ஆதியாகமம் 18:1-33

18  பிற்பாடு, மம்ரேயில் இருந்த பெரிய மரங்களின் நடுவே+ யெகோவா+ ஆபிரகாமுக்குமுன் தோன்றினார். அப்போது, உச்சி வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்துகொண்டிருந்தார்.  அவர் நிமிர்ந்து பார்த்தபோது, கொஞ்சத் தூரத்தில் மூன்று மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உடனே, கூடார வாசலிலிருந்து எழுந்து ஓடி, அவர்களுக்கு முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்.+  பின்பு, “யெகோவாவே,* இந்த அடியேன்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்.  நான் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறேன். தயவுசெய்து உங்கள் பாதங்களைக் கழுவிவிட்டு+ இந்த மரத்தின் கீழ் ஓய்வெடுங்கள்.  நீங்கள் இந்த அடியேனிடம் வந்திருப்பதால், கொஞ்சம் ரொட்டி கொண்டுவருகிறேன். அதைச் சாப்பிட்டுவிட்டு, தெம்போடு நீங்கள் கிளம்பலாமே” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “சரி, நீ சொன்னபடியே செய்” என்றார்கள்.  உடனே, ஆபிரகாம் கூடாரத்துக்குள் ஓட்டமாய் ஓடி சாராளிடம், “சீக்கிரம்! மூன்று படி* நைசான மாவை எடுத்துப் பிசைந்து, ரொட்டி சுடு” என்று சொன்னார்.  பின்பு மாட்டுத் தொழுவத்துக்கு ஓடி, இளம் காளைகளில் நல்லதாக ஒன்றைத் தேடிப் பிடித்து அவருடைய வேலைக்காரனிடம் கொடுத்தார். அவன் அதைச் சமைக்க வேகவேகமாய்ப் போனான்.  பின்பு அவர் வெண்ணெயையும், பாலையும், சமைத்த இறைச்சியையும் கொண்டுபோய் அவர்கள்முன் வைத்தார். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களுக்குப் பக்கத்திலேயே மரத்தடியில் நின்றார்.+  அப்போது அவர்கள், “உன் மனைவி சாராள்+ எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இங்கேதான் கூடாரத்தில் இருக்கிறாள்” என்றார். 10  அவர்களில் ஒருவர், “அடுத்த வருஷம் இதே சமயம் நான் கண்டிப்பாகத் திரும்பி வருவேன்; அப்போது உன் மனைவி சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்”+ என்றார். அவருக்குப் பின்னாலிருந்த கூடார வாசலில் சாராள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11  ஆபிரகாமும் சாராளும் வயதானவர்களாக இருந்தார்கள்.+ சாராள் குழந்தை பெறும் வயதைத் தாண்டியிருந்தாள்.+ 12  அதனால், “நான் ஒரு கிழவி, என் எஜமானும் கிழவராகிவிட்டார், இந்த வயதில் எனக்குச் சந்தோஷம் கிடைக்குமா?”+ என்று தனக்குள் சிரித்துக்கொண்டே சொன்னாள். 13  அப்போது யெகோவா ஆபிரகாமிடம், “‘இந்த வயதான காலத்தில் எனக்குப் பிள்ளை பிறக்குமா’ என்று சாராள் ஏன் சிரித்துக்கொண்டே சொன்னாள்? 14  யெகோவாவினால் செய்ய முடியாதது ஏதாவது இருக்கிறதா?+ அடுத்த வருஷம் இதே சமயம் நான் திரும்பி வருவேன்; அப்போது சாராளுக்கு ஒரு மகன் இருப்பான்” என்று சொன்னார். 15  உடனே சாராள் பயந்துபோய், “நான் சிரிக்கவில்லை” என்று சொன்னாள். ஆனால் அவர், “இல்லை! நீ சிரித்தாய்!” என்றார். 16  பின்பு, அந்த மனிதர்கள் எழுந்து சோதோமைப்+ பார்த்தபடி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களை வழியனுப்ப ஆபிரகாமும் கூடவே போனார். 17  அப்போது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்குச் சொல்லாமல் இருப்பேனா?+ 18  ஆபிரகாம் பலம்படைத்த தேசமாகவும் மாபெரும் தேசமாகவும் ஆவான், இது உறுதி. பூமியிலுள்ள எல்லா தேசத்தாரும் ஆபிரகாம் மூலமாக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.+ 19  ஆபிரகாமை எனக்கு நன்றாகத் தெரியும். யெகோவாவின் வழியில் நடக்கும்படி அவன் தன்னுடைய மகன்களுக்கும் வருங்காலச் சந்ததிகளுக்கும் நிச்சயமாகக் கட்டளை கொடுப்பான். அவர்களை நீதியோடும் நியாயத்தோடும் நடக்கச் சொல்வான்.+ அதனால், ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றுவார்” என்று சொன்னார். 20  அதன்பின் யெகோவா, “சோதோமிலும் கொமோராவிலும் இருக்கிற ஜனங்கள் படுமோசமான பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.+ அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் பயங்கரமாகப் புலம்புவதைக் கேட்டேன்.+ 21  மற்றவர்கள் புலம்புவதுபோல், அந்த ஜனங்கள் உண்மையிலேயே மோசமாக நடக்கிறார்களா என்று நான் இறங்கிப் போய்ப் பார்க்கப்போகிறேன்”+ என்றார். 22  பின்பு, அந்த மனிதர்கள் அங்கிருந்து சோதோமுக்குப் போனார்கள். ஆனால், யெகோவா+ ஆபிரகாமுடனேயே இருந்தார். 23  அப்போது ஆபிரகாம் அவரிடம், “பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் நீங்கள் அழித்துவிடுவீர்களா?+ 24  ஒருவேளை அந்த நகரத்தில் 50 பேர் நீதிமான்களாக இருந்தால்? அப்போதும் அவர்களை அழித்துவிடுவீர்களா? அந்த 50 பேருக்காக அந்த நகரத்தை மன்னிக்க மாட்டீர்களா? 25  பொல்லாதவர்களோடு சேர்த்து நீதிமான்களையும் அழிப்பதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே! அப்படி அழித்தால் நீதிமான்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் ஒரே கதி வந்துவிடுமே!+ அப்படிச் செய்வதை உங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!+ இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?”+ என்றார். 26  அதற்கு யெகோவா, “சோதோமில் 50 பேர் நீதிமான்களாக இருந்தால் அவர்களுக்காக அந்த முழு நகரத்தையும் மன்னிப்பேன்” என்று சொன்னார். 27  ஆனால் ஆபிரகாம் மறுபடியும், “நான் வெறும் தூசிதான், சாம்பல்தான். இருந்தாலும் யெகோவாவே, உங்களிடம் உரிமையோடு பேசுகிறேன், தயவுசெய்து கேளுங்கள். 28  ஒருவேளை, அந்த 50 பேரில் ஐந்து பேர் குறைவாக இருந்தால்? ஐந்து பேர் குறைகிறார்கள் என்பதற்காக அந்த முழு நகரத்தையும் நீங்கள் அழிப்பீர்களா?” என்று கேட்டார். அதற்குக் கடவுள், “அங்கே 45 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்க மாட்டேன்”+ என்று சொன்னார். 29  மறுபடியும் ஆபிரகாம் அவரிடம், “ஒருவேளை அங்கே 40 பேர் நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “40 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 30  ஆனால் ஆபிரகாம், “யெகோவாவே, தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள்;+ நான் பேசுவதை இன்னும் கொஞ்சம் கேளுங்கள். அங்கே ஒருவேளை 30 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “அங்கே 30 பேர் நீதிமான்களாக இருந்தாலும் நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 31  ஆனால் ஆபிரகாம் தொடர்ந்து, “யெகோவாவே, உங்களிடம் உரிமையோடு பேசுகிறேன், தயவுசெய்து கேளுங்கள். அங்கே ஒருவேளை 20 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “20 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 32  கடைசியாக ஆபிரகாம், “யெகோவாவே, தயவுசெய்து என்மேல் கோபப்படாதீர்கள். இன்னும் ஒரு தடவை மட்டும் நான் பேசுவதைக் கேளுங்கள். அங்கே ஒருவேளை 10 பேர் மட்டுமே நீதிமான்களாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர், “10 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட நான் அதை அழிக்க மாட்டேன்” என்று சொன்னார். 33  ஆபிரகாமிடம் பேசி முடித்த பின்பு யெகோவா அங்கிருந்து போனார்,+ ஆபிரகாமும் தன் இடத்துக்குத் திரும்பிப் போனார்.

அடிக்குறிப்புகள்

யெகோவாவிடம் நேரடியாகப் பேசுவதுபோல் யெகோவாவின் தூதரிடம் ஆபிரகாம் பேசினார்.
நே.மொ., “மூன்று சியா அளவு.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

ஆராய்ச்சிக் குறிப்புகள்

மீடியா