Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் புத்தக எண் 56—தீத்து

பைபிள் புத்தக எண் 56—தீத்து

பைபிள் புத்தக எண் 56—தீத்து

எழுத்தாளர்: பவுல்

எழுதப்பட்ட இடம்: மக்கெதோனியா(?)

எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 61-64

“கடவுளின் அடியானும் . . . இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் பொதுவான விசுவாசத்திலே என் உத்தமபிள்ளை தீத்துக்கு எழுதுவது.” (தீத். 1:​1, 2, தி.மொ.) உடன் ஊழியனாகவும் நீண்டகாலம் தோழனாகவும் இருந்த தீத்துவுக்கு எழுதின பவுலின் நிருபம் இவ்வாறுதான் தொடங்குகிறது. சபைகளை நன்றாக ஒழுங்குபடுத்துவதற்கு அவரை கிரேத்தா தீவில் பவுல் விட்டுவந்திருந்தார். தீத்துவிடம் பெரிய வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்தத் தீவு, “தேவர்கள் மற்றும் மனிதர்களின் பிதா”வினுடைய பூர்வீக வாசஸ்தலம் என சொல்லப்படுகிறது. “கிரேத்தனையே ஏமாற்றுபவன்” என்ற வழக்கச் சொல்லுக்கு பிறப்பிடமாக இத்தீவு திகழ்கிறது. இதன் அர்த்தம், “நயவஞ்சகனையே வஞ்சிப்பது. a அந்த ஜனங்களின் உண்மையற்ற குணமே பழமொழியானது. ஆகவே, “கிரேத்தா தீவார் ஓயாப் பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று அவர்களுடைய தீர்க்கதரிசி சொன்னதையே பவுல் மேற்கோளாக குறிப்பிட்டார். (1:12) பவுலின் நாளிலிருந்த கிரேத்தா தீவார் இவ்வாறாகவும் விவரிக்கப்பட்டுள்ளனர்: “நிலையற்று, நேர்மையற்று இருப்பது, சண்டையிடுவது ஆகியவையே அந்த ஜனத்தின் குணம். பேராசைக்கும், காமவெறிக்கும், பொய்மைக்கும், குடிவெறிக்கும் பேர்போனவர்கள். அவர்களுடன் வாழ்ந்த யூதர்கள் ஒழுக்கக்கேட்டில் அந்த தீவில் வாழ்ந்தவர்களையும் மிஞ்சிவிட்டதாக தெரிகிறது. b இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் கிரேத்தா சபைகள் உருவாகியிருந்தன. ஆகவே, “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் . . . ஜீவனம்பண்”ணும்படி பவுல் புத்திமதி கூறியது அங்குள்ள விசுவாசிகளுக்கு மிகவும் அவசியமாயிருந்தது.​—2:12.

2பவுலுக்கும் தீத்துவுக்கும் இருந்த கூட்டுறவைப் பற்றி தீத்து புத்தகம் மிகக் குறைவாகவே பேசுகிறது. ஆனால், பவுலின் மற்ற நிருபங்களில் தீத்துவைப் பற்றி சொல்லப்பட்ட குறிப்புகளிலிருந்து அதிக தகவலை திரட்டலாம். கிரேக்கனாகிய தீத்து அடிக்கடி பவுலுடன் சென்றார், குறைந்தது ஒரு சந்தர்ப்பத்திலாவது அவரோடு எருசலேமுக்கு சென்றார். (கலா. 2:​1-5) பவுல் அவரை ‘எனக்குக் கூட்டாளியும் உடன்வேலையாளும்’ என்பதாக குறிப்பிடுகிறார். எபேசுவிலிருந்து பவுல் கொரிந்தியருக்கு முதல் நிருபத்தை எழுதிய பின்பு தீத்துவையே கொரிந்துவுக்கு அனுப்பியிருந்தார். கொரிந்துவில் இருந்தபோது, எருசலேமிலிருந்த சகோதரருக்காக பணம் வசூலிப்பதில் தீத்து சம்பந்தப்பட்டிருந்தார். இதன் பிறகு அந்த வசூலை முடிக்க பவுலின் கட்டளையின்பேரில் அவர் திரும்பிச் சென்றார். மக்கெதோனியாவில் பவுலை சந்தித்துவிட்டு, கொரிந்துவுக்குத் திரும்பி வரும்போதே, பவுல் எழுதிய இரண்டாம் நிருபத்தை கொரிந்தியருக்கு கொண்டுசெல்ல தீத்து பயன்படுத்தப்பட்டார்.​—2 கொ. 8:​16-24; 2:13; 7:​5-7.

3ரோமில் முதல் சிறையிருப்பிலிருந்து பவுல் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் தன்னுடைய ஊழியத்தின் கடைசி வருடங்களில் மறுபடியும் தீமோத்தேயுவுடனும் தீத்துவுடனும் கூட்டுறவு கொண்டார். கிரேத்தாவிலும் கிரேக்கிலும் மக்கெதோனியாவிலும் செய்த சேவையும் இதில் உட்படுவதாக தெரிகிறது. கடைசியாக, பவுல் கிரேக்கு தேசத்துக்கு வடமேற்கில் இருந்த நிக்கொப்போலிக்கு செல்வதாக பேசப்பட்டிருக்கிறது. அங்கே அவர் கைது செய்யப்பட்டு, கடைசி சிறையிருப்புக்கும் கொலை செய்யப்படுவதற்கும் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. கிரேத்தாவுக்கு பவுல் சென்றபோதே, “குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், . . . பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்” தீத்துவை அவர் விட்டுவந்திருந்தார். இதுவே அவர் தீத்துவுக்கு கொடுத்த கட்டளை. தீத்துவை கிரேத்தாவில் விட்டுவந்த சிறிது காலத்துக்குப் பின்பே, பெரும்பாலும் மக்கெதோனியாவிலிருந்து பவுலின் இந்த நிருபம் எழுதப்பட்டதாக தெரிகிறது. (தீத். 1:5; 3:12; 1 தீ. 1:3, 4; 2 தீ. 4:​13, 20) ஒன்று தீமோத்தேயு போலவே இதுவும் ஒரு நோக்கத்தை நிறைவேற்றியதாக தெரிகிறது. அதாவது, பவுலின் உடனுழைப்பாளனுக்கு உற்சாகமூட்டுவதற்கும் அவருடைய கடமைகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை அளிப்பதற்கும் உதவியது.

4ரோமில் பவுலின் முதலாம் மற்றும் இரண்டாம் சிறையிருப்பின்போது, அல்லது பெரும்பாலும் பொ.ச. 61-64-க்கு இடைப்பட்ட சமயத்தில், இந்த நிருபத்தை அவர் எழுதியிருக்க வேண்டும். தீமோத்தேயுவுக்கு எழுதிய நிருபங்களுக்குரிய அத்தாட்சியே தீத்துவுக்கு எழுதிய இந்த நிருபத்தின் நம்பகத் தன்மைக்கான அத்தாட்சியாகும். அதேசமயத்தில் இந்தப் பைபிள் புத்தகங்கள் மூன்றும் பவுலின் “குருத்துவ நிருபங்கள்” (pastoral letters) என அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. எழுத்துநடை ஒன்றுபோலவே உள்ளது. ஐரீனியஸ், ஆரிகென் ஆகிய இருவருமே தீத்துவிலிருந்து மேற்கோள் காட்டுகின்றனர். இது அங்கீகரிக்கப்பட்ட பைபிள் புத்தகங்களின் பட்டியலை சேர்ந்ததே என்பதற்கு பூர்வ ஆதாரங்களும் அத்தாட்சியளிக்கின்றன. சினியாட்டிக் மற்றும் அலெக்சந்திரியா கையெழுத்துப் பிரதிகளில் இது காணப்படுகிறது. ஜான் ரைலன்ட்ஸ் நூலகத்தில் நாணற்புல் கையெழுத்து பிரதியின் பாகம் P32ஒன்றுள்ளது. இது ஏறக்குறைய பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் கோடெக்ஸ் தாளாகும், இதில் தீத்து 1:​11-15-ம் 2:​3-8-ம் உள்ளது. c இப்புத்தகம் தேவாவியால் ஏவப்பட்ட வேதாகமத்தின் நம்பகமான பாகம் என்பதில் சந்தேகமில்லை.

தீத்துவின் பொருளடக்கம்

5ஆரோக்கியமான உபதேசத்தால் கண்காணிகள் புத்திசொல்ல வேண்டும் (1:​1-16). பாசத்தோடு வாழ்த்திய பின்பு, கண்காணிகளுக்கான தகுதிகளை பவுல் குறிப்பிடுகிறார். கண்காணியானவர் ‘குற்றஞ் சாட்டப்படாதவராயிருக்க வேண்டும்,’ நற்குணத்தை விரும்புகிறவரும், நீதிமானும், உண்மையுள்ளவரும், ‘ஆரோக்கியமான உபதேசத்தால் புத்திசொல்லவும் எதிர் பேசுகிறவர்களுக்கு குற்றத்தை எடுத்துக்காட்டவும் வல்லவராயிருக்கும்படி உபதேசத்திற்கிசைந்த உண்மையான வசனத்தை நன்றாக பற்றிக்கொள்கிறவராக இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்படுகிறது. நேர்மையற்ற ஆதாயத்திற்காக முழு குடும்பங்களையுமே கவிழ்த்துப்போடுகிற ‘மனதை மயக்குகிறவர்கள்’ இருப்பதால் இது தேவைப்படுகிறது. ஆகவே ‘அவர்கள் யூதரின் கட்டுக் கதைகளுக்கு . . . செவிகொடாமல் விசுவாசத்தில் ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி . . . [தீத்து] அவர்களை கண்டிப்பாய் கடிந்துகொள்ள’ வேண்டும். கறைபட்ட ஆட்கள் கடவுளை அறிந்திருப்பதாக வெளிப்படையாக அறிவிக்கலாம், ஆனால் கீழ்ப்படியாமையின் செயல்களால் அவரை மறுதலிக்கிறார்கள்.​—1:​6-10, 13-16, தி.மொ.

6மனத்தெளிவோடும் நீதியோடும் தேவபக்தியோடும் வாழ்தல் (2:​1–3:15). முதிர்வயதான ஆண்களும், பெண்களும் நிதான புத்தியோடும் பயபக்தியோடும் இருக்க வேண்டும். “கடவுளின் வசனம் தூஷிக்கப்படாதபடி,” இளம் பெண்கள் தங்கள் கணவர்களையும் பிள்ளைகளையும் நேசிக்க வேண்டும், கணவருக்கு அடங்கியிருக்க வேண்டும். வாலிப ஆண்கள் நல்ல செயல்களிலும் ஆரோக்கியமான பேச்சிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கீழ்ப்பட்டுள்ள அடிமைகள் “எல்லாவற்றிலும் கடமை தவறாதவர்களாக இருக்க” வேண்டும். ‘தம்முடைய தனிப்பட்ட சொந்த ஜனமாக நல்ல செயல்களை செய்வதில் வைராக்கியமுடன்’ இருப்பதற்கு கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் சுத்திகரித்திருக்கிறவர்களில், மனத்தெளிவையும் நீதியையும் தேவபக்தியையும் ஊக்குவிக்கும் இரட்சிப்புக்கு வழிநடத்தும் கடவுளின் தகுதியற்ற தயவு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.​—2:​5, 10, 14, NW.

7அரசாங்கங்களுக்கு கீழ்ப்படியவும், “எல்லா மனுஷருக்கும் எவ்விஷயத்திலும் சாந்த குணத்தைக் காண்பிக்க” வேண்டிய அவசியத்தையும் பவுல் வலியுறுத்துகிறார். ஒருகாலத்தில் பவுலும் அவருடைய உடன் கிறிஸ்தவர்களும் மற்றவர்களை போல கெட்டவர்களாக இருந்தனர். தங்களுடைய சொந்த செயல்களால் அல்ல, ஆனால் கடவுளுடைய தயவு, அன்பு, இரக்கம் ஆகியவற்றின் காரணமாக பரிசுத்த ஆவியால் காப்பாற்றப்பட்டு நித்திய ஜீவ நம்பிக்கைக்கு சுதந்தரவாளிகளாக இருக்கின்றனர். ஆகவே கடவுளை நம்புவோர் ‘நல்ல செயல்களை செய்வதில் தங்கள் மனதை ஊன்றவைக்க’ வேண்டும். நியாயப்பிரமாணத்தை பற்றிய ஞானமற்ற கேள்விகளையும் தர்க்கங்களையும் அறவே தவிர்க்க வேண்டும். மேலும் பிரிவினையை உண்டாக்கும் ஒருவனை முதலாம், இரண்டாம் அறிவுரைக்குப் பின் விலக்கிவிட வேண்டும். நிக்கொப்போலிக்கு வரும்படி தீத்துவிடம் பவுல் கேட்கிறார். மிஷனரி சேவை சம்பந்தமான மற்ற அறிவுரைகளை கொடுத்த பின்பு, கனியற்றவர்களாக இராமல் நல்ல செயல்களில் நிலைத்திருப்பதன் அவசியத்தை மறுபடியும் வலியுறுத்துகிறார்.​—3:​2, 7, 8, தி.மொ.

ஏன் பயனுள்ளது

8பொய் சொல்லுதல், ஒழுக்கக்கேடு, பேராசை நிரம்பிய ஒரு சூழலில் கிரேத்தா தீவு கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர். கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் அப்படியே ஆக வேண்டுமா? அல்லது யெகோவா தேவனுக்கென்று பரிசுத்தமாக்கப்பட்ட ஜனமாக சேவிப்பதற்கு தங்களை முழுவதுமாக பிரித்துவைக்க திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? கிரேத்தா தீவிலிருப்பவர்கள் “நற்கிரியைகளைச் செய்வதில் கருத்தாயிருக்கும்படி” தீத்துவின் மூலம் பவுல் தெரிவிக்கையில், “இவைகளே மனுஷருக்கு நன்மையும் பிரயோஜனமானவைகள்” என்று சொன்னார். இன்றும்கூட, உண்மையற்ற தன்மை, நேர்மையற்ற பழக்கம் எனும் சேற்றுக்குள் அமிழ்ந்திருக்கிற உலகத்தில், மெய் கிறிஸ்தவர்கள் ‘நல்ல செயல்களை செய்யப் பழகி,’ கடவுளுடைய சேவையில் கனிதருவது ‘நன்மையும் பிரயோஜனமுமாய்’ இருக்கிறது. (3:​8, 14, தி.மொ.) கிரேத்தாவிலிருந்த சபைகளை அச்சுறுத்திய ஒழுக்கக்கேட்டையும் பொல்லாங்கையும் பவுல் கண்டனம் செய்தது இப்போது நமக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. ‘அவபக்தியையும் உலக இச்சைகளையும் வெறுத்தொதுக்கி, இந்தக் காரிய ஒழுங்குமுறையின் மத்தியில் தெளிந்த மனதோடும் நீதியிலும் தேவபக்தியிலும் வாழும்படி கடவுளுடைய தகுதியற்ற தயவு நமக்கு போதிக்கிறது.’ கிறிஸ்தவர்கள் நல்மனச்சாட்சியை காத்து, அரசாங்கத்திற்கு கீழ்ப்படிதலை காண்பித்து, “சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்க” வேண்டும்.​—2:​11, 12, NW; 3:1.

9பரிசுத்த ஆவி கண்காணிகளிடம் எதை எதிர்பார்க்கிறது என்பதைக் குறித்து 1 தீமோத்தேயு 3:​2-7 சொல்வதை தீத்து 1:​5-9 நிறைவாக்குகிறது. கண்காணி “உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவ”ராயிருந்து சபையில் போதிக்கிறவராக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. எல்லாரையும் முதிர்ச்சிக்கு வழிநடத்துவதற்கு இது எவ்வளவு அவசியம்! சொல்லப்போனால், சரியான போதகத்துக்கான இந்தத் தேவையை தீத்துவுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பல தடவை அறிவுறுத்துகிறது. ‘ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசும்படி’ பவுல் தீத்துவுக்கு அறிவுரை கூறுகிறார். முதிர்வயதுள்ள பெண்கள் “நற்காரியங்களைப் போதிக்கிறவர்க”ளாக இருக்க வேண்டும், அடிமைகள் தங்கள் “இரட்சகராகிய கடவுளின் உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க வேண்டும்.” (தீத். 1:​9; 2:​1, 3, 10, தி.மொ.) கண்காணியாகிய தீத்து, தன் போதகத்தில் உறுதியாகவும் பயமற்றவராகவும் இருப்பதன் அவசியத்தை பவுல் அறிவுறுத்துகிறார். மேலும், “இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொ”ண்டிரு என்று அவர் சொல்கிறார். கீழ்ப்படியாதவர்களுடைய விஷயத்தில், ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாக கடிந்துகொள்’ என்பதாகவும் சொல்கிறார். இவ்வாறு தீத்துவுக்கு பவுல் எழுதிய நிருபம் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” முக்கியமாக பயனுள்ளது.​—தீத். 2:15; 1:14; 2 தீ. 3:17.

10தீத்துவுக்கு எழுதிய இந்த நிருபம் கடவுளின் தகுதியற்ற தயவை நாம் போற்றுவதற்கு நம்மை தூண்டுகிறது. மேலும் ‘மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கைக்கும் மகா தேவனின் மற்றும் நம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவின் மகிமையான வெளிப்படுத்தலுக்கும் நாம் காத்திருக்கையில்’ உலகத்தின் அவபக்தியிலிருந்து திரும்பும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது. இவ்வாறு செய்தால், கிறிஸ்து இயேசுவின் மூலம் நீதிமான்களாக அறிவிக்கப்படுவோர் கடவுளுடைய ராஜ்யத்தில் ‘நித்திய ஜீவ நம்பிக்கைக்கு சுதந்தரராகலாம்.’​—தீத். 2:​13, NW; 3:​7, தி.மொ.

[அடிக்குறிப்புகள்]

a மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. II, பக்கம் 564; மத அறிவுக்குரிய புதிய ஸ்காஃப்-ஹெர்ஜாகின் கலைக்களஞ்சியம், 1958, தொ. III, பக்கம் 306.

b மக்ளின்டாக், ஸ்டிராங்ஸ் ஆகியோரின் ஸைக்ளோப்பீடியா, 1981 மறுபதிப்பு, தொ. x, பக்கம் 442.

c புதிய ஏற்பாட்டின் மூலவாக்கியம், (ஆங்கிலம்) கர்ட் மற்றும் பர்பாரா ஆலன்ட் என்பவர்கள் எழுதியது, இ. எஃப். ரோட்ஸ் மொழிபெயர்த்தது, 1987, பக்கம் 98.

[கேள்விகள்]

1. (அ) தீத்துவிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை என்ன? (ஆ) கிரேத்தாவில் எப்படிப்பட்ட சூழலில் சபைகள் உருவாகியிருந்தன, கிரேத்தாவிலிருந்த கிறிஸ்தவர்கள் என்ன செய்வது அவசியமாயிருந்தது?

2, 3. (அ) பவுலுடன் தீத்துவுக்கு என்ன கூட்டுறவு இருந்தது? (ஆ) தீத்துவுக்கு எழுதிய நிருபத்தை பவுல் எங்கிருந்து எழுதியிருக்கலாம், என்ன நோக்கத்துக்காக?

4. தீத்துவுக்கு எழுதிய நிருபம் எப்போது எழுதப்பட்டிருக்க வேண்டும், அதன் நம்பகத் தன்மைக்கு அத்தாட்சி என்ன?

5. (அ) பவுல் வலியுறுத்தும் கண்காணிகளுக்குரிய தகுதிகள் யாவை, இது ஏன் தேவைப்படுகிறது? (ஆ) தீத்து ஏன் கண்டிப்பாக கடிந்துகொள்ள வேண்டும், கறைபட்டவர்கள் சம்பந்தமாக என்ன சொல்லப்படுகிறது?

6. கிறிஸ்தவ நடத்தைக்காக என்ன அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கிறது?

7. கீழ்ப்பட்டிருத்தல், இரட்சிப்பு, நல்ல செயல்கள் சம்பந்தமாக பவுல் எதை வலியுறுத்துகிறார்?

8. தீத்துவுக்கு எழுதிய நிருபத்திலுள்ள பவுலின் அறிவுரையில் எது இன்று நமக்கு ‘நன்மையும் பிரயோஜனமுமாயிருக்கிறது,’ ஏன்?

9. கண்காணியின் பொறுப்பாகிய சரியான போதகத்தின் முக்கியத்துவம் எவ்வாறு வலியுறுத்தப்படுகிறது?

10. தீத்துவுக்கு எழுதிய நிருபம் எதை செய்யும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது, என்ன மகிழ்ச்சியான நம்பிக்கையை அளிக்கிறது?