மத்தேயு எழுதியது 5:1-48

  • மலைப் பிரசங்கம் (1-48)

    • மலைமேல் இயேசு கற்பிக்க ஆரம்பிக்கிறார் (1, 2)

    • ஒன்பது சந்தோஷங்கள் (3-12)

    • உப்பும் ஒளியும் (13-16)

    • திருச்சட்டத்தை இயேசு நிறைவேற்றுவார் (17-20)

    • கோபப்படுவது (21-26), முறைகேடாக உறவுகொள்வது (27-30), விவாகரத்து செய்வது (31, 32), சத்தியம் செய்வது (33-37), பழிக்குப் பழி வாங்குவது (38-42), எதிரிகளிடம் அன்பு காட்டுவது (43-48) சம்பந்தமான அறிவுரைகள்

5  அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைமேல் ஏறினார்; அவர் உட்கார்ந்த பின்பு, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள்.  அப்போது, அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அவர்களிடம்,  “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்* சந்தோஷமானவர்கள்,+ ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.  துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.+  சாந்தமாக*+ இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.*+  நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும்.+  இரக்கம் காட்டுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்.  சுத்தமான இதயமுள்ளவர்கள்+ சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள்.  சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். 10  நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது. 11  நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும்,+ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும்,+ உங்களைத் துன்புறுத்தும்போதும்+ சந்தோஷப்படுங்கள். 12  மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள்,+ ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்;+ உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்.+ 13  நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்;+ உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மறுபடியும் சுவை சேர்க்க முடியும்? வெளியே கொட்டப்பட்டு,+ மனுஷர்களால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறு எதற்கும் அது உதவாது. 14  நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள்.+ மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது. 15  மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும்.+ 16  அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+ 17  திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே வந்தேன்.+ 18  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும்.+ 19  அதனால், திருச்சட்டத்திலுள்ள ஒரு சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டான்.* ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெறுவான்.* 20  நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும்விட நீங்கள் அதிக நீதியுள்ளவர்களாக இல்லையென்றால்,+ ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டீர்கள்.+ 21  ‘கொலை செய்யக் கூடாது,+ கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 22  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன்மேல்* கடும் கோபமாகவே+ இருக்கிறவன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; கேவலமான வார்த்தைகளால் தன் சகோதரனை அவமதிக்கிறவன் உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; ‘கேடுகெட்ட முட்டாளே!’ என்று சொல்கிறவனோ கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள்*+ தள்ளப்பட வேண்டியிருக்கும். 23  அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது+ உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், 24  அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.+ 25  உங்கள்மேல் ஒருவன் வழக்கு போட்டால், நீதிமன்றத்துக்குப் போகும் வழியிலேயே அவனோடு சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்; இல்லையென்றால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலாளியிடம் ஒப்படைப்பார், பின்பு நீங்கள் சிறையில் தள்ளப்படுவீர்கள்.+ 26  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட* உங்கள் கையில் மிஞ்சாது. 27  ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’+ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன்+ அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான்.*+ 29  உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு.+ உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள்* வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.+ 30  உன் வலது கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு.+ உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள்* தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.+ 31  ‘தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் விவாகரத்துப் பத்திரத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டது.+ 32  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை* தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், வேறொருவனோடு முறைகேடான உறவுகொள்ள அவளுக்குச் சந்தர்ப்பம் அளித்துவிடுகிறான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்கிறவன் அவளோடு முறைகேடான உறவுகொள்கிறான்.+ 33  அதோடு, ‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது;+ யெகோவாவிடம்* நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’+ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34  ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்;+ பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது கடவுளுடைய சிம்மாசனம்; 35  பூமியின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது அவருடைய கால்மணை;+ எருசலேமின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது மகா ராஜாவின் நகரம்.+ 36  உங்கள் தலையின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் உங்கள் தலையில் இருக்கிற ஒரு முடியைக்கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது. 37  நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும்.+ இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே+ வருகிறது. 38  ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 39  ஆனால் நான் சொல்கிறேன், அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள்.+ 40  ஒருவன் உங்கள்மேல் வழக்கு போட்டு உங்கள் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள்.+ 41  அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல்* தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள். 42  உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க* வருகிறவரைப்+ பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள். 43  ‘மற்றவர்கள்மேல்* அன்பு காட்ட வேண்டும், ஆனால் எதிரியை வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.+ 44  ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள்,+ உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ 45  இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக+ இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார்.+ 46  உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், என்ன பிரயோஜனம்?+ வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 47  உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொன்னால், அதில் என்ன விசேஷம்? உலக மக்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 48  அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்”+ என்றார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “தங்களுடைய ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள்; கடவுளுடைய சக்திக்காகப் பிச்சை கேட்கிறவர்கள்.”
வே.வா., “தாழ்மையாக.”
வே.வா., “பூமியை அவர்கள் ஆஸ்தியாகப் பெறுவார்கள்.”
நே.மொ., “பரலோக அரசாங்கத்தைப் பொறுத்தவரை ‘உயர்ந்தவன்’ என்று அழைக்கப்படுவான்.”
நே.மொ., “பரலோக அரசாங்கத்தைப் பொறுத்தவரை ‘சிறியவன்’ என்று அழைக்கப்படுவான்.”
அதாவது, “சக வணக்கத்தார்மேல்.”
நே.மொ., “கடைசி குவாட்ரன்கூட.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “வட்டியில்லாமல் கடன் வாங்க.”
வே.வா., “சக மனிதர்மேல்.”