ஏசாயா 63:1-19
63 ஏதோமிலிருந்து+ வருகிறவர் யார்?கண்ணைப் பறிக்கும் வண்ண* உடையில் போஸ்றாவிலிருந்து+ வருகிறவர் யார்?கம்பீரமான உடை உடுத்திக்கொண்டு,மகா வல்லமையோடு நடந்து வருகிறவர் யார்?
“நீதிநியாயத்தோடு பேசுகிற நான்தான் அவர்.மகா வல்லமையோடு காப்பாற்றுகிறவராகிய நான்தான் அவர்.”
2 திராட்சரச ஆலையில் திராட்சைகளை மிதிக்கிறவர்களின் உடைகளைப் போலஉங்கள் உடை ஏன் சிவப்பாக இருக்கிறது?+
3 “நான் தனியாகத் திராட்சரச ஆலையில் மிதித்தேன்.
யாருமே என்னுடன் இல்லை.
நான் அவர்களைக் கோபத்தோடு மிதித்துப்போட்டேன்.அவர்களை ஆக்ரோஷத்தோடு மிதித்து நசுக்கினேன்.+
என் உடைகளில் அவர்களுடைய இரத்தம் தெறித்தது.நான் போட்டிருந்த துணியெல்லாம் கறைபட்டது.
4 பழிவாங்குவதற்கு நான் ஒரு நாளைத் தீர்மானித்திருக்கிறேன்.+இந்த ஜனங்கள் மீட்கப்படும் வருஷம் நெருங்கிவிட்டது.
5 நான் தேடிப் பார்த்தேன், உதவி செய்ய யாருமே இல்லை.ஒருவரும் துணைக்கு வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
என் கையே என்னை மீட்டது.*+என் கோபமே எனக்குத் துணை செய்தது.
6 கோபத்தில் மக்களை மிதித்தேன்.என்னுடைய ஆக்ரோஷம் என்ற மதுவைக் குடிக்க வைத்தேன்.+அவர்களுடைய இரத்தத்தைத் தரையிலே ஓட விட்டேன்.”
7 யெகோவா மாறாத அன்போடு செய்த செயல்களையும்அவருக்குப் புகழ் சேர்க்கும்படி செய்த செயல்களையும் பற்றி நான் சொல்வேன்.ஏனென்றால், யெகோவா இரக்கத்தினாலும் அளவுகடந்த அன்பினாலும்*எங்களுக்காக நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறார்.+இஸ்ரவேல் ஜனங்களுக்காக யெகோவா நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்.
8 “இவர்கள் என்னுடைய ஜனங்கள், என்னுடைய பிள்ளைகள்; இவர்கள் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டார்கள்”+ என்று அவர் சொல்லி,
அவர்களுடைய மீட்பரானார்.+
9 அவர்கள் வேதனைப்பட்ட சமயத்திலெல்லாம் அவரும் வேதனைப்பட்டார்.+
அவருடைய சொந்த தூதுவரையே அனுப்பி அவர்களைக் காப்பாற்றினார்.+
அன்போடும் கரிசனையோடும் அவர்களை மீட்டுக்கொண்டார்.+பூர்வ காலம் முழுவதும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார்.+
10 ஆனால் அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல்,+ அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தினார்கள்.+
அதனால், அவர் அவர்களுடைய எதிரியாக மாறினார்.+அவர்களோடு போர் செய்தார்.+
11 அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தைநினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:
“தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே?
அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே?
12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?
13 ஒரு குதிரை வெட்டவெளியில்* தடைகள் இல்லாமல் நடந்துபோவது போல,ஆழமான கடலின் நடுவேஅவர்களைத் தடைகள் இல்லாமல் நடந்துபோக வைத்தவர் எங்கே?
14 மந்தைகள் சமவெளிக்கு இறங்கிப்போய் அமைதியாக ஓய்வெடுப்பது போல,அவர்களும் அமைதியை அனுபவிப்பதற்கு யெகோவாவின் சக்தி அவர்களை வழிநடத்தியது.”+
உங்கள் பெயருக்கு மகிமை* சேர்ப்பதற்காகஉங்கள் ஜனங்களை இப்படி வழிநடத்தினீர்கள்.+
15 பரலோகத்திலிருந்து கீழே பாருங்கள்.பரிசுத்தமும் மகிமையும்* நிறைந்த உங்களுடைய உயர்ந்த குடியிருப்பிலிருந்து பாருங்கள்.
உங்கள் வைராக்கியமும் வல்லமையும் எங்கே?உங்கள் அடிமனதிலிருந்து சுரக்கும் கரிசனையும்+ இரக்கமும்+ எங்கே?
அவற்றையெல்லாம் ஏன் காட்டாமல் இருக்கிறீர்கள்?
16 நீங்கள்தான் எங்கள் தகப்பன்.+ஆபிரகாமுக்கு எங்களைத் தெரியாவிட்டாலும்,இஸ்ரவேலுக்கு எங்களை அடையாளம் தெரியாவிட்டாலும்,யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன்.
பூர்வ காலத்திலிருந்தே நீங்கள்தான் எங்களை விடுவிக்கிறவராக இருக்கிறீர்கள்.+
17 யெகோவாவே, நாங்கள் உங்களுடைய வழியைவிட்டு விலகிப் போக ஏன் விடுகிறீர்கள்?
உங்கள்மேல் பயமே இல்லாதபடி எங்கள் இதயத்தைக் கடினமாக்க ஏன் அனுமதிக்கிறீர்கள்?+
உங்கள் ஊழியர்களுக்காக, உங்கள் சொத்தாகிய ஜனத்துக்காக,மறுபடியும் இரக்கம் காட்டுங்கள்.+
18 நீங்கள் கொடுத்த தேசத்தை உங்கள் பரிசுத்த ஜனங்கள் கொஞ்சக் காலம் அனுபவித்தார்கள்.
உங்கள் ஆலயத்தை எதிரிகள் மிதித்துப் போட்டார்கள்.+
19 ரொம்பக் காலமாக உங்களால் ஆட்சி செய்யப்படாத ஜனங்களைப் போல நாங்கள் ஆகிவிட்டோம்.உங்கள் பெயரால் ஒருபோதும் அழைக்கப்படாத ஜனங்களைப் போல ஆகிவிட்டோம்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “கருஞ்சிவப்பு.”
^ வே.வா., “எனக்கு வெற்றி தேடித் தந்தது.”
^ வே.வா., “மாறாத அன்பினாலும்.”
^ வே.வா., “வனாந்தரத்தில்.”
^ வே.வா., “அழகு.”
^ வே.வா., “அழகும்.”