ஜெபம் செய்ய இயேசு நமக்குக் கற்பிக்கிறார்
அதிகாரம் 11
ஜெபம் செய்ய இயேசு நமக்குக் கற்பிக்கிறார்
நீ யெகோவா தேவனிடம் பேசுகிறாயா — நீ அவரிடம் பேசும்படி அவர் விரும்புகிறார். நீ கடவுளிடம் பேசுகையில் அது ஜெபம் என்று அழைக்கப்படுகிறது.
இயேசு பரலோகத்திலுள்ள தம்முடைய தகப்பனிடம் அடிக்கடி பேசினார். சில சமயங்களில் அவர் கடவுளிடம் பேசுகையில் தாம் தனியாக இருக்க விரும்பினார். ஒரு சமயம், “அவர் தனித்து ஜெபம் பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்,” என்று பைபிள் சொல்லுகிறது.—மத்தேயு 14:23.
தனிமையாக யெகோவாவிடம் ஜெபிக்க நீ எங்கே போகக்கூடும்? — ஒருவேளை இரவில் நீ படுக்கைக்குப் போவதற்கு முன்பாகக் கடவுளிடம் தனிமையாய்ப் பேசலாம். “நீயோ ஜெபம் பண்ணும்போது, உன் அறை வீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு,” என்று இயேசு சொன்னார். ஒவ்வொரு இரவிலும் நீ தூங்கப் போவதற்கு முன்பாகக் கடவுளிடம் ஜெபிக்கிறாயா? — இது செய்யவேண்டிய நல்ல காரியம்.—மத்தேயு 6:6.
மற்ற ஆட்கள் தம்முடன் இருக்கையிலுங்கூட இயேசு ஜெபித்தார். தம்முடைய சீஷருடன் கூடும் கூட்டங்களில் இயேசு ஜெபிப்பார். ஜெபம் சொல்லப்படுகிற கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நீ போகலாம். இந்தக் கூட்டங்களில் வழக்கமாய் ஒரு முதியவர் ஜெபிப்பார். அவர் சொல்வதைக் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேள். ஏனென்றால் அவர் உனக்காகக் கடவுளிடம் பேசுகிறார். அப்பொழுது நீ அந்த ஜெபத்திற்கு “ஆமென்” சொல்லக் கூடியவனாக இருப்பாய்.
ஒரு ஜெபத்திற்கு முடிவில் “ஆமென்” சொல்வதன் அர்த்தமென்ன என்று உனக்குத் தெரியுமா? — நீ அந்த ஜெபத்தை விரும்புகிறாய் என்று அர்த்தங்கொள்ளுகிறது. நீ அதோடு ஒத்திருக்கிறாய் என்றும், அது உன்னுடைய ஜெபமாகவுங்கூட
இருக்கும்படி நீ விரும்புகிறாய் என்றும் அர்த்தங்கொள்ளுகிறது.சாப்பிடும் சமயங்களிலுங்கூட இயேசு ஜெபித்தார். தம்முடைய உணவுக்காக அவர் யெகோவாவுக்கு நன்றி செலுத்தினார். நீ உன் சாப்பாட்டை சாப்பிடுவதற்கு முன்பாக எப்பொழுதும் ஜெபிக்கிறாயா? —
நாம் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த உணவுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்வது நமக்கு நல்லது. நீங்கள் ஒன்றாகச் சாப்பிடுகையில் ஒருவேளை உன் தகப்பன் ஜெபம் செய்வார். ஆனால் நீ தனிமையாகச் சாப்பிடுகையில் எப்படி? அல்லது யெகோவாவுக்கு நன்றி சொல்லாத ஆட்களுடன் நீ சாப்பிடுகிறாய் என்றால் எப்படி? — அப்பொழுது நீ உன் சொந்த ஜெபத்தைச் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
நீ எப்பொழுதும் சத்தமாகவே ஜெபிக்கவேண்டுமா? — இல்லை. உன் இருதயத்தில் நீ ஜெபம் செய்தாலுங்கூட யெகோவா உன் ஜெபத்தைக் கேட்கக்கூடும். ஆகவே கடவுளிடம் ஜெபிக்காத ஆட்களுடன் நீ இருக்கையில் நீ யெகோவாவினிடம் மனதுக்குள்ளேயே அமைதலாக ஜெபம் செய்யக்கூடும். உதாரணமாக, பள்ளிக்கூடத்தில் பகல் உணவு சாப்பிடுகையில் அமைதலாக ஜெபித்துக் கொள்ளலாம்.
ஜெபிக்கையில் நீ தலைகுனிய வேண்டுமா? முழங்காற்படியிடவேண்டுமா? நீ என்ன நினைக்கிறாய்? —
சில சமயங்களில் இயேசு, ஜெபிக்கையில் முழங்காற்படியிட்டார். சில சமயங்களில் அவர் ஜெபிக்கையில் வானத்தை நோக்குபவராய்த் தம்முடைய தலையை நிமிர்த்தினார். மேலும் நிற்கும்போதுங்கூட கடவுளிடம் ஜெபிப்பதைப் பற்றி அவர் பேசினார்.
ஆகவே இது எதைக் காட்டுகிறது? ஜெபிக்கையில் நீ எப்பொழுதும் ஒரேநிலையில் இருக்கவேண்டுமா? — நீ இருக்கும் நிலை முக்கியமான காரியமல்ல. ஆனால் சில சமயங்களில் நீ ஜெபிக்கையில் உன் தலையைக் குனியவைப்பது நல்லது. வேறு சமயங்களில், இயேசு செய்ததுபோல் முழங்காற்படியிடவுங்கூட நீ விரும்பக்கூடும். ஆனால் பகலிலாயினும் இரவிலாயினும் எந்தச் சமயத்திலும் நாம் கடவுளிடம் ஜெபிக்கலாம். அவர் நமக்குச் செவிகொடுப்பார் என்பதை நினைவில் வைத்துக்கொள்.
ஜெபத்தில் முக்கியமான காரியமானது யெகோவா செவிகொடுக்கிறார் என்று நாம் உண்மையில் நம்புவதேயாகும். யெகோவா உனக்குச் செவிகொடுக்கிறார் என்று நீ நம்புகிறாயா? —
யெகோவாவிடம் செய்யும் நம்முடைய ஜெபங்களில் நாம் என்ன சொல்லவேண்டும்? — எனக்குச் சொல்: நீ ஜெபிக்கையில், கடவுளிடம் எதைப் பற்றிப் பேசுகிறாய்? —
யெகோவா நமக்கு எத்தனை அநேக நல்ல காரியங்களைக் கொடுக்கிறார், அவற்றிற்காக அவருக்கு நன்றி சொல்வது சரியல்லவா? — நாம் சாப்பிடும் உணவுக்காக நாம் அவருக்கு நன்றி சொல்லுகிறோம். ஆனால் நீல வானத்திற்காகவும் பசுமையான மரங்களுக்காகவும் அழகிய பூக்களுக்காகவும் நீ என்றாவது அவருக்கு நன்றி சொல்லியிருக்கிறாயா? — அவற்றையுங்கூட அவர் உண்டாக்கினார்.
எப்படி ஜெபிக்க வேண்டுமென்று தங்களுக்குக் கற்பிக்கும்படி இயேசுவின் சீஷர்கள் அவரை ஒருமுறை கேட்டார்கள். ஜெபிப்பதற்கு மிக முக்கியமான காரியங்கள் யாவை என்பதைப் பெரிய போதகர் அவர்களுக்குக் காட்டினார். இந்தக் காரியங்கள் எவை என்று உனக்குத் தெரியுமா? — உன்னுடைய பைபிளை எடுத்து மத்தேயு 6-ம் அதிகாரத்திற்குத் திற. 9-லிருந்து 13-வரையான வசனங்களில் “கர்த்தருடைய ஜெபம்” என்று பல ஆட்கள் அழைப்பதை நாம் காண்கிறோம். இதை நாம் இருவரும் சேர்ந்து வாசிக்கலாம்.
இங்கே கடவுளுடைய பெயரைப் பற்றி ஜெபிக்கும்படி இயேசு நமக்குச் சொன்னார் என்று நாம் கற்றறிகிறோம். கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் அல்லது பரிசுத்தமாகக் கையாளப்படவேண்டும் என்று ஜெபிக்கும்படி அவர் கூறினார்.
கடவுளுடைய பெயர் என்ன? — யெகோவா என்பது அவர் பெயர் என்றும், இந்தப் பெயரை நாம் நேசிக்க வேண்டும் என்றும் பைபிள் நமக்குச் சொல்லுகிறது.இரண்டாவதாக, கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்பித்தார். இந்த ராஜ்யம் அவ்வளவு அதிக முக்கியமானது. ஏனென்றால் அது பூமிக்கு சமாதானத்தைக் கொண்டுவந்து அதை ஒரு பரதீஸாக்கும்.
மூன்றாவதாக, கடவுளுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படும்படியாக ஜெபிக்கும்படி பெரிய போதகர் கூறினார். இது, நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்யவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
மேலும் இயேசு, அந்தந்த நாளுக்குரிய உணவுக்காகவுங்கூட ஜெபிக்கும்படி நமக்குக் கற்பித்தார். தவறான காரியங்களை நாம் செய்கையில் அதற்காக வருத்தப்படுகிறோமென்று நாம் கடவுளிடம் சொல்லவேண்டும் என்றும் அவர் கூறினார். நம்மை மன்னிக்கும்படி நாம் கடவுளைக் கேட்க வேண்டும். ஆனால் அவர் நமக்கு மன்னிப்பதற்கு முன்பாக, மற்றவர்கள் நமக்குத் தவறு செய்வார்களேயாகில், அவர்களுக்கு நாம் மன்னிக்கவேண்டும். நீ இதைச் செய்கிறாயா? —
கடைசியாக, தீயோனாகிய பிசாசான சாத்தானிலிருந்து யெகோவா தேவன் நம்மைப் பாதுகாக்கும்படி நாம் ஜெபிக்க வேண்டுமென்று இயேசு கூறினார். ஆகவே இவை யாவும் கடவுளிடம் ஜெபிப்பதற்குரிய நல்ல காரியங்கள்.
ஆகவே யெகோவா நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார் என்று நாம் நம்பி, நமக்கு உதவி செய்யும்படி அவரைக் கேட்பதுமட்டுமல்லாமல் அவருக்கு விடாமல் நன்றி செலுத்திக்கொண்டும் வரவேண்டும். நாம் தம்மிடம் ஜெபிப்பதைக் கேட்க யெகோவா விரும்புகிறார். ஜெபத்தில் நாம் சொல்வதை உண்மையில் நாம் கருதி சொல்லும்போதும், சரியான காரியங்களை அவரிடம் நாம் கேட்கும்போதும் அவர் சந்தோஷப்படுகிறார். இந்தக் காரியங்களை அவர் நமக்குக் கொடுப்பார். இதை நீ நம்புகிறாயா? —
(ஜெபத்தைப் பற்றிய மேலும் நல்ல ஆலோசனை 1 பேதுரு 3:12; 1 யோவான் 5:14; ரோமர் 12:12 ஆகியவற்றில் காணப்படுகிறது.)