ரோமருக்குக் கடிதம் 14:1-23
14 விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனை ஏற்றுக்கொள்ளுங்கள்.+ அவனுடைய தனிப்பட்ட கருத்துகளை* வைத்து அவனை நியாயந்தீர்க்காதீர்கள்.
2 ஒருவன் எல்லா விதமான உணவையும் சாப்பிடலாமென நம்புகிறான், விசுவாசத்தில் பலவீனமாக இருப்பவனோ காய்கறிகளை மட்டுமே சாப்பிடுகிறான்.
3 எல்லா விதமான உணவையும் சாப்பிடுகிறவன் அதைச் சாப்பிடாதவனைத் தாழ்வாகக் கருத வேண்டாம், சாப்பிடாதவனும் சாப்பிடுகிறவனை நியாயந்தீர்க்க வேண்டாம்.+ ஏனென்றால், அவனையும் கடவுள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
4 வேறொருவருடைய வேலைக்காரனை நியாயந்தீர்க்க நீங்கள் யார்?+ அவன் நிற்பானா விழுவானா என்பதைத் தீர்மானிப்பது அவன் எஜமானுடைய பொறுப்பு.+ உண்மையில், அவன் நிற்பான், யெகோவாவினால்* அவனை நிற்க வைக்க முடியும்.
5 ஒருவன் ஒரு நாளை மற்றொரு நாளைவிட விசேஷமாக நினைக்கிறான்.+ வேறொருவனோ எல்லா நாட்களையும் ஒரே மாதிரி நினைக்கிறான்.+ எதுவானாலும் சரி, அவனவன் தன் மனதில் நன்றாக உறுதிப்படுத்திக்கொள்ளட்டும்.
6 ஒரு நாளை விசேஷமாக நினைக்கிறவன் அதை யெகோவாவுக்காக* விசேஷமாக நினைக்கிறான். அதுபோலவே, சாப்பிடுகிறவன் யெகோவாவுக்காக* சாப்பிட்டு, அவருக்கு நன்றி சொல்கிறான்.+ சாப்பிடாதவனும் யெகோவாவுக்காக* சாப்பிடாமலிருந்து, அவருக்கு நன்றி சொல்கிறான்.+
7 சொல்லப்போனால், நம்மில் யாரும் நமக்காகவே வாழ்வதுமில்லை,+ நமக்காகவே இறப்பதுமில்லை.
8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+
9 இதற்காகத்தான், இறந்தவர்களுக்கும் உயிருள்ளவர்களுக்கும் எஜமானாக இருப்பதற்கு கிறிஸ்து இறந்து உயிரோடு எழுந்தார்.+
10 அதனால், நீங்கள் ஏன் உங்களுடைய சகோதரனை நியாயந்தீர்க்கிறீர்கள்?+ ஏன் உங்களுடைய சகோதரனைத் தாழ்வாக நினைக்கிறீர்கள்? நாம் எல்லாரும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்னால் நிற்போம், இல்லையா?+
11 ஏனென்றால், “‘எனக்கு முன்னால் எல்லாரும் மண்டிபோடுவார்கள், என்னைக் கடவுள் என்று எல்லாரும் வெளிப்படையாகச் சொல்வார்கள்+ என என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்’*+ என்று யெகோவா* சொல்கிறார்” என எழுதப்பட்டிருக்கிறது.
12 அதனால், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும்.+
13 அதனால், நாம் இனி ஒருவரை ஒருவர் நியாயந்தீர்க்கக் கூடாது.+ ஒரு சகோதரனுடைய விசுவாசம் பலவீனமாவதற்கோ அவன் விசுவாசத்தைவிட்டு விலகுவதற்கோ நாம் காரணமாகிவிடக் கூடாது என்ற தீர்மானத்தோடும் இருக்க வேண்டும்.+
14 இயற்கையாகவே எதுவும் தீட்டானது கிடையாது என்று நம் எஜமானாகிய இயேசுவைப் பின்பற்றுகிற நான் அறிந்திருக்கிறேன்,+ அதை நம்பவும் செய்கிறேன். ஆனால், ஒருவன் ஏதோவொன்றைத் தீட்டு என நினைக்கும்போதுதான் அது அவனுக்குத் தீட்டாக இருக்கும்.
15 நீங்கள் சாப்பிடுகிற உணவு உங்கள் சகோதரனுக்கு மனசங்கடத்தை உண்டாக்கினால், நீங்கள் அன்பாக நடந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.+ உங்கள் உணவின் காரணமாக அவனை அழித்துவிடாதீர்கள்; அவனுக்காகவும்தானே கிறிஸ்து இறந்தார்.+
16 அதனால், நீங்கள் செய்கிற நன்மை உங்களுக்குக் கெட்ட பெயர் வாங்கித்தராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
17 கடவுளுடைய அரசாங்கம் சாப்பிடுவதோடும் குடிப்பதோடும் சம்பந்தப்பட்டதாக இல்லை.+ கடவுளுடைய சக்தியால் உண்டாகிற நீதியோடும் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடுமே சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
18 இதை மனதில் வைத்து கிறிஸ்துவுக்கு அடிமையாக வேலை செய்கிறவன் கடவுளுக்கு ஏற்றவனாகவும் மனிதர்களுக்குப் பிரியமானவனாகவும் இருக்கிறான்.
19 அதனால், மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும்+ ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.+
20 கடவுள் கட்டியிருப்பதை உணவின் காரணமாக இடித்துப்போடாதீர்கள்.+ எல்லாமே சுத்தமானதுதான். ஆனால், ஒருவன் சாப்பிடுகிற உணவு மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால் அது அவனுக்குத் தீங்கையே உண்டாக்கும்.*+
21 இறைச்சி சாப்பிடுவதோ திராட்சமது குடிப்பதோ வேறெதாவது செய்வதோ உங்கள் சகோதரனுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால், அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.+
22 உங்களுடைய நம்பிக்கையை உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். தான் சரி என்று நம்புவதை ஒருவன் செய்யும்போது தன்னையே அவன் குற்றவாளியாகத் தீர்க்காதிருந்தால், அவன் சந்தோஷமானவன்.
23 ஆனால், ஏதோவொரு உணவை அவன் சந்தேகத்தோடு சாப்பிடுகிறான் என்றால், ஏற்கெனவே குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டுவிட்டான். ஏனென்றால், தான் செய்வது சரி என்ற நம்பிக்கையோடு அவன் சாப்பிடவில்லை. சொல்லப்போனால், நம்பிக்கை இல்லாமல் செய்யப்படுகிற எதுவும் பாவம்தான்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “மனதுக்குள் வருகிற கேள்விகளை.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “நான் உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “அது தவறு.”