மாற்கு எழுதியது 4:1-41
4 இயேசு மறுபடியும் கடலோரத்தில் கற்பிக்க ஆரம்பித்தார். அப்போது, ஏராளமான மக்கள் அவருக்குப் பக்கத்தில் திரண்டு வந்ததால், அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார். மக்கள் எல்லாரும் கரையில் இருந்தார்கள்.+
2 அப்போது, உவமைகளால்+ நிறைய விஷயங்களை அவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார். அப்படிக் கற்பித்தபோது,+
3 “கேளுங்கள்; விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.+
4 அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.
5 வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.+
6 அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின.
7 இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன, அதனால் அவை எந்தப் பலனையும் தரவில்லை.+
8 மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன; அவை முளைத்து, பெரிதாக வளர்ந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவை 30 மடங்காகவும் 60 மடங்காகவும் 100 மடங்காகவும் பலன் தந்தன”+ என்று சொன்னார்.
9 இப்படிச் சொல்லிவிட்டு, “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்றார்.
10 மக்கள் எல்லாரும் அங்கிருந்து போன பின்பு, அவரைச் சுற்றியிருந்த சில சீஷர்களும் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் அவரிடம் அந்த உவமைகளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தார்கள்.+
11 அதற்கு அவர், “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியம்+ உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது; ஆனால் மற்றவர்களுக்கு எல்லா விஷயங்களும் உவமைகளாகவே சொல்லப்படுகின்றன.+
12 அவர்கள் கண்ணால் பார்த்தும் உணர்ந்துகொள்ளாதபடிக்கும், காதால் கேட்டும் புரிந்துகொள்ளாதபடிக்கும், என்னிடம் திரும்பி வந்து மன்னிப்பு பெறாதபடிக்கும்+ அவை உவமைகளாகவே சொல்லப்படுகின்றன” என்று சொன்னார்.
13 பின்பு அவர்களிடம், “இந்த உவமையையே நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், மற்ற எல்லா உவமைகளையும் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
14 விதைக்கிறவன் கடவுளுடைய செய்தியை விதைக்கிறான்.+
15 பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்; ஆனால், அவர்களுக்குள் விதைக்கப்பட்ட அந்தச் செய்தியைச் சாத்தான் வந்து+ உடனடியாக எடுத்துவிடுகிறான்.+
16 பாறை நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டதும் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள்.+
17 ஆனால், அவர்களுக்குள் அது வேர்விடுவதில்லை; அதனால், அவர்கள் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்கள்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார்கள்.
18 முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர்கள் அந்தச் செய்தியைக் கேட்கிறார்கள்.+
19 ஆனால், இந்த உலகத்தின்* கவலைகளும்,+ செல்வத்தின் வஞ்சக சக்தியும்,+ மற்ற ஆசைகளும்+ இதயத்துக்குள் புகுந்து அந்தச் செய்தியை நெருக்கிப் போடுகின்றன, அதனால் அது பலன் கொடுக்காமல் போகிறது.
20 நல்ல நிலத்தைப் போல் இருப்பவர்களோ அந்தச் செய்தியைக் காதுகொடுத்துக் கேட்டு, அதை மனதார ஏற்றுக்கொண்டு, 30 மடங்காகவும் 60 மடங்காகவும் 100 மடங்காகவும் பலன் கொடுக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
21 அதோடு அவர் அவர்களிடம், “ஒரு விளக்கைக் கொண்டுவந்து யாராவது கூடையால் மூடி வைப்பார்களா அல்லது கட்டிலுக்குக் கீழே வைப்பார்களா? விளக்குத்தண்டின் மேல்தானே வைப்பார்கள்?+
22 மூடி வைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, மறைத்து வைக்கப்படுகிற எதுவும் அம்பலமாகாமல் போகாது.+
23 கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று சொன்னார்.
24 அதோடு, “நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள்.+ எந்த அளவையால் அளந்து கொடுக்கிறீர்களோ அதே அளவையால்தான் உங்களுக்கும் அளந்து கொடுக்கப்படும், அதற்கு அதிகமாகவும் கொடுக்கப்படும்.
25 இருக்கிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கப்படும்;+ ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்”+ என்று சொன்னார்.
26 அதோடு அவர்களிடம், “கடவுளுடைய அரசாங்கம், தன் நிலத்தில் விதையைத் தூவுகிற ஒருவனைப் போல் இருக்கிறது.
27 அவன் ஒவ்வொரு ராத்திரியும் தூங்கிவிட்டுக் காலையில் வந்து பார்க்கும்போது, அவனுக்கே தெரியாமல் அந்த விதை முளைத்துப் பெரிதாக வளருகிறது.
28 அந்த நிலம் தானாகவே படிப்படியாகப் பலன் தருகிறது; முதலில் தண்டையும், பின்பு இளங்கதிரையும், கடைசியில் முற்றிய கதிரையும் தருகிறது.
29 பயிர் விளைந்து அறுவடைக் காலம் வந்தவுடன், அவன் அதை அரிவாளால் அறுக்கிறான்” என்று சொன்னார்.
30 அதோடு, “கடவுளுடைய அரசாங்கம் எதைப் போல் இருக்கிறது, எந்த உவமையின் மூலம் அதை விளக்கலாம்?
31 அது கடுகு விதையைப் போல் இருக்கிறது, நிலத்தில் விதைக்கப்படும்போது பூமியில் இருக்கிற எல்லா விதைகளையும்விட அது மிகச் சிறியதாக இருக்கிறது.+
32 ஆனால் விதைக்கப்பட்ட பின்பு, அது முளைத்து, மற்ற எல்லா செடிகளையும்விட பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கும் அளவுக்குப் பெரிய கிளைகளை விடுகிறது” என்று சொன்னார்.
33 அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்றபடி இதுபோன்ற பல உவமைகள்+ மூலம் கடவுளுடைய வார்த்தையை அவர்களிடம் பேசினார்.
34 சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை; ஆனால், சீஷர்களோடு தனியாக இருந்தபோது எல்லா விஷயங்களையும் விளக்கினார்.+
35 அன்று சாயங்காலத்தில், “அக்கரைக்குப் போகலாம் வாருங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார்.
36 அதனால் கூட்டத்தை அவர்கள் அனுப்பிவிட்டு, அவர் உட்கார்ந்திருந்த படகிலேயே அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்; அந்தப் படகுடன் வேறு சில படகுகளும் சென்றன.+
37 அப்போது, படுபயங்கரமான புயல்காற்று வீச ஆரம்பித்தது; அலைகள் படகின் மேல் வேகமாக மோதிக்கொண்டிருந்ததால், படகு கிட்டத்தட்ட மூழ்கிவிடும் நிலையில் இருந்தது.+
38 ஆனால், அவர் படகின் பின்புறத்தில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாம் சாகப்போகிறோம்! உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று கேட்டார்கள்.
39 அப்போது, அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலைப் பார்த்து, “உஷ்! அமைதியாக இரு!”+ என்று சொன்னார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது.
40 அதன் பின்பு, “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? இன்னும் உங்களுக்கு விசுவாசம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார்.
41 ஆனால் அவர்கள் பீதியடைந்து, “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!”+ என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.