மத்தேயு எழுதியது 13:1-58

  • பரலோக அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள் (1-52)

    • விதைப்பவர் (1-9)

    • இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கான காரணம் (10-17)

    • விதைப்பவரைப் பற்றிய உவமையின் அர்த்தம் (18-23)

    • கோதுமைப் பயிர்களும் களைகளும் (24-30)

    • கடுகு விதையும் புளித்த மாவும் (31-33)

    • உவமைகளைப் பயன்படுத்தியது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (34, 35)

    • கோதுமைப் பயிர்கள், களைகள் பற்றிய உவமையின் விளக்கம் (36-43)

    • புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷமும் அருமையான முத்தும் (44-46)

    • இழுவலை (47-50)

    • புதிய பொக்கிஷங்களும் பழைய பொக்கிஷங்களும் (51, 52)

  • சொந்த ஊர்க்காரர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை (53-58)

13  அதே நாளில் இயேசு வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக உட்கார்ந்திருந்தார்.  மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கே திரண்டு வந்ததால், அவர் ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; அந்த மக்கள் எல்லாரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+  அப்போது, உவமைகள் மூலம் அவர்களுக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார்.+ “இதோ! விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் போனான்.+  அவன் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன.+  வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன; அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் வேர்பிடிக்கவில்லை.+  அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கி காய்ந்துபோயின.  இன்னும் சில விதைகள் முட்செடிகள் இருக்கிற நிலத்தில் விழுந்தன; அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன.+  மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தர ஆரம்பித்தன; அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன.+  காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”+ என்று சொன்னார். 10  சீஷர்கள் அவரிடம் வந்து, “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.+ 11  அதற்கு அவர், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது,+ ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 12  இருக்கிறவனுக்கு அதிகமாகக் கொடுக்கப்படும், அவன் ஏராளமாகப் பெற்றுக்கொள்வான்; ஆனால், இல்லாதவனிடமிருந்து இருப்பதும் எடுத்துக்கொள்ளப்படும்.+ 13  அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும், புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள்.+ அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். 14  ஏசாயா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களிடம் நிறைவேறுகிறது: ‘காதால் கேட்டாலும் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்; கண்ணால் பார்த்தாலும் ஒருபோதும் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்.+ 15  இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும் காதுகளால் கேட்காமலும் இதயத்தால் உணராமலும் என்னிடம் திரும்பி வராமலும் நான் அவர்களைக் குணப்படுத்தாமலும் இருக்கும்படி, அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது; இவர்கள் தங்கள் காதால் மந்தமாய்க் கேட்கிறார்கள், தங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.’+ 16  ஆனால், உங்களுடைய கண்கள் பார்ப்பதாலும் உங்களுடைய காதுகள் கேட்பதாலும் நீங்கள் சந்தோஷமானவர்கள்.+ 17  உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நிறைய தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க ஆசைப்பட்டும் பார்க்கவில்லை;+ நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க ஆசைப்பட்டும் கேட்கவில்லை. 18  இப்போது, விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் அர்த்தத்தைக் கவனித்துக் கேளுங்கள்.+ 19  பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோக அரசாங்கத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டும் அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை; பொல்லாதவன்+ வந்து அவருடைய இதயத்தில் விதைக்கப்பட்டதைக் கொத்திக்கொண்டு போய்விடுகிறான்.+ 20  பாறை நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்டு, அதை உடனே சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ 21  ஆனால், அது அவருக்குள் வேர்விடுவதில்லை; அதனால், அவர் கொஞ்சக் காலத்துக்கு மட்டுமே நிலைத்திருக்கிறார்; அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன் விசுவாசத்தை விட்டுவிடுகிறார். 22  முட்செடிகள் இருக்கிற நிலத்தைப் போல் இருப்பவர் அந்தச் செய்தியைக் கேட்கிறார், ஆனால் இந்த உலகத்தின்* கவலையும்+ செல்வத்தின் வஞ்சக சக்தியும் அந்தச் செய்தியை நெருக்கிப் போடுவதால் அது பலன் கொடுப்பதில்லை.+ 23  நல்ல நிலத்தைப் போல் இருப்பவரோ அந்தச் செய்தியைக் கேட்டு அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு பலன் தருகிறார்; அவர் 100 மடங்காகவும், இன்னொருவர் 60 மடங்காகவும், வேறொருவர் 30 மடங்காகவும் பலன் தருகிறார்கள்”+ என்று சொன்னார். 24  பின்பு, அவர் வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: “பரலோக அரசாங்கம், நல்ல விதையைத் தன் வயலில் விதைத்த ஒரு மனுஷரைப் போல் இருக்கிறதென்று சொல்லலாம். 25  ஆட்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய எதிரி வந்து கோதுமைப் பயிர்களுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். 26  பயிர்கள் வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் வளர்ந்திருந்தன. 27  அதனால், அந்த மனுஷருடைய வேலைக்காரர்கள் அவரிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் வயலில் நல்ல விதையைத்தானே விதைத்தீர்கள்? அப்படியிருக்கும்போது, களைகள் எப்படி வளர்ந்தன?’ என்று கேட்டார்கள். 28  ‘இது எதிரியின் வேலை’+ என்று அவர் சொன்னார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிப் போடலாமா?’ என்று கேட்டார்கள். 29  அப்போது அவர், ‘வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள். 30  அதனால் அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்; அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களிடம், “முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துப்போடுவதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்”+ என்று சொல்வேன்’ என்றார்.” 31  பின்பு, அவர் மற்றொரு உவமையை அவர்களிடம் சொன்னார்; “பரலோக அரசாங்கம் கடுகு விதையைப் போல் இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்.+ 32  அது எல்லா விதைகளையும்விட மிகச் சிறிய விதை; ஆனால், அது வளர்ந்த பின்பு எல்லா செடிகளையும்விட பெரிதாகி, வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு ஒரு மரமாகிறது” என்றார். 33  பின்பு, அவர் வேறொரு உவமையையும் அவர்களுக்குச் சொன்னார்; “பரலோக அரசாங்கம் புளித்த மாவைப் போல் இருக்கிறது; ஒரு பெண் அதை மூன்று பெரிய படி* மாவில் கலந்து வைத்தாள்; அந்த மாவு முழுவதும் புளித்துப்போனது”+ என்றார். 34  திரண்டு வந்திருந்த மக்களிடம் உவமைகள் மூலமாகவே இவை எல்லாவற்றையும் இயேசு சொன்னார். சொல்லப்போனால், உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை;+ 35  “நான் வாய் திறந்து உவமைகளாகவே பேசுவேன்; ஆரம்பத்திலிருந்து* மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை நான் அறிவிப்பேன்” என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது+ நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 36  பின்பு, அந்தக் கூட்டத்தாரை அவர் அனுப்பிவிட்டு வீட்டுக்குள் போனார். அப்போது, சீஷர்கள் அவரிடம் வந்து, “வயலில் விதைக்கப்பட்ட களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்குங்கள்” என்று கேட்டார்கள். 37  அதற்கு அவர், “நல்ல விதையை விதைக்கிறவர், மனிதகுமாரன்; 38  வயல், இந்த உலகம்;+ நல்ல விதை, கடவுளுடைய அரசாங்கத்தின் மகன்கள்; களைகளோ, பொல்லாதவனின் மகன்கள்;+ 39  அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்;* அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள். 40  அதனால், களைகளெல்லாம் ஒன்றுசேர்க்கப்பட்டு நெருப்பில் போடப்படுவதுபோல் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும்* நடக்கும்.+ 41  மனிதகுமாரன் தன்னுடைய தூதர்களை அனுப்புவார்; மற்றவர்களைப் பாவம் செய்ய வைக்கிற எல்லாரையும்* அக்கிரமம் செய்கிற எல்லாரையும் அவருடைய அரசாங்கத்திலிருந்து அவர்கள் பிரித்தெடுத்து, 42  கொழுந்துவிட்டு எரியும் சூளையில் வீசிவிடுவார்கள்.+ அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்.* 43  அந்தச் சமயத்தில், நீதிமான்கள் தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில் சூரியனைப் போல் பிரகாசிப்பார்கள்.+ காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும். 44  பரலோக அரசாங்கம் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைப் போல் இருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டுபிடித்து, மறுபடியும் அங்கே மறைத்து வைக்கிறான்; பின்பு சந்தோஷத்தோடு போய், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.+ 45  பரலோக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. 46  விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய்த் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்.+ 47  அதோடு, பரலோக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற இழுவலையைப் போல் இருக்கிறது. 48  வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து, அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக்+ கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ+ தூக்கியெறிவார்கள். 49  அப்படியே இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்திலும்* நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டுப் போய் நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியாகப் பிரித்து, 50  கொழுந்துவிட்டு எரியும் சூளையில் அவர்களை வீசிவிடுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்”* என்று சொன்னார். 51  பின்பு, “இவை எல்லாவற்றின் அர்த்தத்தையும் நீங்கள் புரிந்துகொண்டீர்களா?” என்று கேட்டார். அவர்கள், “புரிந்துகொண்டோம்” என்று சொன்னார்கள். 52  அதற்கு அவர், “அப்படியானால் பரலோக அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு* அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும், தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமானைப் போல் இருக்கிறார்கள்” என்று சொன்னார். 53  இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்த பின்பு அந்த இடத்தைவிட்டுப் போனார். 54  தன்னுடைய சொந்த ஊருக்கு+ வந்த பின்பு அங்கிருந்த ஜெபக்கூடத்தில் மக்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார்; அப்போது அவர்கள் பிரமித்துப்போய், “இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது? இவனால் எப்படி இந்த அற்புதங்களைச் செய்ய முடிகிறது?+ 55  இவன் தச்சனுடைய மகன்தானே?+ இவனுடைய அம்மா மரியாள்தானே? இவனுடைய சகோதரர்கள் யாக்கோபு, யோசே, சீமோன், யூதாஸ்தானே?+ 56  இவனுடைய சகோதரிகளும் நம்முடைய ஊரில்தானே இருக்கிறார்கள்? அப்படியிருக்கும்போது, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது?”+ என்று சொல்லி, 57  அவர்மேல் விசுவாசம் வைக்க மறுத்தார்கள்.+ இயேசு அவர்களிடம், “ஒரு தீர்க்கதரிசிக்கு அவருடைய ஊரிலும் வீட்டிலும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மதிப்புக் கிடைக்கிறது” என்று சொன்னார்.+ 58  அவர்கள் விசுவாசம் வைக்காததால், அங்கே நிறைய அற்புதங்களை அவர் செய்யவில்லை.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “மூன்று சியா அளவு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “உலகம் உண்டானதுமுதல்.”
நே.மொ., “தடுக்கி விழவைக்கிற எல்லாவற்றையும்.”
நே.மொ., “பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.” இது கோபத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் செயல்.
நே.மொ., “பற்களை நறநறவென்று கடிப்பார்கள்.” இது கோபத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தும் செயல்.
வே.வா., “கற்பிக்கப்பட்டு.”