சங்கீதம் 90:1-17
உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின்+ ஜெபம்.
90 யெகோவாவே, தலைமுறை தலைமுறைக்கும் நீங்கள்தான் எங்கள் குடியிருப்பாக* இருக்கிறீர்கள்.+
2 மலைகள் தோன்றுவதற்கு முன்பிருந்தே,பூமியையும் உலகத்தையும் நீங்கள் உருவாக்குவதற்கு* முன்பிருந்தே,+என்றென்றும்* கடவுளாக இருக்கிறவர் நீங்கள்தான்.+
3 அற்ப மனுஷனை நீங்கள் மண்ணுக்கே திருப்பி அனுப்புகிறீர்கள்.“மனிதர்களே, மண்ணுக்குத் திரும்புங்கள்!”+ என்று சொல்கிறீர்கள்.
4 ஆயிரம் வருஷங்கள் உங்களுடைய பார்வையில் நேற்றைய தினம் போலவும்,+கடந்துபோன ஜாமம்* போலவும் இருக்கின்றன.
5 அவர்களை நீங்கள் வாரிக்கொண்டு போகிறீர்கள்.+அவர்களுடைய வாழ்நாள் கொஞ்ச நேர தூக்கத்தைப் போல ஆகிவிடுகிறது.அவர்கள் காலையில் முளைக்கிற புல்லைப் போல இருக்கிறார்கள்.+
6 காலையில் அது பூ பூத்து தளதளவென்று இருக்கிறது.ஆனால், சாயங்காலத்துக்குள் வாடி வதங்கிவிடுகிறது.+
7 உங்களுடைய கோபம் எங்களைச் சுட்டுப்பொசுக்குகிறது.+உங்களுடைய கடும் கோபம் எங்களை நடுநடுங்க வைக்கிறது.
8 எங்கள் குற்றங்களை உங்கள் கண் முன்னால் நிறுத்தியிருக்கிறீர்கள்.+உங்கள் முகத்தின் ஒளி எங்களுடைய ரகசிய பாவங்களை வெட்டவெளிச்சமாக்குகிறது.+
9 உங்களுடைய ஆக்ரோஷத்தால் எங்களுடைய நாட்கள் குறைந்துவிடுகின்றன.எங்களுடைய வாழ்நாள் காலம் பெருமூச்சு போலச் சட்டென்று முடிந்துவிடுகிறது.
10 எங்களுடைய ஆயுள் 70 வருஷம்,நிறைய தெம்பு* இருந்தால் 80 வருஷம்.+
ஆனால், அவை துன்ப துயரங்களால்தான் நிறைந்திருக்கின்றன.அவை வேகமாக ஓடிவிடுகின்றன, நாங்களும் பறந்துவிடுகிறோம்.+
11 உங்களுடைய கோபத்தின் கடுமையை யாரால் புரிந்துகொள்ள முடியும்?
உங்களுக்குக் காட்ட வேண்டிய பயபக்தியைப் போலவே அது அளவிட முடியாதது.+
12 எங்கள் வாழ்நாட்களை நன்றாகப் பயன்படுத்துவதற்கு* கற்றுக்கொடுங்கள்.+அப்போதுதான், ஞானமுள்ள இதயத்தை நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
13 யெகோவாவே, திரும்பி வாருங்கள்!+ இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த நிலைமை?+
உங்களுடைய ஊழியர்களைப் பார்த்துப் பரிதாபப்படுங்கள்.+
14 காலையிலே உங்களுடைய மாறாத அன்பினால் எங்களைத் திருப்தியாக்குங்கள்.+அப்போது, எங்கள் வாழ்நாளெல்லாம் சந்தோஷம் பொங்க ஆரவாரம் செய்வோம்.+
15 நீங்கள் எங்களுக்குக் கஷ்டம் கொடுத்த நாட்களுக்கும்,நாங்கள் பாடுகளை அனுபவித்த வருஷங்களுக்கும்+ ஈடாகஎங்களைச் சந்தோஷப்படுத்துங்கள்.+
16 உங்களுடைய ஊழியர்கள் உங்கள் செயல்களைப் பார்க்கட்டும்.அவர்களுடைய பிள்ளைகள் உங்களுடைய மேன்மையைப் பார்க்கட்டும்.+
17 எங்கள் கடவுளான யெகோவாவே, உங்களுடைய கருணை எங்கள்மேல் தங்கட்டும்.
நாங்கள் செய்கிறவற்றில் எங்களுக்கு வெற்றி தாருங்கள்.
நாங்கள் செய்கிறவற்றில் தயவுசெய்து எங்களுக்கு வெற்றி தாருங்கள்.+
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “அடைக்கலமாக.”
^ வே.வா., “பிரசவ வேதனையோடு பெற்றெடுப்பதற்கு.”
^ வே.வா., “நித்திய நித்தியமாக.”
^ ஒவ்வொரு ஜாமமும் சுமார் 4 மணிநேரங்கள் கொண்டவை.
^ வே.வா., “அசாதாரண பலம்.”
^ நே.மொ., “வாழ்நாட்களை எண்ணுவதற்கு.”