யூதா எழுதிய கடிதம் 1:1-25
1 பரலோகத் தகப்பனாகிய கடவுளுக்கு அன்பானவர்களாகவும் இயேசு கிறிஸ்துவுக்கென்று பாதுகாக்கப்பட்டவர்களாகவும்+ இருக்கிற அழைக்கப்பட்டவர்களுக்கு,+ இயேசு கிறிஸ்துவின் அடிமையும் யாக்கோபின்+ சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் அதிகமதிகமாகக் கிடைக்கட்டும்.
3 அன்பானவர்களே, நம் எல்லாருக்கும் நன்மை தருகிற மீட்பைப்+ பற்றி உங்களுக்கு எழுத வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனாலும், எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பரிசுத்தவான்களிடம் ஒப்படைக்கப்பட்ட விசுவாசத்துக்காகக் கடினமாய்ப் போராடும்படி+ உங்களை உற்சாகப்படுத்தி எழுதுவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.
4 ஏனென்றால், சில ஆட்கள் நம் மத்தியில் தந்திரமாக நுழைந்திருக்கிறார்கள். கடவுள்பக்தி இல்லாத அந்த ஆட்கள் வெட்கங்கெட்ட நடத்தையில்*+ ஈடுபடுவதற்கு நம் கடவுளுடைய அளவற்ற கருணையை ஒரு சாக்காக வைத்துக்கொள்கிறார்கள். நம் ஒரே தலைவரும் உரிமையாளருமாகிய* இயேசு கிறிஸ்துவுக்குத் துரோகம் செய்கிறார்கள்.+ அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டுமென்று பல காலத்துக்கு முன்பே வேதவசனங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
5 எல்லா விஷயங்களும் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் உங்களுக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யெகோவா* தன்னுடைய மக்களை எகிப்திலிருந்து காப்பாற்றியபோதிலும்,+ விசுவாசம் காட்டாதவர்களைப் பிற்பாடு அழித்தார்.+
6 சில தேவதூதர்கள் ஆரம்பத்தில் தங்களுக்கு இருந்த ஸ்தானத்தைக் காத்துக்கொள்ளாமல் தாங்கள் இருக்க வேண்டிய இடத்தை* விட்டுவிட்டார்கள்,+ அதனால், அவர்களை மகா நாளின் நியாயத்தீர்ப்புக்காக நித்திய சங்கிலிகளால் கட்டி, பயங்கர இருட்டில் அடைத்து வைத்திருக்கிறார்.+
7 அதேபோல், சோதோம் கொமோராவிலும் அவற்றைச் சுற்றியிருந்த நகரங்களிலும் வாழ்ந்த மக்கள் அந்தத் தேவதூதர்களைப் போல் பாலியல் முறைகேட்டில்* மூழ்கியிருந்தார்கள். இயற்கைக்கு மாறான பாலியல் பழக்கங்களில் ஈடுபட்டார்கள்.+ அதனால், என்றும் அணையாத நெருப்பில் தண்டிக்கப்பட்டார்கள். அவர்களுடைய உதாரணம் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கிறது.+
8 அப்படியிருந்தும், கடவுள்பக்தி இல்லாத அந்த ஆட்களும்கூட கற்பனைக் கனவுகளில் மூழ்கியிருக்கிறார்கள், தங்களுடைய உடலைக் கறைபடுத்துகிறார்கள், அதிகாரத்தில் இருப்பவர்களை அவமதிக்கிறார்கள், மகிமையானவர்களைப் பழித்துப் பேசுகிறார்கள்.+
9 ஆனால், மோசேயின் உடலைப்+ பற்றித் தலைமைத் தூதராகிய+ மிகாவேலுக்கும்+ பிசாசுக்கும் விவாதம் ஏற்பட்டபோது, மிகாவேல் அவனைக் கண்டனம் செய்யத் துணியவில்லை, கடுமையான வார்த்தைகளில் திட்டவில்லை.+ அதற்குப் பதிலாக, “யெகோவா* உன்னைக் கண்டிக்கட்டும்” என்றுதான் சொன்னார்.+
10 ஆனால் அந்த ஆட்கள், தங்களுக்குப் புரியாத காரியங்களையெல்லாம் பழித்துப் பேசுகிறார்கள்.+ அவர்கள் இயல்புணர்ச்சியால் செயல்படுகிற புத்தியில்லாத மிருகங்களைப் போன்றவர்கள்.+ தாங்கள் செய்கிற எல்லாவற்றையும் மிருகங்களுடைய சுபாவத்தின்படியே செய்து தங்களைச் சீரழித்துக்கொள்கிறார்கள்.
11 அவர்களுக்குக் கேடுதான் வரும். ஏனென்றால், அவர்கள் காயீனைப் போல் பொல்லாத வழியில் போயிருக்கிறார்கள்,+ பிலேயாமைப் போல் கூலிக்காகத் தவறு செய்ய வேகமாகப் போயிருக்கிறார்கள்,+ கோராகுவைப் போல்+ கலகத்தனமான பேச்சால்+ அழிந்திருக்கிறார்கள்.
12 அன்பின் விருந்துகளில் உங்களோடு உணவு சாப்பிடுகிற அவர்கள், தண்ணீருக்கு அடியில் மறைந்திருக்கிற பாறைகள்;+ பயமில்லாமல் தங்களுடைய வயிற்றை நிரப்பிக்கொள்கிற மேய்ப்பர்கள்;+ காற்றில் இங்குமங்கும் அடித்துக்கொண்டு போகப்படுகிற தண்ணீர் இல்லாத மேகங்கள்;+ பழம் கொடுக்க வேண்டிய காலத்தில்* பழம் கொடுக்காமல் முழுவதும் பட்டுப்போய்* வேரோடு பிடுங்கப்படுகிற மரங்கள்.
13 தங்களுடைய வெட்கக்கேடுகளை நுரைதள்ளுகிற கொந்தளிப்பான கடல் அலைகள்.+ வழிதவறித் திரியும் நட்சத்திரங்கள். பயங்கர இருட்டில்தான் அவர்கள் என்றென்றும் தள்ளப்படுவார்கள்.+
14 ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு+ அவர்களைப் பற்றி இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “இதோ! யெகோவா* தன்னுடைய லட்சக்கணக்கான பரிசுத்த தூதர்களோடு+ எல்லாரையும் நியாயந்தீர்க்க வந்தார்.
15 கடவுள்பக்தி இல்லாத எல்லாரும் கடவுள்பக்தி இல்லாத விதத்தில் செய்த கடவுள்பக்தி இல்லாத எல்லா செயல்களுக்காகவும், கடவுள்பக்தி இல்லாத பாவிகள் தனக்கு விரோதமாகப் பேசிய அதிர்ச்சியூட்டும் பேச்சுக்காகவும்+ அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்க்க வந்தார்.”+
16 இப்படிப்பட்ட ஆட்கள் முணுமுணுக்கிறார்கள்,+ தங்களுடைய வாழ்க்கையைப் பற்றிக் குறை சொல்கிறார்கள், தங்களுடைய கெட்ட ஆசைகளின்படி நடக்கிறார்கள்,+ அளவுக்கதிகமாகப் பெருமையடிக்கிறார்கள், சொந்த லாபத்துக்காக மற்றவர்களைப் போலியாகப் புகழ்கிறார்கள்.+
17 ஆனால் என் அன்புக் கண்மணிகளே, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் சொன்ன* வார்த்தைகளை நினைத்துப் பாருங்கள்.
18 “கடைசிக் காலத்தில் கேலி செய்கிறவர்கள் மக்கள் மத்தியில் வருவார்கள், கடவுள்பக்தி இல்லாத காரியங்களைத் தங்களுடைய ஆசைப்படியெல்லாம் செய்வார்கள்”+ என்று அவர்கள் உங்களுக்குச் சொல்லி வந்தார்களே.
19 அந்த ஆட்கள் பிரிவினைகளை ஏற்படுத்துகிறவர்கள்,+ மிருகத்தனமானவர்கள், கடவுளுடைய சக்தி இல்லாதவர்கள்.
20 ஆனால் என் அன்புக் கண்மணிகளே, உங்களுடைய மகா பரிசுத்த விசுவாசத்தை அஸ்திவாரமாக வைத்து உங்களைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்; கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடு ஜெபம் செய்யுங்கள்.+
21 எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்.+ அதேசமயத்தில், முடிவில்லாத வாழ்வுக்கு+ வழிநடத்துகிற நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்துக்காக ஆவலோடு காத்திருங்கள்.
22 சந்தேகப்படுகிற ஆட்களுக்குத்+ தொடர்ந்து இரக்கம் காட்டுங்கள்.+
23 அழிவு என்ற நெருப்பிலிருந்து அவர்களை வெளியே இழுத்துக் காப்பாற்றுங்கள்.+ மற்றவர்கள்மீதும் தொடர்ந்து இரக்கம் காட்டுங்கள், ஆனால் அப்படிச் செய்யும்போது ஜாக்கிரதையாக இருங்கள். பாவச் செயல்களால் கறைபட்ட அவர்களுடைய உடையிலிருந்துகூட விலகியிருங்கள்.+
24 தடுக்கி விழாதபடி உங்களைப் பாதுகாத்து, தன்னுடைய மகிமைக்கு* முன்னால் உங்களைக் களங்கமில்லாதவர்களாக+ மிகுந்த சந்தோஷத்தோடு நிறுத்துவதற்கு வல்லவரான நம் கடவுளுக்கு,
25 நம் மீட்பரான ஒரே கடவுளுக்கு, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் அதிகாரமும் அன்றும் இன்றும் என்றும் இருக்கட்டும்! ஆமென்.*
அடிக்குறிப்புகள்
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “எஜமானுமாகிய.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “தங்களுக்குத் தகுந்த குடியிருப்பை.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “இலையுதிர் காலத்தின் முடிவில்.”
^ நே.மொ., “இரண்டு தடவை செத்துப்போய்.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “முன்கூட்டியே சொன்ன.”
^ வே.வா., “மகிமையான பிரசன்னத்துக்கு.”
^ அதாவது, “அப்படியே ஆகட்டும்.”