தீத்துவுக்குக் கடிதம் 2:1-15

2  ஆனால் நீ பயனுள்ள* போதனைகளுக்கு இசைவான விஷயங்களைத் தொடர்ந்து பேசு.+  வயதான ஆண்கள் பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாக, பொறுப்போடு நடக்கிறவர்களாக, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக, அன்பையும் சகிப்புத்தன்மையையும் காட்டுவதில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.  அதேபோல், வயதான பெண்கள் பயபக்தியோடு நடக்கிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசாதவர்களாக, திராட்சமதுவுக்கு அடிமையாகாதவர்களாக, நல்லதைக் கற்றுக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அப்போதுதான், இளம் பெண்கள் தங்களுடைய கணவர்மீதும் பிள்ளைகள்மீதும் அன்புள்ளவர்களாக,  தெளிந்த புத்தியுள்ளவர்களாக, கற்புள்ளவர்களாக, வீட்டு வேலைகளைச் செய்கிறவர்களாக,* நல்லவர்களாக, தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்களாக+ இருக்கும்படி அவர்களால் புத்திசொல்ல* முடியும்; கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மற்றவர்கள் பழித்துப்பேச இடமிருக்காது.  அதேபோல், இளம் ஆண்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக+ இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இரு.  நல்ல செயல்கள் செய்வதில் எல்லா விதத்திலும் முன்மாதிரியாக இரு. உண்மையான விஷயங்களைக் கருத்தாகக் கற்றுக்கொடு.*+  அப்படிக் கற்றுக்கொடுக்கும்போது, யாரும் குற்றம்சொல்ல முடியாத நல்ல* வார்த்தைகளைப் பேசு;+ அப்போதுதான், எதிரிகள் நம்மைப் பற்றித் தவறாக* பேச வழியில்லாமல்+ வெட்கப்பட்டுப்போவார்கள்.  அடிமைகள் எல்லாவற்றிலும் தங்கள் எஜமான்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,+ அவர்களைப் பிரியப்படுத்த முயற்சி செய்ய வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது, 10  திருடக் கூடாது;+ அதற்குப் பதிலாக, தாங்கள் முழு நம்பிக்கைக்குரியவர்கள் என்பதைக் காட்ட வேண்டும். அப்போதுதான், நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை எல்லா விதத்திலும் அவர்களால் அலங்கரிக்க முடியும்.+ 11  கடவுளுடைய அளவற்ற கருணை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, எல்லா விதமான ஆட்களையும் காப்பாற்றுவதற்கு+ அது உதவி செய்கிறது; 12  கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிடுவதற்கும்+ தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதிமான்களாக, கடவுள்பக்தி உள்ளவர்களாக இந்த உலகத்தில்* வாழ்வதற்கும்+ அந்த அளவற்ற கருணை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. 13  நம்முடைய சந்தோஷமான எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காகவும்,+ நம்முடைய மகத்தான கடவுளும் நம்முடைய மீட்பராகிய கிறிஸ்து இயேசுவும் மகிமையோடு வெளிப்படுவதற்காகவும் காத்திருக்கிற நேரத்தில் நாம் அப்படி வாழ வேண்டும். 14  கிறிஸ்து நமக்காகத் தன்னையே கொடுத்தார்;+ இப்படி, நம்மை எல்லா விதமான அக்கிரமங்களிலிருந்தும் விடுவித்தார்.+ அதோடு, அவருக்குச் சொந்தமான விசேஷ சொத்தாகவும் நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைச் சுத்தமாக்கினார்.+ 15  இந்த விஷயங்களைப் பற்றி நீ முழு அதிகாரத்தோடு தொடர்ந்து பேசு, தொடர்ந்து அறிவுரை கொடு,* தொடர்ந்து கண்டித்துப் பேசு.+ யாரும் உன்னைத் தாழ்வாகப் பார்க்க இடம்கொடுக்காதே.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆரோக்கியமான.”
வே.வா., “வீட்டைக் கவனித்துக்கொள்கிறவர்களாக.”
வே.வா., “பயிற்சி கொடுக்க.”
அல்லது, “கருத்தாகவும் உண்மையாகவும் கற்றுக்கொடு.”
வே.வா., “ஆரோக்கியமான; பயனுள்ள.”
வே.வா., “கீழ்த்தரமாக.”
வே.வா., “சகாப்தத்தில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “உற்சாகப்படுத்து.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா