Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

A4

எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர்

யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்புக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழங்கால எபிரெய எழுத்துக்களில் கடவுளுடைய பெயர்

யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு பயன்படுத்தப்பட்ட எபிரெய எழுத்துக்களில் கடவுளுடைய பெயர்

எபிரெய வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் கிட்டத்தட்ட 7,000 தடவை வருகிறது. நான்கு எபிரெய மெய்யெழுத்துக்கள் (יהוה) கொண்ட அந்தப் பெயர், “யெகோவா” என்று இந்த பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பைபிளில் மிக அதிகமான தடவை வருகிற பெயர் இதுதான். “சர்வவல்லமையுள்ள கடவுள்,” “உன்னதமான கடவுள்,” “எஜமான்” போன்ற பல பட்டப்பெயர்களை பைபிள் எழுத்தாளர்கள் கடவுளுக்குப் பயன்படுத்தியிருந்தாலும், அவருடைய தனிப்பட்ட பெயரைக் குறிப்பிடுவதற்கு அந்த எபிரெய நான்கெழுத்துக்களைத்தான் பயன்படுத்தினார்கள்.

யெகோவாதான் தன்னுடைய பெயரைப் பதிவு செய்யும்படி பைபிள் எழுத்தாளர்களை வழிநடத்தினார். உதாரணத்துக்கு, “யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிற ஒவ்வொருவரும் மீட்புப் பெறுவார்கள்” என்று எழுதும்படி தீர்க்கதரிசியான யோவேலைத் தன் சக்தியால் தூண்டினார். (யோவேல் 2:32) அதேபோல், “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும்” என்று சங்கீத எழுத்தாளர்களில் ஒருவரை எழுத வைத்தார். (சங்கீதம் 83:18) சொல்லப்போனால், கடவுளுடைய மக்கள் மனப்பாடம் செய்து பாட வேண்டியிருந்த பாடல்களைக் கொண்ட சங்கீத புத்தகத்தில் மட்டுமே கடவுளுடைய பெயர் சுமார் 700 தடவை வருகிறது. அப்படியென்றால், இன்று இருக்கும் பல பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் ஏன் இல்லை? இந்த மொழிபெயர்ப்பு “யெகோவா” என்ற உச்சரிப்பை ஏன் பயன்படுத்துகிறது? யெகோவா என்ற கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்ன?

கி.பி. முதல் நூற்றாண்டின் முதல் பகுதியைச் சேர்ந்த சவக்கடல் சுருளில் இருந்த சங்கீத புத்தகத்தின் சில பகுதிகள் இவை. இவற்றிலுள்ள வார்த்தைகள் யூதர்களின் பாபிலோனிய சிறையிருப்புக்குப் பின்பு பயன்படுத்தப்பட்ட எபிரெய எழுத்துக்களின் வடிவத்தில் இருக்கின்றன. ஆனால், நான்கு மெய்யெழுத்துக்கள் மட்டும் எல்லா இடங்களிலும் பழங்கால எபிரெய எழுத்துக்களில் இருக்கின்றன

நிறைய பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் ஏன் இல்லை? அதற்கு வித்தியாசப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. சர்வவல்லமையுள்ள கடவுளுக்குத் தனிப்பட்ட ஒரு பெயர் தேவையில்லை என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர், யூதர்களின் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள்; அதாவது, கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினால் அதன் புனிதம் கெட்டுவிடுமோ என்று பயந்து அதைப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். வேறு சிலர், கடவுளுடைய பெயரை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்று யாருக்கும் தெரியாததால், “கர்த்தர்,” “தேவன்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால், இந்தக் காரணங்கள் எதுவுமே நியாயமானவை அல்ல. ஏன் என்று கவனியுங்கள்:

  • கடவுளுக்கு ஒரு தனிப்பட்ட பெயர் தேவையில்லை என்று சொல்கிறவர்கள், ஒரு முக்கியமான அத்தாட்சியையே அலட்சியம் செய்கிறார்கள்; அதாவது, கடவுளுடைய பெயர் பழங்கால பைபிள் சுருள்களில் இருக்கிறது, அதுவும் கிறிஸ்துவின் காலத்துக்கு முன்பிருந்தே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிற சுருள்களில் இருக்கிறது என்ற அத்தாட்சியைப் புறக்கணிக்கிறார்கள். மேலே குறிப்பிடப்பட்டபடி, பைபிளில் கிட்டத்தட்ட 7,000 தடவை யெகோவா தன்னுடைய பெயரைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார். அப்படியானால், நாம் அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டு அதைப் பயன்படுத்த வேண்டுமென்று அவர் விரும்புவது தெளிவாகத் தெரிகிறது.

  • யூதர்களின் பாரம்பரிய நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்கியவர்கள், முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். யூத அறிஞர்கள் சிலர், கடவுளுடைய பெயரை உச்சரிக்க மறுத்தார்களே தவிர, பைபிள் சுருள்களிலிருந்து அதை நீக்கிவிடவில்லை. சவக்கடலுக்குப் பக்கத்தில் கும்ரான் என்ற இடத்தில் பழங்கால சுருள்கள் கண்டெடுக்கப்பட்டன; அவற்றில் கடவுளுடைய பெயர் நிறைய தடவை வருகிறது. சில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள், கடவுளுடைய பெயர் வரும் இடங்களில் “கர்த்தர்” என்று தடித்த எழுத்துக்களில் போட்டிருக்கிறார்கள்; மூலப் பதிவில் அந்த இடங்களில் கடவுளுடைய பெயர்தான் இருந்தது என்பதை இதன் மூலம் மறைமுகமாகக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், மூலப் பதிவில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறதென்று தெரிந்திருந்தும், மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் தங்கள் இஷ்டத்துக்கு அதை பைபிளிலிருந்து நீக்கினார்கள் அல்லது வேறு வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்? இப்படி மாற்ற அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்ததாக நினைக்கிறார்கள்? இதற்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்!

  • கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு தெரியாததால் அதைப் பயன்படுத்தக் கூடாதென்று சொல்கிறவர்கள், இயேசு என்ற பெயரை மட்டும் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இயேசுவின் பெயரை முதல் நூற்றாண்டிலிருந்த அவருடைய சீஷர்கள் உச்சரித்த விதத்துக்கும், இன்றுள்ள பெரும்பாலான கிறிஸ்தவர்கள் உச்சரிக்கும் விதத்துக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. இயேசுவின் பெயரை யெஷூவா என்றும், “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரை மஷியாக் (அதாவது, “மேசியா”) என்றும் யூதக் கிறிஸ்தவர்கள் உச்சரித்திருக்கலாம். கிரேக்க மொழி பேசிய கிறிஸ்தவர்கள் அவரை ஈசோஸ் கிறிஸ்டோஸ் என்று அழைத்தார்கள். லத்தீன் மொழி பேசிய கிறிஸ்தவர்கள் ஈசஸ் கிறிஸ்டஸ் என்று அழைத்தார்கள். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிள் எழுத்தாளர்கள், அந்தப் பெயரின் கிரேக்க மொழிபெயர்ப்பைத்தான் பயன்படுத்தினார்கள்; அப்படியென்றால், அப்போது புழக்கத்திலிருந்த உச்சரிப்பைப் பயன்படுத்துவதுதான் ஞானமானது என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உணர்ந்தார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல, பழங்கால எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் வேறு விதமாக உச்சரிக்கப்பட்டிருந்தாலும், “யெகோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்துவது நியாயமென்று புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் நினைக்கிறார்கள்.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஏன் “யெகோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்துகிறது? கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு எபிரெய மெய்யெழுத்துக்களுக்கு (יהוה) இணையான தமிழ் மெய்யெழுத்துக்கள் ய்ஹ்வ்ஹ் என்பதாகும். பழங்கால எபிரெய மொழி, உயிரெழுத்துக்கள் இல்லாமல்தான் எழுதப்பட்டது; அதனால் இந்த எபிரெய நான்கெழுத்துக்களிலும் உயிரெழுத்துக்கள் இல்லை. பழங்கால எபிரெய மொழி புழக்கத்தில் இருந்தபோது, அதை வாசித்தவர்கள் பொருத்தமான உயிரெழுத்துக்களைச் சேர்த்து எளிதில் அவற்றை வாசித்தார்கள்.

எபிரெய வேதாகமம் எழுதி முடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 1,000 வருஷங்களுக்குப் பின்பு, உச்சரிப்புக் குறியீடுகளைப் பயன்படுத்தும் முறையை யூத அறிஞர்கள் உருவாக்கினார்கள்; எபிரெய வார்த்தைகளைப் பொருத்தமான உயிரெழுத்துக்களோடு சேர்த்து வாசிப்பதற்கு இந்தக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்துக்குள், கடவுளுடைய தனிப்பட்ட பெயரை உச்சரிக்கக் கூடாது என்ற மூடநம்பிக்கை பல யூதர்கள் மத்தியில் பரவியதால், கடவுளுடைய பெயருக்குப் பதிலாக மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். அந்த மாற்று வார்த்தைகளிலுள்ள உயிரெழுத்துக்களைக் கடவுளுடைய பெயரைக் குறிக்கும் நான்கு மெய்யெழுத்துக்களோடு சேர்த்து எழுதினார்கள்; அந்த நான்கு மெய்யெழுத்துக்களை நகலெடுத்த ஒவ்வொரு சமயத்திலும் அப்படித்தான் அவர்கள் செய்ததாகத் தெரிகிறது. அதனால், உச்சரிப்புக் குறியீடுகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகளிலிருந்துகூட, எபிரெய மொழியில் கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. கடவுளுடைய பெயர் “யாவே” என்று உச்சரிக்கப்பட்டதாகச் சிலர் நினைக்கிறார்கள். வேறு விதமாகவும் அது உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். லேவியராகம புத்தகத்தின் ஒரு பகுதியைக் கொண்ட சவக்கடல் சுருள் ஒன்றில், கடவுளுடைய பெயர் யாவோ என்று கிரேக்கில் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, யாயே, யாபே, யாவூவே என்றெல்லாம் அது உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக் கால கிரேக்க எழுத்தாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், எது சரியான உச்சரிப்பு என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. கடவுளுடைய பூர்வ கால ஊழியர்கள் இந்தப் பெயரை எபிரெயுவில் எப்படி உச்சரித்திருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. (ஆதியாகமம் 13:4; யாத்திராகமம் 3:15) ஆனால், மனிதர்களோடு தொடர்புகொண்டபோது கடவுள் பல தடவை தன் பெயரைப் பயன்படுத்தினார் என்றும், மக்கள் அந்தப் பெயரைச் சொல்லித்தான் ஜெபம் செய்தார்கள் என்றும், மற்றவர்களோடு பேசும்போது அந்தப் பெயரைச் சகஜமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் நமக்குத் தெரியும்.—யாத்திராகமம் 6:2; 1 ராஜாக்கள் 8:23; சங்கீதம் 99:9.

இந்த பைபிள் மொழிபெயர்ப்பு ஏன் “யெகோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்தியிருக்கிறது? ஏனென்றால், கடவுளுடைய பெயரின் இந்த உச்சரிப்பு தமிழில் பல வருஷங்களாகப் புழக்கத்தில் இருந்துவருகிறது.

ஆதியாகமம் 15:2-ல் காணப்படும் கடவுளுடைய பெயர்; 1530-ல் வில்லியம் டின்டேல் மொழிபெயர்த்த ஐந்தாகமம்

உதாரணத்துக்கு, 1840-ல் ஜஃப்னா பைபிள் சங்கம் வெளியிட்ட பைபிள் மொழிபெயர்ப்பில் “யெகோவா” என்ற உச்சரிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1850-ல் வெளியிடப்பட்ட பழைய புதிய உடன்படிக்கைகள் அடங்கிய வேதபுத்தகம் “யெகோவா” என்ற உச்சரிப்பை ஆயிரக்கணக்கான தடவை பயன்படுத்தியிருக்கிறது. அதேபோல், 1936-ல் பிரித்தானிய சர்வதேச வேதாகமச் சங்கத்து சென்னை உதவிச் சங்கம் வெளியிட்ட பரிசுத்த வேதாகமமும் “யெகோவா” என்ற உச்சரிப்பை ஆயிரக்கணக்கான தடவை பயன்படுத்தியிருக்கிறது. 2001-ல் வெளியான ஈஸி டு ரீட் வர்ஷன் பைபிள் “யேகோவா” என்ற உச்சரிப்பைச் சுமார் 20 தடவை பயன்படுத்தியிருக்கிறது. 2005-ல் வெளியிடப்பட்ட இணைவசன வேதாகமத்தில் “யெகோவா” என்ற பெயர் சில அடிக்குறிப்புகளில் காணப்படுகிறது. எத்தனையோ வருஷங்களாகவும் மிகப் பரவலாகவும் உபயோகிக்கப்படும் பரிசுத்த வேதாகமம்-தமிழ் O.V. பைபிள் “யேகோவா” என்ற உச்சரிப்பைப் பல தடவை பயன்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்ல, மகாகவி பாரதியார் எழுதிய “விநாயகர் நான்மணிமாலை” என்ற பாடலில் “யெஹோவா” என்ற உச்சரிப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. பல சர்ச் பாடல்களிலும்கூட இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, கடவுளுடைய பெயரின் இந்த அடிப்படை உச்சரிப்பு தமிழில் பல பத்தாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்துவருவது தெளிவாகத் தெரிகிறது.

மற்ற மொழிகளிலும் இதேபோன்ற உச்சரிப்பு புழக்கத்தில் இருக்கிறது. உதாரணத்துக்கு, 1530-ல் வில்லியம் டின்டேல் மொழிபெயர்த்த ஐந்தாகமப் புத்தகத்தில், கடவுளுடைய பெயர் முதன்முதலாக ஆங்கிலத்தில் இருந்தது. “ஈஹோவா” என்ற உச்சரிப்பு அதில் பயன்படுத்தப்பட்டிருந்தது.

எபிரெய நான்கெழுத்துக்கள், ய்ஹ்வ்ஹ்: “ஆகும்படி செய்கிறவர்”

வினைச்சொல் ஹ்வ்ஹ்: “ஆகும்படி”

யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன? “ஆகும்படி” என்ற அர்த்தமுள்ள எபிரெய வினைச்சொல்லிலிருந்து யெகோவா என்ற பெயர் வருகிறது. அந்த வினைச்சொல், ஒருவர் ஒன்றைச் செய்வதைக் குறிப்பதாக நிறைய அறிஞர்கள் நம்புகிறார்கள். அதனால், “ஆகும்படி செய்பவர்” என்பதே கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழுவினர் நம்புகிறார்கள். இது சம்பந்தமாக அறிஞர்கள் வித்தியாசமான கருத்துகளைச் சொல்கிறார்கள். அதனால், அதனுடைய அர்த்தம் இதுதான் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியாது. இருந்தாலும், யெகோவா எல்லாவற்றையும் படைத்தவராகவும், தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவராகவும் இருப்பதால் இந்த விளக்கம் அவருக்கு நன்றாகப் பொருந்துகிறது. அவர் இந்தப் பிரபஞ்சத்தையும் புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையும் உண்டாக்கியதோடு, தொடர்ந்து தன்னுடைய விருப்பமும் நோக்கமும் படிப்படியாக நிறைவேறிக்கொண்டே இருக்கும்படி செய்கிறார்.

அதனால், யெகோவா என்ற பெயரின் அர்த்தம், யாத்திராகமம் 3:14-ல் உள்ள வினைச்சொல்லின் அர்த்தத்தை மட்டுமே குறிப்பதில்லை. அந்த வசனத்தில், “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று கடவுள் தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகள் கடவுளுடைய பெயரின் முழுமையான அர்த்தத்தைத் தருவதில்லை. மாறாக, கடவுளுடைய சுபாவத்தின் ஓர் அம்சத்தை மட்டுமே அவை காட்டுகின்றன; அதாவது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ, அப்படியெல்லாம் ஆகிறார் என்று காட்டுகின்றன. ஆகவே, அவருடைய பெயருக்கு இந்த அர்த்தமும் இருக்கலாம் என்றாலும் இது மட்டும்தான் அர்த்தம் என்று சொல்ல முடியாது. தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய படைப்புகள் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக வைக்கிறார் என்ற அர்த்தமும் அதற்கு இருக்கிறது.