உபாகமம் 8:1-20
8 பின்பு அவர், “இன்று நான் உங்களுக்குக் கொடுக்கிற ஒவ்வொரு கட்டளையையும் நீங்கள் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து உயிர்வாழ்வீர்கள்,+ ஏராளமாகப் பெருகுவீர்கள். உங்கள் முன்னோர்களுக்கு யெகோவா வாக்குக் கொடுத்த தேசத்துக்குப்+ போய் அதைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
2 இந்த 40 வருஷங்களும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை வனாந்தரத்தில் எவ்வளவு தூரம் நடக்க வைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்.+ உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிற இதயம்+ உங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பதற்கும்+ அப்படிச் செய்தார்.
3 அவர் உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார். மனுஷன் உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் உயிர்வாழ்வான்+ என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக உங்களைப் பசியில் வாடவிட்டார்.+ நீங்களோ உங்கள் முன்னோர்களோ அதுவரை பார்க்காத மன்னாவை+ உணவாகத் தந்தார்.
4 இந்த 40 வருஷங்களில் உங்களுடைய துணிமணிகள் பழையதாகவும் இல்லை, உங்கள் பாதங்கள் வீங்கவும் இல்லை.+
5 ஒரு அப்பா தன் மகனைக் கண்டித்துத் திருத்துவது போல உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைக் கண்டித்துத் திருத்தினார்+ என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
6 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து அவருடைய வழிகளில் நடப்பதன் மூலம் அவருடைய கட்டளைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
7 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நல்ல தேசத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறார்.+ அங்கே சமவெளிகளிலும் மலைப்பகுதிகளிலும் நீரோடைகள் பாய்ந்தோடுகின்றன, நீரூற்றுகள் பொங்கியெழுகின்றன.
8 அங்கே கோதுமையும், பார்லியும், திராட்சைக் கொடிகளும், அத்தி மரங்களும், மாதுளைச் செடிகளும்,+ ஒலிவ எண்ணெயும், தேனும்+ ஏராளமாக இருக்கின்றன.
9 உணவுப் பொருள்களுக்குப் பஞ்சமே இல்லாத தேசம் அது. அங்கே உங்களுக்கு எதற்குமே குறைவு இருக்காது. அங்கே உள்ள பாறைகளிலிருந்து இரும்பும் மலைகளிலிருந்து செம்பும் கிடைக்கும்.
10 நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருக்கும்போது, அந்த நல்ல தேசத்தைத் தந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவைப் போற்றிப் புகழுங்கள்.+
11 உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறக்காமலும், இன்று நான் கொடுக்கிற அவருடைய கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் அலட்சியப்படுத்தாமலும் இருங்கள்.
12 நீங்கள் நன்றாகச் சாப்பிட்டுத் திருப்தியாக இருக்கும்போதும், அழகிய வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருக்கும்போதும்,+
13 உங்கள் ஆடுமாடுகள் ஏராளமாகப் பெருகும்போதும், வெள்ளியும் தங்கமும் உங்களிடம் குவியும்போதும், எல்லாமே உங்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும்போதும்,
14 உங்கள் உள்ளத்தில் பெருமை வந்துவிடக் கூடாது.+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவை மறந்துவிடக் கூடாது.+
15 விஷப் பாம்புகளும் தேள்களும் நிறைந்த, தண்ணீரில்லாத பயங்கரமான பெரிய வனாந்தரத்தின் வழியாக உங்களைக் கூட்டிக்கொண்டு வந்த கடவுளை மறந்துவிடக் கூடாது.+ அவர் உங்களுக்காகக் கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாய்ந்துவரச் செய்தார்.+
16 உங்கள் முன்னோர்கள் யாரும் அதுவரை பார்க்காத மன்னாவை வனாந்தரத்தில் உங்களுக்குச் சாப்பிடக் கொடுத்தார்.+ உங்களுடைய எதிர்கால நன்மையை மனதில் வைத்து,+ உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுப்பதற்கும்,+ உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கும் அப்படிச் செய்தார்.
17 ஒருவேளை நீங்கள், ‘என் சொத்துகளையெல்லாம் நானே என் கைகளால் சம்பாதித்திருக்கிறேன், என் சக்தியாலும் பலத்தாலும் சம்பாதித்திருக்கிறேன்’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டால்,+
18 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் சொத்துகளைச் சம்பாதிக்க உங்களுக்குச் சக்தி தருகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.+ உங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவே அவர் அப்படிச் செய்கிறார். இன்றுவரை அதை நிறைவேற்றியும் வந்திருக்கிறார்.+
19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+
20 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை நீங்கள் கேட்காமல்போனால், யெகோவா இன்று உங்கள் கண்ணெதிரே மற்ற தேசத்தாரை அழிப்பது போல உங்களையும் அழித்துவிடுவார்”+ என்றார்.
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “ரொட்டியால்.”