நெகேமியா 5:1-19

5  பின்பு, ஆண்களும் பெண்களும்* தங்களுடைய யூத சகோதரர்கள் செய்த அநியாயங்களைப் பொறுக்க முடியாமல் புலம்பித் தள்ளினார்கள்.+  சிலர், “நாங்கள் குழந்தைகுட்டிகளோடு நிறைய பேர் இருக்கிறோம். தானியத்தைக் கடன் வாங்கித்தான் எல்லாரும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது” என்று சொன்னார்கள்.  இன்னும் சிலர், “வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் அடமானம் வைத்துதான் இந்தப் பஞ்சகாலத்தில் தானியம் வாங்குகிறோம்” என்று சொன்னார்கள்.  வேறு சிலர், “ராஜாவுக்கு வரி செலுத்துவதற்காக* எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அடமானம் வைத்துவிட்டோம்.+  நாங்களும் எங்கள் சகோதரர்களும் ஒரே இரத்தம்தானே, எங்களுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகள் மாதிரிதானே! ஆனால், நாங்கள் மட்டும் எங்கள் பிள்ளைகளை அடிமைகளாக விற்க வேண்டியிருக்கிறது, எங்களுடைய பெண் பிள்ளைகள் சிலரை ஏற்கெனவே விற்றுவிட்டோம்.+ எங்கள் வயல்களும் திராட்சைத் தோட்டங்களும் மற்றவர்கள் கைக்குப் போய்விட்டதால், இப்போது எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை” என்று புலம்பினார்கள்.  அவர்கள் புலம்பியதைக் கேட்டபோது எனக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.  இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துப் பார்த்தேன். பின்பு, முக்கியப் பிரமுகர்களையும் துணை அதிகாரிகளையும் பார்த்து, “உங்களுடைய சகோதரர்களிடமிருந்தே ஏன் வட்டி வாங்குகிறீர்கள்?”+ என்று சொல்லி, அவர்களுடைய தப்பைத் தட்டிக்கேட்டேன். அதோடு, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜனங்கள் எல்லாரையும் கூடிவரச் சொன்னேன்.  நான் அவர்களிடம், “நம்முடைய யூத சகோதரர்கள் மற்ற தேசத்தாரிடம் விற்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் முடிந்தளவுக்கு அவர்களை மீட்டுக்கொண்டு வந்தோம். இப்போது அவர்களை நீங்களே விற்கலாமா?+ அவர்களை மறுபடியும் நாங்கள் மீட்க வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டார்கள்.  பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா? 10  நானும் என் சகோதரர்களும் உதவியாளர்களும் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்துவருகிறோம். இனி வட்டிக்குக் கடன் கொடுப்பதைத் தயவுசெய்து நாம் நிறுத்திவிடலாம்.+ 11  ஜனங்களுடைய வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும், வீடுகளையும், நீங்கள் வட்டியாக வாங்குகிற நூற்றிலொரு பங்கு* பணத்தையும், தானியத்தையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும் இன்றைக்கே தயவுசெய்து திருப்பிக் கொடுத்துவிடுங்கள்”+ என்று சொன்னேன். 12  அதற்கு அந்த ஜனங்கள், “நாங்கள் எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறோம், இனிமேல் எதையும் கேட்க மாட்டோம். நீங்கள் சொல்கிறபடியே செய்கிறோம்” என்றார்கள். அப்போது நான் குருமார்களை வரவழைத்து, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதாக அந்த ஜனங்களைச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னேன். 13  அதோடு, என் மேலங்கியின் மடிப்புகளை உதறி, “சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத எவனையும் உண்மைக் கடவுள் இதேபோல் உதறித்தள்ளட்டும். அவனுடைய வீட்டிலிருந்து இதேபோல் அவனை உதறித்தள்ளி, உடைமைகள் எதுவும் இல்லாமல் செய்துவிடட்டும்” என்று சொன்னேன். அதற்கு சபையார் எல்லாரும், “ஆமென்!”* என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள். கொடுத்த வாக்கை அவர்கள் காப்பாற்றினார்கள். 14  அர்தசஷ்டா ராஜா+ என்னை யூதாவின் ஆளுநராக+ நியமித்த நாளிலிருந்து, அதாவது அவருடைய ஆட்சியின் 20-ஆம் வருஷத்திலிருந்து+ 32-ஆம் வருஷம் வரைக்கும்,+ இந்த 12 வருஷங்களாக நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்குக் கொடுக்கப்படுகிற உணவை வாங்கிச் சாப்பிடவில்லை.+ 15  ஆனால், எனக்கு முன்பு ஆளுநர்களாக இருந்தவர்கள் உணவுக்காகவும் திராட்சமதுவுக்காகவும் தினசரி 40 வெள்ளி சேக்கலை* வசூலித்து, ஜனங்களைக் கஷ்டப்படுத்திவந்தார்கள். அந்த ஆளுநர்களின் உதவியாளர்களும் ஜனங்களை அடக்கி ஒடுக்கினார்கள். ஆனால் நான், கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை.+ 16  மதிலைக் கட்டுகிறவர்களோடு சேர்ந்து நானும் வேலை செய்தேன். என்னுடைய உதவியாளர்கள் எல்லாரும்கூட வேலை செய்ய அங்கே கூடிவந்தார்கள். நாங்கள் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.+ 17  யூதர்களிலும் துணை அதிகாரிகளிலும் 150 பேருக்கு நான் உணவு கொடுத்தேன். மற்ற தேசங்களிலிருந்து வந்தவர்களுக்கும் உணவு கொடுத்தேன். 18  என்னுடைய செலவில் தினமும் ஒரு காளையும், கொழுமையான ஆறு செம்மறியாடுகளும், பறவைகளும் சமைக்கப்பட்டன. அதோடு, பத்து நாட்களுக்கு ஒரு தடவை விதவிதமான திராட்சமது ஏராளமாகப் பரிமாறப்பட்டது. அப்படியிருந்தும், ஆளுநருக்குக் கொடுக்கப்படும் உணவை நான் கேட்டு வாங்கவில்லை. ஏனென்றால் ஜனங்கள் ஏற்கெனவே கஷ்டப்பட்டு சேவை* செய்துகொண்டிருந்தார்கள். 19  என் கடவுளே, இந்த ஜனங்களுக்கு நான் செய்த உதவிகளை மறந்துவிடாமல், என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “அவர்களுடைய மனைவிகளும்.”
வே.வா., “கப்பம் கட்டுவதற்காக.”
அதாவது, “மாதந்தோறும் வாங்குகிற 1 சதவீத பங்கு.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்!”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “ராஜாவுக்காக வேலை.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா