உபாகமம் 3:1-29

  • பாசானின் ராஜாவான ஓகைத் தோற்கடித்தல் (1-7)

  • யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள தேசம் பிரிக்கப்படுதல் (8-20)

  • பயப்படாமல் இருக்கும்படி யோசுவாவிடம் சொல்லப்படுகிறது (21, 22)

  • மோசே கானான் தேசத்துக்குப் போகப் போவதில்லை (23-29)

3  அதன்பின், “நாம் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனோம். அப்போது, நம்மோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+  அதனால் யெகோவா என்னிடம், ‘அவனைப் பார்த்துப் பயப்படாதே. அவனையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் அவனுடைய தேசத்தையும் நான் உன்னுடைய கையில் கொடுப்பேன். எஸ்போனில் வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்தது போலவே அவனுக்கும் நீ செய்வாய்’ என்று சொன்னார்.  அதன்படியே, பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் நம்முடைய கடவுளாகிய யெகோவா நம் கையில் கொடுத்தார். ஒருவர்விடாமல் எல்லாரையும் நாம் வெட்டி வீழ்த்தினோம்.  பின்பு, அவனுடைய எல்லா நகரங்களையும் கைப்பற்றினோம். அவர்களிடமிருந்து நாம் கைப்பற்றாத இடங்களே கிடையாது. பாசானிலுள்ள ஓகின் ராஜ்யத்தில், அதாவது அர்கோப் பிரதேசத்தில், மொத்தம் 60 நகரங்களைக் கைப்பற்றினோம்.+  இந்த நகரங்கள் உயரமான மதில்களோடும் கதவுகளோடும் தாழ்ப்பாள்களோடும் பாதுகாப்பாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் மதில்கள் இல்லாத ஊர்களும் நிறைய இருந்தன.  எஸ்போனின் ராஜாவான சீகோனின் நகரங்களை அழித்தது போலவே அவற்றையும் நாம் அழித்தோம்.+ எல்லா நகரங்களையும், அங்கிருந்த ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.+  ஆனால், அங்கிருந்த எல்லா ஆடுமாடுகளையும் பொருள்களையும் எடுத்துக்கொண்டோம்.  அப்போது, யோர்தான் பிரதேசத்திலிருந்த இரண்டு எமோரிய ராஜாக்களின் தேசங்களைக் கைப்பற்றினோம்.+ அதாவது, அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து* எர்மோன் மலைவரை கைப்பற்றினோம்.+  (எர்மோன் மலையை சீரியோன் என்று சீதோனியர்கள் அழைத்தார்கள், ஆனால் எமோரியர்கள் அதை செனீர் என்று அழைத்தார்கள்.) 10  அதோடு, பீடபூமியிலுள்ள* எல்லா நகரங்களையும், கீலேயாத் முழுவதையும், ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த சல்கா, எத்ரேய்+ என்ற நகரங்கள் வரையுள்ள பாசான் பகுதி முழுவதையும் கைப்பற்றினோம். 11  ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது பாசானின் ராஜாவாகிய ஓக் மட்டும்தான். அவனுக்காக இரும்பினால்* செய்யப்பட்ட சவப்பெட்டி அம்மோனியர்களின் நகரமாகிய ரப்பாவில் இன்னும் இருக்கிறது. அதன் நீளம் ஒன்பது முழம்,* அகலம் நான்கு முழம். 12  அந்தச் சமயத்தில், அர்னோன் பள்ளத்தாக்கின்* பக்கத்தில் உள்ள ஆரோவேர்+ தொடங்கி கீலேயாத் மலைப்பகுதியின் பாதி வரையுள்ள தேசத்தை நாம் சொந்தமாக்கிக்கொண்டோம். அங்கிருந்த நகரங்களை ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் நான் கொடுத்தேன்.+ 13  கீலேயாத்தின் இன்னொரு பாதியையும் ஓகின் ராஜ்யத்தைச் சேர்ந்த பாசான் பகுதி முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்குக் கொடுத்தேன்.+ பாசானைச் சேர்ந்த அர்கோப் பிரதேசம் முழுவதும் ரெப்பாயீமியர்களின் தேசம் என்று அழைக்கப்பட்டது. 14  கேசூரியர்கள் மற்றும் மாகாத்தியர்களின்+ எல்லைவரை இருந்த அர்கோப் பிரதேசம்+ முழுவதையும் மனாசேயின் மகனாகிய யாவீர்+ கைப்பற்றினார். பாசானிலிருந்த அந்தக் கிராமங்களுக்குத் தன்னுடைய பெயரையே வைத்து, அவோத்-யாவீர்*+ என்று அழைத்தார். இந்தப் பெயரில்தான் இன்றுவரை அவை அழைக்கப்படுகின்றன. 15  கீலேயாத்தை நான் மாகீருக்குக் கொடுத்தேன்.+ 16  கீலேயாத்முதல் அர்னோன் பள்ளத்தாக்குவரை நான் ரூபன் கோத்திரத்தாருக்கும் காத் கோத்திரத்தாருக்கும் கொடுத்தேன்.+ அந்தப் பள்ளத்தாக்கின் நடுப்பகுதிதான் அதன் எல்லை. அதோடு, அம்மோனியர்களின் எல்லையாகிய யாபோக் பள்ளத்தாக்கு வரையும், 17  அரபா வரையும், குறிப்பாக யோர்தான் ஆற்றின் கரையோரம் வரையும், கின்னரேத் தொடங்கி உப்புக் கடலாகிய* அரபா கடல் வரையும் கொடுத்தேன். இந்தக் கடல், கிழக்கே பிஸ்கா மலைச் சரிவுகளுக்குக் கீழே இருக்கிறது.+ 18  பின்பு நான் உங்களிடம், ‘நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வதற்காக இந்தத் தேசத்தை உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். வீரமுள்ள ஆண்கள் எல்லாரும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் யோர்தானைக் கடந்து போங்கள்.+ 19  நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த நகரங்களில், உங்களுடைய மனைவிமக்களும் கால்நடைகளும் மட்டுமே தங்கட்டும். உங்களுக்கு ஏராளமான கால்நடைகள் இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும். 20  யெகோவா உங்களுக்கு ஓய்வு தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் ஓய்வு தருகிற வரையிலும், உங்கள் கடவுளாகிய யெகோவா யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் கொடுக்கப்போகும் தேசத்தை அவர்கள் சொந்தமாக்கிக்கொள்கிற வரையிலும் நீங்கள் அவர்கள் முன்னால் போக வேண்டும். அதன்பின், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் கொடுத்திருக்கிற இடத்துக்கு நீங்கள் திரும்பி வரலாம்’+ என்று சொன்னேன். 21  பின்பு நான் யோசுவாவிடம்,+ ‘இந்த இரண்டு ராஜாக்களுக்கும் உன் கடவுளாகிய யெகோவா என்ன செய்தார் என்பதை நீயே உன் கண்களால் பார்த்தாய். யோர்தானுக்கு அந்தப் பக்கத்தில் நீ போகிற எல்லா ராஜ்யங்களுக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்.+ 22  உங்கள் கடவுளாகிய யெகோவாவே உங்களுக்காகப் போர் செய்வார்.+ அதனால், அங்கு இருக்கிறவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது’ என்று கட்டளை கொடுத்தேன். 23  அந்தச் சமயத்தில் நான் யெகோவாவிடம், 24  ‘உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, உங்களுடைய மகத்துவத்தையும் மகா வல்லமையையும்+ உங்கள் அடியேனுக்குக் காட்ட ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்களைப் போல் அற்புதங்களைச் செய்கிற கடவுள் வானத்திலோ பூமியிலோ உண்டா?+ 25  யோர்தானுக்கு அந்தப் பக்கத்திலுள்ள நல்ல தேசத்தை நான் போய்ப் பார்ப்பதற்குத் தயவுசெய்து அனுமதி கொடுங்கள். அந்த அழகான மலைப்பகுதியையும் லீபனோனையும்+ பார்க்க எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கெஞ்சினேன். 26  ஆனாலும், உங்களால் யெகோவா என்மேல் பயங்கர கோபமாகவே இருந்தார்.+ யெகோவா என் ஜெபத்தைக் கேட்காமல், ‘போதும்! இனிமேல் இந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசாதே. 27  நீ யோர்தானைக் கடந்துபோக மாட்டாய்.+ அதனால், இப்போதே பிஸ்காவின் உச்சிக்குப்+ போய் அந்தத் தேசத்தை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் பார்த்துக்கொள். 28  பின்பு, நீ யோசுவாவைத் தலைவனாக நியமித்து,+ அவனுக்கு ஊக்கமும் தைரியமும் கொடு. இந்த ஜனங்களுக்கு முன்னால் அவன்தான் யோர்தானைக் கடந்து போவான்.+ நீ பார்க்கப்போகிற அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ள அவன்தான் இந்த ஜனங்களுக்கு உதவி செய்வான்’ என்று சொல்லிவிட்டார். 29  பெத்-பேயோருக்கு முன்னால் உள்ள பள்ளத்தாக்கில் நாம் தங்கியிருந்தபோது இதெல்லாம் நடந்தது”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து.”
பீடபூமி என்பது மேடாக இருக்கிற பரந்த நிலப்பகுதி.
அல்லது, “கருங்கல்லினால்.”
ஒரு முழம் என்பது 44.5 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
அர்த்தம், “யாவீரின் கிராமங்கள்.”
அதாவது, “சவக் கடலாகிய.”