ஏசாயா 22:1-25

22  தரிசனப் பள்ளத்தாக்குக்கு* எதிரான தீர்ப்பு:+ உன் ஜனங்கள் எல்லாரும் மொட்டைமாடிக்கு ஏறியிருக்கிறார்களே, எல்லாருக்கும் என்ன ஆனது?   நீ குழப்பம் நிறைந்த நகரமாக இருந்தாய்.கூச்சலும் கும்மாளமும் போட்டுக்கொண்டிருந்தாய். வாளால் வெட்டப்படாமலேயே உன் ஜனங்கள் செத்துப்போனார்கள்.போர் நடக்காமலேயே அவர்கள் பிணமானார்கள்.+   உங்களைக் கொடூரமாக ஆட்சி செய்தவர்கள் ஒன்றாகத் தப்பித்து ஓடினார்கள்.+ ஆனாலும், அம்புகளால் தாக்கப்படாமலேயே பிடிபட்டார்கள். தொலைதூரத்துக்கு ஓடிப்போனவர்கள்கூட பிடிபட்டார்கள்.எல்லாரும் கைதிகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.+   அதனால்தான் நான் இப்படிச் சொன்னேன்: “என்னைக் கொஞ்சம் தனியாக விடுங்கள்.என் ஜனங்களுக்கு வரும் அழிவை+ நினைத்து நான் கதறி அழ வேண்டும்.+நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம்.   ஏனென்றால், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா,தரிசனப் பள்ளத்தாக்கில் தோல்வியைத் தரப்போகும் நாள் அது. குழப்பமும் திகிலும் நிறைந்த நாள் அது.+அப்போது மதில் இடிக்கப்படும்.+மலையை நோக்கி சத்தம்* எழும்பும்.   ஏலாம்+ ஜனங்கள் அம்புக்கூடுகளை* எடுத்துக்கொண்டு,ரதங்களோடும் குதிரைகளோடும் வீரர்களோடும் புறப்படுவார்கள்.கீர்+ ஜனங்கள் கேடயத்தைத் தயாராக்குவார்கள்.   உன்னுடைய சிறப்பான பள்ளத்தாக்குகள்போர் ரதங்களால் நிறைந்திருக்கும்.நகரவாசலில் குதிரைகள் தயாராக நிற்கும்.*   யூதாவின் திரை* விலக்கப்படும். “அந்த நாளில், வன மாளிகையிலே+ நீங்கள் சேர்த்து வைத்திருக்கிற ஆயுதங்கள்மேல் நம்பிக்கை வைப்பீர்கள்.  ‘தாவீதுடைய நகரத்தின்’ மதில்களில் எங்கெல்லாம் விரிசல்கள் இருக்கிறதென்று பார்ப்பீர்கள்.+ கீழ் குளத்தில் தண்ணீரைச் சேமித்து வைப்பீர்கள்.+ 10  எருசலேமில் உள்ள வீடுகளையெல்லாம் எண்ணிப் பார்ப்பீர்கள். அவற்றில் சில வீடுகளை இடித்து நகரத்தின் மதிலைப் பலப்படுத்துவீர்கள். 11  பழைய குளத்துத் தண்ணீருக்கென்று இரண்டு மதில்களுக்கு இடையே ஒரு நீர்த்தேக்கத்தை அமைப்பீர்கள். ஆனால், ரொம்பக் காலத்துக்கு முன்பே அதை உருவாக்கிய மகத்தான படைப்பாளரைத் தேட மாட்டீர்கள். 12  அந்த நாளில், உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா,எல்லாரையும் அழுது புலம்பச் சொல்வார்.+தலையை மொட்டையடித்து, துக்கத் துணியை* உடுத்தவும் சொல்வார். 13  ஆனால், நீங்கள் கூத்தும் கும்மாளமும் போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.ஆடுமாடுகளை அடித்துச் சாப்பிட்டுக்கொண்டும்,திராட்சமதுவைக் குடித்துக்கொண்டும் இருக்கிறீர்கள்.+ ‘சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்’+ என்று சொல்கிறீர்கள்.” 14  அதனால், பரலோகப் படைகளின் யெகோவா என்னிடம் இந்தச் செய்தியைச் சொன்னார்: “‘நீங்கள் செய்த இந்தக் குற்றத்துக்கு நீங்கள் சாகும்வரை பரிகாரமே கிடையாது’+ என்று உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.” 15  உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “வீட்டை* நிர்வகிக்கும் அதிகாரியான செப்னாவிடம்+ போய், 16  ‘நீ உனக்காக ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாயே, உனக்கு இங்கு என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?’ என்று கேள். அவன் ஒரு மலைமேல் தன் கல்லறையை வெட்டிக்கொண்டிருக்கிறான். 17  ‘மனுஷனே, யெகோவாவாகிய நான் உன்னைத் தூக்கி எறிந்துவிடுவேன். 18  உன்னைப் பிடித்து, நன்றாக இறுக்கிக் கட்டி, ஒரு பந்து போல வெட்டவெளியில் வீசிவிடுவேன். அங்கே நீ செத்துப்போவாய். அங்கே உன்னுடைய பகட்டான ரதங்கள் உன் எஜமானின் வீட்டுக்கு மானக்கேடாக இருக்கும். 19  உன் பதவியிலிருந்து நான் உன்னை இறக்குவேன், உன் அதிகாரத்தைப் பறித்துவிடுவேன். 20  அந்த நாளில், இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமான எலியாக்கீமை+ அழைப்பேன். 21  உன் அங்கியை அவனுக்குப் போட்டுவிடுவேன். உன்னுடைய இடுப்புவாரை அவனுக்கு இறுக்கமாகக் கட்டிவிடுவேன்.+ உன் அதிகாரத்தை அவன் கையில் கொடுப்பேன். எருசலேம் ஜனங்களுக்கும் யூதா ஜனங்களுக்கும் அவன் தகப்பனாக இருப்பான். 22  தாவீதின் வீட்டுச் சாவியை+ அவனிடம் ஒப்படைப்பேன்.* அவன் திறந்தால் யாராலும் மூட முடியாது. அவன் மூடினால் யாராலும் திறக்க முடியாது. 23  ஒரு பலமான சுவரில் அவனை ஆணிபோல் அடித்து நிறுத்துவேன். சிறிய, பெரிய பாத்திரங்கள் எல்லாவற்றையும் ஆணி தாங்குவது போல அவனுடைய பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அவன் தாங்குவான். 24  தன் தகப்பனுடைய வீட்டின் மகிமையை அவன் சுமப்பான். அந்த வீட்டில் ஒரு மகிமையான சிம்மாசனம்போல் இருப்பான். 25  அந்த நாளில், பலமான சுவரில் அடிக்கப்பட்டிருந்த ஆணியைப் பிடுங்கி எறிவேன்.+ அது தூக்கிச் சுமந்த பொருளெல்லாம் விழுந்து நொறுங்கும். ஏனென்றால், யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

அநேகமாக, எருசலேமைக் குறிக்கலாம்.
கதறல் சத்தம் அல்லது போர்ச் சத்தம்.
அம்புக்கூடு என்பது அம்புகளை வைப்பதற்கான சாதனம்.
வே.வா., “குதிரைவீரர்கள் தயாராக நிற்பார்கள்.”
வே.வா., “பாதுகாப்பு.”
வே.வா., “அரண்மனையை.”
நே.மொ., “அவன் தோளில் மாட்டுவேன்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா