைத்தனத்தை அல்ல,+ வல்லமையையும்+ அன்பையும் தெளிந்த புத்தியையும் கொடுக்கிறது.  அதனால், நம்முடைய எஜமானுக்காகச் சாட்சி கொடுப்பதை நினைத்து வெட்கப்படாதே,+ அவருக்காகக் கைதியாக இருக்கிற என்னை நினைத்தும் வெட்கப்படாதே. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வல்லமையில் சார்ந்திருந்து+ நல்ல செய்திக்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்.+  அவர் நம்முடைய செயல்களால் அல்ல, தன்னுடைய சொந்த நோக்கத்தாலும் அளவற்ற கருணையாலும் நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்,+ பரிசுத்தவான்களாக அழைத்திருக்கிறார்;+ அவருடைய அளவற்ற கருணை பல காலத்துக்கு முன்பே கிறிஸ்து இயேசுவின் மூலம் நமக்குக் கொடுக்கப்பட்டது. 10  இப்போதோ, நம்முடைய மீட்பரான கிறிஸ்து இயேசு தோன்றியதன் மூலம்+ அது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர் மரணத்தை ஒழித்து,+ வாழ்வையும்+ அழியாமையையும்+ பெறுவதற்கான வழியை நல்ல செய்தியின் மூலம்+ நமக்குத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்; 11  அந்த நல்ல செய்தியின் பிரசங்கிப்பாளனாகவும் அப்போஸ்தலனாகவும் ஆசிரியனாகவும் நான் நியமிக்கப்பட்டேன்.+ 12  இதனால்தான் கஷ்டத்தை அனுபவிக்கிறேன்,+ ஆனால் அதற்காக வெட்கப்பட மாட்டேன்.+ ஏனென்றால், நான் நம்புகிற கடவுளை எனக்கு நன்றாகத் தெரியும், நான் அவரிடம் ஒப்படைத்திருப்பதை நியாயத்தீர்ப்பு நாள்வரை அவர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.+ 13  என்னிடமிருந்து நீ கற்றுக்கொண்ட பயனுள்ள* வார்த்தைகளை+ மாதிரியாக வைத்து, இவற்றைப் பின்பற்றிக்கொண்டே இரு. கிறிஸ்து இயேசுமேல் வைத்திருக்கிற விசுவாசத்தாலும் அன்பாலும் அப்படிச் செய். 14  உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிற அருமையான இந்தப் பொக்கிஷத்தை நமக்குள் குடியிருக்கிற கடவுளுடைய சக்தியால் காத்துக்கொள்.+ 15  பிகெல்லு, எர்மொகெனே ஆகியோர் உட்பட ஆசிய மாகாணத்தில்+ இருக்கிற எல்லாரும் என்னைவிட்டு விலகிவிட்டார்கள் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். 16  ஒநேசிப்போருவின்+ வீட்டாருக்கு நம் எஜமான் இரக்கம் காட்டட்டும்; ஏனென்றால், அவர் எனக்குப் பல தடவை புத்துணர்ச்சி கொடுத்தார்; நான் கைதியாக இருப்பதை நினைத்து அவர் வெட்கப்படவில்லை. 17  அதற்குப் பதிலாக, அவர் ரோமுக்கு வந்திருந்தபோது, அதிக முயற்சி எடுத்து என்னைத் தேடிக் கண்டுபிடித்தார். 18  நியாயத்தீர்ப்பு நாளில் நம் எஜமானாகிய யெகோவா* அவருக்கு இரக்கம் காட்டட்டும். எபேசுவில் அவர் செய்த எல்லா சேவைகளும் உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சித்தத்தால்.”
வே.வா., “மனப்பான்மை.”
வே.வா., “ஆரோக்கியமான.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.