பாடம் 5
நோவா கட்டிய பேழை
காலம் போகப் போக, இந்தப் பூமியில் மக்களின் எண்ணிக்கையும் அதிகமானது. ஆனால், நிறைய பேர் கெட்டவர்களாக இருந்தார்கள். பரலோகத்தில் இருந்த தேவதூதர்களில் சிலர்கூட கெட்டவர்களாக மாறிவிட்டார்கள். அவர்கள் பரலோகத்தை விட்டு பூமிக்கு வந்தார்கள். ஏன் தெரியுமா? பூமியில் இருந்த பெண்களைக் கல்யாணம் செய்ய அவர்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், மனித உடலில் இந்தப் பூமிக்கு வந்தார்கள்.
அந்தத் தேவதூதர்களுக்கும் பூமியில் இருந்த பெண்களுக்கும் மகன்கள் பிறந்தார்கள். அந்தப் பிள்ளைகள் வளர்ந்தபோது ரொம்ப பலசாலிகளாக ஆனார்கள். பயங்கர முரடர்களாக இருந்தார்கள். மற்றவர்களை அடித்து உதைத்தார்கள். யெகோவாவினால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அதனால், பெரிய வெள்ளத்தை வர வைத்து கெட்டவர்கள் எல்லாரையும் அழிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
ஆனால், ஒரு நல்ல மனிதர் அப்போது பூமியில் இருந்தார். அவர் யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார். அவர் பெயர் நோவா. அவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் இருந்தார்கள். மகன்களின் பெயர் சேம், காம், யாப்பேத். அவர்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. யெகோவா நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் வெள்ளத்திலிருந்து காப்பாற்ற ஆசைப்பட்டார். அதனால், நோவாவிடம் ஒரு பெரிய பேழையைக் கட்டச் சொன்னார். பேழை என்பது ஒரு பெரிய பெட்டி போல இருக்கும். அது தண்ணீரில் மிதக்கும். யெகோவா மிருகங்களையும் காப்பாற்ற நினைத்தார். அதனால், நிறைய மிருகங்களை அந்தப் பேழைக்குள் கொண்டுவரும்படி நோவாவிடம் சொன்னார்.
நோவா உடனடியாகப் பேழையைக் கட்ட ஆரம்பித்தார். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் கிட்டத்தட்ட 50 வருஷங்கள் வேலை செய்து அதைக் கட்டினார்கள். யெகோவா சொன்ன மாதிரியே அதைக் கட்டினார்கள். அதேசமயத்தில், பெரிய வெள்ளம் வரப்போகிறது என்றும் மக்களை நோவா எச்சரித்தார். ஆனால், அவர் சொன்னதை யாருமே கேட்கவில்லை.
கடைசியில், பேழைக்குள் போக வேண்டிய நேரம் வந்தது. அப்போது என்ன நடந்தது?
“நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும்.”—மத்தேயு 24:37