சங்கீதம் 27:1-14

  • யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை

    • கடவுளுடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசிப்பது (4)

    • பெற்றோர் கைவிட்டாலும் யெகோவா கவனித்துக்கொள்வார் (10)

    • “யெகோவாமேல் நம்பிக்கையாக இரு” (14)

தாவீதின் பாடல். 27  யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?   என் எதிரிகளான அக்கிரமக்காரர்கள் என்னை ஒழித்துக்கட்ட நினைத்து என்னைத் தாக்கினார்கள்.+ஆனால், அவர்கள்தான் தடுமாறி விழுந்தார்கள்.   ஒரு படையே வந்து என்னைச் சூழ்ந்துகொண்டாலும்,என் நெஞ்சம் பயப்படாது.+ எனக்கு எதிராகப் போரே மூண்டாலும்,நான் நம்பிக்கையோடு இருப்பேன்.   யெகோவாவிடம் ஒன்றைக் கேட்டேன்.யெகோவா எவ்வளவு இனிமையானவர் என்பதைப் பார்த்துக்கொண்டும்,அவருடைய ஆலயத்தைப் பிரமிப்போடு ரசித்துக்கொண்டும்,*+என் வாழ்நாளெல்லாம் யெகோவாவின் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கேட்டேன்.+அதற்காகத்தான் எப்போதும் ஏங்குவேன்.   ஆபத்து நாளில் அவர் என்னைத் தன்னுடைய புகலிடத்தில் மறைத்து வைப்பார்.+தன்னுடைய கூடாரத்தின் மறைவில் என்னை ஒளித்து வைப்பார்.+கற்பாறையின் உயரத்திலே என்னைக் கொண்டுபோய் வைப்பார்.+   என்னைச் சூழ்ந்திருக்கிற எதிரிகளின் முன்னால் இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறேன்.அதனால், சந்தோஷ ஆரவாரத்தோடு அவருடைய கூடாரத்தில் பலிகளைச் செலுத்துவேன்.யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.*   யெகோவாவே, என் கூக்குரலைக் கேளுங்கள்.+எனக்குக் கருணை காட்டி, பதில் சொல்லுங்கள்.+   “என்னை* தேடுங்கள்” என்று நீங்கள் கொடுத்த கட்டளையை என் இதயம் எனக்குச் சொன்னது. யெகோவாவே, நான் நிச்சயம் உங்களைத் தேடுவேன்.+   உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் எனக்குத் துணை.+என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள். 10  என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னைக் கைவிட்டாலும்,+யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்வார்.+ 11  யெகோவாவே, உங்களுடைய வழியை எனக்குக் கற்றுக்கொடுங்கள்.+எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக என்னை நேர்வழியில் நடத்துங்கள். 12  விரோதிகளிடம் என்னை ஒப்படைத்துவிடாதீர்கள்.+எனக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்ல ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள்.+என்னைத் தாக்கப்போவதாக அவர்கள் மிரட்டுகிறார்கள். 13  என் வாழ்நாளெல்லாம் யெகோவா எனக்கு நல்லது செய்வார் என்ற விசுவாசம் மட்டும் இல்லையென்றால்,என் கதி என்ன ஆகியிருக்குமோ?*+ 14  யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.+ தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு.+ எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆலயத்தைப் பார்த்துத் தியானித்துக்கொண்டும்.”
வே.வா., “இசை இசைப்பேன்.”
நே.மொ., “என் முகத்தை.”
அல்லது, “என் வாழ்நாளெல்லாம் யெகோவா எனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாகவே இருக்கிறது.”