உபாகமம் 29:1-29

29  யெகோவா இஸ்ரவேலர்களுடன் ஓரேபில் செய்த ஒப்பந்தத்தைத்+ தவிர, மோவாப் தேசத்தில் இன்னொரு ஒப்பந்தத்தையும் செய்யும்படி மோசேயிடம் கட்டளை கொடுத்தார். அந்த ஒப்பந்தத்தின் வார்த்தைகள் இவைதான்.  மோசே எல்லா இஸ்ரவேலர்களையும் கூப்பிட்டு அவர்களிடம், “பார்வோனுக்கும் அவனுடைய ஊழியர்களுக்கும் எகிப்து தேசத்துக்கும் உங்கள் கண் முன்னால் யெகோவா செய்ததையெல்லாம் நீங்கள் பார்த்தீர்கள்.+  அவர் கொடுத்த கடுமையான தண்டனைகளையும் அவர் செய்த மாபெரும் அதிசயங்களையும் அற்புதங்களையும் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்கள்.+  ஆனால், நீங்கள் கண்களால் பார்த்தவற்றையும் காதுகளால் கேட்டவற்றையும் புரிந்துகொள்ளும் சக்தியை* இன்றுவரை யெகோவா உங்களுக்குக் கொடுக்கவில்லை.+  அவர் உங்களிடம், ‘வனாந்தரத்தில் 40 வருஷங்களாக நான் உங்களை வழிநடத்தி வந்தபோது+ உங்கள் உடைகள் பழையதாகவும் இல்லை, உங்கள் செருப்புகள் தேயவும் இல்லை.+  நீங்கள் ரொட்டி சாப்பிடவில்லை, திராட்சமதுவோ வேறெந்த மதுவோ குடிக்கவில்லை. நானே உங்கள் கடவுளாகிய யெகோவா என்பதை உங்களுக்குக் காட்டினேன்’ என்று சொன்னார்.  கடைசியாக, நீங்கள் இங்கே வந்துசேர்ந்தீர்கள். எஸ்போனின் ராஜா சீகோனும்+ பாசானின் ராஜா ஓகும்+ நம்மோடு போர் செய்ய வந்தார்கள், ஆனால் நாம் அவர்களைத் தோற்கடித்தோம்.+  அதன்பின், அவர்களுடைய தேசத்தைக் கைப்பற்றி ரூபன் கோத்திரத்துக்கும், காத் கோத்திரத்துக்கும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கும் சொத்தாகக் கொடுத்தோம்.+  அதனால், இந்த ஒப்பந்தத்தைக் கவனமாகக் கடைப்பிடியுங்கள். அப்போது, நீங்கள் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+ 10  இன்று உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் உங்களுடைய கோத்திரத் தலைவர்கள், பெரியோர்கள்,* அதிகாரிகள், ஆண்கள், 11  உங்களுடைய பிள்ளைகள், மனைவிகள்+ ஆகிய எல்லாரும் நிற்கிறீர்கள். உங்கள் முகாமில் இருக்கிற மற்ற ஜனங்களும்,+ அதாவது உங்களுக்காக விறகு வெட்டுகிறவர்கள்முதல் தண்ணீர் சுமக்கிறவர்கள்வரை அத்தனை பேரும், உங்களோடு நிற்கிறார்கள். 12  உங்கள் கடவுளாகிய யெகோவா இன்று இந்த ஒப்பந்தத்தை உங்களோடு செய்யப்போகிறார், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்போகிறார்.+ 13  கடவுள் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களான ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ யாக்கோபு+ ஆகியவர்களுக்கும் வாக்குக் கொடுத்தபடியே இன்று உங்களைத் தன்னுடைய ஜனமாக ஏற்றுக்கொண்டு,+ உங்களுடைய கடவுளாக இருக்கப்போகிறார்.+ 14  இந்த ஒப்பந்தத்தையும் உறுதிமொழியையும் அவர் உங்களுடன் மட்டும் செய்வதில்லை. 15  நம் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் இன்று நம்மோடு நிற்கிறவர்களோடும் வருங்காலச் சந்ததிகளோடும்* செய்கிறார். 16  (எகிப்து தேசத்தில் நாம் எப்படி இருந்தோம், மற்ற தேசங்கள் வழியாக எப்படிப் பயணம் செய்தோம்+ என்பதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும். 17  அங்கிருந்த ஜனங்கள் செய்த அருவருப்பான உருவங்களை, அதாவது மரம், கல், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் செய்த அருவருப்பான* சிலைகளை,+ நீங்களே பார்த்தீர்கள்.) 18  ஜாக்கிரதை! நம் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு அந்த ஜனங்களுடைய தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கும் அளவுக்கு மோசமான இதயமுள்ள ஆணோ பெண்ணோ குடும்பமோ கோத்திரமோ இன்று உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+ விஷப் பழத்தையும் எட்டியையும் முளைப்பிக்கிற வேரைப் போன்றவர்கள் உங்கள் நடுவில் இருக்கக் கூடாது.+ 19  ஆனால், இந்த உறுதிமொழியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும் ஒருவன் பெருமையோடு, “நான் என் இஷ்டப்படிதான்* நடப்பேன், எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் சீரழித்தால், 20  யெகோவா அவனை மன்னிக்க மாட்டார்.+ யெகோவாவின் கோபம் அவன்மேல் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாமே நிச்சயம் அவன்மேல் வரும்.+ அவனுடைய பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி யெகோவா செய்துவிடுவார். 21  இந்தத் திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் எல்லா சாபங்களையும் இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவிலுள்ள அவன்மேல் யெகோவா கொண்டுவருவார். 22  இந்தத் தேசத்து நிலங்களை யெகோவா அழித்திருப்பதை உங்களுடைய வருங்காலத் தலைமுறையினரும் தொலைதூர தேசத்திலிருந்து வரும் மற்ற தேசத்தாரும் பார்ப்பார்கள். 23  யெகோவா தன்னுடைய கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் சோதோம், கொமோரா,+ அத்மா, செபோயீம்+ ஆகிய இடங்களை அழித்ததுபோல், இந்தத் தேசத்து நிலங்களையெல்லாம் கந்தகத்தாலும் உப்பாலும் நெருப்பாலும் அழித்திருப்பதைப் பார்ப்பார்கள். அவை விதை விதைக்கப்படாமலும், பயிர்கள் முளைக்காமலும், எதுவுமே வளராமலும் கிடப்பதைப் பார்க்கும்போது 24  அவர்களும் எல்லா தேசத்தாரும், ‘இந்தத் தேசத்தை யெகோவா ஏன் அழித்துப்போட்டார்?+ அவருடைய கோபம் இந்தளவு பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்பார்கள். 25  அதற்கு ஜனங்கள், ‘அவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது செய்த ஒப்பந்தத்தை+ அவர்கள் மீறிவிட்டார்கள்.+ 26  முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கக் கூடாது என்று அவர் சொல்லியிருந்தும் அவர்கள் அவற்றை வணங்கினார்கள்.+ 27  அவர்கள்மேல் யெகோவாவுக்குப் பயங்கர கோபம் வந்ததால், இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா சாபங்களையும் கொண்டுவந்தார்.+ 28  யெகோவா பயங்கரமான கோபத்தாலும் ஆக்ரோஷத்தாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி+ வேறொரு தேசத்தில் எறிந்துவிட்டார். அங்குதான் அவர்கள் இப்போது இருக்கிறார்கள்’+ என்று சொல்வார்கள். 29  ரகசியமாக வைக்கப்படுகிற எல்லா விஷயங்களும் நம் கடவுளாகிய யெகோவாவுக்குத் தெரியும்.+ ஆனால், இந்தத் திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளின்படியும் நாம் நடக்க வேண்டும் என்பதற்காக, நமக்கும் நம்முடைய சந்ததிகளுக்கும் இந்த விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்”+ என்று சொன்னார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆனால், புரிந்துகொள்கிற இதயத்தையும், பார்க்கிற கண்களையும், கேட்கிற காதுகளையும்.”
வே.வா., “மூப்பர்கள்.”
நே.மொ., “நம்மோடு இல்லாதவர்களோடும்.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
வே.வா., “என் இதயம் போகிற போக்கில்தான்.”

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா