Privacy Settings

To provide you with the best possible experience, we use cookies and similar technologies. Some cookies are necessary to make our website work and cannot be refused. You can accept or decline the use of additional cookies, which we use only to improve your experience. None of this data will ever be sold or used for marketing. To learn more, read the Global Policy on Use of Cookies and Similar Technologies. You can customize your settings at any time by going to Privacy Settings.

Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

கடவுளுக்கு பெயர் உண்டு

கடவுளுக்கு பெயர் உண்டு

யாரையாவது முதன் முதலில் பார்க்கும்போது நீ என்ன கேட்பாய்?— கரெக்ட், அவருடைய பெயரைத்தான் முதலில் கேட்பாய். நம் எல்லாருக்குமே ஒரு பெயர் இருக்கிறது. முதல் மனுஷனுக்கும் கடவுள் ஒரு பெயர் வைத்தார். அவன் பெயர் ஆதாம். ஆதாமின் மனைவி பெயர் ஏவாள்.

ஆனால் மனிதர்களுக்கு மட்டுமா பெயர் உண்டு? வேறு எதற்கெல்லாம் பெயர் இருக்கிறது என்று யோசித்துப் பார். உதாரணத்திற்கு, உனக்கு ஒரு பொம்மை கிடைத்தால் அதுக்கு நீ பெயர் வைக்கிறாய் இல்லையா? அதேபோல் உன் நாய்க்குட்டிக்கு அல்லது பூனைக்குட்டிக்கு பெயர் இருக்கிறது இல்லையா?— ஆகவே ஒரு பெயர் இருப்பது ரொம்பவும் முக்கியம்.

ராத்திரி நேரத்தில் வானத்தை பார், நிறைய நட்சத்திரங்கள் தெரியும். அந்த நட்சத்திரங்களுக்கு பெயர் இருக்குமா? நீ என்ன நினைக்கிறாய்?— வானத்தில் இருக்கிற ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் கடவுள் பெயர் வைத்திருக்கிறார். ‘அவர் நட்சத்திரங்களை எண்ணுகிறார்; ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்’ என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 147:4.

Children look up at the stars

எல்லா நட்சத்திரங்களுக்கும் பெயர் இருப்பது உனக்குத் தெரியுமா?

இந்த முழு உலகத்திலும் ரொம்ப முக்கியமானவர் யார் என்று நீ நினைக்கிறாய்?— ஆமாம், கடவுள்தான் ரொம்ப முக்கியமானவர். அவருக்கும் ஒரு பெயர் இருக்கும் என்று நினைக்கிறாயா?— அவருக்கு ஒரு பெயர் இருக்கிறது என்று இயேசு சொன்னார். ஒருமுறை அவர் கடவுளிடம் ஜெபம் செய்தபோது, ‘நான் உங்களுடைய பெயரை என் நண்பர்களுக்கு சொல்லியிருக்கிறேன்’ என்றார். (யோவான் 17:26) உனக்கு கடவுளுடைய பெயர் தெரியுமா?— அதை கடவுளே நமக்கு சொல்கிறார். ‘என் பெயர் யெகோவா’ என்று அவர் சொல்கிறார். ஆகவே கடவுளுடைய பெயர், யெகோவா.—எரேமியா 16:21.

மற்றவர்கள் உன் பெயரை ஞாபகம் வைத்திருக்கும்போது உனக்கு எப்படி இருக்கும்?— ரொம்ப சந்தோஷமாக இருக்கும்தானே?— அதேபோல, மற்றவர்கள் தன் பெயரை தெரிந்திருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். ஆகவே கடவுளைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் யெகோவா என்ற அவருடைய பெயரை பயன்படுத்த வேண்டும். பெரிய போதகரான இயேசு அதைத்தான் செய்தார். மக்களோடு பேசியபோது யெகோவா என்ற பெயரை அவர் பயன்படுத்தினார். ‘உன் கடவுளாகிய யெகோவாவை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும்’ என்றும் ஒருமுறை சொன்னார்.—மாற்கு 12:30.

“யெகோவா” என்ற பெயர் மிக முக்கியமானது என இயேசுவுக்கு தெரியும். அதனால்தான் இந்தப் பெயரை பயன்படுத்தும்படி தன் நண்பர்களுக்கு சொல்லித் தந்தார். ஜெபம் செய்யும்போதுகூட இந்தப் பெயரை பயன்படுத்தும்படி கற்றுக்கொடுத்தார். எல்லாருமே தன் பெயரை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்; இது இயேசுவுக்கு தெரிந்திருந்தது.

ரொம்ப காலத்திற்கு முன், மோசேக்கு கடவுள் தன் பெயரின் முக்கியத்துவத்தைக் காட்டினார். மோசே ஒரு இஸ்ரவேலர். இஸ்ரவேலர்கள் எகிப்து என்ற தேசத்தில் வாழ்ந்து வந்தார்கள். அந்த தேசத்து மக்களே எகிப்தியர்கள். அவர்கள் இஸ்ரவேலர்களை அடிமைகளாக நடத்தினார்கள். மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். மோசே வளர்ந்து பெரியவரானபோது, ஒரு இஸ்ரவேலனைக் காப்பாற்ற முயற்சி செய்தார். இதனால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு பயங்கர கோபம் வந்தது. மோசேயை கொலை செய்ய நினைத்தார்! அதனால் மோசே எகிப்தைவிட்டு ஓடிப்போனார்.

மோசே இன்னொரு இடத்திற்குப் போனார். அதுதான் மீதியான் தேசம். அங்கே மோசே கல்யாணம் செய்துகொண்டார், அவருக்கு பிள்ளைகளும் பிறந்தன. அங்கு அவர் ஆடுகளை மேய்த்து வந்தார். ஒருநாள் ஒரு மலையோரத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது அற்புதமான ஒரு காட்சியைப் பார்த்தார். ஒரு முள் செடி எரிந்துகொண்டிருந்தது, ஆனால் அது கருகவே இல்லை! அதை நன்றாகப் பார்ப்பதற்கு அவர் கொஞ்சம் கிட்டே போனார்.

அப்போது என்ன நடந்தது தெரியுமா?— எரிந்து கொண்டிருந்த அந்த முள் செடியின் நடுவிலிருந்து ஒரு குரல் கேட்டது. ‘மோசே! மோசே!’ என்று அந்தக் குரல் கூப்பிட்டது. அது யாருடைய குரல் என்று நீ நினைக்கிறாய்?— அது கடவுளுடைய குரல்! மோசே நிறைய வேலை செய்ய வேண்டியிருந்ததை அப்போது கடவுள் தெரியப்படுத்தினார். ‘எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் உன்னை அனுப்புகிறேன் வா, என் மக்களாகிய இஸ்ரவேலர்களை நீ எகிப்திலிருந்து அழைத்து வர வேண்டும்’ என்று கடவுள் சொன்னார். இதற்குக் கண்டிப்பாக உதவி செய்வதாகவும் அவர் மோசேக்கு சொன்னார்.

Moses at the burning thornbush

முள் செடி எரிந்த சமயத்தில் மோசே என்ன முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொண்டார்?

ஆனால் மோசே கடவுளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘எகிப்தில் இருக்கும் இஸ்ரவேலர்களிடம் நான் போய், கடவுள் என்னை அனுப்பினார் என்று சொன்னால், “அவருடைய பெயர் என்ன?” என்று கேட்பார்களே. அப்போது நான் என்ன சொல்வது?’ என்று கேட்டார். அதற்கு, இஸ்ரவேலர்களிடம் இப்படி சொல்லும்படி கடவுள் மோசேயிடம் கூறினார்: ‘யெகோவா என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார். யெகோவா என்பதே என்றென்றைக்கும் தன்னுடைய பெயர் என்றும் சொல்லியிருக்கிறார்.’ (யாத்திராகமம் 3:1-15) இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவா என்பதுதான் எப்போதுமே கடவுளுடைய பெயர். அதை அவர் ஒருநாளும் மாற்ற மாட்டார். என்றென்றைக்கும், யெகோவா என்பதே தன் பெயர் என மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

The Israelites march through the Red Sea

செங்கடலில் என்ன செய்து கடவுள் தன் பெயரை எல்லாருக்கும் தெரியப்படுத்தினார்?

மோசே மறுபடியும் எகிப்திற்கு போனார்; அப்போது, இஸ்ரவேலர்களுடைய மிகச் சாதாரண கடவுள்தான் யெகோவா என்று எகிப்தியர்கள் நினைத்தார்கள். யெகோவா இந்த முழு உலகத்திற்குமே கடவுள் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால், ‘இந்த பூமி முழுவதிலும் என் பெயரை தெரியப்படுத்தப் போகிறேன்’ என்று எகிப்தின் ராஜாவிடம் யெகோவா சொன்னார். (யாத்திராகமம் 9:16) சொன்னபடியே தன் பெயரைத் தெரியப்படுத்தினார். எப்படி என்று உனக்குத் தெரியுமா?—

இஸ்ரவேலர்களை மோசே எகிப்திலிருந்து அழைத்து வரும்படி யெகோவா ஏற்பாடு செய்தார். இஸ்ரவேலர்கள் செங்கடலுக்குப் பக்கத்தில் வந்தபோது, அந்தக் கடல் வழியாகவே நடந்து செல்ல யெகோவா பாதையை உண்டுபண்ணினார். அதாவது அந்தக் கடலின் தண்ணீரை பிளந்தார், அதன் நடுப்பகுதி தண்ணீர் இல்லாத தரையானது. இஸ்ரவேலர்கள் அந்த காய்ந்த தரை வழியே பத்திரமாக நடந்து சென்றார்கள். ஆனால் பார்வோனும் அவனுடைய ஆட்களும் அதில் நுழைந்தபோது, இரு பக்கமும் பிரிந்து நின்ற தண்ணீர் மறுபடியும் புரண்டு வந்து அவர்களை மூழ்கடித்தது. அந்த எகிப்தியர்கள் எல்லாரும் செத்துப் போனார்கள்.

யெகோவா செங்கடலில் செய்த அற்புதம் வேகமாக உலகிலிருந்த எல்லா மக்களின் காதுகளையும் எட்டியது. அவர்கள் எல்லாரும் அந்தச் செய்தியை கேள்விப்பட்டது நமக்கு எப்படி தெரியும்?— சுமார் 40 வருஷங்களுக்குப் பிற்பாடு கானான் என்ற தேசத்திற்கு இஸ்ரவேலர்கள் போனார்கள். அந்த தேசத்தைக் கொடுப்பதாகத்தான் யெகோவா அவர்களிடம் உறுதியாக சொல்லியிருந்தார். அங்கே ராகாப் என்ற இளம் பெண் இரண்டு இஸ்ரவேலர்களிடம் என்ன சொன்னாள் தெரியுமா? ‘நீங்கள் எகிப்திலிருந்து வந்தபோது யெகோவா செங்கடலின் தண்ணீரை வறண்டுபோகப் பண்ணினார் என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்’ என சொன்னாள்.—யோசுவா 2:10.

இன்றுகூட நிறைய பேர் அந்த எகிப்தியர்களைப் போலவே இருக்கிறார்கள். யெகோவாதான் இந்த முழு உலகத்திற்கும் கடவுள் என்று அவர்கள் நம்புவதில்லை. அதனால் தன்னைப் பற்றி தன் மக்களே எல்லாரிடமும் சொல்ல வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். இயேசு இதைத்தான் செய்தார். பூமியில் அவர் இறப்பதற்கு கொஞ்சம் முன்பு யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, ‘நான் உங்களுடைய பெயரை மனிதர்களுக்கு சொல்லியிருக்கிறேன்’ என்று அவரிடம் சொன்னார்.—யோவான் 17:26.

Jesus reads from a scroll; a girl shows children God’s name in the Bible

கடவுளுடைய பெயரை இயேசு எல்லாருக்கும் சொன்னார். கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து உன்னால் காட்ட முடியுமா?

நீயும் இயேசுவைப் போல இருக்க ஆசைப்படுகிறாயா? அப்படியென்றால் கடவுளுடைய பெயர் யெகோவா என்று எல்லாருக்கும் சொல். நிறைய பேருக்கு இந்தப் பெயர் தெரியாது. அதனால் பைபிளில் சங்கீதம் 83-ஆம் அதிகாரம் 17-ஆம் வசனத்தை நீ அவர்களுக்குக் காட்டலாம். இப்போது நாம் பைபிளை எடுத்து அந்த வசனத்தை சேர்ந்து வாசிக்கலாமா? அங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது பார்: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.”

இந்த வசனத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?— யெகோவா என்பது மிகவும் முக்கியமான பெயர் என்று கற்றுக்கொள்கிறோம். அது சர்வவல்லமையுள்ள கடவுளுடைய பெயர். அவர்தான் இயேசுவின் அப்பா, எல்லாவற்றையும் உண்டாக்கியவர். ஒருமுறை இயேசு என்ன சொன்னார் என்று ஞாபகம் இருக்கிறதா? யெகோவா தேவனை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும் என்று சொன்னார். நீ யெகோவா மீது அன்பு வைத்திருக்கிறாயா?—

நாம் யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதை எப்படிக் காட்டலாம்?— அதற்கு ஒரு வழி, ஒரு நண்பரைத் தெரிந்துகொள்வது போல் அவரைத் தெரிந்துகொள்ள வேண்டும். இன்னொரு வழி, அவருடைய பெயரை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். அவருடைய பெயர் யெகோவா என்பதை பைபிளிலிருந்தே அவர்களுக்குக் காட்டலாம். யெகோவா உண்டாக்கியிருக்கும் அருமையான காரியங்களைப் பற்றியும் அவர்களிடம் சொல்லலாம். அவருடைய நல்ல நல்ல செயல்களைப் பற்றியும் சொல்லலாம். இப்படிச் செய்தால் யெகோவா மிகவும் சந்தோஷப்படுவார். ஏனென்றால் எல்லாரும் தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விருப்பப்படுகிறார். நாமும் அவர் விருப்பப்படி நடக்கலாம் அல்லவா?—

நாம் யெகோவாவைப் பற்றி பேசும்போது எல்லாருமே ஆர்வமாக கேட்க மாட்டார்கள். பெரிய போதகரான இயேசு அவரைப் பற்றி பேசியபோதுகூட நிறைய பேர் கேட்கவில்லை. ஆனால் அதற்காக யெகோவாவைப் பற்றி இயேசு பேசாமல் இருந்துவிடவில்லை.

நாமும் இயேசு செய்ததையே செய்யலாம். யெகோவாவைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருக்கலாம். அப்படி செய்தால் யெகோவாவின் பெயர் மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுவோம். யெகோவா தேவனும் நம்மேல் பிரியமாக இருப்பார்.

இப்போது, கடவுளுடைய பெயர் எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டும் இன்னும் சில வசனங்களை பைபிளிலிருந்து வாசிக்கலாம்: ஏசாயா 12:2, 4, 5; மத்தேயு 6:9; யோவான் 17:6; ரோமர் 10:13.