எபிரெயருக்குக் கடிதம் 10:1-39
10 திருச்சட்டம், வரப்போகிற நன்மைகளின் நிஜம் அல்ல,+ அவற்றின் நிழல்தான்.+ அதனால்தான், திருச்சட்டத்தாலும்* வருஷா வருஷம் தொடர்ந்து கொடுக்கப்படுகிற ஒரேவிதமான பலிகளாலும் கடவுளை வணங்குகிற ஆட்களை ஒருபோதும் பரிபூரணமாக்க முடியாது.+
2 அப்படிப் பரிபூரணமாக்க முடியுமென்றால் பலி கொடுப்பது நிறுத்தப்பட்டிருக்கும், இல்லையா? பலி கொடுக்கிறவர்கள்* ஒரு தடவை சுத்தமாகிவிட்டால், அதன் பிறகு பாவங்களைப் பற்றிய உணர்வுகூட அவர்களுக்கு இருக்காதே!*
3 ஆனால், பாவங்கள் இன்னமும் இருக்கின்றன என்பதை அந்தப் பலிகள் வருஷா வருஷம் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.+
4 ஏனென்றால் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தால் பாவங்களைப் போக்க முடியாது.
5 அதனால், கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்தபோது, “‘பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள்.
6 தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று கடவுளிடம் சொன்னார்.+
7 அதோடு, ‘கடவுளே, இதோ, உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன். சுருளில்* என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது’ என்று சொன்னேன்” என்றார்.+
8 முதலில், திருச்சட்டத்தின்படி கொடுக்கப்படுகிற பலிகளைப் பற்றி, “பலிகளையும் காணிக்கைகளையும் தகன பலிகளையும் பாவப் பரிகார பலிகளையும் நீங்கள் விரும்பவில்லை, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று சொன்னாலும்,
9 பின்பு, “இதோ! உங்களுடைய விருப்பத்தை* நிறைவேற்ற வந்துவிட்டேன்” என்று சொன்னார்.+ அதனால், இரண்டாவதை நிலைநாட்டுவதற்காக முதலாவதை அவர் நீக்கிப்போடுகிறார்.
10 இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த “விருப்பத்தை”+ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்.+
11 தினமும் மக்களுக்குப் பரிசுத்த சேவை* செய்கிற ஒவ்வொரு குருவும்+ ஒரேவிதமான பலிகளைத் திரும்பத் திரும்பக் கொடுக்கிறார்;+ அவற்றால் ஒருபோதும் பாவங்களை முழுமையாகப் போக்க முடியாது.+
12 ஆனால், இவர் நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்துவிட்டு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+
13 அந்தச் சமயத்திலிருந்து, தன்னுடைய எதிரிகள் தனக்குக் கால்மணையாக்கிப் போடப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்.+
14 புனிதமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியால் என்றென்றும் இவர் பரிபூரணமாக்கியிருக்கிறார்.+
15 கடவுளுடைய சக்தியும் இப்படி நமக்குச் சாட்சி கொடுக்கிறது:
16 “யெகோவா* சொல்கிறார், ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் அவர்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான். நான் அவர்களுடைய இதயத்தில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய மனதில் அவற்றை எழுதுவேன்.’”+
17 “அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்றும் அது சொல்கிறது.
18 அதனால், இவற்றுக்கு மன்னிப்பு கிடைத்த பின்பு பாவப் பரிகார பலிக்கு அவசியம் இல்லை.
19 அதனால் சகோதரர்களே, இயேசு தன்னுடைய உடலாகிய திரைச்சீலையைக்+ கடப்பதன் மூலம் மகா பரிசுத்த அறைக்குள் போக நமக்காக ஒரு புதிய வழியைத் திறந்திருக்கிறார்,+ அது வாழ்வு தரும் வழி.
20 அந்த வழியில் மகா பரிசுத்த அறைக்குள் போக அவருடைய இரத்தத்தால் நமக்குத் தைரியம்* கிடைத்திருப்பதாலும்,
21 கடவுளுடைய வீட்டின் மீது அதிகாரமுள்ள அவர் நம்முடைய மாபெரும் குருவாக இருப்பதாலும்+ முழு விசுவாசத்தோடு கடவுளை நாம் அணுக வேண்டும்.
22 கெட்ட மனசாட்சியிலிருந்து சுத்தமாக்கப்பட்ட*+ இதயமும், சுத்தமான தண்ணீரால் கழுவப்பட்ட உடலும்+ உள்ளவர்களாக, உண்மை இதயத்தோடும் முழு விசுவாசத்தோடும் அவரை அணுக வேண்டும்.
23 நமக்கு வாக்குறுதி தந்தவர் நம்பகமானவர் என்பதால், எந்த விதமான சந்தேகமும் இல்லாமல் நம்முடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல வேண்டும்.+
24 அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்;+
25 சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து+ ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்;+ நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ+ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.
26 சத்தியத்தைப் பற்றித் திருத்தமாகத் தெரிந்துகொண்ட பின்பு+ வேண்டுமென்றே நாம் பாவங்கள் செய்துவந்தால் அந்தப் பாவங்களுக்காக நாம் வேறெந்தப் பலியும் கொடுக்க முடியாது.+
27 நாம் பயத்தோடு எதிர்பார்க்கிற நியாயத்தீர்ப்பையும், எதிரிகளைச் சுட்டுப் பொசுக்கப்போகிற கடவுளுடைய பயங்கர கோபத்தையும்தான் சந்திக்க வேண்டியிருக்கும்.+
28 மோசேயின் திருச்சட்டத்தை அவமதிக்கிறவன் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் இரக்கமில்லாமல் கொல்லப்படுகிறான் என்றால்,+
29 கடவுளுடைய மகனை மிதித்து, தன்னைப் புனிதப்படுத்திய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் இரத்தத்தைச்+ சாதாரணமாக நினைத்து, அளவற்ற கருணையைக் காட்டுகிற கடவுளுடைய சக்தியை அவமதிக்கிறவனுக்கு இன்னும் எந்தளவு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.+
30 “யெகோவா* தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது; “பழிவாங்குவது என் பொறுப்பு, நானே பதிலடி கொடுப்பேன்” என்று சொன்னவரை நமக்குத் தெரியும்.+
31 உயிருள்ள கடவுளுடைய கைகளில் சிக்கிக்கொள்வது பயங்கரமாக இருக்கும்.
32 ஆனாலும், முந்தின நாட்களை எப்போதும் நினைத்துப் பாருங்கள்; உங்களுக்கு அறிவொளி+ கிடைத்த பின்பு பயங்கரமான போராட்டங்களையும் கஷ்டங்களையும் சகித்துக்கொண்டீர்கள்.
33 சிலசமயங்களில், எல்லாருக்கும் முன்பாக* அவமானங்களுக்கும் உபத்திரவங்களுக்கும் ஆளானீர்கள். சிலசமயங்களில், அப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்குத் துணையாக இருந்தீர்கள்.
34 சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காக அனுதாபப்பட்டீர்கள்; உங்களுடைய உடைமைகள் பறிக்கப்பட்டபோது, அவற்றைவிட உயர்ந்த, நிலையான சொத்து உங்களுக்கு இருப்பதைத் தெரிந்து,+ அந்த இழப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டீர்கள்.+
35 அதனால், தைரியத்தை* விட்டுவிடாதீர்கள்; அதற்குப் பெரிய பலன் கிடைக்கும்.+
36 நீங்கள் கடவுளுடைய விருப்பத்தை* நிறைவேற்றி, அவர் வாக்குறுதி கொடுத்ததைப் பெற வேண்டுமென்றால் சகித்திருப்பது+ அவசியம்.
37 ஏனென்றால், இன்னும் “கொஞ்ச நேரம்தான் இருக்கிறது,”+ “வரப்போகிறவர் தாமதிக்காமல் வந்துவிடுவார்.”+
38 “நீதிமானாக இருக்கிற என் ஊழியனோ விசுவாசத்தால் வாழ்வு பெறுவான்;+ அவன் பின்வாங்கினால் அவன்மேல் எனக்குப் பிரியம் இருக்காது” என்று எழுதப்பட்டிருக்கிறது.+
39 அதனால்தான், நாம் பின்வாங்கி அழிந்துபோகிறவர்களாக இல்லாமல்,+ விசுவாசத்தோடு இருந்து நம் உயிரைப் பாதுகாத்துக்கொள்கிறவர்களாக இருக்கிறோம்.
அடிக்குறிப்புகள்
^ அல்லது, “ஆட்களாலும்.”
^ நே.மொ., “பரிசுத்த சேவை செய்கிறவர்கள்.”
^ வே.வா., “பாவங்களைக் குறித்து இனியும் அவர்களுடைய மனசாட்சி உறுத்தாது.”
^ வே.வா., “சித்தத்தை.”
^ நே.மொ., “புத்தகச் சுருளில்.”
^ வே.வா., “சித்தத்தை.”
^ வே.வா., “தொண்டு.”
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ வே.வா., “உறுதியான நம்பிக்கை.”
^ நே.மொ., “தெளிக்கப்பட்ட.” அதாவது, இயேசுவின் இரத்தத்தால் தெளிக்கப்பட்ட.
^ இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
^ நே.மொ., “அரங்கத்திலே வேடிக்கை செய்யப்படுகிறவர்கள் போல்.”
^ நே.மொ., “தயக்கமில்லாமல் பேசுவதை.”
^ வே.வா., “சித்தத்தை.”