1 சாமுவேல் 30:1-31

30  மூன்றாம் நாள் தாவீதும் அவருடைய ஆட்களும் சிக்லாகுவுக்கு+ வந்து பார்த்தபோது, தெற்குப் பகுதியிலும் சிக்லாகுவிலும் அமலேக்கியர்கள்+ திடீர்த் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தியிருந்தார்கள்.  அங்கிருந்த பெண்களையும்+ மற்ற எல்லாரையும் பிடித்துக்கொண்டு போயிருந்தார்கள். யாரையும் கொல்லாமல், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாரையும் பிடித்துக்கொண்டு போயிருந்தார்கள்.  தாவீதும் அவருடைய ஆட்களும் நகரத்துக்கு வந்தபோது, அது தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள். அவர்களுடைய மனைவிமக்கள் பிடித்துக்கொண்டு போகப்பட்டிருந்ததையும் பார்த்தார்கள்.  அதனால், தாவீதும் அவருடைய ஆட்களும் சத்தமாக அழுதார்கள். அழுவதற்குச் சக்தியே இல்லாமல் போகும்வரை அழுதார்கள்.  தாவீதின் இரண்டு மனைவிகளான யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாமும், இறந்துபோன கர்மேல் ஊரானாகிய நாபாலின் மனைவி அபிகாயிலும்+ பிடித்துக்கொண்டு போகப்பட்டிருந்தார்கள்.  தாவீதின் ஆட்கள், தங்களுடைய மகன்களும் மகள்களும் பிடித்துக்கொண்டு போகப்பட்டதால் கொதித்துப்போய், தாவீதின் மேல் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள். அதனால், தாவீது மிகவும் வேதனைப்பட்டார். ஆனால், தன்னுடைய கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெற்றார்.+  பின்பு, தாவீது அகிமெலேக்கின் மகனும் குருவுமாகிய அபியத்தாரிடம்,+ “தயவுசெய்து ஏபோத்தைக் கொண்டுவாருங்கள்”+ என்றார். அப்படியே, அவர் தாவீதிடம் ஏபோத்தைக் கொண்டுவந்தார்.  அப்போது தாவீது, “நான் இந்தக் கொள்ளைக்கூட்டத்தைத் துரத்திக்கொண்டு போகட்டுமா? அவர்களைப் பிடித்துவிடுவேனா?” என்று யெகோவாவிடம் விசாரித்தார்.+ அதற்கு அவர், “அவர்களைத் துரத்திக்கொண்டு போ, கண்டிப்பாக அவர்களைப் பிடித்துவிடுவாய், உன்னுடைய ஆட்களையும் பொருள்களையும் மீட்டுக்கொள்வாய்”+ என்று சொன்னார்.  உடனே, தாவீது தன்னோடு இருந்த 600 ஆட்களையும்+ கூட்டிக்கொண்டு போனார். பேசோர் பள்ளத்தாக்குக்கு* வந்ததும் சிலர் அங்கேயே இருந்துவிட்டார்கள். 10  அந்த 200 பேரும் பேசோர் பள்ளத்தாக்கை கடக்க முடியாதளவு களைத்துப்போயிருந்தார்கள்.+ அதனால், மற்ற 400 ஆட்களைக் கூட்டிக்கொண்டு தாவீது தொடர்ந்து போனார். 11  தாவீதின் ஆட்கள் வழியில் ஓர் எகிப்தியனைப் பார்த்து, அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவனுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தார்கள். 12  அதோடு, அத்திப்பழ அடையில் ஒரு துண்டையும் இரண்டு திராட்சை அடைகளையும் கொடுத்தார்கள். அதையெல்லாம் சாப்பிட்ட பிறகுதான் அவனுக்குத் தெம்பு வந்தது. ஏனென்றால், அவன் மூன்று நாட்களாகச் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் கிடந்திருந்தான். 13  தாவீது அவனிடம், “உன் எஜமான் யார், நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் ஒரு எகிப்தியன், ஒரு அமலேக்கியனுடைய அடிமை. மூன்று நாட்களுக்கு முன்பு என்னுடைய உடல்நிலை மோசமானதால் என்னுடைய எஜமான் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார். 14  இதற்கு முன்பு நாங்கள் கிரேத்தியர்களின்+ தெற்குப் பகுதியையும் யூதா பிரதேசத்தையும் காலேபின்+ தெற்குப் பகுதியையும் தாக்கி, அங்கிருந்தவற்றைச் சூறையாடினோம். சிக்லாகுவைத் தீ வைத்துக் கொளுத்தினோம்” என்று சொன்னான். 15  அதற்கு தாவீது, “அந்தக் கொள்ளைக்கூட்டம் இருக்கிற இடத்தைக் காட்டுகிறாயா?” என்று கேட்டார். அதற்கு அவன், “என்னைக் கொல்லவோ என் எஜமானிடம் என்னை ஒப்படைக்கவோ மாட்டீர்கள் என்று கடவுள் பெயரில் சத்தியம் செய்யுங்கள், அப்போதுதான் அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டுவேன்” என்று சொன்னான். 16  பின்பு, தாவீதையும் அவருடைய ஆட்களையும் அவன் அந்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனான். அந்தப் பகுதியெங்கும் அந்தக் கொள்ளைக்கூட்டத்தார் இருந்தார்கள். பெலிஸ்தியத் தேசத்திலிருந்தும் யூதா தேசத்திலிருந்தும் ஏராளமான பொருள்களைக் கைப்பற்றி வந்திருந்ததால், அவர்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் கும்மாளம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள். 17  அன்று அதிகாலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் அவர்களை தாவீது வெட்டிச் சாய்த்தார்.+ ஒட்டகங்களில் ஏறிப்போன 400 ஆண்களைத் தவிர வேறு யாருமே தப்பிக்கவில்லை. 18  அமலேக்கியர்கள் கைப்பற்றிக் கொண்டுபோன எல்லாவற்றையும் தாவீது மீட்டுக்கொண்டார்.+ தன்னுடைய இரண்டு மனைவிகளையும் அவர்களிடமிருந்து காப்பாற்றினார். 19  சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை ஒருவர்விடாமல் எல்லாரையும் அவர்கள் காப்பாற்றினார்கள். தங்களுடைய மகன்களையும் மகள்களையும் பொருள்களையும் மீட்டுக்கொண்டார்கள்.+ எதிரிகளால் கைப்பற்றப்பட்ட எல்லாவற்றையும் தாவீது மீட்டுக்கொண்டார். 20  அதுமட்டுமல்ல, அமலேக்கியர்களின் ஆடுமாடுகள் எல்லாவற்றையும் தாவீது பிடித்துக்கொண்டு வந்தார். தாவீதின் ஆட்கள் அவற்றைத் தங்களுடைய ஆடுமாடுகளுக்கு முன்னால் ஓட்டிச்சென்று, “இது தாவீது கைப்பற்றியவை” என்று சொன்னார்கள். 21  ரொம்பவும் களைத்துப்போனதால் தாவீதுடன் போகாமல் பேசோர் பள்ளத்தாக்கிலேயே இருந்துவிட்ட 200 பேரிடம் தாவீது வந்தார்.+ அவர்கள் தாவீதையும் அவருடன் இருந்த ஆட்களையும் பார்ப்பதற்காக எதிரில் வந்தார்கள். பக்கத்தில் வந்ததும் தாவீது அவர்களிடம் நலம் விசாரித்தார். 22  ஆனால், தாவீதுடன் போயிருந்தவர்களில் கெட்ட புத்தியுள்ள, உதவாக்கரை ஆட்கள் சிலர், “அவர்கள் நம்மோடு வராததால், கைப்பற்றிய பொருள்களில் எதையும் அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது. அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் மட்டும் கூட்டிக்கொண்டு போகட்டும்” என்று சொன்னார்கள். 23  அதற்கு தாவீது, “என் சகோதரர்களே, அப்படிச் செய்யக் கூடாது. இது யெகோவா நமக்குக் கொடுத்தது. அவர்தான் நம்மைக் காப்பாற்றி, அந்தக் கொள்ளைக்கூட்டத்தாரை நம் கையில் கொடுத்தார்.+ 24  அதனால், நீங்கள் சொல்வதை யார் ஒத்துக்கொள்வார்கள்? போருக்குப் போனவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைக் காவல் காத்தவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும்.+ எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கு கிடைக்க வேண்டும்”+ என்றார். 25  அன்றுமுதல் இஸ்ரவேலர்களுக்கு அதை ஒரு விதிமுறையாகவும் சட்டமாகவும் ஏற்படுத்தினார். இன்றுவரை அது அப்படித்தான் இருந்துவருகிறது. 26  தாவீது சிக்லாகுவுக்குத் திரும்பியபின், கைப்பற்றிய பொருள்களில் சிலவற்றைத் தன் நண்பர்களான யூதாவின் பெரியோர்களுக்கு* அனுப்பி, “யெகோவாவின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றியதில், இதோ உங்களுக்கும் ஒரு அன்பளிப்பு” என்று சொன்னார். 27  அதோடு பெத்தேலிலும்,+ நெகேபிலுள்ள* ராமோத்திலும், யாத்தீரிலும்,+ 28  ஆரோவேரிலும், சிப்மோத்திலும், எஸ்தெமொவாவிலும்,+ 29  ராக்காலிலும், யெர்மெயேலியர்களின்+ நகரங்களிலும், கேனியர்களின்+ நகரங்களிலும், 30  ஓர்மாவிலும்,+ பொராசானிலும், ஆத்தக்கிலும், 31  எப்ரோனிலும்,+ தன் ஆட்களோடு அடிக்கடி போய்வந்த இடங்களிலும் வாழ்கிறவர்களுக்குக்கூட பங்கு அனுப்பினார்.

அடிக்குறிப்புகள்

அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குக்கு.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மூப்பர்களுக்கு.”
வே.வா., “தெற்கிலுள்ள.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா