லேவியராகமம் 18:1-30
18 பின்பு யெகோவா மோசேயிடம்,
2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘உங்கள் கடவுளாகிய யெகோவா நானே.+
3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தின் ஜனங்களைப் போல நீங்கள் நடந்துகொள்ளக் கூடாது. நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போலவும் நடந்துகொள்ளக் கூடாது.+ அவர்களுடைய சட்டதிட்டங்களை* பின்பற்றக் கூடாது.
4 நீங்கள் என் நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். என்னுடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.
5 என்னுடைய சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். அவற்றின்படி நடப்பவர்கள் அவற்றால் வாழ்வு பெறுவார்கள்.+ நான் யெகோவா.
6 உங்களில் யாரும் இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ நான் யெகோவா.
7 உங்கள் அப்பாவோடு உடலுறவுகொள்ளக் கூடாது. உங்கள் அம்மாவோடும் உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்களைப் பெற்ற அம்மாவாக இருப்பதால் அவளோடு உடலுறவுகொள்ளக் கூடாது.
8 உங்கள் அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் அப்பாவை அவமானப்படுத்துவதாக இருக்கும்.
9 உங்கள் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது, அவள் உங்களுடைய அப்பாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அம்மாவுக்குப் பிறந்தவளாக இருந்தாலும் சரி, அதே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி, வேறு குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சரி.+
10 உங்கள் மகனின் மகளுடனோ உங்கள் மகளின் மகளுடனோ உடலுறவுகொள்ளக் கூடாது. அவர்கள் உங்களுக்கு இரத்த சொந்தமாக இருப்பதால் அது உங்களுக்கு அவமானமாய் இருக்கும்.
11 உங்கள் அப்பாவுக்கும் அவருடைய மனைவிக்கும் பிறந்த மகளோடு நீங்கள் உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்கள் சகோதரி.
12 உங்கள் அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்களுடைய அப்பாவுக்கு இரத்த சொந்தம்.+
13 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அவள் உங்கள் அம்மாவுக்கு இரத்த சொந்தம்.
14 உங்கள் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அது உங்கள் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும். அவள் உங்கள் பெரியம்மா.*+
15 உங்கள் மருமகளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அவள் உங்களுடைய மகனின் மனைவியாக இருப்பதால் அவளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.
16 உங்கள் சகோதரனுடைய மனைவியுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது உங்கள் சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும்.
17 உங்கள் மனைவியின் மகளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+ அவளுடைய மகனின் மகளுடனோ அவளுடைய மகளின் மகளுடனோ உடலுறவுகொள்ளக் கூடாது. இவர்கள் அவளுக்கு இரத்த சொந்தமாக இருப்பதால் அது வெட்கங்கெட்ட செயலாக இருக்கும்.
18 உங்கள் மனைவி உயிரோடு இருக்கும்போதே, அவளுடைய சகோதரியை இரண்டாம் தாரமாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+ அவளுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.
19 மாதவிலக்கு நாட்களில் உங்கள் மனைவியுடன் உடலுறவுகொள்ளக் கூடாது.+
20 அடுத்தவன் மனைவியோடு உடலுறவுகொண்டு, உங்களை அசுத்தப்படுத்தக் கூடாது.+
21 உங்களுடைய பிள்ளைகளில் யாரையும் மோளேகு தெய்வத்துக்கு அர்ப்பணித்து,*+ உங்கள் கடவுளாகிய என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் யெகோவா.
22 ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வது போல ஆணோடு உடலுறவுகொள்ளக் கூடாது.+ அது அருவருப்பானது.
23 ஒரு ஆண் எந்தவொரு மிருகத்துடனும் உறவுகொண்டு தன்னை அசுத்தப்படுத்தக் கூடாது. அதேபோல் ஒரு பெண் எந்த மிருகத்தோடும் உறவுகொள்ளக் கூடாது.+ அது இயற்கைக்கு முரணானது.
24 இவற்றில் எதையாவது செய்து உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களிடமிருந்து நான் துரத்திவிடுகிற ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து தங்களை அசுத்தமாக்கிக்கொண்டார்கள்.+
25 அதனால், அவர்களுடைய தேசம் அசுத்தமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் குற்றத்துக்காக நான் அதைத் தண்டிப்பேன், அந்தத் தேசத்தின் ஜனங்கள் துரத்தியடிக்கப்படுவார்கள்.+
26 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.+ நீங்களும் சரி, உங்கள் மத்தியில் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களும் சரி, இப்படிப்பட்ட எந்த அருவருப்பான செயலையும் செய்யக் கூடாது.+
27 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் இந்த அருவருப்பான செயல்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள்.+ அதனால், இப்போது அந்தத் தேசம் அசுத்தமாக இருக்கிறது.
28 நீங்களும் அதை அசுத்தமாக்காமல் இருங்கள். இல்லாவிட்டால், அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் எப்படி அங்கிருந்து துரத்தப்படுவார்களோ அப்படியே நீங்களும் துரத்தப்படுவீர்கள்.
29 உங்களில் யாராவது இப்படிப்பட்ட அருவருப்பான செயல்களைச் செய்தால், அவன் கொல்லப்பட வேண்டும்.
30 அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்களுடைய அருவருப்பான பழக்கவழக்கங்கள் எதையும் பின்பற்றாமல் என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள்.+ அப்போதுதான், அவற்றால் உங்களை அசுத்தப்படுத்த மாட்டீர்கள். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா’” என்றார்.
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “பழக்கவழக்கங்களை.”
^ அல்லது, “சித்தி.”
^ பிள்ளையை நரபலி கொடுப்பதையும் இது அர்த்தப்படுத்தலாம்.