இயேசு ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்
அதிகாரம் 43
இயேசு ஓர் அடையாளத்தைக் கொடுக்கிறார்
இன்று நாம் அடையாளங்களைப் பற்றிப் பேசப் போகிறோம். அடையாளங்களை வாசிப்பது எப்படியென்று தெரிந்துகொள்வது நல்லது. அவை நமக்கு உதவி செய்யக்கூடும்.
சில அடையாளங்கள் தங்கள் மீது வார்த்தைகளைக் கொண்டிருக்கக் கூடும். நாம் உணவை எங்கே வாங்கலாம் என்று அவை நமக்குச் சொல்லுகின்றன. கார்கள் வந்து கொண்டிருக்கையில் வீதியைக் கடக்க வேண்டாமென்று அவை நம்மை எச்சரிக்கலாம். நீ என்ன அடையாளங்களைப் பார்த்திருக்கிறாய்? —
மற்றொரு வகையான அடையாளங்களுங்கூட இருக்கின்றன. இவை ஒருவேளை வார்த்தைகளைக் கொண்டிரா. இவற்றில் சில வானிலையில் மாற்றங்களைப் பற்றிச் சொல்லுகின்றன. மேகங்கள் சூரியனை மறைக்கக்கூடும். காற்று ஒருவேளை அடிக்கத் தொடங்கலாம். மின்னல் பளிச்சிடுகிறது. இடி இடிக்கிறது. இந்தக் காரியங்களை நீ கேட்டு காண்கையில், இவை எதைக் குறிக்கின்றன? — ஆம், அநேகமாய் மழை பெய்யலாம். இந்த அடையாளங்கள் வாசிப்பதற்குக் கடினமாயில்லை, அல்லவா? —
ஒருநாள் இயேசுவின் அப்போஸ்தலர், ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்படி அவரைக் கேட்டார்கள். ஏதோ எதிர்காலம் வரையாக ஜனங்கள் அவரை மறுபடியும் காணமாட்டார்கள் என்று அவர் சொன்னதை அவர்கள் கேட்டிருந்தார்கள். அந்தக் காலம் எப்பொழுது இருக்குமென்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினார்கள். அந்தக் காலம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம் என்னவாக இருக்கும்?
தம்மைப் பின்பற்றுவோருக்கு ஓர் அடையாளம் தேவையாக இருக்குமென்று பெரிய போதகர் அறிந்திருந்தார். அவர், கடவுளுடன் இருப்பதற்குத் திரும்பப் பரலோகத்திற்குப் போகப்போகிறவராக இருந்தார். அவர் மறுபடியும் வருகையில் ஒரு மனிதனாக இருக்கமாட்டார். அவர் ஓர் ஆவியாக இருப்பார். நீ ஓர் ஆவியைக் காணக்கூடுமா? —
அப்படியானால், அவர் மறுபடியும் வந்துவிட்டார் என்று எவருக்காவது எப்படித் தெரியும்? — கவனிக்க வேண்டியது என்னவென்பதை இயேசு அவர்களுக்குச் சொன்னார். இங்கே இந்தப் பூமியிலேதானே சம்பவிக்கப் போகிற காரியங்களைப் பற்றி அவர் அவர்களுக்குச் சொன்னார்.
இயேசு அவர்களிடத்தில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் எருசலேமுக்கு வெகு அருகில் இருந்தனர். பள்ளத்தாக்குக்கு அப்பால் அவர்கள் அதைக் காணக்கூடியவர்களாக இருந்தார்கள். அதன் அழகிய ஆலயத்தை அவர்கள் பார்க்க முடிந்தது. ஆகவே எருசலேமுக்கும் அதன் ஆலயத்துக்கும் சம்பவிக்கப் போகிற காரியங்களைப் பற்றி இயேசு அவர்களுக்குச் சொன்னார். அந்தக் காரியங்கள் உண்மையாகச் சம்பவித்தன!
ஆனால், அதே காரியங்கள் பின்னால் மறுபடியும் சம்பவிக்கும் என்றுங்கூட இயேசு சொன்னார். இந்தச் சமயத்தில் அவை முழு உலகத்திற்கும் சம்பவிக்கும். இது எதைக் குறிக்கும்? — இது கிறிஸ்து திரும்பி வந்துவிட்டார் என்பதைக் குறிக்கும். பரலோகத்திலிருந்து அவர் கடவுளுடைய ராஜ்யத்தில் ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார் என்பதைக் குறிக்கும். சீக்கிரத்தில் அவர் அக்கிரமக்காரரை
அழித்துப் போடுவார். சீக்கிரத்தில் இங்கே பூமியில் வாழ்க்கை அதிக மேம்பட்டதாகும்.இயேசு கொடுத்த அந்த அடையாளத்தை நாம் பார்த்திருக்கிறோமா? — நான் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேட்க உனக்குப் பிரியமா? —
அந்த அடையாளத்தின் ஒரு பாகமாக: ‘யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நீங்கள் கேள்விப்பட போகிறீர்கள். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும் ராஜ்யத்திற்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்,’ என்று இயேசு சொன்னார்.
என்னுடைய வாழ்க்கை காலத்தில் நான் இதைப் பார்த்திருக்கிறேன். முழு தேசங்களும் மற்ற தேசங்களை அழிக்கும்படி அவற்றிற்கு விரோதமாக யுத்தஞ்செய்திருக்கின்றன. 1914-ம் வருடத்திலேயே இந்தத் தொந்தரவு உண்மையில் ஆரம்பித்தது. இப்பொழுது ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் நாம் யுத்தத்தைப் பற்றிய செய்தி அறிவிப்புகளைக் கேள்விப்படுகிறோம். ரேடியோவிலாவது டெலிவிஷனிலாவது இந்த அறிவிப்புகளை நீ கேட்டிருக்கிறாயா? —
இதோ, இயேசு கொடுத்த அடையாளத்தின் மற்றொரு பாகம். ‘ஓர் இடத்திற்குப் பின் மற்றொன்றாக உணவு குறைபாடுகள் உண்டாகும்,’ என்று அவர் சொன்னார்.
எல்லோருக்கும் சாப்பிடுவதற்குப் போதிய உணவு இருக்கிறதில்லை. இது உனக்குத் தெரியுமா? — போதுமான உணவு தங்களுக்கு இல்லாததன் காரணமாக ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ஆட்கள் மரிக்கிறார்களென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உணவு குறைபாடானது நோயில் அல்லது கொள்ளை நோயிலுங்கூட விளைவடைகிறது. உணவு குறைபாடுகளும் நோய்களும் உண்டாயிருக்கும் என்று இயேசு சொன்னார்.
‘ஓர் இடத்தைப் பின் தொடர்ந்து மற்றொன்றாக பூமியதிர்ச்சிகள் உண்டாகும்,’ என்ற இது அவர் கொடுத்த அந்த அடையாளத்தின் மற்றொரு பாகம்.
பூமியதிர்ச்சி என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? — உன்னுடைய பாதங்களின்கீழ் தரை குலுங்கும்படி அது செய்கிறது. வீடுகள் விழுகின்றன, ஜனங்கள் அநேகத் தடவைகளில் அதால் கொல்லப்படுகின்றனர். 1914-ம் வருடம் முதற்கொண்டு, முன்பு இருந்தவற்றைப் பார்க்கிலும் மிகப் பல பூமியதிர்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் இருந்து வந்திருக்கின்றன. இவை என்னுடைய வாழ்க்கைக் காலத்தில் சம்பவித்திருக்கும் காரியங்கள்.
அடையாளத்தின் மற்றொரு பாகமானது, ‘அக்கிரமம் மேலும் மேலும் அதிகமாவதாக’ இருக்கும் என்று இயேசு சொன்னார். இதுவுங்கூட நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே ஜனங்கள் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் தங்கள் வீட்டுக் கதவுகளைப் பூட்டி வைக்கின்றனர். யாராவது உள்ளே புகுந்து விடுவார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். பல இடங்களில், இரவில் தனியாக தெருவில் நடப்பதும் பத்திரமாயில்லை. இப்பொழுது இருப்பதுபோல் இவ்வளவு மோசமாக இது முன்னொரு போதும் இருந்திருக்கவில்லை.—இந்தக் காரியங்கள் முன்பேயுங்கூட சம்பவித்திருக்கின்றன என்று சிலர் ஒருவேளை சொல்லலாம். ஆனால் ஒரே சமயத்தில் உலகத்தின் இவ்வளவு பெரும் பாகத்தில் அவை முன்னொருபோதும் சம்பவித்திருக்கவில்லை. இதெல்லாம் விசேஷித்த அர்த்தத்தை உடையதாக இருக்கிறது.
இந்தக் காரியங்கள் ஓர் அடையாளமாக இருக்குமென்று இயேசு சொன்னதை ஞாபகப்படுத்திக்கொள். அந்த அடையாளத்தை நீ வாசிக்க முடிகிறதா? அது எதைக் குறிக்கிறது? —
மிகப் பலர் இந்தத் தொந்தரவை மாத்திரமே காண்கின்றனர். இது அவர்களைத் துக்கமடைய செய்கிறது. ஆனால் இந்த அடையாளம் எதைக் குறிக்கிறதென்று அவர்கள் தெரிந்திருப்பார்களேயானால் அவர்கள் களிகூருவார்கள். ஏன்? —
‘இந்தக் காரியங்கள் சம்பவிக்கத் தொடங்குகையில், உங்கள் தலைகளை உயர்த்துங்கள். ஏனென்றால் உங்கள் விடுதலை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது,’ என்று இயேசு சொன்னார். இது நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. ஏனென்றால் கொஞ்சக் காலத்திற்குள் கடவுள் பூமியிலுள்ள இந்த எல்லா தொந்தரவுகளுக்கும் முடிவை உண்டாக்குவார். அப்பொழுது வாழ்க்கை உண்மையாய் இன்பமாயிருக்கும்.
இது நற்செய்தி என்று நீ ஒப்புக்கொள்ளுகிறாய் அல்லவா? — நாம் உண்மையில் இதை நம்புவோமானால், இதை நமக்கு மாத்திரமே வைத்துக்கொள்ள மாட்டோம். மற்றவர்களுங்கூட இதைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.
(கடவுளுடைய ராஜ்யத்திற்கான காலம் வந்து விட்டதென்று காட்டுவதற்குப் பைபிளில் அதிகம் இருக்கிறது. பின்வரும் இந்த வேத வசனங்களைச் சேர்ந்து வாசியுங்கள்: லூக்கா 21:28-36; 2 தீமோத்தேயு 3:1-5; 2 பேதுரு 3:3, 4, 13.)