அதிகாரம் 23
‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டினார்’
1-3. சரித்திரத்தில் இயேசுவின் மரணத்தை தனிச்சிறப்புமிக்க ஒன்றாக்கிய அம்சங்கள் சில யாவை?
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர், இளவேனில் காலத்தில், ஒரு பாவமும் அறியாத ஒருவர் விசாரிக்கப்பட்டார், எந்த குற்றமும் செய்யாத அவர் குற்றவாளியாக தீர்க்கப்பட்டார், பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார். இதுவே சரித்திரம் கண்ட, கொடூரமும் அநீதியும் நிறைந்த முதல் மரண தண்டனை அல்ல. வருத்தகரமாக, இதுவே கடைசியும் அல்ல. என்றாலும், இது தனிச்சிறப்புமிக்க மரணம்.
2 அந்த மனிதர் கடைசி தருணத்தில் தாங்கொணா துயரத்தை அனுபவிக்கையில், வானமே அதை ஒப்பற்ற சம்பவமாக பறைசாற்றியது. அது நண்பகல் வேளை, ஆனால் சடுதியில் காரிருள் அந்த இடத்தை கவ்விக்கொண்டது. “சூரியன் ஒளி கொடுக்கவில்லை” என கூறினார் ஒரு சரித்திராசிரியர். (லூக்கா 23:44, 45) பின்பு அந்த மனிதர் தமது இறுதி மூச்சை விடுவதற்குமுன், “முடித்துவிட்டேன்!” என்ற மறக்க முடியா வார்த்தைகளை விளம்பினார். ஆம், தமது உயிரையே தியாகம் செய்து அதிசயிக்கத்தக்க ஒன்றை அவர் நிறைவேற்றினார். அவருடைய பலி, மனித வரலாறு கண்டிராத தலைசிறந்த அன்புச் செயல்!—யோவான் 15:13; 19:30.
3 இயேசு கிறிஸ்துவே அந்த மனிதர். காரிருள் சூழ்ந்து கொண்ட அந்த நாளில், அதாவது கி.பி. 33, நிசான் 14-ல், அவருக்கு நேரிட்ட துன்பமும் மரணமும் உலகறிந்த ஒன்று. ஆனால் முக்கியமான ஓர் உண்மை கவனம் செலுத்தப்படாமல் விடப்பட்டிருக்கிறது. இயேசு கடுந்துன்பத்தை அனுபவித்தபோதிலும், வேறொருவர் அதைவிட கடுந்துன்பத்தை அனுபவித்தார். சொல்லப்போனால், அந்நாளில் இயேசு செய்ததைவிட மிகப் பெரிய தியாகத்தை—இந்த அண்டத்தில் வேறு எவருமே செய்திராத மகத்தான அன்பின் செயலை—அவர் செய்தார். அது என்ன செயல்? அதற்குரிய பதில், ஒரு முக்கியமான அம்சத்தை, அதாவது யெகோவாவின் அன்பை அறிமுகப்படுத்தி வைக்கிறது.
மகத்தான அன்பின் செயல்
4. இயேசு சாதாரண மனிதரல்ல என்பதை எப்படி ஒரு ரோம சேவகர் அறிந்துகொண்டார், அந்தச் சேவகர் என்ன முடிவுக்கு வந்தார்?
4 இயேசுவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிட்ட ரோம நூற்றுக்கு அதிபதி, இயேசுவின் மரணத்திற்கு முன்பு இருள் சூழ்ந்ததையும் அதைத் தொடர்ந்து பூமியதிர்ச்சி ஏற்பட்டதையும் கண்டு மலைத்துப் போனார். “நிச்சயமாகவே இவர் கடவுளுடைய மகன்தான்” என்று வியந்துரைத்தார். (மத்தேயு 27:54) இயேசு சாதாரண மனிதர் அல்ல. உன்னத கடவுளுடைய ஒரே மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அல்லவா அந்த படைவீரர் துணை போயிருந்தார்! இந்த மகன் தம் தகப்பனுக்கு எவ்வளவு அருமையானவராக இருந்தார்?
5. பரலோகத்தில் யெகோவாவும் அவருடைய மகனும் நீண்ட காலம் சேர்ந்து இருந்ததை எப்படி விளக்கலாம்?
5 ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு’ என இயேசுவை பைபிள் அழைக்கிறது. (கொலோசெயர் 1:15) சற்று கற்பனை செய்து பாருங்கள்—இந்த அண்டம் தோன்றுவதற்கு முன்னரே யெகோவாவின் மகன் வாழ்ந்து வந்தார்! அப்படியானால், தந்தையும் மகனும் எவ்வளவு காலம் சேர்ந்து இருந்தனர்? இந்த அண்டத்திற்கு 1,300 கோடி வயதாகிறது என அறிவியலாளர்கள் சிலர் கணக்கிடுகின்றனர். அவ்வளவு காலத்தை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அந்தக் காலத்தை மக்கள் புரிந்துகொள்வதற்காக, 110 மீட்டர் நீளமுடைய காலக்கிரம அட்டவணையை ஒரு பிளானட்டோரியம் வடிவமைத்திருக்கிறது. பார்வையாளர்கள் அந்தக் காலக்கிரம அட்டவணையை பார்த்தவாறு நடந்து செல்லும்போது, அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அண்டத்தின் ஆயுளில் சுமார் 7.5 கோடி ஆண்டுகளை குறிக்கிறது. அந்த அட்டவணையின் கடைசியில், முழு மனித சரித்திரத்தையும் அடையாளப்படுத்துவதற்கு ஒரு குறி போடப்பட்டிருக்கிறது; அது வெறும் ஒரு தலை முடியின் தடிமனே உள்ளது! ஒருவேளை இந்த மதிப்பீடு சரியாக இருந்தாலும்கூட, அந்த முழு காலக்கிரம அட்டவணையும் நிச்சயமாகவே யெகோவாவின் மகனுடைய ஆயுட்காலத்தை குறிப்பிடுவதற்குப் போதிய நீளமுடையதாக இருக்காது! அப்படியென்றால் இத்தனை யுகங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
6. (அ) யெகோவாவின் மகன், மனிதனாக தோன்றுவதற்கு முன்னர் எந்த வேலையில் ஈடுபட்டு வந்தார்? (ஆ) யெகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் இடையே எப்படிப்பட்ட பந்தம் நிலவுகிறது?
6 தகப்பனின் “கைதேர்ந்த கலைஞனாக” இந்த மகன் மகிழ்ச்சியோடு வேலை செய்தார். (நீதிமொழிகள் 8:30) “அவரில்லாமல் எதுவுமே உண்டாகவில்லை” என பைபிள் சொல்கிறது. (யோவான் 1:3) ஆகவே யெகோவாவும் அவருடைய மகனும் ஒன்றுசேர்ந்து எல்லாவற்றையும் உருவாக்கினர். எப்பேர்ப்பட்ட பூரிப்பும் மகிழ்ச்சியும் மிக்க சமயங்களை அவர்கள் அனுபவித்தனர்! பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள பாசப் பிணைப்பு அதிசயிக்கத்தக்கது என்பதை பலர் ஒத்துக்கொள்வர். சொல்லப்போனால், அன்பு ‘பரிபூரணமாக இணைக்கும்.’ (கொலோசெயர் 3:14) அப்படியானால், கோடானு கோடி ஆண்டுகளாக நிலவும் பந்தத்தின் வலிமையை நம்மில் யாரால் உணர முடியும்? இதுவரை உருவான அன்பின் கட்டிலேயே மிக பலமான ஒன்றால் யெகோவா தேவனும் அவருடைய மகனும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
7. இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில் அவரைப் பற்றி யெகோவா என்ன சொன்னார்?
7 இருந்தாலும், தகப்பன் தமது மகனை மனித குழந்தை வடிவில் பிறப்பதற்கு இந்தப் பூமிக்கு அனுப்பினார். இதற்காக, பரலோகத்தில் தமது ஆசை மகனோடு குலவி மகிழுவதையே சில பத்தாண்டுகளுக்கு தியாகம் செய்தார். இயேசு பரிபூரண மனிதராக வளர்ந்து வருவதை பரலோகத்திலிருந்து தகப்பன் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தார். சுமார் 30 வயதில், இயேசு ஞானஸ்நானம் பெற்றார். அவரைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்பதை நாம் ஊகிக்க வேண்டியதில்லை. பரலோகத்திலிருந்து அவரே இவ்வாறு சொன்னார்: “இவர் என் அன்பு மகன், நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்.” (மத்தேயு 3:17) முன்னுரைக்கப்பட்ட அனைத்தையும், அதாவது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் இயேசு உண்மையோடு நிறைவேற்றியதைக் கண்டு அவருடைய தகப்பன் அகமகிழ்ந்திருக்க வேண்டும்!—யோவான் 5:36; 17:4.
8, 9. (அ) கி.பி. 33, நிசான் 14 அன்று இயேசு எதை அனுபவித்தார், அவருடைய பரலோக தகப்பன் எவ்வாறு பாதிக்கப்பட்டார்? (ஆ) தமது மகன் பாடுபட்டு மரிப்பதற்கு யெகோவா ஏன் அனுமதித்தார்?
8 ஆனால் கி.பி. 33, நிசான் 14 அன்று யெகோவா எப்படி உணர்ந்தார்? அந்த இரவில் இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கலகக்காரர்களால் கைது செய்யப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? இயேசு தமது நண்பர்களால் கைவிடப்பட்டு, சட்ட விரோதமாக விசாரணை செய்யப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? பரிகசிக்கப்பட்டு, எச்சில் துப்பப்பட்டு, முஷ்டியால் தாக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? வாரினால் அடிக்கப்பட்டு, அவருடைய முதுகு நார் நாராக கிழிக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? கைகளிலும் கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டு, கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கையில் மக்கள் அவரைப் பார்த்து நிந்தித்தபோது எப்படி உணர்ந்தார்? அவருடைய அன்பு மகன் தாங்கொணா வேதனையில் துடித்துக்கொண்டு அவரை நோக்கி கூக்குரலிட்டபோது அந்தத் தகப்பன் எப்படி உணர்ந்தார்? இயேசு தமது இறுதி மூச்சை விட்டபோது, படைப்பின் சமயத்திலிருந்து முதன்முறையாக தம் அன்பு மகன் இல்லாமல் போனதைப் பார்த்து யெகோவா எப்படி உணர்ந்தார்?—மத்தேயு 26:14-16, 46, 47, 56, 59, 67; 27:38-44, 46; யோவான் 19:1.
9 வாயில் வார்த்தைகளின்றி தவிக்கிறோம் அல்லவா? யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருப்பதால் தமது மகன் மரிக்கையில் அவர் அனுபவித்த வேதனையை நாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம்மால் விவரிக்க முடிந்ததெல்லாம், அதை ஏன் அனுமதித்தார் என்பதே. அந்த வேதனையையெல்லாம் அவர் ஏன் வருவித்துக் கொண்டார்? இதற்கான காரணம், மிக முக்கியமான ஒரு பைபிள் வசனத்தில், சிறிய சுவிசேஷம் என அழைக்கப்படும் ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது; “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்” என்று அந்த வசனமாகிய யோவான் 3:16 குறிப்பிடுகிறது. ஆகவே யெகோவா அதை அனுமதித்ததற்கான காரணம், அன்பே. நமக்காக பாடுபட்டு மரிப்பதற்கு தமது மகனை அனுப்பியது யெகோவா தந்த மிகப் பெரிய பரிசு, இதுவரை யாருமே செய்திராத மகத்தான அன்பின் செயல்.
‘கடவுள் தன்னுடைய ஒரே மகனை தந்தார்’
கடவுளுடைய அன்பு வரையறுக்கப்படுகிறது
10. மனிதருக்கு என்ன தேவைப்படுகிறது, “அன்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன ஆகியிருக்கிறது?
10 “அன்பு” என்ற இந்த வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? அன்பே மனிதருடைய மிகப் பெரிய தேவை என வர்ணிக்கப்பட்டிருக்கிறது. தொட்டில் முதல் சுடுகாடு வரை மக்கள் அன்பிற்காக அலைமோதுகிறார்கள், சிலர் அந்த இதமான உணர்வில் தழைத்தோங்குகிறார்கள், சிலரோ அது கிடைக்காமல் சோர்வுற்று கடைசியில் சாவை தழுவுகிறார்கள். ஆனாலும் அதை வரையறுப்பது கடினம் என்பது ஆச்சரியமாக தொனிக்கிறது. சொல்லப்போனால், அன்பைப் பற்றி மக்கள் ஏகமாக பேசுகிறார்கள். அதைப் பற்றிய புத்தகங்களும் பாடல்களும் கவிதைகளும் வற்றா ஜீவ நதியாக வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் அன்பின் அர்த்தத்தை தெளிவுபடுத்துவதில்லை. சொல்லப்போனால், எந்தளவுக்கு இந்த வார்த்தை அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ அந்தளவுக்கு அதன் அர்த்தமும் தெளிவற்றதாகி வருகிறது.
11, 12. (அ) அன்பைப் பற்றி நாம் எங்கே அதிகம் கற்றுக்கொள்ள முடியும், ஏன் அங்கே? (ஆ) பூர்வ கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள அன்பின் வகைகள் யாவை, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் ‘அன்பிற்கு’ பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை எது? (அடிக்குறிப்பையும் காண்க.) (இ) பெரும்பாலான சமயங்களில் பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆகாப்பி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
11 ஆனால் அன்பைப் பற்றி பைபிள் தெளிவாக கற்பிக்கிறது. வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அன்பை அது தூண்டுகிற செயல்களிலிருந்து மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.” யெகோவாவின் அன்பைப் பற்றி—தமது படைப்புகள் மீது அவர் வைத்திருக்கும் அன்பான பாசத்தைப் பற்றி—அவருடைய செயல்களை விவரிக்கும் பைபிள் பதிவு நமக்கு நிறைய கற்பிக்கிறது. உதாரணமாக, முன்பு விவரிக்கப்பட்ட யெகோவாவின் தலைசிறந்த அன்புச் செயலைவிட வேறு எது இந்தப் பண்பைப் பற்றி அதிகம் வெளிப்படுத்த முடியும்? அடுத்துவரும் அதிகாரங்களில் யெகோவா தமது அன்பை செயலில் காண்பித்ததற்கு இன்னும் பல உதாரணங்களை நாம் பார்ப்போம். அதோடு, “அன்பு” என்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள மூல வார்த்தைகளுக்கு சிறிது உட்பார்வை செலுத்தலாம். “அன்பு” என்பதற்கு பூர்வ கிரேக்க மொழியில் நான்கு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. a இவற்றில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை ஆகாப்பி. இது, “அன்பை வர்ணிக்கும் வார்த்தைகளிலேயே மிக வலிமைமிக்கது” என ஒரு பைபிள் அகராதி குறிப்பிடுகிறது. ஏன்?
12 பெரும்பாலான சமயங்களில், பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஆகாப்பி என்பது நியமத்தின் அடிப்படையிலான அன்பை குறிக்கிறது. ஆகவே, இது உணர்ச்சிப்பூர்வ வெளிக்காட்டு மட்டும் அல்ல. இது பரந்த இயல்புடையது, நன்கு யோசித்து, தெரிந்தே வெளிக்காட்டப்படும் பண்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவ அன்பு துளிகூட சுயநலம் இல்லாதது. உதாரணமாக, மீண்டும் யோவான் 3:16-ஐ கவனியுங்கள். தம்முடைய ஒரே மகனையே தந்து கடவுள் அன்பு காட்டின ‘உலகம்’ எது? மீட்கத்தக்க மனிதவர்க்க உலகமே அது. பாவ வாழ்க்கை வாழும் மக்கள் பலரையும் அது உட்படுத்துகிறது. உண்மையுள்ள ஆபிரகாமை நண்பராக நேசித்தது போல் ஒவ்வொருவரையும் யெகோவா நேசிக்கிறாரா? (யாக்கோபு 2:23) இல்லை, ஆனால் யெகோவா அன்போடு அனைவருக்கும் நற்குணத்தைக் காட்டுகிறார், அது தமக்கே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலும் அப்படி செய்கிறார். எல்லாரும் மனந்திரும்பி தங்களுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். (2 பேதுரு 3:9) அநேகர் அப்படி செய்கிறார்கள். இவர்களை தமது நண்பர்களாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறார்.
13, 14. கிறிஸ்தவ அன்பு கனிவான பாசத்தையும் உட்படுத்துகிறது என்பதை எது காட்டுகிறது?
13 ஆனால் பைபிள் பயன்படுத்தும் ஆகாப்பி அன்பைப் பற்றி சிலரிடம் தவறான கருத்து நிலவுகிறது. அது உணர்ச்சியற்ற, கோட்பாட்டளவிலான அன்பை குறிக்கிறது என அவர்கள் நினைக்கிறார்கள். கிறிஸ்தவ அன்பு பெரும்பாலும் தனிப்பட்ட விதமாக காட்டப்படும் கனிவான பாசத்தை உட்படுத்துகிறது என்பதே உண்மை. உதாரணமாக, ‘தகப்பன் தன்னுடைய மகன்மேல் அன்புகாட்டியிருக்கிறார்’ என்று யோவான் எழுதியபோது, ஆகாப்பி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது கனிவும் பாசமும் இல்லாத அன்பா? ‘மகன்மேல் தகப்பன் பாசம் வைத்திருக்கிறார்’ என்று இயேசு கூறியதை கவனியுங்கள், அந்தச் சந்தர்ப்பத்தில் ஃபீலியா என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். (யோவான் 3:35; 5:20) யெகோவாவின் அன்பில் பெரும்பாலும் கனிவான பாசம் கலந்திருக்கிறது. என்றாலும், அவருடைய அன்பு ஒருபோதும் உணர்ச்சியால் மட்டுமே தூண்டப்படுவதில்லை. எப்பொழுதும் அவருடைய ஞானமான மற்றும் நீதியான நியமங்களால் வழிநடத்தப்படுகிறது.
14 நாம் பார்த்தபடி, யெகோவாவின் பண்புகள் அனைத்தும் உயரியவை, பரிபூரணமானவை, இனியவை. ஆனால் எல்லாவற்றிலும் அன்பே மிகவும் இனியது. யெகோவாவிடம் நம்மை சுண்டி இழுப்பதில் அன்புக்கு நிகர் அன்பே. அந்த அன்பே அவருடைய பிரதான பண்பு என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் அதுவே பிரதான பண்பாக இருப்பது நமக்கு எப்படி தெரியும்?
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
15. யெகோவாவின் அன்பைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது, எந்த விதத்தில் இது தனிச்சிறப்பு வாய்ந்தது? (அடிக்குறிப்பையும் காண்க.)
15 அன்பைப் பற்றி பைபிள் ஒரு விஷயத்தை சொல்கிறது; யெகோவாவின் மற்ற பிரதான குணங்களைப் பற்றி அது ஒருபோதும் அவ்வாறு சொல்வதில்லை. தேவன் வல்லமையாக இருக்கிறார், தேவன் நீதியாக இருக்கிறார், அல்லது தேவன் ஞானமாக இருக்கிறார் என்றெல்லாம் வேதவசனங்கள் சொல்வதில்லை. அந்தக் குணங்களை அவர் பெற்றிருக்கிறார், அவற்றிற்கு ஊற்றுமூலர் அவரே, இம்மூன்று குணங்களைப் பொறுத்தவரையில் அவர் நிகரற்றவரே. ஆனால் நான்காவது குணத்தைப் பொறுத்ததில் அதிக ஆழமான ஒரு கருத்து சொல்லப்பட்டுள்ளது: “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” எனப்பட்டுள்ளது. b (1 யோவான் 4:8) அதன் அர்த்தம் என்ன?
16-18. (அ) “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என பைபிள் சொல்வதேன்? (ஆ) பூமியிலுள்ள அனைத்து சிருஷ்டிகளிலும், யெகோவாவின் குணமாகிய அன்பிற்கு ஏன் மனிதனே பொருத்தமான அடையாளமாக இருக்கிறான்?
16 “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்பது “கடவுளும் அன்பும் சமம்” என்பதை அர்த்தப்படுத்தாது. நாம் இந்த வாக்கியத்தைத் தலைகீழாக மாற்றி ‘அன்பே கடவுள்’ என சொல்ல முடியாது. யெகோவா வெறும் அரூபமான பண்பு அல்ல. அவர் ஒரு நபர், அன்போடுகூட பல்வேறு உணர்ச்சிகளும் குணங்களும் நிறைந்தவர். என்றாலும், அன்பு யெகோவாவில் மிகவும் ஆழமாக ஊடுருவி இருக்கிறது. இந்த வசனத்தைப் பற்றி ஓர் ஏடு இவ்வாறு கூறுகிறது: “கடவுளுடைய இயல்பின் சாராம்சமே அன்பு.” அதை நாம் இவ்வாறு விளக்கலாம்: யெகோவாவின் வல்லமை, செயல்பட அவருக்கு உதவுகிறது. அவருடைய நீதியும் ஞானமும் அவர் செயல்படும் விதத்தை வழிநடத்துகின்றன. ஆனால் யெகோவாவின் அன்போ செயல்படும்படி அவரை உந்துவிக்கிறது. மேலும், பிற குணங்களை அவர் பயன்படுத்துகிற விதத்திலும் அவருடைய அன்பு எப்பொழுதும் இழையோடுகிறது.
17 யெகோவா அன்பின் உருவாகவே இருக்கிறார் என அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆகவே, நியமத்தால் வழிநடத்தப்படும் அன்பைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், நாம் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். உண்மைதான், இந்த அழகிய குணத்தை மனிதர்களிலும் நாம் காணலாம். ஆனால் ஏன் அவர்களிடம் காண முடிகிறது? படைப்பின்போது யெகோவா தமது மகனிடம், “மனிதனை நம்முடைய சாயலில் நம்மைப் போலவே உண்டாக்கலாம்” என்று சொன்னதாக தெரிகிறது. (ஆதியாகமம் 1:26) இந்தப் பூமியிலுள்ள அனைத்து சிருஷ்டிகளிலும், மனுஷனும் மனுஷியுமே அன்பு காட்ட முடியும், அதன் மூலம் பரலோக தகப்பனை பின்பற்றவும் முடியும். தமது பிரதான குணங்களை அடையாளப்படுத்திக் காண்பிக்க பல்வகை சிருஷ்டிகளை யெகோவா பயன்படுத்தியதை நினைத்துப் பாருங்கள். என்றாலும், பூமிக்குரிய படைப்புகளிலேயே உன்னதமான படைப்பாகிய மனிதனைத்தான் தமது பிரதான குணமாகிய அன்பிற்கு அடையாளமாக தேர்ந்தெடுத்தார்.—எசேக்கியேல் 1:10.
18 நாம் நியமத்தின் அடிப்படையில் சுயநலமற்ற அன்பை காட்டும்போது, யெகோவாவின் பிரதான குணத்தை பிரதிபலிக்கிறோம். இது அப்போஸ்தலன் யோவான் எழுதிய விதமாகவே இருக்கிறது: “கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.” (1 யோவான் 4:19) ஆனால் என்ன வழிகளில் யெகோவா நம்மிடம் முதலில் அன்பு காட்டியிருக்கிறார்?
யெகோவா முதற்படியெடுத்தார்
19. யெகோவாவின் படைப்பு வேலையில் அன்பு முக்கிய பாகம் வகித்தது என ஏன் சொல்லலாம்?
19 அன்பு என்பது புதிய ஒரு குணமல்ல. சொல்லப்போனால், படைப்பை ஆரம்பிப்பதற்கு யெகோவாவை எது தூண்டியது? அவர் தனிமையில் வாடியதாலும் தோழமை இல்லாததாலும் படைப்பை ஆரம்பிக்கவில்லை. யெகோவா முழு நிறைவானவர், தன்னிறைவுடையவர், குறைவற்றவர், எதற்காகவும் அவர் மற்றவர்களை நம்பி இல்லை. உயிர் வாழ்வதிலுள்ள சந்தோஷங்களை புத்திக்கூர்மையுள்ள மற்ற சிருஷ்டிகளுடன் பகிர்ந்துகொள்ள அன்பே அவரைத் தூண்டியது; உயிர் என்ற பரிசை மதிக்கும் சிருஷ்டிகளுக்காக அவரது அன்பு செயல்பட்டது. “கடவுளுடைய படைப்புகளிலேயே முதல் படைப்பு” அவருடைய ஒரே மகன்தான். (வெளிப்படுத்துதல் 3:14) பிற்பாடு, தேவதூதர்கள் தொடங்கி மற்றெல்லாவற்றையும் படைப்பதில் இந்தக் கைதேர்ந்த வேலையாளரை யெகோவா பயன்படுத்தினார். (யோபு 38:4, 7; கொலோசெயர் 1:16) வல்லமை வாய்ந்த அந்தத் தேவதூதர்களுக்கு சுதந்திரமும் புத்திக்கூர்மையும் உணர்ச்சிகளும் அருளப்பட்டிருந்ததால், ஒருவருக்கொருவரும், எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவா தேவனுடனும் அன்பான பிரியத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்கள். (2 கொரிந்தியர் 3:17) இவ்வாறு, முதலில் அவர்களிடம் அன்பு காட்டப்பட்டதால் அவர்களும் அன்பு காட்டினார்கள்.
20, 21. யெகோவாவின் அன்பிற்கு அத்தாட்சியாக ஆதாமும் ஏவாளும் எதை அனுபவித்தார்கள், ஆனால் அவர்கள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்?
20 அது போலவே மனிதர்களிடமும் முதலில் அன்பு காட்டப்பட்டது. ஆதிமுதல் ஆதாமும் ஏவாளும் அன்பெனும் மழையில் நனைந்து மகிழ்ந்தார்கள். ஏதேனில் எங்கு திரும்பினாலும், தங்கள் மீது தகப்பன் காட்டிய அன்பிற்கு அத்தாட்சியை அவர்களால் காண முடிந்தது. பைபிள் சொல்வதை கவனியுங்கள்: “கடவுளாகிய யெகோவா கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்து, தான் உருவாக்கிய மனிதனை அங்கே குடிவைத்தார்.” (ஆதியாகமம் 2:8) உண்மையிலேயே அழகு கொஞ்சும் ஒரு பூஞ்சோலைக்கோ பூங்காவிற்கோ நீங்கள் சென்றிருக்கிறீர்களா? எது உங்களை மிகவும் கவர்ந்தது? கதிரவனின் கிரணங்கள் இலைகளின் இடையே ஊடுருவி பூமியை முத்தமிடுவதா? பல்வகை நிறங்களில் தோரணங்களாக காட்சிதரும் மலர்களின் சோலையா? இசை எனும் இன்ப ஓடையா? பறவைகளின் இனிய கீதமா? வண்டுகளின் ரீங்காரமா? மரங்களின், கனிகளின், மலர்களின் சுகந்தமா? எதுவாக இருந்தாலும், இன்றுள்ள எந்தப் பூங்காக்களும் ஏதேன் பூங்காவிற்கு ஈடாகாது. ஏன்?
21 அந்தத் தோட்டத்தை யெகோவாவே உண்டாக்கினார்! அது வர்ணனைக்குள் அடங்காத அளவுக்கு மிகவும் அழகாக இருந்திருக்க வேண்டும். கண்ணுக்கு விருந்தளித்த மரங்களும் நாவுக்கு சுவையூட்டிய கனிகளும் அங்கே இருந்தன. அந்தத் தோட்டத்தில் தண்ணீர் சலசலவென்று பாய்ந்தது. அது நல்ல இடவசதியோடு விஸ்தாரமாய் இருந்தது, கண்ணைக் கவரும் பல்வகை உயிரினங்களால் உயிர்த்துடிப்புடன் விளங்கியது. வாழ்க்கைக்கு மகிழ்ச்சியூட்டும், நிறைவளிக்கும் அனைத்தும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்தன, திருப்திதரும் வேலையும் பூரண தோழமையும் இருந்தது. யெகோவா முதலில் அவர்களிடம் அன்பு செலுத்தினார், அதேபோல் அவர்களும் அன்பைக் காட்டுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. ஆனால் அவர்கள் அன்பு காண்பிக்கத் தவறிவிட்டார்கள். தங்களுடைய பரலோக தகப்பனுக்கு அன்போடு கீழ்ப்படிவதற்குப் பதிலாக, சுயநலத்தோடு அவருக்கு எதிராக கலகம் செய்தார்கள்.—ஆதியாகமம், அதிகாரம் 2.
22. ஏதேனில் நடந்த கலகத்தனத்தைக் கண்டு யெகோவா நடந்துகொண்ட விதம், அவருடைய அன்பு பற்றுமாறாதது என்பதை எவ்வாறு நிரூபித்தது?
22 அது யெகோவாவிற்கு எவ்வளவு வேதனையை உண்டாக்கியிருக்க வேண்டும்! ஆனால் அந்தக் கலகத்தனம் அவருடைய அன்பான இதயத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தியதா? இல்லவே இல்லை! அவர் “என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.” (சங்கீதம் 136:1) ஆகவே, ஆதாம் ஏவாளுக்குப் பிறப்பவர்களில் நல்லிதயம் படைத்த எவரையும் மீட்பதற்கு அவர் உடனடியாக அன்பான ஏற்பாடுகளை செய்தார். நாம் பார்த்தபடி, தகப்பன் தமது அன்பு மகனையே—மிகவும் நேசத்திற்குரியவரையே—மீட்பு பலியாக கொடுத்ததும் அந்த ஏற்பாடுகளில் அடங்கும்; இது தந்தைக்கு பெரும் இழப்பாக இருந்தது.—1 யோவான் 4:10.
23. யெகோவா ‘சந்தோஷமுள்ள கடவுளாக’ இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்று என்ன, அடுத்த அதிகாரத்தில் ஆராயப்படும் முக்கியமான கேள்வி என்ன?
23 ஆம், ஆதிமுதற்கொண்டே மனிதகுலத்தின் மீது அன்பை பொழிவதில் யெகோவா முதற்படி எடுத்திருக்கிறார். எண்ணற்ற வழிகளில், ‘கடவுள் முதலில் நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார்.’ அன்பு ஒற்றுமையையும் சந்தோஷத்தையும் அபிவிருத்தி செய்கிறது, ஆகவே “சந்தோஷமுள்ள கடவுள்” என யெகோவா விவரிக்கப்படுவதில் ஆச்சரியமில்லை. (1 தீமோத்தேயு 1:11) ஆனால், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தனிப்பட்ட நபர்களாக யெகோவா நம்மீது உண்மையிலேயே அன்புகூருகிறாரா? இந்த விஷயம் அடுத்த அதிகாரத்தில் ஆராயப்படும்.
a ஃபீலியா என்ற வினைச்சொல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது; இதன் அர்த்தம் “பாசங்கொள்வது, பிரியங்கொள்வது, அல்லது விரும்புவது (நெருங்கிய நண்பர் மீது அல்லது சகோதரன் மீது காட்டப்படுவதைப் போன்றது).” ஸ்டார்கி என்ற வார்த்தை இரத்த பந்தத்திற்கு இடையே நிலவும் அன்பை குறிக்கிறது; கடைசி நாட்களில் இத்தகைய அன்பு மிகவும் குறைவுபடும் என்பதை காண்பிப்பதற்கு 2 தீமோத்தேயு 3:3-ல் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. ஈராஸ் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் காதல் அன்பு; இது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும் இத்தகைய அன்பைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது.—நீதிமொழிகள் 5:15-20.
b இதற்கு ஒத்த இரண்டு பைபிள் கூற்றுகள் இருக்கின்றன. உதாரணமாக, “கடவுள் ஒளியாக இருக்கிறார்,” “கடவுள் சுட்டெரிக்கிற நெருப்பாக இருக்கிறார்.” (1 யோவான் 1:5; எபிரெயர் 12:29) ஆனால் இவற்றை உருவகங்களாக புரிந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் இவை யெகோவாவை சடப்பொருட்களுக்கு ஒப்பிடுகின்றன. யெகோவா ஒளியைப் போல இருக்கிறார், ஏனென்றால் அவர் பரிசுத்தர், நேர்மையானவர். அவரிடத்தில் “இருள்” அல்லது அசுத்தம் இல்லை. மேலும், அழிப்பதற்கு அவர் தம்முடைய வல்லமையை பயன்படுத்துவதால் அவரை அக்கினிக்கு ஒப்பிடலாம்.