யோபு 32:1-22

32  அந்த மூன்று பேரும் யோபுவுக்குப் பதிலே சொல்லவில்லை; ஏனென்றால், தன்மேல் எந்தக் குற்றமும் இல்லை என்று யோபு ஆணித்தரமாகப் பேசினார்.*+  யோபு கடவுளைவிட தன்னை நல்லவராகக் காட்டிக்கொள்ள நினைத்ததால்+ எலிகூவுக்கு ரொம்பவே கோபம் வந்தது; இவர் ராமின் வம்சத்திலும், பூசின்+ குடும்பத்திலும் பிறந்த பரகெயேலின் மகன்.  யோபுவின் மூன்று நண்பர்கள்மேலும் எலிகூவுக்குப் பயங்கர கோபம் வந்தது. ஏனென்றால், அவர்கள் யோபு கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்வதை விட்டுவிட்டு கடவுளைக் கெட்டவர் என்று குற்றம்சாட்டினார்கள்.+  யோபுவிடம் பேசுவதற்காக எலிகூ அவ்வளவு நேரமாகக் காத்திருந்தார். ஏனென்றால், அங்கிருந்த எல்லாரையும்விட அவர் வயதில் சின்னவர்.+  அந்த மூன்று நண்பர்களால் எதுவும் பேச முடியாமல் போனதைப் பார்த்தபோது எலிகூவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.  அதனால், பூஸ் என்பவரின் குடும்பத்தில் பிறந்த பரகெயேலின் மகன் எலிகூ அவர்களிடம், “நான் வயதில் சின்னவன்,ஆனால் நீங்கள் பெரியவர்கள்.+ அதனால், உங்களுக்கு மதிப்புக் கொடுத்து பேசாமல் இருந்தேன்.+எனக்குத் தெரிந்ததைக்கூட சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.   ‘பெரியவர்கள் பேசட்டும்,வயதானவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்’ என்று நினைத்தேன்.   ஆனால், கடவுள் தரும் சக்திதான் ஜனங்களுக்குப் புத்தியைக் கொடுக்கிறது.சர்வவல்லமையுள்ளவரின் மூச்சுதான் அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் திறனைக் கொடுக்கிறது.+   வயதாகிவிட்டால் மட்டும் ஞானம் வந்துவிடாது.பெரியவர்களுக்கு மட்டும்தான் நல்லது கெட்டது தெரியும் என்று சொல்ல முடியாது.+ 10  அதனால், நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்,தயவுசெய்து கேளுங்கள். 11  நீங்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தேன்.நீங்கள் யோசித்து பதில் சொல்லும்வரை அமைதியாக இருந்தேன்.+உங்களுடைய கருத்துகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.+ 12  நீங்கள் சொன்னதையெல்லாம் நன்றாகக் கவனித்தேன்.ஆனால், உங்கள் ஒருவரால்கூட யோபுவின் பக்கம் தப்பு இருப்பதாக நிரூபிக்க முடியவில்லை.*அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. 13  அதனால், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல் பேசாதீர்கள்.‘மனுஷனால் அல்ல, கடவுளால்தான் யோபுவின் வாதங்கள் தவறென்று நிரூபிக்க முடியும்’ என்று சொல்லாதீர்கள். 14  யோபு என்னைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.அதனால், நீங்கள் நியாயமில்லாமல் அவரிடம் பேசியதைப் போல நான் பேச மாட்டேன். 15  நீங்கள் எல்லாரும் குழம்பிப்போய் இருக்கிறீர்கள்; பேசுவதற்கு இனி உங்களிடம் வார்த்தைகளே இல்லை.என்ன சொல்வதென்றே உங்களுக்குத் தெரியவில்லை. 16  நீங்கள் தொடர்ந்து பேசுவீர்கள் என்று காத்திருந்தேன்.ஆனால், ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தீர்கள். 17  அதனால், இப்போது நான் பேசுகிறேன்.எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். 18  பேச நிறைய விஷயம் இருக்கிறது.அதைச் சொல்ல எனக்குள் இருக்கும் சக்தி என்னைத் தூண்டுகிறது. 19  நான் பேசத் துடியாய்த் துடிக்கிறேன்.*பேசவில்லை என்றால் என் இதயமே வெடித்துவிடும்போல் இருக்கிறது.*+ 20  பேசினால்தான் என் பாரம் குறையும். அதனால், என் மனதில் இருப்பதை இப்போது சொல்கிறேன். 21  நான் பாரபட்சமாகப் பேச மாட்டேன்.+போலியாக யாரையும் புகழ மாட்டேன். 22  எனக்கு அப்படியெல்லாம் பேசத் தெரியாது.அப்படிப் பேசினால், என்னைப் படைத்தவர் என்னைக் கொன்றே விடுவார்” என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “யோபு தன் பார்வைக்கு நீதிமானாக இருந்தார்.”
வே.வா., “யோபுவைக் கண்டிக்க முடியவில்லை.”
நே.மொ., “என் இதயம் அடைத்து வைக்கப்பட்ட திராட்சமதுவைப் போல இருக்கிறது.”
நே.மொ., “வெடிக்கப்போகும் புதிய திராட்சமது தோல்பையைப் போல அது இருக்கிறது.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா