நீதிமொழிகள் 3:1-35
3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி.
2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+
3 மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் விட்டுவிடாதே.+
அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.உன் இதயப் பலகையில் எழுதிக்கொள்.+
4 அப்போது, கடவுள் பார்வையிலும் மனிதர்கள் பார்வையிலும்,நீ பிரியமானவனாகவும், மிகுந்த விவேகம் உள்ளவனாகவும் இருப்பாய்.+
5 யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு.+உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே.*+
6 எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய்.+அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்.+
7 நீயே உன்னை ஞானி என்று நினைத்துக்கொள்ளாதே.+
யெகோவாவுக்குப் பயந்து நட, தீமையை விட்டு விலகு.
8 அப்போது, உன் உடல் ஆரோக்கியம் அடையும்,உன் எலும்புகள் புதுத்தெம்பு பெறும்.
9 உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்துயெகோவாவை மகிமைப்படுத்து.+
10 அப்போது, உன் சேமிப்புக் கிடங்குகள் நிறைந்திருக்கும்.+உன் ஆலைகள் புதிய திராட்சமதுவால் நிரம்பி வழியும்.
11 என் மகனே, யெகோவாவின் புத்திமதியை ஒதுக்கித்தள்ளாதே.+அவர் கண்டிக்கும்போது வெறுப்பைக் காட்டாதே.+
12 ஏனென்றால், அப்பா தன் செல்ல மகனைக் கண்டிப்பது போல,+யெகோவாவும் தான் நேசிக்கிறவர்களைக் கண்டிக்கிறார்.+
13 ஞானத்தைக் கண்டுபிடிப்பவனும்,பகுத்தறிவைப் பெறுகிறவனும் சந்தோஷமானவன்.+
14 ஞானத்தைச் சம்பாதிப்பது வெள்ளியைச் சம்பாதிப்பதைவிட மேலானது.அது தரும் லாபம் தங்கத்தைவிட மேலானது.+
15 அது பவளங்களைவிட* அதிக மதிப்புள்ளது.நீ ஆசைப்படுகிற எதுவுமே அதற்கு ஈடாகாது.
16 அதன் வலது கையில் நீண்ட ஆயுள் இருக்கிறது.அதன் இடது கையில் செல்வமும் மகிமையும் இருக்கின்றன.
17 அதன் வழிகள் சந்தோஷத்தைத் தரும்.அதன் பாதைகளெல்லாம் சமாதானத்தைத் தரும்.+
18 அதை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு அது வாழ்வளிக்கிற மரம் போன்றது.அதை உறுதியாகப் பிடித்துக்கொள்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
19 யெகோவா தன்னுடைய ஞானத்தால் இந்தப் பூமிக்கு அஸ்திவாரம் போட்டார்.+
தன்னுடைய பகுத்தறிவால் வானத்தை உறுதியாக நிலைநிறுத்தினார்.+
20 தன்னுடைய அறிவால் ஆழமான தண்ணீரைப் பிளந்தார்,வானத்து மேகங்களைப் பனி பொழிய வைத்தார்.+
21 என் மகனே, இவற்றை* எப்போதும் உன் கண் முன்னால் வைத்துக்கொள்.
ஞானத்தையும்* யோசிக்கும் திறனையும் பாதுகாத்துக்கொள்.
22 அவை உனக்கு வாழ்வு தரும்.உன் கழுத்துக்கு அலங்காரமாக இருக்கும்.
23 அப்போது, நீ உன் பாதையில் பாதுகாப்பாக நடப்பாய்.உன் கால் ஒருபோதும் தடுமாறாது.*+
24 நீ பயம் இல்லாமல் படுத்துக்கொள்வாய்.+உன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்குவாய்.+
25 திடீரென வரும் ஆபத்தை நினைத்துப் பயப்பட மாட்டாய்.+பொல்லாதவர்களைத் தாக்கும் புயலைப் பார்த்து நடுங்க மாட்டாய்.+
26 ஏனென்றால், யெகோவா உன் நம்பிக்கையாக* இருப்பார்.+உன் கால்கள் வலையில் சிக்கிவிடாமல் காப்பாற்றுவார்.+
27 நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+
28 ஒருவன் கேட்பதை உன்னால் உடனே கொடுக்க முடிந்தும்,
“நீ போய்விட்டு வா, நாளைக்குத் தருகிறேன்” என்று சொல்லாதே.
29 உன்னை நம்பி பயமில்லாமல் வாழ்கிறஉன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எதிராகச் சதி செய்யாதே.+
30 ஒருவன் உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாதபோது,காரணமே இல்லாமல் அவனோடு சண்டை போடாதே.+
31 வன்முறையில் இறங்குகிறவனைப் பார்த்துப் பொறாமைப்படாதே.+அவன் செய்கிற எதையும் நீ செய்யாதே.
32 ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+
33 பொல்லாதவனின் வீட்டை யெகோவா சபிக்கிறார்.+ஆனால், நீதிமானின் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.+
34 கேலி செய்கிறவர்களை அவர் கேலி செய்கிறார்.+ஆனால், தாழ்மையானவர்களுக்கு* கருணை காட்டுகிறார்.+
35 ஞானமுள்ளவர்கள் மரியாதையைச் சம்பாதிப்பார்கள்.ஆனால், முட்டாள்கள் அவமரியாதையைத் தேடிக்கொள்கிறார்கள்.*+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “சட்டத்தை.”
^ வே.வா., “சொந்த புத்திமேல் சாயாதே.”
^ வே.வா., “உன் வருமானத்தில் கிடைக்கிற மிகச் சிறந்தவற்றையும்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ அதாவது, “நடைமுறை ஞானத்தையும்.”
^ அநேகமாக, முந்தின வசனங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் குணங்களைக் குறிக்கலாம்.
^ வே.வா., “எதன்மேலும் மோதாது.”
^ வே.வா., “நம்பிக்கையின் ஊற்றாக.”
^ வே.வா., “கடமைப்பட்டவர்களுக்கு.”
^ வே.வா., “சாந்தமானவர்களுக்கு.”
^ வே.வா., “அவமரியாதையைப் பெருமையாக நினைக்கிறார்கள்.”