எபேசியருக்குக் கடிதம் 3:1-21

3  இதனால்தான், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களான உங்களுடைய சார்பில் கிறிஸ்து இயேசுவுக்காகக் கைதியாய் இருக்கிற பவுலாகிய நான்—*+  உங்கள் நன்மைக்காகக் கடவுளுடைய அளவற்ற கருணையால் எனக்கு நிர்வாகப் பொறுப்பு கொடுக்கப்பட்டதைப்+ பற்றி,  அதாவது எனக்குப் பரிசுத்த ரகசியம் வெளிப்படுத்தப்பட்டதைப் பற்றி, நிச்சயம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதைப் பற்றி ஏற்கெனவே உங்களுக்குச் சுருக்கமாக எழுதியிருந்தேன்.  இதை நீங்கள் வாசிக்கும்போது கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த ரகசியத்தைக்+ குறித்து நான் புரிந்துவைத்திருக்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.  அந்த ரகசியம் அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் இப்போது கடவுளுடைய சக்தியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிற அளவுக்கு, கடந்த தலைமுறையைச் சேர்ந்த யாருக்கும் வெளிப்படுத்தப்படவில்லை.+  நல்ல செய்தியைக் கேட்பதன் மூலமும் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபடுவதன் மூலமும் மற்ற தேசத்து மக்கள் அவருடைய சக வாரிசுகளாகவும், ஒரே உடலின் உறுப்புகளாகவும்,+ கடவுளுடைய வாக்குறுதியில் நம்மோடு பங்குள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்பதுதான் அந்த ரகசியம்.  கடவுளுடைய அளவற்ற கருணை என்ற இலவச அன்பளிப்பின் காரணமாக நான் அந்த ரகசியத்தை அறிவிக்கும் ஊழியனாக ஆனேன். அந்த அன்பளிப்பை அவர் தன்னுடைய வல்லமையின் மூலம் எனக்குத் தந்தார்.+  பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக மிக அற்பமானவனாக இருந்தாலும்,+ கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லாத ஆசீர்வாதங்களைப் பற்றிய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்.+  அதோடு, எல்லாவற்றையும் படைத்த கடவுளால்* பல காலமாக மறைக்கப்பட்டிருந்த பரிசுத்த ரகசியம்+ எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை எல்லாருக்குமே புரிய வைப்பதற்காகவும் அவர் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார். 10  பல்வேறு விதங்களில் வெளிப்படுகிற கடவுளுடைய ஞானம், பரலோகத்தில் இருக்கிற நிர்வாகங்களுக்கும் அதிகாரங்களுக்கும் சபையின் மூலம்+ இப்போது தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.+ 11  கிறிஸ்துவாகிய நம் எஜமான் இயேசுவின் சம்பந்தமாகக் கடவுள் ஏற்படுத்திய நித்திய நோக்கத்தின்படி இது இருக்கிறது.+ 12  அவர் மூலம் நம்மால் கடவுளிடம்* தயக்கமில்லாமல் பேச முடிகிறது; அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தால் கடவுளை நம்பிக்கையோடு தாராளமாக அணுகவும் முடிகிறது.+ 13  அதனால், உங்களுக்காக நான் படுகிற இந்த உபத்திரவங்களைப் பார்த்து நீங்கள் மனம் தளர்ந்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், இவை உங்களுக்கு மகிமை சேர்க்கும்.+ 14  இதனால்தான், பரலோகத் தகப்பனுக்கு முன்னால் மண்டிபோட்டு வேண்டுகிறேன். 15  பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற ஒவ்வொரு குடும்பமும் அவரால்தான் உருவாகியிருக்கிறது.* 16  அளவில்லாத மகிமையுள்ள அவர் தன்னுடைய சக்தி தருகிற வல்லமையால் உங்களுக்கு மனவலிமை கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன்.+ 17  நீங்கள் காட்டுகிற விசுவாசத்தால் உங்கள் அன்பான இதயங்களில் கிறிஸ்துவை அவர் குடியிருக்கச் செய்யும்படியும்+ வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் வேரூன்றியவர்களாகவும்+ அஸ்திவாரத்தின்மேல் நிலையாய் நிற்கிறவர்களாகவும்+ இருக்க வேண்டும். 18  அப்போதுதான், பரிசுத்தவான்கள் எல்லாரோடும் சேர்ந்து கடவுளைப் பற்றிய விஷயங்களின் அகலமும் நீளமும் உயரமும் ஆழமும் என்னவென்று நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். 19  அதோடு, அறிவைவிட மிக மிக உயர்ந்த கிறிஸ்துவின் அன்பை+ நீங்கள் தெரிந்துகொள்வதற்காகக் கடவுள் தருகிற குணங்களால் நிரப்பப்படவும் முடியும். 20  நமக்குள் செயல்படுகிற அவருடைய வல்லமையின்படி,+ நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட மிக அதிகமாக, பல மடங்கு அதிகமாக எல்லாவற்றையும் செய்ய வல்லவரான+ அவருக்கே, 21  சபையின் மூலமும் கிறிஸ்து இயேசுவின் மூலமும் தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மகிமை சேரட்டும். ஆமென்.*

அடிக்குறிப்புகள்

இதன் தொடர்ச்சி, வசனம் 14-ல் இருப்பதாகத் தெரிகிறது.
நே.மொ., “கடவுளுக்குள்.”
அல்லது, “மக்களிடம்.”
நே.மொ., “அவரிடமிருந்தே அதன் பெயரைப் பெற்றிருக்கிறது.”
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா