1
எபிரெய வேதாகமத்தில் கடவுளின் பெயர்
“பழைய ஏற்பாட்டில்” (எபிரெய வேதாகமத்தில்) கடவுளுடைய பெயர் கிட்டத்தட்ட 7,000 தடவை வருகிறது. அந்தப் பெயரில் நான்கு எபிரெய மெய்யெழுத்துகள் (יהוה) இருக்கின்றன. இதை “யெகோவா” என சில பைபிள்கள் மொழிபெயர்த்திருக்கின்றன. பைபிளில் மிக மிக அதிகமாகக் காணப்படும் பெயர் இதுதான். கடவுளுக்குப் பல பட்டப்பெயர்களை பைபிள் எழுத்தாளர்கள் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, “சர்வவல்லவர்,” “உன்னதமானவர்,” “கர்த்தர்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள்; இருந்தாலும், அவருடைய பெயரைக் குறிப்பிடுவதற்கு இந்த நான்கு எபிரெய எழுத்துகளைத்தான் (יהוה) உபயோகித்தார்கள்.
யெகோவா என்ற பெயரை பைபிளில் எழுத வைத்தவர் கடவுள்தான். உதாரணத்துக்கு, ‘கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யெகோவா என்பது அவருடைய பெயர்’ என்று ஓசியா தீர்க்கதரிசியை எழுத வைத்தார். (ஓசியா 12:5) ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்’ என்று ஒருவரை எழுத வைத்தார். (சங்கீதம் 83:17) அந்தக் காலத்தில் கடவுளுடைய மக்கள் சங்கீத புத்தகத்தில் உள்ள பாடல்களை மனப்பாடம் செய்து பாட வேண்டியிருந்தது. அந்தப் புத்தகத்தில் மட்டும் கடவுளுடைய பெயர் சுமார் 700 தடவை வருகிறது. அப்படியென்றால், இன்றுள்ள பல பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் ஏன் இல்லை? யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
பல பைபிள் மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் ஏன் இல்லை? அதற்கு நிறைய காரணங்களைச் சொல்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளுக்கு ஒரு பெயர் தேவையில்லை எனச் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்ற யூத நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். வேறு சிலர், கடவுளுடைய பெயரை எப்படிச் சரியாக உச்சரிப்பதென யாருக்கும் தெரியாததால் “கர்த்தர்,” “தேவன்” போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதெல்லாம் நியாயமான காரணமில்லை. பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்:
-
கடவுளுடைய பெயர் பழங்கால பைபிள் சுருள்களில் இருக்கிறது, கிறிஸ்துவுக்குமுன் எழுதப்பட்ட சுருள்களில்கூட இருக்கிறது. இந்த முக்கியமான விஷயத்தைத்தான் கடவுளுக்கு பெயர் தேவையில்லை என சொல்கிறவர்கள் அலட்சியம் செய்கிறார்கள். பைபிளில் சுமார் 7,000 தடவை யெகோவா என்ற பெயரைக் கடவுள் எழுத வைத்திருக்கிறார். அப்படியானால், நாம் அவருடைய பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும், அதைப் பயன்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றுதானே அர்த்தம்!
-
யூத நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்கியவர்கள் முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். யூத அறிஞர்கள் சிலர் கடவுளுடைய பெயரை உச்சரிக்கத்தான் மறுத்தார்கள், பைபிள் சுருள்களிலிருந்து அதை நீக்கிவிடவில்லை. சவக்கடலுக்கு அருகே கும்ரான் என்ற இடத்தில் பழங்கால சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் கடவுளுடைய பெயர் நிறைய தடவை வருகிறது. சில பைபிள்களில், கடவுளுடைய பெயர் வரும் இடங்களில் “கர்த்தர்” என்று தடித்த எழுத்துகளில் போட்டிருக்கிறார்கள்; முதன்முதல் எழுதப்பட்ட பைபிள் சுருள்களில் கடவுளுடைய பெயர்தான் இருந்தது என்பதை இதன் மூலம் மறைமுகமாகக் காட்டியிருக்கிறார்கள். அப்படியானால், முதன்முதல் எழுதப்பட்ட பைபிள் சுருளில் கடவுளுடைய பெயர் ஆயிரக்கணக்கான தடவை இருக்கிறது என தெரிந்தும் ஏன் மொழிபெயர்ப்பாளர்கள் அதை எடுத்துவிட்டார்கள்? வேறு பட்டப்பெயர்களை ஏன் போட்டார்கள்? இப்படி மாற்ற அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இது அவர்களுக்குத்தான் வெளிச்சம்!
-
கடவுளுடைய பெயரை எப்படி உச்சரிப்பதென தெரியாததால் அதைப் பயன்படுத்தக் கூடாதெனச் சிலர் சொல்கிறார்கள், ஆனால், அவர்கள் இயேசு என்ற பெயரை மட்டும் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். இயேசு என்ற பெயரை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உச்சரித்த விதத்துக்கும் இன்று நிறைய பேர் உச்சரிக்கும் விதத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது. இயேசுவின் பெயரை யெஷூவா என்று யூதக் கிறிஸ்தவர்கள் உச்சரித்திருக்கலாம். “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரை மஷியாக் (அதாவது, “மேசியா”) என்று உச்சரித்தார்கள். கிரேக்க மொழி பேசிய கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரை ஈசோஸ் கிறிஸ்டோஸ் என்று உச்சரித்தார்கள், லத்தீன் மொழி பேசிய கிறிஸ்தவர்கள் ஈசஸ் கிறிஸ்டஸ் என்று உச்சரித்தார்கள். பைபிள் எழுத்தாளர்கள் இயேசுவின் பெயரை கிரேக்க மொழியில்தான் எழுதினார்கள்; எபிரெய மொழியில் அது எப்படி உச்சரிக்கப்பட்டதோ அப்படி எழுதவில்லை. ஆகவே, கிரேக்க மொழியில் அந்தப் பெயர் பொதுவாக எப்படி உச்சரிக்கப்பட்டதோ, அப்படித்தான் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அதை உச்சரித்தார்கள் என்பது தெரிகிறது. அதேபோல, பழங்கால எபிரெய மொழியில் கடவுளுடைய பெயர் வேறு விதமாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், “யெகோவா” என்ற உச்சரிப்பைப் பயன்படுத்துவது சரியென்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள்.
யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன? “ஆவது” என்ற அர்த்தமுள்ள எபிரெய வினைச்சொல்லிலிருந்து யெகோவா என்ற பெயர் வருகிறது. ஆகவே “ஆகும்படி செய்பவர்,” அதாவது “நினைத்ததைச் செய்பவர்,” என்பதே கடவுளுடைய பெயரின் அர்த்தமென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். என்றாலும், இதுதான் அர்த்தம் என்று அடித்துச் சொல்ல முடியாது. ஏனென்றால், இது சம்பந்தமாக அறிஞர்கள் வித்தியாசமான கருத்துகளைச் சொல்கிறார்கள். இருந்தாலும், யெகோவாவே இந்தப் பிரபஞ்சத்தையும் தூதர்களையும் மனிதர்களையும் உருவாக்கியவர், தொடர்ந்து தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டே இருப்பவர். அதனால் “நினைத்ததைச் செய்பவர்” என்ற விளக்கம் அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது.
“நான் எப்படியெல்லாம் ஆக வேண்டுமென நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று யாத்திராகமம் 3:14-ல் (NW) கடவுள் தம்மைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதையெல்லாம் செய்ய வேண்டுமென நினைக்கிறாரோ அதையெல்லாம் செய்வார் என்பது இதன் அர்த்தம். யெகோவா என்ற பெயரிலிருந்து கடவுளைப் பற்றி இன்னொரு விஷயத்தையும் தெரிந்துகொள்கிறோம். யெகோவாவால் தாம் நினைத்ததைச் செய்யவும் முடியும், தாம் நினைத்ததை நிறைவேற்ற தம் படைப்புகளை என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கவும் முடியும்.