பாடம் 16
யோபு யார்?
ஊத்ஸ் நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் யெகோவாவை வணங்கினார். அவர் பெரிய பணக்காரர். அவருக்குப் பெரிய குடும்பம் இருந்தது. அவர் எல்லாரிடமும் அன்பாக இருந்தார். ஏழைகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும், அப்பா-அம்மா இல்லாத பிள்ளைகளுக்கும் உதவினார். இவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும், அவருக்குக் கஷ்டம் வராமல் இருந்ததா?
சாத்தான் யோபுவைக் கவனித்துக்கொண்டே இருந்தான். அது யோபுவுக்குத் தெரியாது. யெகோவா சாத்தானிடம், ‘என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா? அவனைப் போல இந்தப் பூமியில் யாருமே இல்லை. அவன் என் பேச்சைக் கேட்டு நடக்கிறான், நல்லதையே செய்கிறான்’ என்றார். அதற்கு சாத்தான்: ‘யோபு உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பது உண்மைதான். நீங்கள் அவனைப் பாதுகாத்து, ஆசீர்வதிக்கிறீர்கள், நிலங்களையும் மிருகங்களையும் கொடுக்கிறீர்கள். அதையெல்லாம் எடுத்துப் பாருங்கள், அவன் உங்களை வணங்குவதை நிறுத்திவிடுவான்’ என்றான். யெகோவா சாத்தானிடம், ‘வேண்டுமானால் நீ யோபுவைச் சோதித்துப் பார். ஆனால் அவனைக் கொல்லக் கூடாது’ என்றார். யோபுவைச் சோதிக்க யெகோவா ஏன் அனுமதித்தார்? ஏனென்றால், யோபு தனக்கு உண்மையாக இருப்பார் என்று அவர் நம்பினார்.
சாத்தான் யோபுவுக்குப் பல கஷ்டங்களைக் கொடுக்க ஆரம்பித்தான். முதலில், யோபுவின் மாடுகளையும் கழுதைகளையும் திருடுவதற்கு சபேயர்கள் என்னும் ஆட்களை அனுப்பினான். பிறகு, யோபுவின் ஆடுகள் எல்லாம் நெருப்பில் கருகின. அடுத்து, கல்தேயர்கள் யோபுவின் ஒட்டகங்களைத் திருடினார்கள். அவற்றைப் பார்த்துக்கொண்ட வேலைக்காரர்களையும் கொன்றார்கள். அதன் பிறகு வந்த கஷ்டம்தான் பயங்கரமானது. யோபுவின் பிள்ளைகள் விருந்து சாப்பிடும்போது, வீடு இடிந்து விழுந்து எல்லாரும் செத்துப்போனார்கள். இதையெல்லாம் அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், யெகோவாவை வணங்குவதை அவர் நிறுத்தவில்லை.
யோபு இன்னும் கஷ்டப்பட வேண்டும் என்று சாத்தான்
நினைத்தான். அதனால், யோபுவின் உடம்பு முழுவதும் புண்கள் வர வைத்தான். யோபு வலியில் துடித்தார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று அவருக்குத் தெரியாது. ஆனாலும், யெகோவாவைத் தொடர்ந்து வணங்கினார். நடந்த எல்லாவற்றையும் யெகோவா பார்த்தார். யோபுவை நினைத்து ரொம்பச் சந்தோஷப்பட்டார்.அடுத்து, யோபுவைச் சோதிக்க சாத்தான் மூன்று பேரை அனுப்பினான். அவர்கள் அவரிடம்: ‘நீ ஏதோ தப்பு செய்துவிட்டு அதை மறைத்திருக்கிறாய். அதனால்தான் கடவுள் உன்னைத் தண்டிக்கிறார்’ என்றார்கள். அதற்கு யோபு, ‘நான் எந்தத் தப்பும் செய்யவில்லை’ என்றார். இந்தக் கஷ்டங்களை யெகோவா கொடுப்பதாக யோபு நினைத்தார். அவர் தனக்கு அநியாயம் செய்வதாகச் சொன்னார்.
இவர்கள் பேசியதை எல்லாம் எலிகூ என்ற இளைஞர் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பிறகு அவர்களிடம், ‘நீங்கள் சொன்னது எல்லாமே தவறு. நாம் நினைப்பதைவிட யெகோவா ரொம்பப் பெரியவர். அவர் யாருக்குமே கெட்டது செய்ய மாட்டார். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார், கஷ்டப்படுகிற மக்களுக்கு உதவி செய்கிறார்’ என்றார்.
கடைசியில் யெகோவா யோபுவிடம் பேசினார். ‘நான் வானத்தையும் பூமியையும் படைத்தபோது நீ எங்கே இருந்தாய்? நான் அநியாயம் செய்வதாக ஏன் சொல்கிறாய்? ஏன் இதெல்லாம் நடக்கிறது என்று தெரியாமல் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்’ என்றார். யோபு தன் தவறை ஒத்துக்கொண்டார். ‘நான் பேசியது தப்புதான். நான் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இப்போதுதான் உங்களைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டேன். உங்களால் முடியாதது எதுவுமே இல்லை. தவறாக பேசியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என்றார்.
எல்லா சோதனைகளும் முடிந்த பிறகு யெகோவா யோபுவுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தார். முன்பு இருந்ததைவிட நிறைய சொத்துகளைக் கொடுத்தார். அதன் பிறகு, யோபு பல வருஷங்கள் சந்தோஷமாக வாழ்ந்தார். கஷ்டமான சமயங்களிலும் தனக்குக் கீழ்ப்படிந்ததால்தான் யோபுவை யெகோவா ஆசீர்வதித்தார். என்ன நடந்தாலும், யோபு மாதிரியே நீங்களும் யெகோவாவை எப்போதும் வணங்குவீர்களா?
“யோபுவின் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், முடிவில் யெகோவா அவரை ஆசீர்வதித்ததைப் பற்றியும் தெரிந்திருக்கிறீர்கள்.”—யாக்கோபு 5:11