அதிகாரம் 30
“தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்”
1-3. அன்பு காட்டுவதில் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது என்ன பலன்கள் கிடைக்கின்றன?
“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.” (அப்போஸ்தலர் 20:35) சுயநலமற்ற அன்பு அதற்குரிய ஊதியத்தைப் பெறுகிறது என்ற முக்கியமான சத்தியத்தையே இயேசுவின் இந்த வார்த்தைகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அன்பை பெறுவதில் அதிக சந்தோஷம் இருந்தாலும், அன்பை பிறருக்கு கொடுப்பதிலேயே அல்லது காட்டுவதிலேயே அதைவிட அதிக சந்தோஷம் இருக்கிறது.
2 நமது பரலோக தகப்பனைவிட வேறு எவருக்கும் இதைப் பற்றி நன்கு தெரியாது. இந்தப் பகுதியில் முந்தைய அதிகாரங்களில் நாம் கவனித்தபடி, யெகோவாவே அன்பிற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவரைவிட சிறந்த வழிகளில் வேறு யாருமே அன்பு காண்பித்ததில்லை. அவரைவிட காலங்காலமாய் அன்பு காண்பித்தவர்களும் வேறு யாருமில்லை. அப்படியானால், யெகோவா “சந்தோஷமுள்ள கடவுள்” என அழைக்கப்படுவதில் ஏதாவது ஆச்சரியமுண்டா?—1 தீமோத்தேயு 1:11.
3 நமது அன்புள்ள கடவுள் நாம் அவரைப் போலவே இருப்பதற்கு முயற்சி செய்யும்படி விரும்புகிறார், முக்கியமாக அன்பை பொழியும் விஷயத்தில். எபேசியர் 5:1, 2 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். . . . தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.” அன்பு காட்டுவதில் யெகோவாவின் முன்மாதிரியைப் பின்பற்றும்போது, கொடுப்பதால் வரும் மிகுந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். அதோடு, யெகோவாவை பிரியப்படுத்துகிறோம் என்ற திருப்தியும் நமக்கு கிடைக்கிறது, ஏனென்றால் ‘ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி’ அவருடைய வார்த்தை நம்மை உந்துவிக்கிறது. (ரோமர் 13:8) ஆனால் நாம் ‘தொடர்ந்து அன்பின் வழியில் நடக்க’ வேறுசில காரணங்களும் உள்ளன.
அன்பு ஏன் முக்கியம்
4, 5. சக விசுவாசிகளிடம் சுயதியாக அன்பைக் காட்டுவது ஏன் முக்கியம்?
4 சக விசுவாசிகளிடம் அன்பு காட்டுவது ஏன் முக்கியம்? சுருங்கச் சொன்னால், அன்பே உண்மை கிறிஸ்தவத்தின் சாராம்சம். அன்பின்றி சக கிறிஸ்தவர்களுடன் நெருங்கிய பந்தத்தை அனுபவிக்க முடியாது; மிக முக்கியமாக, அன்பில்லை என்றால் யெகோவாவின் பார்வையில் நமக்கு ஒரு மதிப்புமில்லை. இந்த சத்தியங்களை கடவுளுடைய வார்த்தை எவ்வாறு சிறப்பித்துக் காட்டுகிறது என்பதை கவனியுங்கள்.
5 பூமிக்குரிய வாழ்வின் கடைசி இரவில் இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:34, 35) “நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே” என இயேசு கூறினார்; ஆம், இயேசுவைப் போல அன்பை காண்பிக்கும்படி நமக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது. 29-ம் அதிகாரத்தில், பிறருடைய தேவைகளுக்கும் அக்கறைகளுக்கும் முதலிடம் கொடுத்து சுயநலமில்லாத அன்பு காட்டுவதில் இயேசு சிறந்த முன்மாதிரி வைத்ததை நாம் கவனித்தோம். நாமும் சுயநலமில்லாத அன்பை காட்ட வேண்டும்; உலகத்தாருக்கும் வெளிப்படையாக தெரியும் விதத்தில் அப்படிப்பட்ட அன்பை காட்ட வேண்டும். சொல்லப்போனால், சுயநலமில்லாத சகோதர அன்பே கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களென நம்மை அடையாளம் காட்டும் சின்னம்.
6, 7. (அ) அன்பு காட்டுவதன் பேரில் யெகோவாவின் வார்த்தை அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை நாம் எப்படி அறிந்து கொள்கிறோம்? (ஆ) 1 கொரிந்தியர் 13:4-8-லுள்ள பவுலின் வார்த்தைகள் அன்பின் எந்த அம்சத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன?
6 நம்மிடம் அன்பு குறைவுபட்டால்? “எனக்கு அன்பு இல்லையென்றால், ஓசையெழுப்புகிற வெண்கலத்தைப் போலவும் சத்தமிடுகிற ஜால்ராவைப் போலவும்தான் இருப்பேன்” என அப்போஸ்தலன் பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 13:1) சத்தமிடுகிற ஜால்ராவும் ஓசையெழுப்புகிற வெண்கலமும் பேரிரைச்சலைதான் உண்டாக்கும். எவ்வளவு பொருத்தமான உதாரணங்கள்! இரைச்சலுடன் பெரும் கீச்சொலியை உண்டாக்கும் ஓர் இசைக் கருவியும் ஒன்றுதான், அன்பற்ற நபரும் ஒன்றுதான்; அவர் காந்தம் போல் மற்றவர்களை தன்னிடம் ஈர்ப்பதற்குப் பதிலாக விலகிச் செல்லவே வைக்கிறார். இப்படிப்பட்டவர் எவ்வாறு மற்றவர்களுடன் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ முடியும்? “மலைகளை நகர வைக்குமளவுக்கு விசுவாசம் இருந்தாலும், எனக்கு அன்பு இல்லையென்றால் நான் ஒன்றுமே இல்லை” என்று பவுல் கூறினார். (1 கொரிந்தியர் 13:2) சற்று கற்பனை செய்து பாருங்கள், அன்பற்ற ஒருவர் எந்த செயலை செய்தாலும் ‘எதற்கும் உதவாதவராக’ இருக்கிறார்! (தி ஆம்ப்ளிஃபைடு பைபிள்) அன்பு காட்டுவதற்கு யெகோவாவின் வார்த்தை அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெளிவாக தெரிகிறது அல்லவா?
7 ஆனால் மற்றவர்களை நடத்தும் விதத்தில் எவ்வாறு இந்தக் குணத்தை காண்பிக்கலாம்? இதற்கு பதிலை கண்டடைய 1 கொரிந்தியர் 13:4-8-ல் உள்ள பவுலின் வார்த்தைகளை ஆராயலாம். இந்த வசனங்களில் வலியுறுத்தப்படுவது கடவுள் நம் மீது காண்பிக்கும் அன்போ நாம் கடவுள் மீது காண்பிக்கும் அன்போ அல்ல. மாறாக, மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு அன்பு காட்ட வேண்டும் என்பதன் மீதே பவுல் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். அன்பு என்ன செய்யும், என்ன செய்யாது என்றும் அவர் விவரித்தார்.
அன்பு எப்படிப்பட்டது
8. பிறருடன் பழகும்போது பொறுமை எவ்வாறு நமக்கு உதவும்?
8 ‘அன்பு பொறுமை உள்ளது.’ பொறுமையோடு இருப்பது என்பது பிறருடைய குறைபாடுகளை பொறுத்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:13) இத்தகைய பொறுமை நமக்கு அவசியம் அல்லவா? நாம் குறையுள்ளவர்களாக இருக்கிறோம், அதுவும் மிக நெருக்கமாக சேர்ந்து உழைக்கிறோம். ஆகவே அவ்வப்பொழுது நமது கிறிஸ்தவ சகோதரர்கள் நமக்கு எரிச்சலூட்டலாம், நாமும் அவர்களுக்கு எரிச்சலூட்டலாம். ஆனால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இருந்தால், சபையின் சமாதானத்தைக் குலைக்காமல் சிறுசிறு குற்றங்குறைகளைப் பொறுத்துக்கொள்வோம்.
9. என்னென்ன வழிகளில் பிறருக்கு கருணை காட்டலாம்?
9 ‘அன்பு கருணை உள்ளது.’ பயனுள்ள செயல்களிலும் கனிவான வார்த்தைகளிலும் தயவு காண்பிக்கப்படுகிறது. முக்கியமாக கஷ்டத்தில் இருப்போருக்கு கருணை காட்ட பல வழிகளைத் தேடுவதற்கு அன்பு நம்மை உந்துவிக்கிறது. உதாரணமாக, வயதான சகோதரர் ஒருவர் தனிமையில் வாடலாம், அவரை சந்தித்து உற்சாகப்படுத்த வேண்டியிருக்கலாம். மத ரீதியில் பிளவுபட்ட குடும்பத்திலுள்ள ஒரு சகோதரிக்கு அல்லது துணைவரை இழந்து தவிக்கும் ஒரு தாய்க்கு ஏதாவது உதவி தேவைப்படலாம். வியாதியில் கஷ்டப்படுகிறவர் அல்லது ஏதாவது பிரச்சினையில் தவிக்கிறவர் ஆத்மார்த்த நண்பரிடமிருந்து அன்பான வார்த்தைகளை கேட்க ஏங்கலாம். (நீதிமொழிகள் 12:25; 17:17) இப்படிப்பட்ட வழிகளில் கருணை காட்ட முயலும்போது நமது உள்ளப்பூர்வமான அன்பை செயலில் காட்டுகிறோம்.—2 கொரிந்தியர் 8:8.
10. கஷ்டமான சமயத்திலும்கூட சத்தியத்தை ஆதரிக்கவும் உண்மையைப் பேசவும் அன்பு நமக்கு எவ்வாறு உதவுகிறது?
10 ‘அன்பு உண்மையைக் குறித்து சந்தோஷப்படும்.’ மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “அன்பு . . . சத்தியத்தின் பக்கமாக சேர்ந்துகொள்வதில் சந்தோஷப்படுகிறது.” சத்தியத்தை ஆதரித்துப் பேசுவதற்கும் ‘ஒருவரோடு ஒருவர் உண்மையைப் பேசுவதற்கும்’ அன்பு நம்மை தூண்டுகிறது. (சகரியா 8:16) உதாரணமாக, நமக்கு பிரியமானவர் ஏதாவது வினைமையான பாவத்தில் ஈடுபட்டால், யெகோவா மீது கொண்டுள்ள அன்பும் தவறிழைத்தவர் மீது கொண்டுள்ள அன்பும் அந்தத் தவறை மூடிமறைப்பதற்கோ நியாயப்படுத்துவதற்கோ அல்லது பொய் சொல்வதற்கோ முயல்வதற்கு பதிலாக கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடிப்பதற்கு நமக்கு உதவும். எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனால் அந்தப் பிரியமானவருடைய மிகச் சிறந்த நலனை மனதில் கொண்டிருந்தால், கடவுளுடைய அன்பான கண்டிப்பை அவர் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவதற்கு நாம் விரும்புவோம். (நீதிமொழிகள் 3:11, 12) அன்பான கிறிஸ்தவர்களாகிய நாம் “எல்லாவற்றிலும் நேர்மையாக நடக்க விரும்புகிறோம்.”—எபிரெயர் 13:18.
11. ‘அன்பு எல்லாவற்றையும் தாங்கிக்கொள்வதால்’ சக விசுவாசிகளுடைய குறைகள் சம்பந்தமாக நாம் என்ன செய்ய முயல வேண்டும்?
11 ‘அன்பு எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும்.’ இந்தச் சொற்றொடர் சொல்லர்த்தமாக, “சகலத்தையும் மூடுகிறது” என அர்த்தப்படுத்துகிறது. (கிங்டம் இன்டர்லீனியர்) “அன்பு ஏராளமான பாவங்களை மூடும்” என 1 பேதுரு 4:8 கூறுகிறது. ஆம், ஒரு கிறிஸ்தவர் அன்பினால் ஆட்கொள்ளப்படும்போது தொட்டதற்கெல்லாம் கிறிஸ்தவ சகோதரர்களுடைய தவறுகளையும் குறைபாடுகளையும் வெட்ட வெளிச்சமாக்க விரும்பமாட்டார். பல சந்தர்ப்பங்களில், சக விசுவாசிகளுடைய தவறுகளும் குறைகளும் சிறியவையாகவே இருக்கின்றன, அவற்றை அன்பினால் மூடிமறைக்கலாம்.—நீதிமொழிகள் 10:12; 17:9.
12. பிலேமோனைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார் என்பதை எவ்வாறு காண்பித்தார், பவுலின் முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 ‘அன்பு எல்லாவற்றையும் நம்பும்.’ அன்பு “எப்பொழுதும் நல்லதையே நினைக்க விரும்புகிறது” என மொஃபட் மொழிபெயர்ப்பு சொல்கிறது. சக விசுவாசிகளை அநாவசியமாக சந்தேகிக்கக் கூடாது, எடுத்ததற்கெல்லாம் அவர்களுடைய உள்ளெண்ணத்தைக் குறித்து கேள்வி கேட்கக் கூடாது. நம் சகோதரர்களைப் பற்றி ‘எப்பொழுதும் நல்லதையே நினைக்கவும்’ நல்லதையே நம்பவும் அன்பு நமக்கு உதவுகிறது. a பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் ஓர் உதாரணத்தை கவனியுங்கள். ஓடிப்போன அடிமையாகிய ஒநேசிமு கிறிஸ்தவராக மாறியிருந்தார். இவர் திரும்பி வருகையில் அவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை உற்சாகப்படுத்த பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார். ஆனால், அப்படி செய்யும்படி பிலேமோனை வற்புறுத்துவதற்குப் பதிலாக, பவுல் அன்போடு கேட்டு கொண்டார். பிலேமோன் சரியானதை செய்வார் என்பதில் பவுல் நம்பிக்கை தெரிவித்து இவ்வாறு கூறினார்: “நீங்கள் என் சொல்லுக்குக் கட்டுப்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்; நான் கேட்டுக்கொள்வதற்கும் அதிகமாகவே நீங்கள் செய்வீர்கள் என்று எனக்குத் தெரியும்.” (வசனம் 21) அன்பினால் தூண்டப்பட்டு நம்முடைய சகோதரர்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கையை காண்பிக்கும்போது, அவர்களிடமுள்ள நல்ல குணத்தை வெளிக்கொணர்கிறோம்.
13. நம் சகோதரர்கள் விஷயத்தில் நல்லதையே எதிர்பார்க்கிறோம் என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
13 ‘அன்பு எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும்.’ அன்பு நம்பிக்கை வைப்பதோடு, நல்லதை எதிர்பார்க்கிறது. அன்பின் தூண்டுதலால் நம்முடைய சகோதரர்களுக்கு நல்லதே நடக்கும்படி எதிர்பார்க்கிறோம். உதாரணமாக, சகோதரர் ஒருவர் ‘தவறான பாதையில் தெரியாமல் அடியெடுத்து வைத்தால்,’ அவரை சரிப்படுத்த எடுக்கிற அன்பான முயற்சிகளுக்கு அவர் இணங்குவார் என நாம் எதிர்பார்க்கிறோம். (கலாத்தியர் ) விசுவாசத்தில் பலவீனமானவர்கள் மீண்டும் குணப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் பொறுமையாக இருந்து, அவர்கள் விசுவாசத்தில் பலப்படுவதற்கு நம்மால் இயன்றதை செய்கிறோம். ( 6:1ரோமர் 15:1; 1 தெசலோனிக்கேயர் 5:14) அன்பானவர் வழிவிலகிச் சென்றாலும்கூட, நாம் நம்பிக்கை இழந்துவிட மாட்டோம்; இயேசுவின் உவமையில் சொல்லப்பட்ட கெட்ட குமாரனைப் போல புத்தி தெளிந்து ஒருநாள் யெகோவாவிடம் திரும்பி வருவார் என எதிர்பார்க்கிறோம்.—லூக்கா 15:17, 18.
14. நம் சகிப்புத்தன்மை என்ன வழிகளில் சபைக்குள்ளிருந்து சோதிக்கப்படலாம், சரியாக நடந்துகொள்ள அன்பு நமக்கு எவ்வாறு உதவும்?
14 ‘அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும்.’ ஏமாற்றங்களோ கஷ்டங்களோ ஏற்படுகையில் உறுதியாக நிலைத்திருக்க சகிப்புத்தன்மை நமக்கு உதவுகிறது. சகிப்புத்தன்மையை சோதிக்கும் பிரச்சினைகள் சபைக்கு வெளியிலிருந்து மட்டுமே வருவதில்லை. சிலசமயங்களில் சபைக்குள்ளிருந்தும் வரலாம். பாவ இயல்பின் காரணமாக, நம்முடைய சகோதரர்கள் சில சமயங்களில் நமக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். யோசிக்காமல் பேசப்படும் வார்த்தைகள் நம்முடைய மனதில் ஈட்டி போல் பாய்ந்து புண்படுத்திவிடலாம். (நீதிமொழிகள் 12:18) ஒருவேளை ஏதாவது சபை விஷயம் நாம் நினைக்கிறபடி கையாளப்படாமல் இருக்கலாம். மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த ஒரு சகோதரருடைய நடத்தை நமக்கு அதிர்ச்சியூட்டலாம், ‘ஒரு கிறிஸ்தவர் எப்படி இது மாதிரி நடந்துக்கலாம்?’ என நாம் ஆச்சரியப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது, சபையிலிருந்து விலகிக்கொண்டு யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிடுவோமா? அன்பிருந்தால் அப்படி செய்ய மாட்டோம்! ஆம், ஒரு சகோதரருடைய தவறினால், அவருடைய நல்ல குணங்களை அல்லது முழு சபையிலுள்ள நல்ல காரியங்களைப் பார்க்கத் தவறும் அளவுக்கு நாம் குருடாகிவிடுவதை அன்பு தடுக்கும். பாவ இயல்புள்ள மனிதன் என்ன சொன்னாலும்சரி செய்தாலும்சரி, கடவுளுக்கு உண்மையுடன் நிலைத்திருந்து சபையை ஆதரிக்க அன்பு நமக்கு உதவும்.—சங்கீதம் 119:165.
அன்பு எப்படிப்பட்டதல்ல
15. பொறாமை என்றால் என்ன, இந்த அழிவுக்குரிய உணர்ச்சியைத் தவிர்க்க அன்பு எவ்வாறு உதவும்?
15 “அன்பு பொறாமைப்படாது.” மற்றவர்களிடம் இருக்கும் பொருளுடைமைகளோ சிலாக்கியங்களோ அல்லது திறமைகளோ நம்மை பொறாமைப்பட வைக்கலாம். இத்தகைய பொறாமை சுயநலமிக்கது, அழிவுக்குரியது. இந்த உணர்ச்சியை கட்டுப்படுத்தாமல் விட்டுவிட்டால் சபையின் சமாதானம் குலைக்கப்படலாம். பொறாமையை ஒழிக்க நமக்கு எது உதவும்? (யாக்கோபு 4:5) ஒரே வார்த்தையில் சொன்னால், அன்பு. நம்மிடம் இல்லாத சௌகரியங்களை பெற்று வாழ்பவர்களுடன் சேர்ந்து சந்தோஷப்படுவதற்கு மதிப்புமிக்க இத்தகைய பண்பு நமக்கு உதவும். (ரோமர் 12:15) ஏதாவது விசேஷ திறமைக்காக அல்லது சிறந்த சாதனைக்காக யாராவது பாராட்டைப் பெறும்போது, அதை தனிப்பட்ட விதத்தில் நமக்கு விரோதமாக இழைக்கப்பட்ட கொடுமையென கருதாமலிருக்க அன்பு நமக்கு உதவுகிறது.
16. நமது சகோதரர்களை நாம் உண்மையிலேயே நேசித்தால், யெகோவாவின் சேவையில் நம்முடைய சிலாக்கியங்களைக் குறித்து தற்பெருமை கொள்வதை ஏன் தவிர்ப்போம்?
16 ‘அன்பு பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது.’ நம்முடைய திறமைகளையோ சாதனைகளையோ தம்பட்டம் அடிப்பதை அன்பு தடுக்கிறது. நம்முடைய சகோதரர்களை நாம் உண்மையிலேயே நேசித்தால், ஊழியத்தில் படைத்த சாதனைகளையோ சபையில் பெற்றுள்ள சிலாக்கியங்களையோ குறித்து சதா பெருமை பீத்திக்கொள்வோமா? இத்தகைய தற்பெருமை மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கெடுத்து, அவர்களை தாழ்வானவர்களாக உணரச் செய்கிறது. கடவுள் தமது சேவையில் நம்மை பயன்படுத்துவதைப் பற்றி தற்பெருமை கொள்ள அன்பு நம்மை அனுமதிக்காது. (1 கொரிந்தியர் 3:5-9) அதோடு, அன்பு “தலைக்கனம் அடையாது” அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறபடி, “சொந்த முக்கியத்துவத்தைப் பற்றிய தற்பெருமையான எண்ணங்களில் மகிழ்ச்சி அடையாது.” நம்மையே உயர்வாக எண்ணாமல் இருப்பதற்கு அன்பு உதவுகிறது.—ரோமர் 12:3.
17. பிறரிடம் எத்தகைய கரிசனையை காட்டும்படி அன்பு நம்மை உந்துவிக்கிறது, அதனால் எப்படிப்பட்ட நடத்தையை நாம் தவிர்ப்போம்?
17 ‘அன்பு கேவலமாக நடந்துகொள்ளாது.’ கேவலமாக நடந்துகொள்கிறவர் மிகவும் தகாத விதத்தில் அல்லது புண்படுத்துகிற விதத்தில் நடந்துகொள்கிறார். இது அன்பற்ற செயல், ஏனென்றால் பிறருடைய உணர்ச்சிகளுக்கும் நலனுக்கும் துளிகூட மதிப்பு கொடுக்காமல் இருப்பதை இது காட்டுகிறது. மாறாக, அன்பில் கனிவு கலந்துள்ளது, அது மற்றவர்களுக்கு கரிசனை காட்டும்படி நம்மை உந்துவிக்கிறது. அன்பு நல்ல பழக்க வழக்கங்களையும் கடவுள் பக்திக்கேற்ற நடத்தையையும் சக விசுவாசிகளின் மீது மரியாதையையும் வளர்க்கிறது. இவ்வாறு, அன்பு ‘வெட்கக்கேடான நடத்தையில்,’ அதாவது நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அல்லது அவர்களை புண்படுத்தும் எந்த நடத்தையிலும் ஈடுபட நம்மை அனுமதிக்காது.—எபேசியர் 5:3, 4.
18. எல்லாவற்றையும் தன் விருப்பப்படியே செய்ய வேண்டுமென அன்பானவர் ஏன் வற்புறுத்த மாட்டார்?
18 ‘அன்பு சுயநலமாக நடந்துகொள்ளாது.’ ரிவைஸ்டு ஸ்டான்டர்டு வர்ஷன் இவ்வாறு கூறுகிறது: “அன்பு தன் விருப்பப்படியே செய்ய வற்புறுத்தாது.” தன்னுடைய கருத்துக்களே எப்பொழுதும் சரி என்பது போல, எல்லாவற்றையும் தன் விருப்பப்படியே செய்ய வேண்டுமென அன்பானவர் வற்புறுத்த மாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று தன் பேச்சு திறமையால் மற்றவர்களை தன் வழிக்கு கொண்டுவர முயற்சி செய்ய மாட்டார். இத்தகைய பிடிவாத குணம் ஓரளவு தற்பெருமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் “அகம்பாவம் வந்தால் அழிவு வரும்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 16:18) நாம் உண்மையிலேயே நம் சகோதரர்களை நேசித்தால் அவர்களுடைய கருத்துக்களை மதிப்போம்; அதோடு, சாத்தியமான சந்தர்ப்பத்தில், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை காண்பிப்போம். இப்படிப்பட்ட மனப்பான்மை, “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்” என்ற பவுலின் வார்த்தைகளுக்கு இசைவாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 10:24.
19. மற்றவர்கள் நம்மை புண்படுத்தும்போதும் நல்ல விதமாக நடந்துகொள்ள அன்பு எவ்வாறு நமக்கு உதவுகிறது?
19 ‘அன்பு எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது.’ மற்றவர்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் அன்பு சட்டென்று கோபமடையாது. மற்றவர்கள் நம்மை புண்படுத்தும்போது நிலைகுலைந்து போவது இயல்புதான். ஆனால் நாம் கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருந்தாலும், தொடர்ந்து கோபமாகவே இருப்பதற்கு அன்பு நம்மை அனுமதிக்காது. (எபேசியர் 4:26, 27) புண்படுத்திய சொற்களையோ செயல்களையோ மனதிலேயே வைத்துக்கொண்டிருக்க மாட்டோம். அவற்றை மறக்காமல் இருப்பதற்காக, வரவு செலவை கணக்கெழுதி வைப்பது போல அவற்றை மனதில் எழுதி வைக்க மாட்டோம். மாறாக, அன்பான கடவுளை பின்பற்றும்படி அன்பு நம்மை தூண்டுகிறது. 26-ம் அதிகாரத்தில் பார்த்தபடி, மன்னிப்பதற்கு நியாயமான காரணம் இருக்கும்போது யெகோவா மன்னிக்கிறார். நம்மை மன்னிக்கும்போது தவறை மறந்துவிடுகிறார், அதாவது பிற்பாடு ஒருநாள் அந்தப் பாவங்களுக்காக நம் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. யெகோவா நம்முடைய பாவங்களை மனதில் வைக்காமல் இருப்பதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இல்லையா?
20. சக விசுவாசி பாவம் எனும் கண்ணியில் அகப்பட்டு அவதிப்படும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
20 ‘அன்பு அநீதியைக் குறித்து சந்தோஷப்படாது.’ த நியூ இங்லிஷ் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அன்பு . . . மற்றவர்களுடைய பாவங்களைக் குறித்து கெக்கலிக்காது.” மொஃபட் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “பிறர் தவறு செய்யும்போது அன்பு ஒருபோதும் அகமகிழாது.” அன்பு அநீதியை பார்த்து இன்பம் கொள்ளாது, ஆகவே எந்த வகை ஒழுக்கயீனத்தையும் நாம் கண்டும் காணாமல் விட்டுவிடுவதில்லை. சக விசுவாசி ஒருவர் பாவம் எனும் கண்ணியில் அகப்பட்டு அவதிப்படுகையில் நாம் எப்படி நடந்துகொள்வோம்? அன்பு சந்தோஷப்பட நம்மை அனுமதிக்காது, ‘அவனுக்கு அது வேண்டியதுதான்!’ என்பதுபோல நினைக்காது. (நீதிமொழிகள் 17:5) ஆனால் தவறிழைத்த ஒரு சகோதரர் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து ஆவிக்குரிய வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும்போது நாம் சந்தோஷப்படுகிறோம்.
“எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த வழி”
21-23. (அ) “அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று சொன்னபோது பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? (ஆ)கடைசி அதிகாரத்தில் எது கலந்தாலோசிக்கப்படும்?
21 “அன்பு ஒருபோதும் ஒழியாது.” பவுல் எதை அர்த்தப்படுத்தினார்? சூழமைவு காட்டுகிறபடி, பூர்வ கிறிஸ்தவர்களிடமிருந்த சக்தியின் வரங்களைப் பற்றி அவர் விவாதித்துக் கொண்டிருந்தார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சபையின் மீது கடவுளின் தயவு இருந்தது என்பதற்கு அந்த வரங்களே அடையாளம். ஆனால் எல்லா கிறிஸ்தவர்களாலும் சுகப்படுத்தவோ தீர்க்கதரிசனம் உரைக்கவோ அல்லது அந்நிய பாஷை பேசவோ முடியவில்லை. இருந்தாலும், அது ஒரு பெரிய விஷயமாக இருக்கவில்லை; ஏனெனில் அற்புத வரங்கள் கடைசியில் இல்லாமல் போய்விடும். என்றாலும், ஒன்று மட்டும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்; எல்லா கிறிஸ்தவர்களாலும் வளர்க்க முடிந்த ஒன்று அது. வேறெந்த அற்புத வரத்தையும்விட அது மிகவும் குறிப்பிடத்தக்கது, நிலையானது. சொல்லப்போனால், பவுல் அதை “எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த வழி” என்று அழைத்தார். (1 கொரிந்தியர் 12:31) அந்த “மிகச் சிறந்த வழி” எது? அதுவே அன்பின் வழி.
22 உண்மையில், பவுல் விவரித்த கிறிஸ்தவ அன்பு “ஒருபோதும் ஒழியாது,” அதாவது அது ஒருபோதும் முடிவுக்கு வராது. இன்று வரை, சுயநலமில்லாத அன்பு இயேசுவின் உண்மையான சீஷர்களை அடையாளம் காட்டுகிறது. உலகெங்கிலும் உள்ள யெகோவாவின் வணக்கத்தாருடைய சபைகளில் இத்தகைய அன்பிற்கு அத்தாட்சியை காண்கிறோம் அல்லவா? அத்தகைய அன்பு என்றும் நிலைத்திருக்கும், ஏனென்றால் உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா முடிவில்லாத வாழ்வைத் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 37:9-11, 29) ‘தொடர்ந்து அன்பின் வழியில் நடக்க’ நம்மால் இயன்ற அனைத்தையும் எப்பொழுதும் செய்வோமாக. அப்போது கொடுப்பதால் வரும் அதிக மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். அதைவிட முக்கியமாக, நாம் என்றென்றும் வாழலாம். ஆம், நமது அன்புள்ள கடவுளாகிய யெகோவாவைப் போலவே என்றென்றும் அன்பு காட்டலாம்.
யெகோவாவின் ஜனங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பே அவர்களது அடையாளம்
23 அன்பு என்ற பகுதியின் இந்தக் கடைசி அதிகாரத்தில், நாம் ஒருவருக்கொருவர் எவ்வாறு அன்பு காட்டலாம் என்பதை சிந்தித்தோம். யெகோவாவின் அன்பிலிருந்தும், அதேபோல அவருடைய வல்லமை, நீதி, ஞானம் ஆகியவற்றிலிருந்தும் பயனடையும் அநேக வழிகளை சிந்தித்துப் பார்க்கும்போது, நாம் இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் யெகோவாவை உண்மையிலேயே நேசிக்கிறேன் என்பதை எவ்வாறு காட்டலாம்?’ இந்தக் கேள்வி கடைசி அதிகாரத்தில் கலந்தாலோசிக்கப்படும்.
a ஆனால் கிறிஸ்தவ அன்பு எளிதில் ஏமாறக்கூடியது அல்ல. “பிரிவினைகளையும் தடைகளையும் ஏற்படுத்துகிறவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், அவர்களிடமிருந்து விலகியிருங்கள்” என பைபிள் நமக்கு அறிவுறுத்துகிறது.—ரோமர் 16:17.