யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல் 12:1-17

  • பெண், ஆண் குழந்தை, ராட்சதப் பாம்பு (1-6)

  • மிகாவேலுக்கும் ராட்சதப் பாம்புக்கும் போர் (7-12)

    • ராட்சதப் பாம்பு பூமிக்குத் தள்ளப்படுகிறது (9)

    • கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று பிசாசுக்குத் தெரியும் (12)

  • ராட்சதப் பாம்பு பெண்ணைக் கொடுமைப்படுத்துகிறது (13-17)

12  பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண்,+ சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன.  அவள் கர்ப்பிணியாக இருந்தாள்; பிரசவ வேதனைப்பட்டு, வலியில் கதறிக்கொண்டிருந்தாள்.  பரலோகத்தில் இன்னொரு அடையாளம் தோன்றியது. இதோ! சிவப்புநிற ராட்சதப் பாம்பு+ இருந்தது; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதன் தலைகளில் மொத்தம் ஏழு மகுடங்கள் இருந்தன.  அதன் வால், வானத்து நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கை+ இழுத்து பூமியின் மீது போட்டது.+ அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தவுடன் அதை விழுங்குவதற்காக அந்த ராட்சதப் பாம்பு அவள் முன்னால் நின்றுகொண்டே இருந்தது.+  எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிற* ஓர் ஆண் குழந்தையை,+ ஓர் ஆண்மகனை, அவள் பெற்றெடுத்தாள்.+ கடவுளிடமும் அவருடைய சிம்மாசனத்திடமும் அவளுடைய குழந்தை எடுத்துக்கொள்ளப்பட்டது.  அந்தப் பெண் வனாந்தரத்துக்கு ஓடிப்போனாள்; அங்கே 1,260 நாட்கள் அவளுக்கு உணவு கொடுக்கப்படுவதற்காக ஓர் இடத்தைக் கடவுள் ஏற்பாடு செய்திருந்தார்.+  பரலோகத்தில் போர் ஆரம்பித்தது. மிகாவேலும்*+ அவருடைய தூதர்களும் ராட்சதப் பாம்போடு போர் செய்தார்கள். அந்த ராட்சதப் பாம்பும் அதனுடைய தூதர்களும் எதிர்த்துப் போர் செய்தார்கள்.  ஆனால் வெற்றி பெறவில்லை;* அதன் பின்பு பரலோகத்தில் அவர்களுக்கு இடமில்லாமல் போனது.  உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற+ பழைய பாம்பாகிய+ ராட்சதப் பாம்பு,+ அதாவது பிசாசு+ என்றும் சாத்தான்+ என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்;+ அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள். 10  அப்போது, பரலோகத்தில் ஓர் உரத்த குரல், “இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது!+ அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது!+ அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது! நம் கடவுளுக்கு முன்னால் இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம்சாட்டுகிறவன்+ கீழே தள்ளப்பட்டுவிட்டான்! 11  ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும்,+ தாங்கள் சாட்சியாகச் சொன்ன செய்தியாலும்+ அவர்கள் அவனை ஜெயித்தார்கள்.+ சாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையிலும் தங்களுடைய உயிர்மீது ஆசை வைக்கவில்லை.+ 12  இதன் காரணமாக, பரலோகங்களே, அவற்றில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷப்படுங்கள்! பூமிக்கும் கடலுக்கும் ஐயோ, கேடு!+ ஏனென்றால், பிசாசு தனக்குக் கொஞ்சக் காலம்தான் இருக்கிறது என்று தெரிந்து பயங்கர கோபத்தோடு உங்களிடம் வந்திருக்கிறான்”+ என்று சொல்வதைக் கேட்டேன். 13  தான் பூமிக்குத் தள்ளப்பட்டதை உணர்ந்த ராட்சதப் பாம்பு,+ ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அந்தப் பெண்ணைக் கொடுமைப்படுத்தியது.+ 14  ஆனால், ராட்சதப் பாம்பின்+ முகத்துக்கு விலகி வனாந்தரத்தில் தன்னுடைய இடத்துக்குப் பறந்துபோவதற்காக மிகப் பெரிய கழுகின் இரண்டு சிறகுகள்+ அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டன. அங்கே அவளுக்கு ஒரு காலத்துக்கும் இரண்டு காலங்களுக்கும் அரைக் காலத்துக்கும்* உணவு கொடுக்கப்படவிருந்தது.+ 15  அந்தப் பெண்ணை வெள்ளத்தில் மூழ்கடிப்பதற்காக ராட்சதப் பாம்பு தன்னுடைய வாயிலிருந்து தண்ணீரை ஆறுபோல் அவள் பின்னால் பாய வைத்தது. 16  ஆனால், பூமி அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தது. அது தன் வாயைத் திறந்து, அந்தப் பாம்பின் வாயிலிருந்து பாய்ந்துவந்த வெள்ளத்தைக் குடித்தது. 17  அப்போது, ராட்சதப் பாம்பு அந்தப் பெண்மீது பயங்கர கோபமடைந்து, அவளுடைய சந்ததியில்+ மீதியாக இருக்கிறவர்களோடு, அதாவது கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கும் வேலையைச் செய்கிறவர்களோடு, போர் செய்யப் போனது.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “மேய்க்கப்போகிற.”
அர்த்தம், “கடவுளைப் போன்றவர் யார்?”
அல்லது, “அது [அதாவது, ராட்சதப் பாம்பு] தோற்கடிக்கப்பட்டது.”
அதாவது, “மூன்றரைக் காலங்களுக்கு.”