பாடம் 100
பவுலும் தீமோத்தேயுவும்
லீஸ்திரா சபையில் இருந்த ஒரு இளம் சகோதரர்தான் தீமோத்தேயு. அவருடைய அப்பா ஒரு கிரேக்கர், அம்மா ஒரு யூதப் பெண். தீமோத்தேயு சின்னப் பிள்ளையாக இருந்த சமயத்திலிருந்தே அவருடைய அம்மா ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும் யெகோவாவைப் பற்றி அவருக்குச் சொல்லிக்கொடுத்தார்கள்.
பவுல் இரண்டாவது பிரசங்கப் பயணம் செய்த சமயத்தில், லீஸ்திராவுக்கு வந்தார். அப்போது, தீமோத்தேயு மற்ற சகோதரர்கள்மேல் ரொம்ப அன்பாக இருந்ததையும் அவர்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருந்ததையும் பவுல் பார்த்தார். அதனால், தன்னோடு பயணம் செய்வதற்கு தீமோத்தேயுவைக் கூப்பிட்டார். நல்ல செய்தியைத் திறமையாகப் பிரசங்கிப்பதற்கும் கற்றுக்கொடுப்பதற்கும் தீமோத்தேயுவுக்கு பவுல் பயிற்சி கொடுத்தார்.
பவுலும் தீமோத்தேயுவும் போன இடங்களில் கடவுளுடைய சக்தி அவர்களை வழிநடத்தியது. ஒருநாள் ராத்திரி பவுலுக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்யும்படி அதில் ஒருவன் பவுலிடம் கேட்டான். அதனால் அங்கே பிரசங்க வேலை செய்து சபைகளை ஆரம்பிக்க பவுல், தீமோத்தேயு, சீலா, லூக்கா ஆகியோர் போனார்கள்.
மக்கெதோனியாவில், தெசலோனிக்கே என்ற நகரத்தில் இருந்த நிறைய ஆண்களும் பெண்களும் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். ஆனால், பவுலையும் அவருடைய நண்பர்களையும் பார்த்து யூதர்கள் சிலர் பொறாமைப்பட்டார்கள். அவர்கள் ஒரு கும்பலைச் சேர்த்துக்கொண்டு பவுலையும் அவருடைய நண்பர்களையும் நகரத் தலைவர்களிடம் இழுத்துக்கொண்டு போனார்கள். ‘இவர்கள் ரோம அரசாங்கத்தின் எதிரிகள்!’ என்று கத்தினார்கள். அங்கேயே இருந்தால் பவுலையும் தீமோத்தேயுவையும் கொன்றுபோட்டிருப்பார்கள். அதனால், அவர்கள் இரண்டு பேரும் ராத்திரியோடு ராத்திரியாக பெரோயாவுக்குத் தப்பித்துப் போனார்கள்.
பெரோயா மக்கள் நல்ல செய்தியைக் கேட்க ஆர்வமாக இருந்தார்கள். அங்கே இருந்த கிரேக்கர்களும் யூதர்களும் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். ஆனால், தெசலோனிக்கேயைச் சேர்ந்த யூதர்கள் சிலர் அங்கேயும் வந்து பிரச்சினை பண்ணினார்கள். அதனால், பவுல் அத்தேனே நகரத்துக்குப் போனார். பெரோயாவில் இருந்த சகோதரர்களைப் பலப்படுத்துவதற்காக தீமோத்தேயுவும் சீலாவும் அங்கேயே தங்கினார்கள். எதிரிகள் தெசலோனிக்கேயில் இருந்த சகோதரர்களுக்குப் பயங்கர கஷ்டத்தைக் கொடுத்தார்கள். அந்தச் சகோதரர்களுக்கு உதவி செய்வதற்காக தீமோத்தேயுவை பவுல் திரும்பவும் அங்கே
அனுப்பினார். பிறகு, மற்ற சபைகளுக்குப் போய் அங்கே இருக்கிறவர்களை உற்சாகப்படுத்தவும் அவரை பவுல் அனுப்பினார்.‘யெகோவாவுக்குச் சேவை செய்ய விரும்புகிறவர்களை மற்றவர்கள் கொடுமைப்படுத்துவார்கள்’ என்று தீமோத்தேயுவிடம் பவுல் சொன்னார். கடவுளுக்கு உண்மையாக இருந்ததால் தீமோத்தேயு கொடுமைகளையும் சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். ஆனாலும், யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதைக் காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து தீமோத்தேயு சந்தோஷப்பட்டார்.
பவுல் பிலிப்பி சபையில் இருந்தவர்களிடம், ‘நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கடவுளுடைய ஊழியராக எப்படி வாழ வேண்டும் என்றும், எப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்றும் அவர் கற்றுக்கொடுப்பார்’ என்று சொன்னார். கொடுத்த வேலையை தீமோத்தேயு நன்றாகச் செய்வார் என்று பவுல் நம்பினார். பவுலும் தீமோத்தேயுவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். நிறைய வருஷங்கள் ஒன்றுசேர்ந்து கடவுளுக்குச் சேவை செய்தார்கள்.
“உங்களுடைய விஷயங்களை அக்கறையோடு கவனிப்பதற்கு அவரைப் போன்ற மனமுள்ளவர் வேறு யாரும் என்னோடு இல்லை. மற்ற எல்லாரும் தங்களுடைய விஷயங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள், இயேசு கிறிஸ்துவுடைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை.”—பிலிப்பியர் 2:20, 21