Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 5

சாமுவேல் நல்ல பிள்ளை

சாமுவேல் நல்ல பிள்ளை

சாமுவேல் சின்ன வயசிலிருந்தே ஆசரிப்புக்கூடாரத்தில வேலை செய்தான். சரி, ஆசரிப்புக்கூடாரம்னா என்ன தெரியுமா? அது யெகோவாவை வணங்குற இடம். சாமுவேல் எப்படி அங்கே வந்தான்? படிக்கலாமா?

சாமுவேலோட அம்மா பேரு அன்னாள். அன்னாளுக்குக் குழந்தைகளை ரொம்ப பிடிக்கும். ஆனா, ரொம்ப வருஷமா அன்னாளுக்குக் குழந்தையே இல்லை. அதனால, ‘எனக்கு குழந்தை வேணும்’னு யெகோவாகிட்ட கெஞ்சி கேட்டாங்க. ‘எனக்கு பையன் பிறந்தா, அவனை உங்க வீட்டுக்கே அனுப்புறேன். அவன் அங்கேயே தங்கி, உங்களுக்கு வேலை செய்யட்டும்’னு ஜெபம் செய்தாங்க. யெகோவா அவங்க ஜெபத்தை கேட்டார். அன்னாளுக்கு ஒரு குழந்தையை கொடுத்தார். அன்னாள் அந்தக் குழந்தைக்கு சாமுவேல்-னு பேரு வைச்சாங்க. யெகோவாகிட்ட சொன்ன மாதிரியே, சாமுவேலை ஆசரிப்புக்கூடாரத்துக்கு கூட்டிட்டுபோய் விட்டாங்க. அப்போ சாமுவேலுக்கு நாலு வயசுதான் இருக்கும்.

ஆசரிப்புக்கூடாரத்தில தலைமை குரு இருப்பார். தலைமை குரு என்ன செய்வார் தெரியுமா? அவர் மக்களுக்காக யெகோவாகிட்ட பேசுவார். ஏலி-னு ஒருத்தர் தலைமை குருவா இருந்தார். அவருக்கு ரெண்டு பசங்க இருந்தாங்க. ரெண்டு பேரும் ஆசரிப்புக்கூடாரத்தில வேலை செய்தாங்க. ஆசரிப்புக்கூடாரத்துக்கு வந்து எல்லாரும் கடவுளை வணங்குவாங்க. அதனால அங்கே வேலை செய்றவங்க நல்லவங்களா இருக்கணும். ஆனால், ஏலியோட பசங்க ரெண்டு பேரும் கெட்டவங்க. அவங்க செஞ்ச தப்பு எல்லாத்தையும் சாமுவேல் பார்த்தான். ஏலியோட பசங்களை பார்த்து சாமுவேலும் கெட்ட பையனா மாறிட்டானா?— இல்லவே இல்லை! அப்பா-அம்மா சொல்லிக்கொடுத்த மாதிரி சாமுவேல் எப்பவும் நல்ல பிள்ளையா இருந்தான்.

ஏலி அவரோட பசங்களை என்ன செய்திருக்கணும்?— கடவுளோட வீட்டைவிட்டு துரத்தியிருக்கணும். தண்டனை கொடுத்திருக்கணும். ஆனா, ஏலி அப்படிச் செய்யல. அதனால யெகோவாவுக்கு அவங்கமேல கோபம் வந்துச்சு. ஏலிக்கும் அவரோட பசங்களுக்கும் தண்டனை கொடுக்க நினைச்சார்.

யெகோவா சொன்னதை ஏலிகிட்ட சாமுவேல் சொல்கிறான்

ஒருநாள் ராத்திரி சாமுவேல் தூங்கிட்டு இருந்தான். அப்போ யாரோ ‘சாமுவேல்’-னு கூப்பிட்டாங்க. ஏலிதான் கூப்பிடுறார்னு சாமுவேல் நினைச்சான். அதனால ஏலிகிட்ட போனான். ஆனா, ‘நான் கூப்பிடலயே’னு ஏலி சொன்னார். மூணு தடவை இதே மாதிரி நடந்துச்சு. அப்புறமா ஏலி சொன்னார்: ‘திரும்பவும் யாராவது உன்னை கூப்பிட்டா, சொல்லுங்க யெகோவாவேனு சொல்லு.’ மறுபடியும் யெகோவா சாமுவேலை கூப்பிட்டார். ஏலி சொல்லிக் கொடுத்த மாதிரியே சாமுவேல் சொன்னான். அப்போ யெகோவா சாமுவேல்கிட்ட பேசினார். ‘ஏலியோட பசங்க ரெண்டு பேரும் கெட்டவங்களா இருக்கிறாங்க. அதனால அவங்களுக்கு தண்டனை கொடுக்கப் போறேன். ஏலிக்கும் தண்டனை கொடுக்கப் போறேன்’னு சொன்னார். ஏலிகிட்ட போய் இதைச் சொல்ல சாமுவேலுக்கு எப்படி இருந்திருக்கும்?— சாமுவேலுக்கு பயமா இருந்துச்சு. ஆனாலும், யெகோவா சொன்னதை எல்லாம் அப்படியே ஏலிகிட்ட சொன்னான். யெகோவா சொன்ன மாதிரியே ஏலி செத்துப்போனார், அவரோட இரண்டு பசங்களும் செத்துப்போனாங்க.

சாமுவேலோட இருந்த பசங்க கெட்டவங்களா இருந்தாங்க. ஆனாலும் சாமுவேல் நல்ல பிள்ளையா இருந்தான். நீயும் சாமுவேல் மாதிரி இருப்பியா? எப்பவும் நல்ல பிள்ளையா இருப்பியா? நீ நல்லப் பிள்ளையா இருந்தா யெகோவாவுக்கும் பிடிக்கும், அப்பா-அம்மாவுக்கும் பிடிக்கும்.

பைபிளில் படிங்க