Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 8

நம்மைவிட உயர்ந்தவர்கள்

நம்மைவிட உயர்ந்தவர்கள்

உன்னையும் என்னையும்விட உயர்ந்தவர்கள், அதாவது பெரியவர்களும் பலமானவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இதை நீ நிச்சயம் ஒத்துக்கொள்வாய் என்று நினைக்கிறேன். நம்மைவிட உயர்ந்தவர் யார் என்று நீ சொல்வாய்?— யெகோவா தேவன் நம்மைவிட உயர்ந்தவர். அவருடைய மகனாகிய பெரிய போதகர்? அவரும் நம்மைவிட உயர்ந்தவரா?— ஆமாம், அவரும் உயர்ந்தவர்தான்.

இயேசு பரலோகத்தில் கடவுளோடு வாழ்ந்து வந்தார். அவர் ஆவி ரூபத்தில் இருந்தார். அதாவது தேவதூதராக இருந்தார். அவரைப் போலவே மற்ற தேவதூதர்களையும் கடவுள் உண்டாக்கினாரா?— ஆமாம், கோடிக்கணக்கில் உண்டாக்கினார். இந்த தேவதூதர்களும் நம்மைவிட உயர்ந்தவர்கள், ரொம்ப பலசாலிகள்.—சங்கீதம் 104:4; தானியேல் 7:10.

மரியாளோடு ஒரு தேவதூதர் பேசினார் அல்லவா? அவருடைய பெயர் உனக்கு ஞாபகம் இருக்கிறதா?— அவருடைய பெயர் காபிரியேல். கடவுளுடைய மகன் மரியாளின் குழந்தையாக பிறப்பார் என்று அவர் சொன்னார். கடவுள், ஆவியாக இருந்த தன் மகனின் உயிரை மரியாளின் வயிற்றில் வைத்தார். இயேசு இந்த பூமியில் ஒரு குழந்தையாக பிறப்பதற்கு அப்படிச் செய்தார்.—லூக்கா 1:26, 27.

மரியாளும் யோசேப்பும் இயேசுவிடம் என்ன சொல்லியிருக்கலாம்?

அந்த அதிசயத்தை நீ நம்புகிறாயா? இயேசு பரலோகத்தில் கடவுளோடு ஏற்கெனவே வாழ்ந்தார் என்று நீ நம்புகிறாயா?— தான் அங்கு வாழ்ந்ததாக இயேசுவே சொன்னார். இயேசுவுக்கு எப்படி அதெல்லாம் தெரிந்தது? அவர் சின்னப் பிள்ளையாக இருந்தபோது, காபிரியேல் பேசியதைப் பற்றி மரியாள் ஒருவேளை சொல்லியிருக்கலாம். அதோடு, கடவுள்தான் அவருடைய உண்மையான அப்பா என்று யோசேப்பும் சொல்லியிருக்கலாம்.

இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது கடவுள் பரலோகத்திலிருந்து பேசினார். ‘இதுதான் என் மகன்’ என்று கூறினார். (மத்தேயு 3:17) இயேசு, தான் இறப்பதற்கு முந்தின ராத்திரியில் கடவுளிடம் ஜெபம் செய்தார். அப்போது, ‘உங்களோடு இருக்கும் மகிமையை இந்த உலகம் உண்டாவதற்கு முன்னே எனக்குக் கொடுத்தீர்கள், இப்போதும் அதே மகிமையைக் கொடுங்கள் அப்பா’ என்று ஜெபம் செய்தார். (யோவான் 17:5) ஆமாம், மறுபடியும் பரலோகத்திற்கு திரும்பிச் சென்று கடவுளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று இயேசு கேட்டார். அவரால் எப்படி மறுபடியும் பரலோகத்தில் வாழ முடியும்?— யெகோவா தேவன் அவரை மறுபடியும் ஒரு ஆவி ஆளாக, அதாவது தேவதூதராக மாற்றினால்தான் முடியும்.

இப்போது ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கப் போகிறேன். எல்லா தேவதூதர்களுமே நல்லவர்களா? நீ என்ன நினைக்கிறாய்?— ஒரு சமயம் எல்லாருமே நல்லவர்களாகத்தான் இருந்தார்கள். ஏனென்றால் யெகோவாதான் அவர்களை உண்டாக்கினார். அவர் எப்போதும் நல்லதையே உண்டாக்குவார். ஆனால் ஒரு தேவதூதன் மட்டும் கெட்டவனாகிவிட்டான். எப்படி?

எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு நாம் ஆதாம் ஏவாள் காலத்திற்கு போக வேண்டும். அவர்கள் கடவுள் படைத்த முதல் மனுஷனும் மனுஷியும் என்று முதலிலேயே பார்த்திருக்கிறோம். அவர்களுடைய கதை வெறும் பொய்க் கதை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அது உண்மைக் கதை என்பது பெரிய போதகருக்கு தெரியும்.

கடவுள் ஆதாமையும் ஏவாளையும் ஒரு அழகிய தோட்டத்தில் வைத்தார். அந்தத் தோட்டம் இருந்த இடத்தின் பெயர் ஏதேன். அது ஒரு பூங்காவனமாக, பரதீஸாக இருந்தது. அவர்கள் நிறைய பிள்ளைகளைப் பெற்றிருக்கலாம்; ஒரு பெரிய குடும்பமாக, பரதீஸில் என்றென்றும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதைப் பற்றி நாம் ஏற்கெனவே படித்தோம். அது நமக்கு ஞாபகம் இருக்கிறதா என்று இப்போது பார்க்கலாம்.

ஆதாமும் ஏவாளும் என்ன செய்திருந்தால், பரதீஸில் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்?

தோட்டத்தில் இருந்த எல்லா விதமான பழங்களையும் சாப்பிடலாம் என்று யெகோவா ஆதாம் ஏவாளுக்கு சொல்லியிருந்தார். ஆனால் ஒரே ஒரு மரத்தின் பழத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று சொன்னார். அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்றும் சொன்னார். ‘நீங்கள் கண்டிப்பாக செத்துப்போவீர்கள்’ என்றார். (ஆதியாகமம் 2:17) ஆகவே ஆதாமும் ஏவாளும் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது?—

கீழ்ப்படிதல் என்ற பாடத்தை ஆதாமும் ஏவாளும் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆமாம், யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தால்தான் அவர்கள் உயிர் வாழ முடியும்! அவருக்குக் கீழ்ப்படிவதாக சொல்வது மட்டும் போதாது. அவர்கள் அதை செயலில் காட்ட வேண்டியிருந்தது. அவர்கள் கடவுள் சொல்வதைக் கேட்டு நடந்தால், அவர்மேல் அன்பு வைத்திருப்பதைக் காட்டுவார்கள். அவரை தங்கள் அரசராக ஏற்க விரும்புவதைக் காட்டுவார்கள். அப்போது அவர்கள் பரதீஸில் என்றென்றும் வாழ்வார்கள். ஆனால் அந்த மரத்திலிருந்த பழத்தை அவர்கள் சாப்பிட்டால், அது எதைக் காட்டும் என்று நினைக்கிறாய்?—

கடவுளுக்கு அவர்கள் நன்றியுள்ளவர்களாக இல்லை என்று காட்டும். நீ அங்கே இருந்திருந்தால் யெகோவாவின் சொல் கேட்டு நடந்திருப்பாயா?— ஆரம்பத்தில் ஆதாமும் ஏவாளும் அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஆனால் அதன் பிறகு அவர்களை விட உயர்ந்த ஒருவன் ஏவாளை ஏமாற்றினான். யெகோவாவின் பேச்சை மீற வைத்தான். அவன் யார் தெரியுமா?—

ஏவாளிடம் பாம்பு பேசுவது போல் பேசியது யார்?

ஒரு பாம்பு ஏவாளிடம் பேசியதாக பைபிள் சொல்கிறது. ஆனால் உண்மையில் பாம்பு பேசாது என்று உனக்கு தெரியும், இல்லையா? அப்படியென்றால் அன்று எப்படி பாம்பு பேசியது?— ஒரு தூதன், பாம்பு பேசுவதுபோல் நம்ப வைத்தான். ஆனால் உண்மையில் பேசியது அவன்தான். அந்த தூதன் கெட்ட காரியங்களை யோசிக்க ஆரம்பித்திருந்தான். ஆதாமும் ஏவாளும் தன்னை வணங்க வேண்டும் என்று விரும்பினான். தான் சொல்கிறபடி அவர்கள் செய்ய வேண்டும் என்றும் விரும்பினான். கடவுளாக வேண்டும் என்பதே அவனது ஆசை.

ஆகவே அந்தக் கெட்ட தூதன் ஏவாளின் மனதில் தவறான யோசனைகளை வைத்தான். ஒரு பாம்பைப் பயன்படுத்தி அவளிடம் பேசினான். ‘கடவுள் உங்களிடம் உண்மையை சொல்லவில்லை. நீங்கள் அந்த மரத்தின் பழத்தை சாப்பிட்டால் சாக மாட்டீர்கள். கடவுளைப் போல புத்திசாலிகளாவீர்கள்’ என்று சொன்னான். நீ அங்கு இருந்திருந்தால் அதை நம்பியிருப்பாயா?—

கடவுள் தனக்கு கொடுக்காத ஒன்றைப் பெற்றுக்கொள்ள ஏவாள் ஆசைப்பட்டாள். சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொன்ன பழத்தை அவள் சாப்பிட்டாள். ஆதாமுக்கும் கொஞ்சம் கொடுத்தாள். பாம்பு சொன்னதை ஆதாம் நம்பவில்லை. ஆனால் கடவுளைவிட ஏவாளை அதிகமாக விரும்பினான். அவளோடு இருக்கவே ஆசைப்பட்டான். அதனால் அவனும் அந்த பழத்தை சாப்பிட்டான்.—ஆதியாகமம் 3:1-6; 1 தீமோத்தேயு 2:14.

அதன் பிறகு என்ன நடந்தது?— ஆதாமும் ஏவாளும் அபூரணர் ஆனார்கள். பிறகு வயதாகி செத்துப் போனார்கள். அவர்கள் அபூரணர் ஆனதால் அவர்களது பிள்ளைகளும் அபூரணர் ஆனார்கள். அவர்களும் வயதாகி செத்துப் போனார்கள். ஆகவே கடவுள் பொய் சொல்லவே இல்லை! அவருக்குக் கீழ்ப்படிந்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது உண்மை. (ரோமர் 5:12) ஏவாளிடம் பொய் சொல்லிய அந்த தூதனை பிசாசாகிய சாத்தான் என்று பைபிள் அழைக்கிறது. அவனைப் போலவே கெட்டவர்களாக மாறிய மற்ற தூதர்களே பிசாசுகள்.—யாக்கோபு 2:19; வெளிப்படுத்துதல் 12:9.

ஆதாமும் ஏவாளும் கடவுளின் பேச்சை மீறியபோது என்ன நடந்தது?

கடவுள் உண்டாக்கிய நல்ல தூதன் எப்படி கெட்டவனானான் என்று இப்போது புரிகிறதா?— அவன் கெட்ட காரியங்களை யோசிக்க ஆரம்பித்ததால்தான் கெட்டவன் ஆனான். நம்பர் ஒன் ஆளாக இருக்க அவன் ஆசைப்பட்டான். பிள்ளைகளை பெறும்படி ஆதாம் ஏவாளிடம் கடவுள் சொன்னது அவனுக்குத் தெரியும். அவர்கள் எல்லாருமே தன்னை வணங்க வேண்டும் என்று விரும்பினான். ஒருவரும் யெகோவாவின் பேச்சைக் கேட்கக் கூடாது என்பதே அவன் விருப்பம். ஆகவே கெட்ட யோசனைகளை நம் மனதில் போட முயற்சி செய்கிறான்.—யாக்கோபு 1:13-15.

யெகோவா மீது ஒருவருக்கும் உண்மையான அன்பு இல்லை என்று சாத்தான் சொல்கிறான். உனக்கும் எனக்கும் கடவுள் மீது அன்பில்லை என்கிறான். கடவுள் சொல்வதை கேட்டு நடக்க நமக்கு நிஜமாகவே ஆசை இல்லை என்று சொல்கிறான். எல்லாமே நாம் நினைக்கிறபடி நடக்கும்போது மட்டும் யெகோவாவுக்கு கீழ்ப்படிகிறோம் என்கிறான். அவன் சொல்வது சரியா? நாம் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களா?

பிசாசு ஒரு பொய்யன் என்று பெரிய போதகர் சொன்னார்! அவர் யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தார். அதன் மூலம் கடவுள்மேல் உண்மையான அன்பு இருப்பதை காட்டினார். சுலபமான சமயத்தில் மட்டும் அவர் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. எல்லா சமயத்திலும் கீழ்ப்படிந்தார். கடவுளுக்குக் கீழ்ப்படிவதை மற்ற ஜனங்கள் கஷ்டமாக்கிய போதுகூட கீழ்ப்படிந்தார். சாகும் வரை அவர் யெகோவாவுக்குப் பிரியமாகவே நடந்தார். அதனால்தான் கடவுள் மறுபடியும் அவருக்கு உயிர் கொடுத்தார். என்றென்றும் வாழும் வாழ்க்கையைக் கொடுத்தார்.

ஆகவே, நம்முடைய மிகப் பெரிய எதிரி யார் என்று நீ நினைக்கிறாய்?— ஆமாம், பிசாசாகிய சாத்தான்தான் நம்முடைய மிகப் பெரிய எதிரி. அவனை உன்னால் பார்க்க முடியுமா?— பார்க்கவே முடியாது! ஆனால் அவன் உண்மையில் இருக்கிறான் என்று நமக்குத் தெரியும். நம்மைவிட அவன் உயர்ந்தவன், அதிக பலசாலி. ஆனால் பிசாசைவிட உயர்ந்தவர் யார் என்று நினைக்கிறாய்?— யெகோவா தேவன்தான். ஆகவே அவரால் நம்மை பாதுகாக்க முடியும்.

நாம் யாரை வணங்க வேண்டும் என்று சில வசனங்களில் பார்க்கலாம்: உபாகமம் 30:19, 20; யோசுவா 24:14, 15; நீதிமொழிகள் 27:11; மத்தேயு 4:10.