யோசுவா 3:1-17
3 பின்பு யோசுவாவும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் விடியற்காலையில் எழுந்து, சித்தீமிலிருந்து+ புறப்பட்டு யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தார்கள். அதைக் கடப்பதற்குமுன் ராத்திரி அங்கே தங்கினார்கள்.
2 மூன்று நாட்களுக்குப்பின் ஜனங்களின் அதிகாரிகள்+ முகாம் முழுவதும் போய்,
3 எல்லா ஜனங்களிடமும், “உங்கள் கடவுளாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை லேவியர்களாகிய குருமார்கள் சுமந்துகொண்டு போவதை+ நீங்கள் பார்க்கும்போது, உடனே உங்களுடைய இடத்தைவிட்டுப் புறப்பட்டு அதன் பின்னால் போக வேண்டும்.
4 அப்போதுதான் நீங்கள் போக வேண்டிய வழி உங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அந்த வழியில் இதற்கு முன்னால் நீங்கள் போனதில்லை. உங்களுக்கும் அந்தப் பெட்டிக்கும் இடையே சுமார் 2,920 அடி* தூரம் இருக்க வேண்டும். அதைத் தாண்டி நீங்கள் போகக் கூடாது” என்று சொன்னார்கள்.
5 அப்போது யோசுவா ஜனங்களிடம், “நாளைக்கு யெகோவா உங்கள் நடுவே அற்புதங்கள் செய்யப்போகிறார்.+ அதனால் உங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.
6 பின்பு யோசுவா குருமார்களிடம், “நீங்கள் ஒப்பந்தப் பெட்டியை+ எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் போங்கள்” என்று சொன்னார். அதனால், அவர்கள் ஒப்பந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னால் போனார்கள்.
7 பின்பு யெகோவா யோசுவாவிடம், “இந்த நாளிலிருந்து இஸ்ரவேலர்கள் எல்லாருடைய கண் முன்னாலும் நான் உன்னைக் கௌரவப்படுத்துவேன்.+ நான் மோசேயுடன் இருந்ததுபோல்+ உன்னோடும் இருப்பேன்+ என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.
8 ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தான் ஆற்றில் கால்வைத்தவுடன், அங்கேயே அசையாமல் நிற்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளை கொடு”+ என்றார்.
9 பின்பு யோசுவா இஸ்ரவேலர்களிடம், “இங்கே வந்து உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வார்த்தைகளைக் கேளுங்கள்” என்று சொன்னார்.
10 அதன்பின், “உயிருள்ள கடவுள் உங்கள் நடுவில் இருக்கிறார்+ என்பதையும், கானானியர்கள், ஏத்தியர்கள், ஏவியர்கள், பெரிசியர்கள், கிர்காசியர்கள், எமோரியர்கள், எபூசியர்கள் ஆகியவர்களை உங்கள் முன்னாலிருந்து நிச்சயம் துரத்திவிடுவார்+ என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்வதற்கு அடையாளமாக,
11 முழு பூமிக்கும் எஜமானாகிய கடவுளின் ஒப்பந்தப் பெட்டி உங்களுக்கு முன்னால் யோர்தானுக்குள் கொண்டுபோகப்படும்.
12 இப்போது இஸ்ரவேலின் ஒவ்வொரு கோத்திரத்துக்கும் ஒருவர் என்று 12 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள்.+
13 முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமக்கிற குருமார்களின் பாதங்கள் யோர்தான் ஆற்றில் பட்டவுடன், மேலிருந்து ஓடிவரும் தண்ணீர் அப்படியே அணைபோல்* நிற்கும்”+ என்று சொன்னார்.
14 யோர்தானைக் கடப்பதற்காக ஜனங்கள் தங்களுடைய கூடாரங்களிலிருந்து புறப்பட்டபோது, ஒப்பந்தப் பெட்டியைச்+ சுமக்கிற குருமார்கள் அவர்களுக்கு முன்னால் போனார்கள்.
15 அறுவடைக் காலம் முழுவதும் யோர்தானில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும்.+ பெட்டியைச் சுமக்கிற குருமார்கள் யோர்தானுக்குப் போய்ச் சேர்ந்து, ஆற்றில் கால்வைத்த உடனேயே,
16 மேலிருந்து ஓடிவந்த தண்ணீர் அப்படியே நின்றது. ரொம்பத் தூரத்தில், அதாவது சார்தானின் பக்கத்தில் உள்ள ஆதாம் நகரத்தில், அணைபோல்* நின்றது. கீழே ஓடிய தண்ணீர் வடிந்துகொண்டே போய் உப்புக் கடல்* என்ற அரபா கடலில் கலந்தது. அதனால், ஜனங்கள் எல்லாரும் எரிகோவுக்கு நேரெதிராகக் கடந்துபோனார்கள்.
17 இஸ்ரவேல் தேசத்தார் எல்லாருமே கடந்துபோகும்வரை,+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்த குருமார்கள் யோர்தானின் நடுவே உலர்ந்த தரையில் நின்றுகொண்டிருந்தார்கள்.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “2,000 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “சுவர்போல்.”
^ வே.வா., “சுவர்போல்.”
^ அதாவது, “சவக் கடல்.”