2 நாளாகமம் 32:1-33
32 எசேக்கியா இவை எல்லாவற்றையும் உண்மையுடன் செய்து முடித்தார்.+ அதன் பின்பு, யூதா தேசத்தின் மீது அசீரிய ராஜா சனகெரிப் படையெடுத்து வந்து மதில் சூழ்ந்த நகரங்களை முற்றுகையிட்டான், மதில்களை உடைத்து அவற்றைக் கைப்பற்ற வேண்டும் என்று குறியாக இருந்தான்.+
2 சனகெரிப் படையெடுத்து வந்திருப்பதையும் எருசலேம் நகரத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டம் போட்டிருப்பதையும் எசேக்கியா தெரிந்துகொண்டார்.
3 உடனே தன்னுடைய அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் கலந்துபேசி, நகரத்துக்கு வெளியே இருக்கிற நீரூற்றுகளை அடைத்துவிட வேண்டும் என்று முடிவுசெய்தார்;+ அவர்களும் அதற்கு ஆதரவு கொடுத்தார்கள்.
4 பின்பு நிறைய ஆட்கள் ஒன்றுகூடி, “அசீரிய ராஜாக்கள் வரும்போது அவர்களுக்குத் தண்ணீரே கிடைக்கக் கூடாது” என்று சொல்லி, அந்தப் பகுதியில் இருந்த எல்லா நீரூற்றுகளையும் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஓடையையும் அடைத்துப்போட்டார்கள்.
5 எசேக்கியா மன உறுதியோடு செயல்பட்டார். இடிந்து கிடந்த மதில் முழுவதையும் திரும்பக் கட்டினார், அதன்மேல் கோபுரங்களைக் கட்டினார். அந்த மதிலுக்கு வெளியே இன்னொரு மதிலையும் கட்டினார். ‘தாவீதின் நகரத்தில்’ இருந்த மில்லோவையும்*+ பழுதுபார்த்தார். ஏராளமான ஆயுதங்களையும் கேடயங்களையும் செய்தார்.
6 வீரர்களுக்குத் தலைமை தாங்குவதற்காகப் படைத் தலைவர்களை நியமித்து, அவர்கள் எல்லாரையும் நகரவாசலில் இருந்த பொது சதுக்கத்தில் ஒன்றுகூட்டினார்.
7 அவர்களிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். அசீரிய ராஜாவையும் அவனோடு வந்திருக்கிற பெரிய படையையும் பார்த்துப் பயப்படாதீர்கள்,+ திகிலடையாதீர்கள். அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.+
8 சாதாரண மனிதர்கள்தான் அவனுக்குத் துணையாக இருக்கிறார்கள், நமக்கோ, நம்முடைய கடவுளான யெகோவா துணையாக இருக்கிறார்; அவர் நமக்காகப் போர் செய்வார்”+ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார். யூதா ராஜாவான எசேக்கியா சொன்னதைக் கேட்டதும் அவர்களுக்குத் தைரியம் வந்தது.+
9 அசீரிய ராஜா சனகெரிப் ஒரு பெரிய படையுடன் லாகீஸ்+ பக்கத்தில் இருந்துகொண்டு, தன்னுடைய அதிகாரிகளை எருசலேமுக்கு அனுப்பினான். யூதா ராஜாவான எசேக்கியாவிடமும் எருசலேமில் குடியிருக்கிற யூதா மக்கள் எல்லாரிடமும்+ அவர்கள் போய்,
10 “அசீரிய ராஜா சனகெரிப் சொல்வதைக் கேளுங்கள்: ‘எருசலேமை நாங்கள் முற்றுகையிட்ட பிறகும் நீங்கள் எந்த நம்பிக்கையில் இன்னும் இங்கே இருக்கிறீர்கள்?+
11 “அசீரிய ராஜாவிடமிருந்து நம்முடைய கடவுளான யெகோவா நம்மைக் காப்பாற்றுவார்”+ என்று சொல்லி எசேக்கியா உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். அவன் பேச்சைக் கேட்டால் குடிக்கத் தண்ணீர்கூட உங்களுக்குக் கிடைக்காது, பஞ்சத்தில் அடிபட்டுச் சாவீர்கள்.
12 உங்கள் கடவுளுடைய ஆராதனை மேடுகளையும்+ பலிபீடங்களையும் இந்த எசேக்கியாதானே இடித்துப்போட்டான்?+ “ஒரேவொரு பலிபீடத்துக்கு முன்னால்தான் மண்டிபோட வேண்டும், அங்குதான் பலிகளை எரித்து புகை எழும்பி வரச் செய்ய வேண்டும்”+ என்று யூதா மக்களிடமும் எருசலேம் மக்களிடமும் அவன்தானே சொன்னான்?
13 நானும் என் முன்னோர்களும் மற்ற தேசங்கள்மீது படையெடுத்துப் போனபோது அந்தத் தேசத்து மக்கள் எல்லாருடைய கதியும் என்ன ஆனது என்று உங்களுக்குத் தெரியாதா?+ அவர்களுடைய தெய்வங்களால் என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முடிந்ததா?+
14 என்னுடைய முன்னோர்கள் அடியோடு அழித்துப்போட்ட அந்த மக்களுடைய தெய்வங்களில் ஏதாவது ஒன்றால் அவர்களை என் கையிலிருந்து காப்பாற்ற முடிந்ததா? அப்படியிருக்கும்போது உங்கள் கடவுளால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும்?+
15 எசேக்கியா பேச்சைக் கேட்டு ஏமாந்துவிடாதீர்கள்! அவன் சொல்வதை நம்பாதீர்கள்.+ என் கையிலிருந்தும் என் முன்னோர்கள் கையிலிருந்தும், மக்களைக் காப்பாற்ற இதுவரை எந்தத் தேசத்தின் கடவுளாலும் எந்த ராஜ்யத்தின் கடவுளாலும் முடியவில்லை. அப்படியிருக்கும்போது, உங்கள் கடவுள் எந்த மூலைக்கு?’”+ என்று சொன்னார்கள்.
16 இதுமட்டுமில்லாமல், உண்மைக் கடவுளான யெகோவாவையும் அவருடைய ஊழியரான எசேக்கியாவையும் பற்றி அவர்கள் இன்னும் கேவலமாகப் பேசினார்கள்.
17 அதோடு, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைக் கேவலப்படுத்தி+ எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் சனகெரிப் எழுதினான்.+ அதில், “மற்ற தேசத்து தெய்வங்களால் தங்களுடைய மக்களை என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.+ அதேபோல, எசேக்கியாவின் கடவுளாலும் என்னிடமிருந்து அவனுடைய மக்களைக் காப்பாற்ற முடியாது” என்று கடவுளைப் பழித்து எழுதியிருந்தான்.
18 அவன் அனுப்பிய ஆட்கள், மதில்மேல் நின்றுகொண்டிருந்த எருசலேம் மக்களைப் பார்த்து யூத மொழியில் சத்தமாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்களைப் பயமுறுத்தி, கதிகலங்க வைத்து, நகரத்தைப் பிடிப்பதற்காக அப்படிச் செய்தார்கள்.+
19 மற்ற தேசத்து மக்கள் வணங்கிய தெய்வங்களை, அதாவது மனிதர்களின் கையால் செய்யப்பட்ட சிலைகளை, பழித்துப் பேசியது போலவே எருசலேமின் கடவுளையும் பழித்துப் பேசினார்கள்.
20 ஆனால், எசேக்கியா ராஜாவும் ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசியும்+ பரலோகத்தில் இருக்கிற கடவுளிடம் உதவிகேட்டு சத்தமாக மன்றாடிக்கொண்டே இருந்தார்கள்.+
21 பின்பு யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பி, அசீரிய ராஜாவின் முகாமில் இருந்த மாவீரர்கள், அதிகாரிகள், படைத் தலைவர்கள் என ஒருவர் விடாமல் எல்லாரையும் கொன்றுபோட்டார்.+ அதனால், அசீரிய ராஜா தன்னுடைய தேசத்துக்கு அவமானத்தோடு திரும்பிப் போனான். பின்பு, அவன் தன்னுடைய கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குள் போனபோது அவனுடைய மகன்களில் சிலர் அவனை வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+
22 இப்படி, அசீரிய ராஜா சனகெரிப்பிடமிருந்தும் மற்ற எதிரிகள் எல்லாரிடமிருந்தும் எசேக்கியாவையும் எருசலேம் மக்களையும் யெகோவா காப்பாற்றினார்; அதனால் சுற்றியிருந்த எதிரிகளின் தொல்லையில்லாமல் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
23 யெகோவாவுக்குக் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு நிறைய பேர் எருசலேமுக்கு வந்தார்கள்; யூதா ராஜாவான எசேக்கியாவுக்குச் சிறந்த அன்பளிப்புகளைக் கொண்டுவந்தார்கள்.+ எல்லா தேசத்து மக்களும் அவருக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.
24 ஒருசமயம், எசேக்கியா வியாதிப்பட்டு சாகும் நிலையில் இருந்தார். அப்போது, அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.+ கடவுள் அவருக்குப் பதில் கொடுத்ததோடு, ஓர் அடையாளத்தையும் கொடுத்தார்.+
25 எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்ததால் கடவுள் செய்த உதவிக்கு அவர் நன்றி காட்டவில்லை. அதனால், அவர்மீதும் யூதாமீதும் எருசலேம்மீதும் கடவுளுக்குப் பயங்கர கோபம் வந்தது.
26 ஆனால், நெஞ்சில் ஆணவத்தோடு இருந்த எசேக்கியா தாழ்மையாக நடந்துகொண்டார்.+ எருசலேம் மக்களும் தாழ்மையாக நடந்துகொண்டார்கள். அதனால் எசேக்கியா ஆட்சி செய்த சமயத்தில் யெகோவா அவர்களுக்குத் தண்டனை கொடுக்கவில்லை.+
27 எசேக்கியாவிடம் செல்வம் ஏராளமாய்க் குவிந்தது, அவருக்குப் பேரும் புகழும் கிடைத்தது.+ தங்கத்தையும் வெள்ளியையும் விலைமதிப்புள்ள கற்களையும் பரிமளத் தைலத்தையும் கேடயங்களையும் அருமையான மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து வைப்பதற்காக அறைகளைக் கட்டினார்.+
28 தானியங்களையும் புதிய திராட்சமதுவையும் எண்ணெயையும் வைக்க சேமிப்புக் கிடங்குகளைக் கட்டினார். வெவ்வேறு கால்நடைகளைக் கட்டி வைக்க தொழுவங்களையும், ஆடுகளை அடைத்து வைக்க பட்டிகளையும் அமைத்தார்.
29 அவர் தனக்காக நகரங்களைக் கட்டினார்; ஆடுமாடுகளும் மற்ற விலங்குகளும் அவரிடம் ஏராளமாக இருந்தன. கடவுள்தான் அவருக்கு இவ்வளவு சொத்துகளையும் கொடுத்தார்.
30 கீகோன்+ நீரூற்றின் மேற்பகுதியில் இருந்த திறப்பை அடைத்துவிட்டு,+ அதிலிருந்து வரும் தண்ணீரை மேற்கே ‘தாவீதின் நகரத்துக்கு’+ திருப்பிவிட்டார். எசேக்கியா எல்லா வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.
31 தேசத்தில் ஏற்பட்ட அடையாளத்தைப்+ பற்றி விசாரிக்க பாபிலோன் அதிகாரிகள் அனுப்பிய பிரதிநிதிகள் அவரிடம் வந்தார்கள். அப்போது, அவரைச் சோதித்துப் பார்ப்பதற்காக,+ அவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக,+ உண்மைக் கடவுள் அவரை விட்டுவிட்டார்.
32 எசேக்கியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் மாறாத அன்புடன் செய்த செயல்களைப் பற்றியும்+ ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புத்தகத்திலும்+ யூதா மற்றும் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.+
33 பின்பு எசேக்கியா இறந்துபோனார்,* தாவீதின் வாரிசுகளுடைய கல்லறைக்குப் போகிற வழியில், ஒரு மலைச் சரிவில் அவரை அடக்கம் செய்தார்கள்.+ அவர் இறந்தபோது, யூதா மக்கள் எல்லாரும் எருசலேம் மக்களும் அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் மனாசே ராஜாவானார்.
அடிக்குறிப்புகள்
^ அர்த்தம், “மண்மேடு.” இது ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம்.
^ நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”