பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“உண்மையை நானே கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தார்கள்”
பிறந்த வருஷம்: 1982
பிறந்த நாடு: டொமினிகன் குடியரசு
என்னைப் பற்றி: முன்பு நான் மார்மன் சர்ச்சில் இருந்தேன்
என் கடந்தகால வாழ்க்கை:
டொமினிகன் குடியரசில் இருக்கும் சான்டோ டொமிங்கோவில் நான் பிறந்தேன். என் அப்பா அம்மாவுக்கு நான்கு பிள்ளைகள், நான்தான் அதில் கடைசி. என் அப்பா அம்மா நன்றாகப் படித்தவர்கள், நாங்கள் எல்லாரும் நல்ல சூழலில் வளர வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள். நான் பிறப்பதற்கு நான்கு வருஷங்களுக்கு முன்பு அவர்கள் மார்மன் சர்ச் மிஷனரிகளைச் சந்தித்தார்கள். வாலிபர்களாக இருந்த அந்த மிஷனரிகள் கண்ணியமாக டிரெஸ் பண்ணியிருந்தார்கள், மரியாதையாகவும் நடந்துகொண்டார்கள். என் அப்பா அம்மாவுக்கு அவர்களை ரொம்பப் பிடித்துவிட்டது. அதனால், நாங்கள் குடும்பமாக மார்மன் சர்ச்சில் சேர வேண்டுமென்று என் அப்பா அம்மா முடிவு செய்தார்கள். மார்மன் சர்ச்சை ‘இயேசு கிறிஸ்துவின் பிற்கால புனிதர்களின் சர்ச்’ என்றும் சொல்வார்கள். அந்த நாட்டிலேயே மார்மன் சர்ச்சில் முதன்முதலாகச் சேர்ந்தவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
நான் வளரவளர, அந்த சர்ச் நடத்திய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது. குடும்ப வாழ்க்கைக்கும் ஒழுக்கத்துக்கும் அவர்கள் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு மார்மனாக இருப்பது எனக்குப் பெருமையாக இருந்தது. அதனால், ஒரு மிஷனரியாக ஆவதற்கு முடிவு செய்தேன்.
எனக்கு 18 வயசு இருந்தபோது, கல்லூரிப் படிப்புக்காக அமெரிக்காவுக்குக் குடிமாறிப்போனோம். ஒரு வருஷத்துக்குப் பிறகு, என் சித்தியும் சித்தப்பாவும் எங்களைப் பார்க்க ப்ளோரிடாவுக்கு வந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். ஒரு பைபிள் மாநாட்டுக்கு அவர்கள் எங்களைக் கூப்பிட்டார்கள். அங்கு வந்திருந்த எல்லாரும் வசனங்களை பைபிளில் எடுத்துப் பார்த்துக்கொண்டும், குறிப்புகளை எழுதிக்கொண்டும் இருந்தார்கள். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அதனால், ஒரு பேப்பரையும் பேனாவையும் கேட்டு வாங்கி நானும் எழுத ஆரம்பித்துவிட்டேன்.
நான் ஒரு மிஷனரியாக ஆவதற்கு ஆசைப்பட்டதால், பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமா என்று மாநாட்டுக்குப் பிறகு என் சித்தியும் சித்தப்பாவும் கேட்டார்கள். அது எனக்கு ஒரு நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. ஏனென்றால், அதுவரை நான் மார்மன் புத்தகத்தைத்தான் அதிகம் படித்திருந்தேன், பைபிளை அவ்வளவாகப் படித்தது இல்லை.
பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது:
போனில் பைபிளைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நான் நம்பும் விஷயங்கள் பைபிளோடு ஒத்துப்போகிறதா என்று பார்க்கும்படி என் சித்தியும் சித்தப்பாவும் சொல்வார்கள். உண்மையை நானே கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் நினைத்தார்கள்.
மார்மன் சர்ச் சொல்லிக்கொடுத்த நிறைய விஷயங்களை நான் நம்பினேன், ஆனால் அதைப் பற்றியெல்லாம் பைபிள் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது. யெகோவாவின் சாட்சிகள் வெளியிடும் ஒரு பத்திரிகையை (விழித்தெழு!, நவம்பர் 8, 1995) என் சித்தி எனக்கு அனுப்பி வைத்தார்கள். மார்மன் நம்பிக்கைகளைப் பற்றி அதில் சில கட்டுரைகள் இருந்தன. அதில் நிறைய விஷயங்கள் எனக்கு ரொம்பப் புதிதாக இருந்தன. அதனால், அதெல்லாம் உண்மைதானா என்று தெரிந்துகொள்ள மார்மன் சர்ச்சின் வெப்சைட்டில் தேடிப் பார்த்தேன். எல்லாமே உண்மைதான் என்று தெரிந்துகொண்டேன். உடாவில் இருக்கும் மார்மன் மியூசியங்களைப் போய்ப் பார்த்தபோது இது இன்னும் உறுதியானது.
மார்மன் புத்தகமும் பைபிளும் ஒத்துப்போவதாகத்தான் ரொம்ப நாளாக நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், பைபிளை ரொம்பக் கவனமாகப் படித்த பிறகுதான் அப்படி இல்லை என்று புரிந்துகொண்டேன். உதாரணத்துக்கு, ‘ஆத்துமா சாகும்’ என்று எசேக்கியேல் 18:4-ல் (தமிழ் O.V.) பைபிள் சொல்கிறது. ஆனால், “ஆத்துமா ஒருபோதும் சாகாது” என்று ஆல்மா 42:9-ல் மார்மன் புத்தகம் சொல்கிறது.
மார்மன்கள் சொல்லித்தரும் சில விஷயங்கள் தேசப்பற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உதாரணமாக, அமெரிக்காவில் மிஸ்சௌரியில் இருக்கும் ஜாக்சன் மாவட்டத்தில்தான் ஏதேன் தோட்டம் இருந்ததாக அவர்கள் சொல்லித்தருகிறார்கள். அதோடு, அமெரிக்க அரசாங்கத்தைப் பயன்படுத்தித்தான் எதிர்காலத்தில் கடவுள் இந்த உலகத்தை ஆட்சி செய்வார் என்று அந்த சர்ச்சின் தலைவர்கள் சொல்லித்தருகிறார்கள்.
அப்படியென்றால், என் சொந்த நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் என்ன நடக்குமோ என்று யோசித்தேன். ஒருநாள், மார்மன் மிஷனரியாக ஆவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த ஒரு பையன் எனக்கு போன் செய்தான். அவனிடம் இதைப் பற்றிப் பேசினேன். அவனுடைய நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் போர் நடந்தால் அந்த நாட்டில் இருக்கும் மார்மன்களுக்கு எதிராக சண்டை போடுவானா என்று நேரடியாகக் கேட்டேன். அவன் ஆமாம் என்று சொன்னான், எனக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது! மார்மன் சர்ச்சுடைய நம்பிக்கைகளைப் பற்றி இன்னும் ஆழமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அந்த சர்ச்சின் தலைவர்களிடமும் பேசினேன். நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் இப்போது பதில் கிடையாது, ஆனால் என்றாவது ஒருநாள் அதைத் தெரிந்துகொள்வோம் என்று சொல்லிவிட்டார்கள்.
அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியாகவே இல்லை. அதனால், மார்மன் மிஷனரியாவதற்கு நான் ஏன் ஆசைப்படுகிறேன் என்று யோசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசை இருந்ததுதான் அதற்கு ஒரு காரணம். இன்னொரு காரணம், நான் மிஷனரியானால் மக்கள் என்னை மதிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் உண்மையில், கடவுளைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் நிறைய தடவை பைபிளை எடுத்துப் படித்திருந்தாலும் அதை அவ்வளவு முக்கியமாக நினைத்ததில்லை. கடவுள் இந்தப் பூமியை எதற்காகப் படைத்தார், மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியவில்லை.
எனக்கு கிடைத்த நன்மை:
நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். உதாரணத்துக்கு, கடவுளுடைய பெயர் என்ன, இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கும், கடவுளுடைய வாக்குறுதிகளை இயேசு எப்படி நிறைவேற்றுவார் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன். ஒருவழியாக, இந்த அருமையான புத்தகத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அதையெல்லாம் மற்றவர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கடவுள் இருக்கிறார் என்று ஏற்கெனவே எனக்குத் தெரியும். ஆனால், பைபிளைப் படித்த பிறகுதான் அவரை நெருக்கமான ஒரு நண்பராகப் பார்க்க முடிந்தது, ஜெபத்தில் அவரிடம் மனம் திறந்து பேச முடிந்தது. ஜூலை 12, 2004-ல் நான் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆனேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு முழு நேரமாக ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்.
நியு யார்க், புருக்லினில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தில் ஐந்து வருஷங்கள் நான் வேலை செய்தேன். லட்சக்கணக்கான மக்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் தயாரிக்கிற வேலைதான் அது. அதில் கிடைத்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. இப்போதும், மற்றவர்களுக்குக் கடவுளைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் சந்தோஷமான வேலையைச் செய்துவருகிறேன்.