லூக்கா எழுதியது 5:1-39

  • அற்புதமாக மீன் பிடிக்கிறார்கள்; முதல் சீஷர்கள் (1-11)

  • தொழுநோயாளி குணமாக்கப்படுகிறான் (12-16)

  • பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனை இயேசு குணமாக்குகிறார் (17-26)

  • லேவியை இயேசு கூப்பிடுகிறார் (27-32)

  • விரதம் இருப்பதைப் பற்றிய கேள்வி (33-39)

5  ஒருசமயம் கெனேசரேத்து ஏரி*+ பக்கத்தில் நின்று கடவுளுடைய வார்த்தையை அவர் கற்பித்துக்கொண்டிருந்தார்; அதைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தார் அவரை நெருக்கித்தள்ள ஆரம்பித்தார்கள்.  அப்போது, ஏரிக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகளை அவர் பார்த்தார். மீனவர்கள் அவற்றைவிட்டு இறங்கி தங்களுடைய வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.+  அந்தப் படகுகள் ஒன்றில் அவர் ஏறினார், அது சீமோனுடைய படகு; அதைக் கரையிலிருந்து சற்றுத் தள்ளும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். பின்பு, அந்தப் படகில் உட்கார்ந்துகொண்டே கூட்டத்தாருக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்.  அவர் பேசி முடித்தபோது சீமோனிடம், “ஆழமான இடத்துக்குப் படகைக் கொண்டுபோய், உங்கள் வலைகளைப் போட்டு மீன்பிடியுங்கள்” என்று சொன்னார்.  ஆனால் சீமோன் அவரைப் பார்த்து, “போதகரே, ராத்திரி முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றுமே கிடைக்கவில்லை;+ இருந்தாலும், நீங்கள் சொல்வதால் வலைகளைப் போடுகிறேன்” என்று சொன்னார்.  அதன்படியே, அவர்கள் வலைகளைப் போட்டபோது ஏராளமான மீன்கள் சிக்கின. சொல்லப்போனால், அவர்களுடைய வலைகளே கிழிய ஆரம்பித்தன.+  அதனால், இன்னொரு படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளிடம் சைகை காட்டி உதவிக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள், அப்போது அவை மூழ்கிவிடும்போல் ஆகிவிட்டன.  இதைப் பார்த்து சீமோன் பேதுரு இயேசுவின் காலில் விழுந்து, “எஜமானே, நான் ஒரு பாவி, என்னைவிட்டுப் போய்விடுங்கள்” என்று சொன்னார்.  அத்தனை மீன்களைப் பிடித்ததைப் பார்த்து அவரும் அவரோடு இருந்தவர்களும் மலைத்துப்போயிருந்தார்கள். 10  சீமோனுடைய கூட்டாளிகளான செபெதேயுவின் மகன்கள் யாக்கோபும் யோவானும்கூட+ மலைத்துப்போயிருந்தார்கள். ஆனால் சீமோனிடம் இயேசு, “பயப்படாதே. இனிமேல் நீ மனுஷர்களை உயிரோடு பிடிப்பாய்”+ என்று சொன்னார். 11  அவர்கள் தங்களுடைய படகுகளைக் கரைசேர்த்த பின்பு, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிப் போனார்கள்.+ 12  இன்னொரு சமயம் அவர் ஒரு நகரத்தில் இருந்தபோது, உடல் முழுவதும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவன் வந்தான். அவன் இயேசுவைப் பார்த்ததும் அவர் முன்னால் விழுந்து, “ஐயா, உங்களுக்கு விருப்பம் இருந்தால், என்னைச் சுத்தமாக்க முடியும்” என்று சொல்லிக் கெஞ்சினான்.+ 13  அப்போது, அவர் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் இருக்கிறது, நீ சுத்தமாகு” என்று சொன்னார். உடனே தொழுநோய் அவனைவிட்டு மறைந்தது.+ 14  இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவனுக்குக் கட்டளை கொடுத்தார். “ஆனால், குருமாரிடம் போய் உன்னைக் காட்டு; நீ சுத்தமானதற்காக, மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்”+ என்று சொல்லி அனுப்பினார். 15  அப்படியிருந்தும், அவரைப் பற்றிய செய்தி அதிகமாகத்தான் பரவியது. அவர் பேசுவதைக் கேட்பதற்கும், நோய்களிலிருந்து குணமாவதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரிடம் வந்தார்கள்.+ 16  ஆனால், அவர் ஜெபம் செய்வதற்காக அடிக்கடி தனிமையான இடங்களுக்குப் போனார். 17  ஒருநாள் அவர் மக்களுக்குக் கற்பித்துக்கொண்டிருந்தபோது, கலிலேயாவிலும் யூதேயாவிலும் இருக்கிற எல்லா கிராமங்களிலிருந்தும் எருசலேம் நகரத்திலிருந்தும் வந்த பரிசேயர்களும் திருச்சட்டப் போதகர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; மக்களைக் குணமாக்குவதற்கு யெகோவாவின்* வல்லமை அவரிடம் இருந்தது.+ 18  அப்போது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சில ஆட்கள் படுக்கையோடு தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை உள்ளே கொண்டுபோய் இயேசுவின் முன்னால் வைப்பதற்காக அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.+ 19  கூட்டம் அதிகமாக இருந்ததால் அவனை உள்ளே கொண்டுபோக வழி கிடைக்கவில்லை; அதனால் வீட்டுக்கூரையின் மேல் ஏறி, ஓடுகள் வழியாக அவனைப் படுக்கையோடு சேர்த்து இயேசுவுக்கு முன்பாகக் கூட்டத்தின் நடுவில் இறக்கினார்கள். 20  அவர்களுடைய விசுவாசத்தை அவர் பார்த்தபோது, “மனுஷனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார். 21  இதைக் கேட்ட வேத அறிஞர்களும் பரிசேயர்களும், “தெய்வ நிந்தனை செய்கிற இவன் யார்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?”+ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். 22  ஆனால் இயேசு அவர்களுடைய யோசனையைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் என்ன யோசிக்கிறீர்கள்? 23  ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வது சுலபமா? 24  ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனிதகுமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ”+ என்று சொன்னார். 25  அவன் உடனே அவர்கள் முன்பாக எழுந்து, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு, கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டே தன் வீட்டுக்குப் போனான். 26  அதைப் பார்த்த எல்லாரும் பிரமித்துப்போய், கடவுளை மகிமைப்படுத்தினார்கள்; அதேசமயத்தில் மிகுந்த பயபக்தியோடு, “இன்றைக்கு எப்பேர்ப்பட்ட அதிசயங்களைப் பார்த்தோம்!” என்று பேசிக்கொண்டார்கள். 27  இதற்குப் பின்பு அவர் வெளியே போய், வரி வசூலிக்கும் அலுவலகத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; வரி வசூலிப்பவரான அவரிடம், “என்னைப் பின்பற்றி வா”+ என்று சொன்னார். 28  அவர் எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார். 29  அதோடு, அவர் தன்னுடைய வீட்டில் இயேசுவுக்காக ஒரு பெரிய விருந்து வைத்தார்; வரி வசூலிப்பவர்கள் பலரும் மற்றவர்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.+ 30  அப்போது, பரிசேயர்களும் அவர்களுடைய வேத அறிஞர்களும் அவருடைய சீஷர்களிடம் முணுமுணுத்து, “நீங்கள் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிட்டுக் குடிக்கிறீர்கள்”+ என்று கேட்டார்கள். 31  அதற்கு இயேசு, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.+ 32  நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்”+ என்று அவர்களிடம் சொன்னார். 33  அப்போது அவர்கள், “யோவானுடைய சீஷர்கள் அடிக்கடி விரதமிருந்து, மன்றாடி ஜெபம் செய்கிறார்கள்; பரிசேயர்களுடைய சீஷர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால், உன்னுடைய சீஷர்கள் சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே”+ என்று அவரிடம் சொன்னார்கள். 34  அதற்கு இயேசு, “மணமகன் தங்களோடு இருக்கும்போது அவருடைய நண்பர்களை விரதமிருக்கச் செய்ய உங்களால் முடியாது, இல்லையா? 35  ஆனால், மணமகன்+ உண்மையிலேயே அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும், அப்போது அவர்கள் விரதம் இருப்பார்கள்”+ என்று சொன்னார். 36  அதோடு, அவர்களுக்கு ஓர் உவமையையும் சொன்னார்; “யாருமே புதிய உடையிலிருந்து ஒரு துண்டுத் துணியைக் கிழித்து பழைய உடையில் ஒட்டுப்போட மாட்டார்கள். அப்படிச் செய்தால், அந்தப் புதிய ஒட்டுத்துணி கிழிந்துவிடும், பழைய உடைக்கு அது பொருத்தமாகவும் இருக்காது.+ 37  அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படிச் செய்தால், புதிய திராட்சமது அந்தப் பைகளை வெடிக்க வைத்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். 38  அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்க வேண்டும். 39  பழைய திராட்சமதுவைக் குடித்த எவனும் புதிய திராட்சமதுவை விரும்ப மாட்டான்; ‘பழையதுதான் நன்றாக இருக்கிறது’ என்று சொல்வான்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “கலிலேயா கடல்.”
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.