தேவதூதர்கள்
இதற்கான எபிரெய வார்த்தை மாலக்; கிரேக்க வார்த்தை ஆகிலோஸ். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்று அர்த்தம். பரலோகத் தூதுவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “தூதர்கள்,” ‘தேவதூதர்கள்’ என்று இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆதி 16:7; 32:3, அடிக்குறிப்பு; யாக் 2:25; வெளி 22:8) மனிதர்களைப் படைப்பதற்குப் பல காலத்துக்கு முன்பே கடவுள் இந்தத் தேவதூதர்களைப் படைத்தார். இவர்களுக்கு அபார பலம் இருக்கிறது. இவர்களை “பரிசுத்த தூதர்கள்,” “கடவுளின் மகன்கள்,” “விடியற்கால நட்சத்திரங்கள்” என்று பைபிள் குறிப்பிடுகிறது. (உபா 33:2; யோபு 1:6, அடிக்குறிப்பு; 38:7) இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இவர்கள் படைக்கப்படவில்லை, தனித்தனி நபர்களாகப் படைக்கப்பட்டார்கள். இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (தானி 7:10) ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருப்பதாகவும், தனித்தன்மை இருப்பதாகவும் பைபிள் சுட்டிக்காட்டுகிறது; அப்படியிருந்தும், மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற மறுத்து மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான தேவதூதர்கள் தங்களுடைய பெயரைக்கூட சொன்னதில்லை. (ஆதி 32:29; லூ 1:26; வெளி 22:8, 9) அவர்களுக்கு வித்தியாசமான ஸ்தானங்களும் பொறுப்புகளும் இருக்கின்றன. யெகோவாவின் சிம்மாசனத்துக்கு முன்னால் சேவை செய்வது, அவருடைய செய்திகளை மற்றவர்களுக்குச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்வது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது என நிறைய பொறுப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (2ரா 19:35; சங் 34:7; லூ 1:30, 31; வெளி 5:11; 14:6) எதிர்காலத்தில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில் இவர்கள் இயேசுவோடு சேர்ந்து போரிடுவார்கள்.—வெளி 19:14, 15.