முன்னுரை
இந்த விநோதமான முரண்பாட்டை சற்று சிந்தித்துப் பாருங்கள்: தொழில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மகிழ்ச்சியாக அல்லது மிக மகிழ்ச்சியாக வாழ்வதாக எண்ணுகிறார்கள். ஆனால் அத்தேசத்தில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் 10 மருந்துகளில் 3 மன உளைச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு எழுதித் தரப்படுகின்றன. அதே நாட்டில் 91 சதவீத மக்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட பாதிப் பேருடைய மண வாழ்க்கையோ மணவிலக்கில் முடிவடைகிறது!
ஏறக்குறைய 18 நாடுகளிலுள்ள மக்களிடம்—உலக ஜனத்தொகையில் சுமார் பாதிப் பேரிடம்—நடத்தப்பட்ட ஆய்வு இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது: “எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற மனநிலை எனும் போர்வை உலகின் பெரும்பகுதியை போர்த்தியிருப்பதாக தெரிகிறது.” ஆகவே, அநேகர் முழு திருப்தியான வாழ்க்கை வாழ்வதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. உங்களுடைய வாழ்க்கை எப்படி? உண்மையிலேயே திருப்தியளிக்கும் வாழ்க்கை வாழ உங்களுக்கு உதவி செய்யவே இந்தச் சிற்றேடு தயாரிக்கப்பட்டுள்ளது.