சங்கீதம் 51:1-19
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம். தாவீது பத்சேபாளுடன்+ உறவுகொண்டதைப் பற்றி நாத்தான் தீர்க்கதரிசி அவரிடம் வந்து பேசிய பிறகு பாடியது.
51 கடவுளே, உங்களுடைய மாறாத அன்பின்படி எனக்குக் கருணை காட்டுங்கள்.+
உங்களுடைய மகா இரக்கத்தின்படி என் குற்றங்களைத் துடைத்தழியுங்கள்.+
2 என் குற்றங்களை முழுமையாகக் கழுவிவிடுங்கள்.+என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்.+
3 ஏனென்றால், என் குற்றங்கள் எனக்கு நன்றாகத் தெரியும்.என் பாவம் எப்போதும் என் கண் முன்னால்* இருக்கிறது.+
4 உங்களுக்கு எதிராகவே நான் பாவம் செய்துவிட்டேன்.+நீங்கள் வெறுக்கும் காரியங்களைச் செய்துவிட்டேன்.+
அதனால், நீங்கள் சொல்வது நீதியானதுதான்.உங்கள் தீர்ப்பு நியாயமானதுதான்.+
5 நான் குற்றம் குறையோடு பிறந்தேன்.பாவத்தோடு என் தாயின் வயிற்றில் உருவானேன்.*+
6 உள்ளத்தில் உண்மையாக இருப்பவர்கள்மேல் நீங்கள் பிரியமாக இருக்கிறீர்கள்.+அதனால், உண்மையான ஞானத்தை என் உள்ளத்துக்குப் புகட்டுங்கள்.
7 மருவுக்கொத்தால் என் பாவத்தை நீக்குங்கள், அப்போது நான் சுத்தமாவேன்.+என்னைக் கழுவுங்கள், அப்போது நான் பனியைவிட வெண்மையாவேன்.+
8 சந்தோஷ சத்தமும் ஆனந்த ஆரவாரமும் என் காதில் கேட்கட்டும்.அப்போதுதான், நீங்கள் நொறுக்கிப்போட்ட என் எலும்புகள் சந்தோஷத்தில் துள்ளும்.+
9 என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி உங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்ளுங்கள்.+என்னுடைய எல்லா குற்றங்களையும் துடைத்தழியுங்கள்.+
10 கடவுளே, சுத்தமான இதயத்தை எனக்குள் உருவாக்குங்கள்.+அலைபாயாத* புதிய மனதை+ எனக்குள் வையுங்கள்.
11 உங்களுடைய சன்னிதியைவிட்டு என்னைத் துரத்திவிடாதீர்கள்.உங்களுடைய சக்தியை என்னிடமிருந்து எடுத்துவிடாதீர்கள்.
12 உங்கள் மீட்பைப் பார்க்கும் சந்தோஷத்தை மறுபடியும் எனக்குக் கொடுங்கள்.+உங்களுக்குக் கீழ்ப்படியும் ஆசையை எனக்குள் தூண்டுங்கள்.
13 குற்றம் செய்கிறவர்களுக்கு உங்கள் வழிகளை நான் சொல்லிக்கொடுப்பேன்.+பாவிகளான அவர்கள் அப்போது உங்களிடம் திரும்பி வருவார்கள்.
14 கடவுளே, என்னை மீட்கும் கடவுளே,+கொலைப்பழியிலிருந்து* என்னை மீட்டுக்கொள்ளுங்கள்.+அப்போது, என் நாவு உங்கள் நீதியைப் பற்றிச் சந்தோஷமாகச் சொல்லும்.+
15 யெகோவாவே, என் உதடுகளைத் திறந்திடுங்கள்.அப்போது, என் வாய் உங்களைப் புகழும்.+
16 நீங்கள் பலியை விரும்புவதில்லை, விரும்பினால் அதைச் செலுத்துவேன்.+தகன பலியிலும் நீங்கள் பிரியப்படுவதில்லை.+
17 உடைந்த மனம்தான் கடவுளுக்குப் பிரியமான பலியாக இருக்கிறது.கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும்நீங்கள் ஒதுக்கித்தள்ள* மாட்டீர்கள்.+
18 உங்களுக்கு இஷ்டமானபடியே* சீயோனுக்கு நன்மை செய்யுங்கள்.எருசலேமின் மதில்களை எடுத்துக் கட்டுங்கள்.
19 அப்போது, நீதியோடு செலுத்தப்படுகிற தகன பலிகளைநீங்கள் பிரியத்தோடு ஏற்றுக்கொள்வீர்கள்.அப்போது, உங்கள் பலிபீடத்தில் காளைகள் செலுத்தப்படும்.+
அடிக்குறிப்புகள்
^ வே.வா., “என் மனதில்.”
^ வே.வா., “என் தாயின் வயிற்றில் உருவான நொடியிலிருந்தே நான் பாவிதான்.”
^ வே.வா., “உறுதியான.”
^ வே.வா., “இரத்தப்பழியிலிருந்து.”
^ வே.வா., “கேவலமாக நினைக்க.”
^ வே.வா., “உங்கள் அனுக்கிரகத்தின்படியே.”