மன்னிக்க மனமில்லாத அடிமை
அதிகாரம் 15
மன்னிக்க மனமில்லாத அடிமை
யாராவது எப்பொழுதாகிலும் உனக்குத் தவறு செய்தது உண்டா? — அவன் உனக்கு ஏதாவது தீங்கு செய்தானா அல்லது அன்பற்ற விதமாய் உன்னிடம் ஏதாவது பேசினானா? — அது உனக்கு வருத்த உணர்ச்சியை உண்டாக்கிற்று அல்லவா? —
இதைப் போன்ற ஏதாவது நடக்கையில் அந்த மற்றவன் உன்னை நடத்துகிற அதே அன்பற்ற முறையில் நீ அவனை நடத்த வேண்டுமா? — பலர் அப்படிச் செய்வார்கள்.
ஆனால், நமக்குத் தீங்கு செய்கிறவர்களுக்கு நாம் மன்னிக்க வேண்டுமென்று பெரிய போதகர் சொன்னார். மன்னிக்கிறவர்களாக இருப்பது எவ்வளவு அதிக முக்கியமானது என்பதைக் காண்பிக்க, இயேசு ஒரு கதை சொன்னார். அதைக் கேட்க உனக்குப் பிரியமா? —
ஒரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். அவர் ஒரு நல்ல அரசர். அவர் வெகு தயவுள்ளவர். தம்முடைய அடிமைகளுக்கு உதவி தேவையாக இருக்கையில் அவர் அவர்களுக்குப் பணத்தைக் கடனாகவுங்கூட கொடுப்பார்.
ஆனால் அந்த அரசர் தம்முடைய பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி விரும்பின அந்த நாள் வந்தது. ஆகவே தமக்குப் பணம் கடன்பட்டிருந்த அடிமைகளை அவர் அழைத்து, தமக்குப் பணத்தைச் செலுத்தும்படி கேட்டார். ஒரு மனிதன் அரசருக்கு ஆறு கோடி நாணயங்கள் கடன்பட்டிருந்தான்! இது மிக அதிக அளவான பணம். இது, என் வாழ்க்கை காலமெல்லாம் என்னிடம் இருந்து வந்திருக்கக்கூடிய பணம் எல்லாவற்றையும் பார்க்கிலும் அதிகப் பணமாகும்.
இந்த அடிமை அரசருடைய பணத்தைச் செலவழித்துவிட்டிருந்தான். அதைத் திரும்பச் செலுத்த அவனிடம் எதுவுமே இல்லை. ஆகவே இந்த அடிமை விற்கப்படும்படி அரசர் கட்டளைகளைக் கொடுத்தார். மேலும் இந்த அடிமையின் மனைவியையும் அவனுடைய பிள்ளைகளையும் அந்த அடிமைக்குச் சொந்தமாயிருந்த எல்லாவற்றையும் விற்கும்படியும் அரசர் கட்டளையிட்டார். இந்த விற்பனையிலிருந்து வரும் பணத்தைக்கொண்டு
அரசருக்குச் செலுத்த வேண்டியதைச் செலுத்தித் தீரவேண்டும். இது அந்த அடிமை எப்படிப்பட்ட உணர்ச்சியை அடையும்படி செய்திருக்குமென்று நீ நினைக்கிறாய்? —அந்த அடிமை: ‘தயவு செய்து எனக்கு அதைச் செய்யாதேயும், எனக்கு இன்னும் கொஞ்சங்காலம் கொடும். நான் உமக்குக் கடன்பட்டிருக்கிற எல்லாவற்றையும் திரும்ப செலுத்திவிடுகிறேன்,’ என்று அரசரைக் கெஞ்சினான். நீ அந்த அரசராக இருந்திருப்பாயானால் இந்த அடிமையை என்ன செய்திருப்பாய்? —
அந்த நல்ல அரசர் இந்த அடிமையின் பேரில் மனதுருகினார். ஆகவே, அவர், அந்தப் பணம் எதையும் அந்த அடிமை தனக்குச் செலுத்த வேண்டியதில்லை என்று அவனுக்குச் சொல்லிவிட்டார். அந்த ஆறு கோடி நாணயங்களில் அவன் ஒன்றையுங்கூட திரும்ப செலுத்த வேண்டியதில்லை! இது அந்த அடிமையை எவ்வளவு சந்தோஷமாக்கியிருக்கும்!
ஆனால் அந்த அடிமை பின்பு என்ன செய்தான்? அவன் வெளியே சென்று, தனக்கு ஒரு நூறு நாணயங்கள் மாத்திரமே கடன்பட்டிருந்த மற்றொரு அடிமையைக் கண்டான். ஆறு கோடி நாணயங்களோடு ஒப்பிட்டால் இது அதிகம் ஒன்றுமில்லை. இந்த மனிதன் தன் உடன் அடிமையின் கழுத்தை இறுகப் பிடித்து மூச்சு விடாதபடி தொண்டையை நெரிக்க ஆரம்பித்தான். மேலும் அவனிடம்: ‘நீ எனக்குக் கடன்பட்டிருக்கிற அந்த நூறு நாணயங்களைத் திருப்பிக் கொடு,’ என்று கேட்டான்.
ஓர் ஆள் இப்படிப்பட்ட ஒரு காரியத்தைச் செய்வதை நீ கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? — இந்த அடிமையை அந்த நல்ல அரசர் அவ்வளவு பெரும் தொகையைக் கொடுப்பதிலிருந்து மன்னித்திருந்தார். இப்பொழுது அவன் திரும்பி தன்னுடைய உடன் அடிமை நூறு நாணயங்களைத் திருப்பிக் கொடுக்கும்படி கட்டாயப்படுத்திக் கேட்டான். இது அன்பான ஒரு காரியமாக இருக்கவில்லை.
ஒரு நூறு நாணயங்களே கடன்பட்டிருந்த அந்த அடிமை ஏழையாக இருந்தான். அந்தப் பணத்தை உடனே அவனால் செலுத்த முடியவில்லை. ஆகவே அவன் தன்னுடைய உடன் தோழனான அந்த அடிமையின் பாதத்தண்டையில் விழுந்து: ‘தயவு செய்து எனக்கு இன்னும் கொஞ்சங்காலம் கொடும், நான் உமக்குக் கடன்பட்டதைத் திரும்ப செலுத்தித் தீர்க்கிறேன்,’ என்று கெஞ்சினான். இந்த மனிதன் தன் உடன் அடிமைக்கு இன்னும் கொஞ்சக் காலம் கொடுத்திருக்க வேண்டுமா? — நீ கொடுத்திருப்பாயா? —
அந்த அரசர் இருந்ததுபோல் இந்த மனிதன் தயவுள்ளவனாக இல்லை. அவனுடைய உடன் அடிமை உடனே அப்பொழுதே தனக்குக் கடனைச் செலுத்த முடியாததன் காரணமாக, அவன் அவனை ஜெயிலுக்குள் போடுவித்தான். அவன் நிச்சயமாகவே மன்னிக்கிறவனாக இல்லை.
இதெல்லாம் நடப்பதை மற்ற அடிமைகள் கண்டார்கள். அவர்கள் இதைப்பற்றி அரசருக்குச் சொன்னார்கள். மன்னிக்க மனமில்லாத அந்த அடிமையின் பேரில் அரசர் மிகவும் கோபமடைந்தார். ஆகவே அவர் அவனை அழைத்து: ‘கெட்ட அடிமையே, நீ எனக்குக் கடன்பட்டிருந்ததை நான் உனக்கு மன்னிக்கவில்லையா? ஆகவே உன் உடன் அடிமைக்கு மன்னிக்கிறவனாக நீ இருந்திருக்க வேண்டாமா?’ என்று கேட்டார்.
அந்த நல்ல அரசரிடமிருந்து ஒரு பாடத்தை அவன் கற்றிருந்திருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யவில்லை. ஆகவே, அரசர் மன்னிக்க மனமில்லாத அந்த அடிமையை, அந்த ஆறு கோடி நாணய பணத்தை அவன் திரும்பக் கொடுத்துத் தீர்க்கும் வரையில் ஜெயிலில் போடுவிக்கும்படிச் செய்தார். நிச்சயமாகவே, ஜெயிலில், அந்தப் பணத்தைக் கொடுத்துத் தீர்க்கும்படி அவன் அதை ஒருபோதும் சம்பாதிக்க முடியாது. ஆகவே அவன், தான் மரிக்கும் வரையில் அங்கேயே இருப்பான்.
இயேசு இந்தக் கதையை சொல்லி முடிக்கையில் தம்மைப் பின்பற்றினவர்களிடம்: ‘நீங்களும் அவனவன் தன் தன் சகோதரனுக்கு உங்கள் இருதயங்களிலிருந்து மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.’—மத்தேயு 18:21-35.
நாம் எல்லோரும் கடவுளுக்கு மிக அதிகம் கடன்பட்டிருக்கிறோம். நம்முடைய உயிர் கடவுளிடத்திலிருந்து வருகிறது, ஆனால் நாம் தவறான காரியங்களைச் செய்வதன் காரணமாக
அவர் அதை நம்மிடத்திலிருந்து எடுத்துவிடக்கூடும். பணத்தைக்கொண்டு கடவுளுக்குக் கடன் செலுத்த பிரயாசப்படுவோமானால், நாம் அவருக்குக் கடன் பட்டதைச் செலுத்துவதற்குப் போதுமான பணத்தை நம்முடைய வாழ்க்கை காலம் முழுவதிலுமே ஒருபோதும் நாம் சம்பாதிக்க முடியாது.கடவுளுக்கு நாம் கடன்பட்டிருப்பதோடு ஒப்பிடுகையில் மற்றவர்கள் நமக்குக் கடன்பட்டிருப்பது வெகு சொற்பமே. அவர்கள் நமக்குக் கடன்பட்டிருப்பதானது அந்த ஒரு அடிமை மற்றவனுக்குக் கடன்பட்டிருந்த அந்த நூறு நாணயங்களைப் போல் இருக்கிறது. ஆனால் நாம் கடவுளுக்குக் கடன்பட்டிருப்பதானதோ அந்த அடிமை அரசருக்குக் கடன்பட்டிருந்த ஆறு கோடி நாணயங்களைப் போல் இருக்கிறது.
கடவுள் வெகு தயவுள்ளவராக இருக்கிறார். நாம் தவறான காரியங்களைச் செய்திருக்கிற போதிலும், அவர் நமக்கு மன்னிப்பார். நம்முடைய உயிரை நம்மிடத்திலிருந்து என்றுமாக எடுத்துப் போடுவதன் மூலம் கடனைச் செலுத்த வைக்க மாட்டார். ஆனால் நாம் அவருடைய குமாரனாகிய இயேசுவில் நம்பிக்கை வைத்து, நமக்குத் தவறு செய்கிற மற்ற ஆட்களுக்கு மன்னித்தால் மாத்திரமே அவர் நமக்கு மன்னிப்பார். இது நாம் சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு காரியம் அல்லவா? —
ஆகவே, யாராவது அன்பற்ற ஏதாவதொன்றை உனக்குச் செய்திருந்து, ஆனால் பிறகு தான் வருத்தப்படுவதாகச் சொல்வானானால், நீ என்ன செய்வாய்? நீ அவனுக்கு மன்னிப்பாயா? — இது பல தடவைகள் நடக்குமானால் எப்படி? நீ இன்னும் அவனுக்கு மன்னிப்பாயா? —
மன்னிக்கும்படியாகக் கேட்கும் அந்த ஆளாக நாம் இருப்போமென்றால், அந்த மற்ற ஆள் நமக்கு மன்னிக்கும்படி நாம் விரும்புவோம் அல்லவா? — நாமுங்கூட அதையே அவனுக்குச் செய்ய வேண்டும். நான் உனக்கு மன்னிக்கிறேன் என்று நாம் வெறுமென சொல்லி மட்டும் விடக்கூடாது, நம்முடைய இருதயத்திலிருந்து உண்மையில் நாம் அவனுக்கு மன்னிக்க வேண்டும். இதை நாம் செய்கையில், இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க உண்மையில் விரும்புகிறோம் என்று காட்டுகிறோம்.
(மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்த, மத்தேயு 6:14, 15; லூக்கா 17:3, 4; நீதிமொழிகள் 19:11 ஆகியவற்றை வாசியுங்கள்.)