பிள்ளைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டியவை
மனிதரால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு சம்பவத்தில் எல்லா பெற்றோரும் பங்கேற்கிறார்கள். தாய், தந்தை ஆகிய இருவருமே உடலளவில் தங்கள் தங்கள் பங்கை அளிக்கிறார்கள். அதன் விளைவாக, தாயின் வயிற்றில் ஒரு உயிர் வளருகிறது. ஆகவே ஒரு குழந்தை பிறக்கும் இந்தச் சம்பவத்தை ‘பிறப்பெனும் அதிசயம்’ என மக்கள் சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
ஆனால் பிள்ளைகளை பெற்றெடுப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடுவதில்லை; அது அவர்களது கடமையின் ஆரம்பமே. தொடக்கத்தில் குழந்தைகள் முழுக்க முழுக்க பெற்றோரையே சார்ந்திருக்கின்றன. ஆனால் வளர வளர குழந்தைகளின் தேவைகள் அதிகமாகின்றன. உடலளவில் மட்டுமல்ல, மனம், உணர்ச்சி, ஒழுக்கம், ஆன்மீகம் ஆகிய மற்ற அம்சங்களிலும் வளர அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.
பிள்ளைகள் இந்த எல்லா அம்சங்களிலும் நன்கு வளர பெற்றோரின் அன்பு முக்கியமாக தேவைப்படுகிறது. வார்த்தைகளில் மட்டுமல்ல செயல்களில்கூட அன்பையும் பாசத்தையும் பெற்றோர் காட்ட வேண்டும். ஆம், பிள்ளைகளுக்கு பெற்றோர் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். அவர்களுக்கு ஒழுக்க சம்பந்தமான வழிகாட்டுதல் தேவை, வாழ்க்கைக்கு நன்னெறிகள் தேவை. இதெல்லாம் பிஞ்சு வயதிலிருந்தே அவர்களுக்கு தேவை. காலாகாலத்தில் உதவி செய்ய தவறினால், நெஞ்சை பிளக்கும் விபரீதங்கள் நிகழலாம், அவை உண்மையில் நிகழ்ந்திருக்கின்றன.
தலைசிறந்த நன்னெறிகள் பைபிளில்தான் இருக்கின்றன. பைபிள் சார்ந்த அறிவுரைகள் ஈடிணையற்ற நன்மைகளைத் தருகின்றன. அப்படிப்பட்ட அறிவுரைகள் தரும்போது, அவை யாரோ ஒரு மனிதர் சொன்னது அல்ல, ஆனால் தங்கள் பரலோக தந்தையாகிய படைப்பாளரே அவற்றை சொன்னது என்பதை பிள்ளைகள் உணர ஆரம்பிப்பார்கள். இது அந்த அறிவுரைகளுக்கு ஒப்பற்ற வலிமை சேர்க்கும்.
பிள்ளைகளுடைய மனதில் நல்ல நெறிகளைப் பதிக்க பெற்றோர் கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்று பைபிள் உற்சாகப்படுத்துகிறது. ஆனால் பிள்ளைகள் வளரும்போது, மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி அவர்களோடு பேச பெற்றோர் பெரும்பாலும் தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகாமல் இருப்பதற்காக, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள்
பிள்ளைகளும் சேர்ந்து வாசிப்பதற்கு ஏற்ற ஆவிக்குரிய விஷயங்கள் இதில் உள்ளன. அதுமட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் இப்புத்தகத்தை அவர்களிடம் வாசித்துக் காட்டுபவர்களுக்கும் இடையே பேச்சுத்தொடர்பையும் இது அதிகரிக்கும்.இப்புத்தகத்தில் பிள்ளைகளிடம் கேட்பதற்காக கேள்விகள் கொடுக்கப்பட்டிருப்பதை கவனிப்பீர்கள். பொருத்தமான நிறைய கேள்விகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு பக்கத்தில் ஒரு கோடு (—) இருக்கும். நீங்கள் அந்தக் கோடுகளைப் பார்க்கும்போது சற்று நிறுத்தி, பிள்ளையை பதில் சொல்ல அனுமதிக்க வேண்டும். பிள்ளைகள் தங்கள் பங்கில் எதையாவது சொல்ல விரும்புவார்கள். அவர்களை பேச விடாவிட்டால் சீக்கிரத்தில் ஆர்வத்தை இழந்துவிடுவார்கள்.
இந்தக் கேள்விகளுக்கு அதைக்காட்டிலும் முக்கியமான ஒரு பயனும் உண்டு; அவை பிள்ளையின் மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள உங்களுக்கு உதவும். பிள்ளை தவறான பதில்கள் சொல்லலாம் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு கேள்விக்குப் பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல், பிள்ளையின் சிந்தையை செதுக்கி சீராக்க உதவும்.
230-க்கும் அதிகமான படங்கள் கொடுக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சம். இந்தப் படங்களுக்குப் பக்கத்தில் பெரும்பாலும் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது; மனதில் தோன்றுவதை சொல்லும்படி அந்தக் குறிப்புகள் பிள்ளையை உற்சாகப்படுத்தும். படத்தைப் பார்த்து, அங்குள்ள குறிப்பையும் வாசித்துவிட்டு பிள்ளை தன் கருத்தை சொல்லலாம். ஆகவே பிள்ளையோடு சேர்ந்து படங்களை பார்வையிடுங்கள். கற்றுக்கொள்ளும் பாடங்களை மனதில் பதிய வைக்க இவை சிறந்த உபகரணங்கள்.
பிள்ளை வாசிக்கப் பழகிய பிறகு, இந்தப் புத்தகத்தை உங்களிடம் வாசித்துக் காட்ட சொல்லுங்கள்; தனக்குத் தானே வாசித்துக் கொள்ளுமாறும் உற்சாகப்படுத்துங்கள். இப்புத்தகத்தை பிள்ளை எவ்வளவு அதிகமாக படிக்கிறதோ அவ்வளவு அதிகமாக அதன் நல்லறிவுரைகள் மனதிலும் இருதயத்திலும் ஆழமாக பதியும். ஆனால் உங்களுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இடையே பாசத்தையும் மரியாதையையும் இன்னுமதிகமாக வளர்ப்பதற்கு, இந்தப் புத்தகத்தை நீங்கள் சேர்ந்தே வாசிக்க வேண்டும், அதுவும் தவறாமல் வாசிக்க வேண்டும்.
இக்காலத்து பிள்ளைகள் முறைகெட்ட பாலுறவைப் பற்றியும் ஆவியுலக தொடர்பைப் பற்றியும் மற்ற கெட்ட பழக்கவழக்கங்களைப் பற்றியும் பல்வேறு வழிகளிலிருந்து எளிதில் தெரிந்துகொள்கிறார்கள். நிலைமை இந்தளவு மோசமாகும் என்று ஒரு காலத்தில் யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். ஆகவே பிள்ளைகளுக்கு இன்று பாதுகாப்பு தேவை. கண்ணியமான, அதேசமயத்தில் ஒளிவுமறைவில்லாத விதத்தில் அப்படிப்பட்ட பாதுகாப்பை அளிக்க இப்புத்தகம் உதவும். இருந்தாலும் எல்லா ஞானத்திற்கும் பிறப்பிடமாகிய நம் பரலோக தகப்பனாகிய யெகோவா தேவனிடம் பிள்ளைகள் முக்கியமாக வழிநடத்தப்பட வேண்டும். இதைத்தான் பெரிய போதகரான இயேசு எப்போதும் செய்தார். யெகோவாவுக்கு பிரியமான விதத்தில் வாழ்க்கையை வடிவமைத்து நித்திய ஆசீர்வாதங்களைப் பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இந்தப் புத்தகம் உதவும் என மனதார நம்புகிறோம்.