பாடம் 22
செங்கடலில் நடந்த அற்புதம்
இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து போய்விட்டார்கள் என்று தெரிந்தவுடன், ‘ஏன்தான் அவர்களைப் போக விட்டோமோ’ என்று பார்வோன் யோசித்தான். அதனால், தன் வீரர்களிடம், ‘எல்லா போர் ரதங்களையும் தயார்படுத்துங்கள். நாம் அவர்களைத் துரத்திக்கொண்டு போகலாம். அவர்களைப் போக விட்டிருக்க கூடாது’ என்று சொன்னான். பிறகு, பார்வோனும் அவனுடைய ஆட்களும் இஸ்ரவேலர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள்.
யெகோவா பகலில் ஒரு மேகத்தையும் ராத்திரியில் நெருப்பையும் பயன்படுத்தி தன் மக்களுக்கு வழிகாட்டினார். அவர்களை செங்கடலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அதன் பக்கத்தில் கூடாரம் போட்டு தங்கும்படி சொன்னார்.
பார்வோனும் அவனுடைய படையும் தங்களைத் துரத்திக்கொண்டு வருவதை இஸ்ரவேலர்கள் பார்த்தார்கள். கடலுக்கும் எகிப்திய படைக்கும் இடையில் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் மோசேயிடம், ‘ஐயோ! நாங்கள் சாக போகிறோம். எங்களை ஏன் எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு மோசே, ‘பயப்படாதீர்கள். யெகோவா எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார். மோசே உண்மையிலேயே யெகோவாவை நம்பினார், இல்லையா?
அப்போது, கூடாரத்தைப் பிரித்து அங்கிருந்து கிளம்பும்படி யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னார். அன்று ராத்திரி, யெகோவா அந்த மேகத்தை இஸ்ரவேலர்களும் எகிப்தியர்களும் இடையில் நிற்க வைத்தார். அதனால், எகிப்தியர்கள் பக்கம் இருட்டாகவும், இஸ்ரவேலர்கள் பக்கம் வெளிச்சமாகவும் இருந்தது.
யெகோவா மோசேயிடம் ‘உன் கையைக் கடலுக்கு நேராக நீட்டு’ என்று சொன்னார். பிறகு ராத்திரி முழுவதும் பயங்கரமாகக் காற்று அடிக்க வைத்தார். அதனால், கடல் இரண்டாகப் பிரிந்து, இரண்டு பக்கங்களிலும் தண்ணீர் சுவர் போல நின்றது. நடுவில் ஒரு பெரிய பாதை உருவானது. லட்சக்கணக்கான இஸ்ரவேலர்கள் காய்ந்த தரையில் நடந்து போனார்கள்.
இஸ்ரவேலர்களின் பின்னால் பார்வோனின் படை கடலுக்குள் போனது. யெகோவா பார்வோனின் படையில் குழப்பத்தை உண்டாக்கினார். ரதங்களின் சக்கரங்கள் கழன்று போக ஆரம்பித்தன. வீரர்கள் எல்லாரும், ‘நாம் இங்கிருந்து போய்விடலாம். அவர்களுக்காக யெகோவா போர் செய்கிறார்’ என்று கத்தினார்கள்.
அப்போது யெகோவா மோசேயிடம், ‘உன் கையைக் கடலுக்கு நேராக நீட்டு’ என்றார். உடனே, சுவர் போல நின்ற தண்ணீர் எகிப்திய படைமேல் பாய்ந்தது. பார்வோனும் அவனுடைய ஆட்களும் செத்துப்போனார்கள். ஒருத்தர்கூட பிழைக்கவில்லை.
ஆனால், கடலுக்கு அந்தப் பக்கத்தில், இஸ்ரவேலர்கள் ஒரு பெரிய கூட்டமாக கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். “யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள். அவருக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. குதிரைகளையும் குதிரை வீரர்களையும் கடலில் சமாதியாக்கினார்” என்று பாடினார்கள். இப்படிப் பாடியபோது, பெண்கள் நடனம் ஆடினார்கள், கஞ்சிரா வாசித்தார்கள். பெரிய விடுதலை கிடைத்ததை நினைத்து எல்லாரும் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள்.
“அதனால், ‘யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?’ என்று நாம் மிகவும் தைரியமாகச் சொல்லலாம்.”—எபிரெயர் 13:6