Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

வெற்றிகரமான திருமணத்திற்கென தயாராகுதல்

வெற்றிகரமான திருமணத்திற்கென தயாராகுதல்

1, 2. (அ) திட்டமிடுவதன் முக்கியத்துவத்தைக் குறித்து இயேசு எவ்வாறு அழுத்தியுரைத்தார்? (ஆ) எந்த அம்சத்தில் குறிப்பாக திட்டமிடுதல் முக்கியமானது?

 கட்டடம் ஒன்றைக் கட்டுவதற்கு கவனமான முன்தயாரிப்பு தேவை. அஸ்திபாரம் போடுவதற்கு முன்பு, நிலம் வாங்கப்பட்டு, திட்டப்படங்கள் வரையப்பட வேண்டும். இருப்பினும், வேறு ஒரு காரியமும் முக்கியமாய் தேவைப்படுகிறது. இயேசு சொன்னார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, . . . அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?”—லூக்கா 14:28, 30.

2 ஒரு கட்டடம் கட்டும் விஷயத்தில் எது உண்மையாயுள்ளதோ அதுவே ஒரு வெற்றிகரமான திருமணத்தைக் கட்டும் விஷயத்துக்கும் பொருந்துகிறது. “எனக்கு கல்யாணம் செய்துகொள்ள ஆசை,” என்று அநேகர் சொல்கின்றனர். ஆனால் எத்தனை பேர் அதற்காக தாங்கள் செய்யவேண்டிய தியாகத்தைக் குறித்து நிதானமாய் சிந்தித்துப் பார்க்கின்றனர்? திருமணத்தைப் பற்றி பைபிள் நல்லவிதத்தில் ஆதரித்து பேசுகிறபோதிலும், திருமணம் அளிக்கும் சவால்கள்மீதும் அது கவனத்தைத் திருப்புகிறது. (நீதிமொழிகள் 18:22, NW; 1 கொரிந்தியர் 7:28) ஆகையால், திருமணம் செய்துகொள்வதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருப்போர் அதன் ஆசீர்வாதங்களைப் பற்றியும் அதற்காக செய்யவேண்டிய தியாகத்தைப் பற்றியும் உள்ளதை உள்ளபடி காணும் நோக்குநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.

3. திருமணம் செய்து கொள்வதற்காக திட்டமிடுவோருக்கு பைபிள் ஏன் மதிப்புவாய்ந்த வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது, என்ன மூன்று கேள்விகளுக்கு பதிலளிக்க அது நமக்கு உதவிசெய்யும்?

3 பைபிள் அதற்கு உதவக்கூடும். திருமணத்தை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவா தேவனால் அதன் புத்திமதி ஏவப்பட்டு எழுதப்பட்டது. (எபேசியர் 3:14, 15; 2 தீமோத்தேயு 3:16) இது பழமையான புத்தகமாக இருந்தபோதிலும் நம் நாளுக்கேற்ற வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது. இப்புத்தகத்தில் காணப்படும் நியமங்களைப் பயன்படுத்தி நாம் கீழ்க்காண்பவற்றை முடிவுசெய்வோம்: (1) ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் திருமணத்திற்கு தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும்? (2) ஒரு துணைவரிடத்தில் எதை எதிர்பார்க்க வேண்டும்? (3) திருமணநோக்குடன் பழகுவதை எவ்வாறு மதிப்பிற்குரியதாக வைக்கலாம்?

நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருக்கிறீர்களா?

4. ஒரு வெற்றிகரமான திருமணத்தைக் காத்துவருவதற்கு ஒரு முக்கியமான காரணக்கூறு என்ன, ஏன்?

4 ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கு அதிக பணம் செலவாகக்கூடும் என்றாலும் அதை நீண்டகாலம் பராமரிப்பதற்கும் அதைப்போன்றே அதிக பணம் செலவாகும். திருமணத்தைக் குறித்ததிலும் நிலைமை அதுபோலவே உள்ளது. திருமணம் செய்துகொள்வதே ஒரு சவாலாக தோன்றுகிறது; எனினும், திருமண உறவை வருடாவருடமாக தொடர்ந்து காத்துவருவதைப்பற்றியும்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த உறவை காத்துவருவது எதை உட்படுத்தும்? முழு இதயத்தோடு ஏற்றுக்கொண்ட பொறுப்பே முக்கிய காரணக்கூறு ஆகும். திருமண உறவைப் பைபிள் இப்படிதான் விவரிக்கிறது: “இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:24) மணவிலக்கு செய்து மறுமணம் செய்துகொள்வதற்கான ஒரே வேதப்பூர்வமான காரணத்தை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார்—அது ‘வேசித்தனம்’ அதாவது, திருமணத்திற்கு புறம்பே கொள்ளப்படும் கள்ளத்தனமான பாலுறவு ஆகும். (மத்தேயு 19:9) திருமணம் செய்துகொள்வதைப் பற்றி நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தால், இந்த வேதப்பூர்வமான தராதரங்களை மனதில் வையுங்கள். மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இந்தப் பொறுப்புக்கு நீங்கள் தயாராக இல்லையென்றால், நீங்கள் திருமணத்திற்கும் தயாராக இல்லை.—உபாகமம் 23:21; பிரசங்கி 5:4, 5.

5. மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்பது சிலரைப் பயப்படுத்துவதாய் இருந்தாலும், அது ஏன் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்திருப்பவர்களால் அதிக மதிப்புமிக்கதாய் கருதப்பட வேண்டும்?

5 மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ற கருத்து அநேகரைப் பயப்படுத்துகிறது. “நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இணைந்திருக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தது, தடைசெய்யப்பட்டதுபோல், அடைத்து வைக்கப்பட்டதுபோல், முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதுபோல் என்னை உணரச் செய்தது,” என்று ஒரு இளம் மனிதர் ஒப்புக்கொண்டார். ஆனால் நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபரை உண்மையிலேயே நேசித்தீர்களென்றால், மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்பது ஒரு பாரத்தைப் போல் தோன்றாது. அதற்கு மாறாக, அது பாதுகாப்புக்கு ஊற்றுக்கண்ணாகக் கருதப்படும். திருமணத்தில் உட்பட்டிருக்கும் மனப்பூர்வமான பொறுப்புணர்வு ஒரு தம்பதியை நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும் ஒன்றாக சேர்ந்து இருக்கவும், என்ன நேரிட்டாலும் ஒருவருக்கொருவர் ஆதரவாயிருக்கவும் விரும்பும்படி செய்விக்கும். மெய்யான அன்பு “சகலத்தையும் தாங்கும்,” “சகலத்தையும் சகிக்கும்,” என்று கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 13:4, 7) “திருமணத்தில் உள்ள மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்னை அதிக பாதுகாப்பாய் உணரும்படி செய்விக்கிறது,” என்று ஒரு பெண் சொல்கிறாள். “நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து இருக்கப்போகிறோம் என்பதை ஒருவருக்கொருவர் முன்னிலையிலும் உலகத்துக்கு முன்பாகவும் ஒத்துக்கொண்டதால் விளையும் ஆறுதலை நான் விரும்புகிறேன்.”—பிரசங்கி 4:9-12.

6. இளம் வயதில் அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ளாதிருப்பது ஏன் சிறந்தது?

6 அப்படிப்பட்ட மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு இசைவாக வாழ்வதற்கு முதிர்ச்சி தேவை. இதனால், பாலின உணர்வு மேலோங்கியிருந்து ஒருவரின் சீர்தூக்கிப் பார்க்கும் திறமையைத் திரித்து தவறாக வழிநடத்தும் காலப்பகுதியாகிய ‘கன்னிகைப்பருவம் கடந்துபோகும் வரை’ கிறிஸ்தவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று பவுல் புத்திமதி கொடுக்கிறார். (1 கொரிந்தியர் 7:36) இளம் நபர்கள் வளர்ந்து வருகையில் விரைவாக மாறுகின்றனர். மிகவும் இளைஞராயிருக்கையில் திருமணம் செய்துகொள்ளும் அநேகர் ஒருசில வருடங்களுக்குள் தங்களுடைய மற்றும் தங்கள் துணைவருடைய தேவைகளும் விருப்பங்களும் மாறிவிட்டிருப்பதைக் காண்கின்றனர். சிறிது காலத்துக்கு காத்திருந்து திருமணம் செய்துகொள்பவர்களைவிட பருவவயதிலேயே திருமணம் செய்துகொள்பவர்கள் அதிக மகிழ்ச்சியற்றவர்களாயிருக்கவும் மணவிலக்கை நாடவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று புள்ளிவிவரங்கள் காண்பிக்கின்றன. ஆகையால் அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ளாதீர்கள். ஒரு இளம், வயதுவந்த நபராக திருமணம் செய்துகொள்ளாமல் சில வருடங்கள் வாழ்வது உங்களுக்கு அருமையான அனுபவத்தை அளிக்கலாம். அந்த அனுபவம் உங்களை ஒரு பொருத்தமான துணைவராக இருப்பதற்கு அதிக முதிர்ச்சிவாய்ந்தவராகவும், மேன்மேலும் தகுதிவாய்ந்தவராகவும் ஆக்கும். திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருப்பது உங்களை நீங்களே நன்றாக புரிந்துகொள்வதற்கும்கூட உதவக்கூடும்—இது உங்கள் திருமணத்தில் ஒரு வெற்றிகரமான உறவை வளர்த்துக்கொள்வதற்கு இன்றியமையாதது.

உங்களையே முதலில் அறிந்துகொள்ளுங்கள்

7. திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏன் தங்களைத் தாங்களே முதலாவது அறிந்துகொள்ள வேண்டும்?

7 நீங்கள் ஒரு துணைவரிடமிருந்து எதிர்பார்க்கும் பண்புகளைப் பட்டியலிடுவது சுலபமானதாக இருக்கிறதல்லவா? பெரும்பாலானோருக்கு சுலபமானதாக இருக்கிறது. இருப்பினும், உங்களுடைய சொந்த பண்புகளைப் பற்றியென்ன? ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு பங்களித்து உதவக்கூடிய என்ன விசேஷமான இயல்புகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எப்படிப்பட்ட கணவனாய் அல்லது மனைவியாய் இருப்பீர்கள்? உதாரணமாக, நீங்கள் உங்கள் தவறுகளைத் தயக்கமின்றி ஒப்புக்கொண்டு புத்திமதியை ஏற்றுக்கொள்கிறீர்களா, அல்லது திருத்தப்படும்போது எப்போதும் உங்களைத் தற்காத்துக்கொள்கிறீர்களா? நீங்கள் பொதுவாக மனமகிழ்வோடும் எதிலும் நலமே காண்கிறவர்களாகவும் இருக்கிறீர்களா, அல்லது முகவாட்டமாயும் அடிக்கடி குறைகூறும் இயல்புள்ளவர்களாயும் இருக்கிறீர்களா? (நீதிமொழிகள் 8:33; 15:15) திருமணம் உங்கள் ஆளுமையை மாற்றிவிடாது என்பதை நினைவில் வையுங்கள். நீங்கள் திருணத்திற்கு முன்பு பெருமையுள்ளவர்களாகவோ, எளிதில் புண்படக்கூடியவர்களாகவோ, அல்லது அளவுக்குமீறி நம்பிக்கையற்றவர்களாகவோ இருந்தால், திருமணம் செய்த பின்பும் அவ்வாறே இருப்பீர்கள். மற்றவர்கள் நம்மைக் காண்பது போல் நம்மை நாமே காண்பது கடினமாயிருப்பதால், உங்களைப் பற்றி குறிப்புகளும் ஆலோசனைகளும் ஒளிவு மறைவின்றி கூறும்படி பெற்றோரையோ அல்லது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பரையோ ஏன் கேட்கக்கூடாது? மாற்றங்கள் செய்யவேண்டுமென்று நீங்கள் அறிந்துகொண்டால், திருமணம் செய்துகொள்வதற்கென படிகளை எடுப்பதற்கு முன் அவற்றின் பேரில் உழையுங்கள்.

திருமண வாழ்க்கையில் உங்களுக்கு அதிக உதவியாய் இருக்கப்போகும் பண்புகள், பழக்கவழக்கங்கள், திறமைகள் ஆகியவற்றைத் திருமணத்திற்கு முன்பே வளர்த்துக்கொள்ளுங்கள்

8-10. ஒரு நபர் திருமணத்திற்காக தயாராகையில், அவருக்கு உதவி செய்யக்கூடிய என்ன புத்திமதியைப் பைபிள் அளிக்கிறது?

8 கடவுளுடைய பரிசுத்த ஆவி நம்மில் கிரியை செய்து, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” போன்ற பண்புகளைப் பிறப்பிப்பதற்கு அனுமதிக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ‘உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகுங்கள்’ என்றும் “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” என்றும் அது நமக்கு சொல்கிறது. (கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 4:23, 24) திருமணத்திற்கு முன்பே இந்தப் புத்திமதியைப் பொருத்துவது—வங்கியில் பணம் சேமித்து வைப்பது போல்—எதிர்காலத்தில், நீங்கள் திருமணம் செய்துகொள்கையில் அதிக மதிப்புவாய்ந்ததாக நிரூபிக்கும்.

9 உதாரணமாக, நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுடைய உடல் தோற்றத்தைக் காட்டிலும் ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்திற்கு’ கூடுதலான கவனம் செலுத்த கற்றுக்கொள்ளுங்கள். (1 பேதுரு 3:3, 4) மெய்யான ‘அழகிய கிரீடம்’ போல் விளங்கும் ஞானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தன்னடக்கமும் தெளிந்த புத்தியும் உங்களுக்கு உதவிசெய்யும். (நீதிமொழிகள் 4:9, NW; 31:1030; 1 தீமோத்தேயு 2:9, 10) நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்களைத் தயவோடும் மரியாதையோடும் நடத்த கற்றுக்கொள்ளுங்கள். (1 தீமோத்தேயு 5:1, 2) தீர்மானங்களைச் செய்வதற்கும் பொறுப்புகளைத் தாங்குவதற்கும் கற்றுக்கொள்கையில் அடக்கமுள்ளவர்களாகவும் தாழ்மையுள்ளவர்களாகவும் இருக்கவும்கூட கற்றுக்கொள்ளுங்கள். ஆணவத்துடன் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மை திருமணத்தில் பிரச்சினைகளுக்கு வழிநடத்தும்.—நீதிமொழிகள் 29:23; மீகா 6:8; எபேசியர் 5:28, 29.

10 இந்த அம்சங்களில் மனதை மாற்றியமைத்துக்கொள்வது சுலபமானதாக இல்லாவிட்டாலும்கூட, இது எல்லா கிறிஸ்தவர்களும் உழைக்க வேண்டிய விஷயம். இது நீங்கள் ஒரு சிறந்த திருமண துணைவராக இருப்பதற்கு உங்களுக்கு உதவும்.

ஒரு துணைவரில் எதை எதிர்பார்ப்பது

11, 12. இரண்டு நபர்கள் ஒன்றாக கூடிவாழ்வதற்கு தாங்கள் பொருத்தமானவர்களா இல்லையா என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

11 ஒரு நபர் தானே தன் திருமண துணைவரை அல்லது துணைவியை தேர்ந்தெடுக்கும் பழக்கம் நீங்கள் வசிக்கும் இடத்தில் உள்ளதா? அப்படி இருக்கிறதென்றால், எதிர்பாலார் ஒருவர் உங்கள் மனதைக் கவர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ‘திருமணம் செய்துகொள்வது உண்மையிலேயே என் நோக்கமா?’ என்று முதலில் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பொய் எதிர்பார்ப்புகளைத் தூண்டி எழுப்புவதன் மூலம் மற்றொரு நபரின் உணர்ச்சிகளோடு விளையாடுவது கொடூரமானது. (நீதிமொழிகள் 13:12) பின்பு, ‘நான் திருமணம் செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் ஆம் என்று இருந்தால், அடுத்தபடியாக நீங்கள் எடுக்கும் படிகள் உள்ளூர் பழக்கவழக்கங்களைச் சார்ந்து வித்தியாசப்படும். சில தேசங்களில் உள்ளதுபோல், அந்தக் குறிப்பிட்ட நபரை சிறிது காலம் கவனித்த பிறகு நீங்கள் அவரை அணுகி அவரைப் பற்றி நன்றாக அறிந்துகொள்ள உங்களுக்கிருக்கும் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். உங்கள் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டால், வெறுப்பூட்டும் அளவுக்கு வற்புறுத்தாதீர்கள். இந்த விஷயத்தில் தீர்மானம் செய்வதற்கு அந்த நபருக்கும்கூட உரிமை உள்ளது என்பதை மனதில் வையுங்கள். இருப்பினும், பதில் ஆம் என்று இருந்தால், நீங்கள் ஒன்றாக சேர்ந்து நல்ல பலன் தரும் வேலைகளில் நேரத்தைச் செலவழிக்க ஏற்பாடு செய்யலாம். அந்த நபரை திருமணம் செய்துகொள்வது ஞானமாக இருக்குமா என்பதைக் காண இது உங்களுக்கு சந்தர்ப்பத்தை அளிக்கும். * இந்தத் தருணத்தில் நீங்கள் எதை எதிர்பார்க்க வேண்டும்?

12 அந்தக் கேள்விக்கு பதிலளிக்க, ஒரு பியானோவையும் கிட்டாரையும் எடுத்துக்கொள்ளலாம். அந்த இரண்டு இசைக்கருவிகளையும் சரியான சுருதியில் தனித்தனியாக இசைத்தால், அந்த இரண்டில் எதுவும் இனிமையான இசையை உண்டாக்கும். இருந்தபோதிலும், இந்த இரண்டு இசைக்கருவிகளையும் ஒன்றாக சேர்த்து இசைத்தால்? இப்போது அவை இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய சுருதியில் இருக்க வேண்டும். உங்களுடைய விஷயத்திலும் வருங்கால துணைவருடைய விஷயத்திலும் இது இப்படித்தான் உள்ளது. நீங்கள் இருவரும் தனிப்பட்ட நபர்களாக உங்களுடைய ஆளுமையின் விசேஷ இயல்புகளைச் சரியான “சுருதியில்” வைப்பதற்கு கடினமாக உழைத்திருப்பீர்கள். ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால்: நீங்கள் ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய சுருதியில் இருக்கிறீர்களா? வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஒன்றாக கூடிவாழ்வதற்கு பொருத்தமானவர்களாய் இருக்கிறீர்களா?

13. உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளாத ஒரு நபரோடு திருமண நோக்குடன் பழகுதல் ஏன் அதிக ஞானமற்றது?

13 நீங்கள் இருவரும் பொதுவான நம்பிக்கைகளையும் நியமங்களையும் கொண்டிருப்பது முக்கியமானது. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.” (2 கொரிந்தியர் 6:14; 1 கொரிந்தியர் 7:39) கடவுள் பேரிலுள்ள உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ளாத ஒருவரை திருமணம் செய்துகொள்கையில், மிகவும் கடுமையான ஒத்திசைவற்ற நிலை நிலவ அதிக சாத்தியம் உள்ளது. மறுபட்சத்தில், யெகோவா தேவனிடமாக கொண்டுள்ள பரஸ்பர பக்தி ஒற்றுமைக்கு மிகவும் பலமான அடிப்படையாய் அமைகிறது. நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென்றும் நீங்கள் திருமணம் செய்துகொள்ளும் நபரோடு மிகவும் நெருக்கமான பிணைப்பை மகிழ்ந்தனுபவிக்க வேண்டுமென்றும் யெகோவா தேவன் விரும்புகிறார். நீங்கள் அவரோடும் ஒருவரோடொருவரும் அன்பு என்னும் முப்புரி பிணைப்பால் நெருக்கமாய் இணைந்திருக்கும்படி அவர் விரும்புகிறார்.—பிரசங்கி 4:12.

14, 15. திருமணத்தில் ஒற்றுமையாயிருப்பதற்கு ஒரே விசுவாசத்தில் இருப்பதுமட்டுமே தேவையான ஓர் அம்சமா? விளக்குங்கள்.

14 ஒன்றாக சேர்ந்து கடவுளை வணங்குவது ஒற்றுமைக்கு அதிமுக்கியமான அம்சமாக இருந்தாலும், இதில் அதிகம் உட்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பொருத்தமான சுருதியில் இருக்க வேண்டுமென்றால், நீங்களும் உங்களுடைய வருங்கால துணைவரும் ஒரேவிதமான இலக்குகளை வைத்திருக்க வேண்டும். உங்களுடைய இலக்குகள் என்ன? உதாரணமாக, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி நீங்கள் இருவரும் எவ்வாறு உணருகிறீர்கள்? உங்களுடைய வாழ்க்கையில் என்ன காரியங்கள் முதலிடத்தை வகிக்கின்றன? * (மத்தேயு 6:33) உண்மையாகவே வெற்றிகரமாய் இருக்கும் திருமணத்தில், தம்பதிகள் நல்ல நண்பர்களாய் இருக்கின்றனர், இருவரும் ஒன்றுசேர்ந்து இருப்பதில் மகிழ்ச்சி காண்கின்றனர். (நீதிமொழிகள் 17:17) இப்படி இருப்பதற்கு, அவர்கள் இருவருக்கும் பொதுவான அக்கறைகள் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில், ஒரு நெருக்கமான தோழமையைக் காத்துக்கொள்வது கடினமாயிருக்கும்—திருமண வாழ்க்கையைக் காத்துக்கொள்வது இன்னும் அதிக கடினமாயிருக்கும். இருப்பினும், உங்கள் வருங்கால துணைவர் உலாவச் செல்லுதல் போன்ற ஒரு குறிப்பிட்ட செயலை அனுபவிக்கிறார், ஆனால் அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால், நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அர்த்தமா? அவ்வாறு இருக்கத் தேவையில்லை. நீங்கள் ஒருவேளை மற்ற அதிமுக்கியமான அக்கறைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். மேலும், நல்ல பலன் தரும் வேலைகளில் பங்குகொள்வதன் மூலம் நீங்கள் உங்கள் வருங்கால துணைவருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரலாம், ஏனென்றால் அவர் அவற்றை அனுபவித்து மகிழ்கிறார்.—அப்போஸ்தலர் 20:35.

15 நீங்கள் இருவரும் எவ்வாறு எல்லா வகையிலும் ஒத்திருக்கிறீர்கள் என்பதற்கு பதிலாக நீங்கள் இருவரும் எவ்வாறு நிலைமைக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக்கொள்கிறீர்கள் என்பதில்தான் ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய உங்களுடைய தன்மை பெருமளவில் சார்ந்துள்ளது. “நாம் எல்லா காரியங்களிலும் ஒத்துப்போகிறோமா?” என்று கேட்பதற்குப் பதிலாக, “நாம் ஒத்துக் காணமுடியாத சந்தர்ப்பங்களில் என்ன நடக்கிறது? நாம் ஒருவருக்கொருவர் மரியாதையோடும் கண்ணியத்தோடும் விட்டுக்கொடுத்து விஷயங்களை அமைதியாக கலந்து பேசமுடியுமா? அல்லது கலந்துரையாடல்கள் எப்போதும் சூடான தர்க்கங்களில் முடிவடைகின்றனவா?” போன்றவை நல்ல கேள்விகளாக இருக்கலாம். (எபேசியர் 4:29, 31) நீங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், பெருமையுள்ளவராகவும் பிடிவாதமுள்ளவராகவும் விட்டுக்கொடுக்க எப்போதும் விருப்பப்படாதவராகவும் அல்லது எப்போதும் தன் சொந்த விருப்பத்தின்படி அனைத்தும் நடக்க வேண்டும் என்பதற்காக வற்புறுத்துபவராகவும் சூழ்ச்சிசெய்கிறவராகவும் இருக்கும் எவரையும் குறித்து விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்.

முன்பே விசாரித்து அறியுங்கள்

16, 17. வருங்கால திருமண துணைவரைக் குறித்து சிந்தித்துப்பார்க்கையில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எதை எதிர்பார்க்க வேண்டும்?

16 கிறிஸ்தவ சபையில், பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்போர் “முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்.” (1 தீமோத்தேயு 3:10) நீங்களும்கூட இந்த நியமத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஒரு பெண் இப்படியாக கேட்டுக்கொள்ளலாம், “இந்த மனிதர் எத்தகைய பெயர் பெற்றிருக்கிறார்? அவருடைய நண்பர்கள் யாவர்? அவர் தன்னடக்கத்தைக் காண்பிக்கிறாரா? வயதானவர்களை அவர் எப்படி நடத்துகிறார்? அவர் எப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்? அவர் எவ்வாறு தன்னுடைய குடும்பத்தாரோடு நடந்துகொள்கிறார்? பணத்தைக் குறித்து அவருடைய மனநிலை என்ன? அவர் மதுபானங்களை அளவுக்குமீறி குடிக்கிறாரா? அவர் முன்கோபியா, வன்முறையைக் கையாளுபவராகவும்கூட ஆகிவிடுவாரா? அவர் சபையில் என்ன பொறுப்புகளைக் கொண்டிருக்கிறார், அவற்றை அவர் எவ்வாறு கையாளுகிறார்? நான் அவருக்கு ஆழ்ந்த மரியாதை செலுத்தமுடியுமா?” லேவியராகமம் 19:32; நீதிமொழிகள் 22:29; 31:23; எபேசியர் 5:3-5, 33; 1 தீமோத்தேயு 5:8; 6:10; தீத்து 2:6, 7.

17 ஒரு ஆண் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், “இந்தப் பெண் கடவுள் பேரில் அன்பும் மரியாதையும் காண்பிக்கிறாளா? ஒரு வீட்டை கவனித்துக்கொள்வதற்கான திறமை அவளுக்கு இருக்கிறதா? அவளுடைய குடும்பம் நம்மிடம் எதை எதிர்பார்க்கும்? அவள் ஞானமுள்ளவளா? கடுமையாக உழைக்கிறவளா? சிக்கனமாக இருப்பவளா? அவள் எதைக் குறித்து பேசுகிறாள்? அவள் மற்றவர்கள் நலனில் மெய்யான அக்கறை கொண்டிருப்பவளா, அல்லது அவள் சுயநலமுள்ளவளா, அநாவசியமாக பிறருடைய விஷயங்களில் தலையிடுபவளா? அவள் நம்பத்தக்கவளா? அவள் தலைமை வகிப்புக்கு கீழ்ப்படிய மனமுள்ளவளா, அல்லது பிடிவாதமாய் கலகத்தனமும் செய்பவளா?”—நீதிமொழிகள் 31:10-31; லூக்கா 6:45; எபேசியர் 5:22, 23; 1 தீமோத்தேயு 5:13; 1 பேதுரு 4:15.

18. திருமண நோக்குடன் பழகுகையில் சிறிய பலவீனங்களைக் கவனித்தால், எதை மனதில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

18 காதல் காவியத்தில் வரும் ஒரு கற்பனைக் கதாநாயகனையோ அல்லது ஒரு கதாநாயகியையோ அல்ல, ஆனால் ஆதாமின் சந்ததியிலிருந்து வந்த அபூரணமான ஒருவரை நீங்கள் கையாளுகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். எல்லாரும் குறைபாடுள்ளவர்கள், உங்களுடையதும் உங்களுடைய வருங்கால துணைவருடையதுமான இந்தக் குறைபாடுகளில் சிலவற்றை நாம் கவனியாது விட்டுவிட வேண்டும். (ரோமர் 3:23; யாக்கோபு 3:2) மேலும், கவனிக்கப்பட்ட பலவீனம் ஆவிக்குரியபிரகாரமாய் வளருவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கலாம். உதாரணமாக, திருமண நோக்குடன் பழகும் சமயத்தில் உங்களுக்குள்ளே தர்க்கம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். சிந்தித்துப் பாருங்கள்: ஒருவரையொருவர் நேசித்து மரியாதை காண்பிக்கும் ஆட்களும்கூட சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்கின்றனர். (ஒப்பிடுக: ஆதியாகமம் 30:2; அப்போஸ்தலர் 15:39.) நீங்கள் இருவரும் வெறுமனே கொஞ்சம் கூடுதலாக ‘ஆவியை அடக்கி’ விஷயங்களை எவ்வாறு சமாதானமாக தீர்த்துக்கொள்ளலாம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்குமா? (நீதிமொழிகள் 25:28) உங்கள் வருங்கால துணை திருத்தங்கள் செய்துகொள்வதற்கான ஆர்வத்தைக் காண்பிக்கிறாரா? நீங்கள் காண்பிக்கிறீர்களா? நீங்கள் எளிதில் புண்படும் தன்மையை குறைத்துக்கொண்டு, தொட்டால்சிணுங்கியாக இல்லாமல் இருக்க கற்றுக்கொள்ளக்கூடுமா? (பிரசங்கி 7:9) பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள கற்றுக்கொள்வது நேர்மையான பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரு முறையை ஏற்படுத்தக்கூடும், நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டால் அது மிகவும் முக்கியமாய் தேவைப்படும்.—கொலோசெயர் 3:13.

19. திருமண நோக்குடன் பழகுகையில் வினைமையான பிரச்சினைகள் எழும்பினால் எது ஒரு ஞானமான நடத்தைப்போக்காக இருக்கும்?

19 ஆனால் உங்களை வெகுவாக தொல்லைப்படுத்தக்கூடிய காரியங்களை நீங்கள் கவனித்தால் அப்போது என்ன செய்வது? அப்படிப்பட்ட சந்தேகங்களைக் கவனமாய் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் எவ்வளவுதான் காதல் உணர்ச்சிமிக்கவர்களாய் இருந்தாலும் அல்லது திருமணம் செய்துகொள்ள எவ்வளவுதான் விரும்பினாலும், வினைமையான தப்பிதங்களைக் கவனியாமல் விட்டுவிடாதீர்கள். (நீதிமொழிகள் 22:3; பிரசங்கி 2:14) ஒரு நபரின் பேரில் உங்களுக்கு ஆட்சேபணை இருந்து, அப்படிப்பட்டவரோடு நீங்கள் உறவைக் கொண்டிருந்தால் அந்த உறவை துண்டித்துக்கொண்டு அந்த நபரோடு நிலைத்துநிற்கும், மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஏற்படுத்திக்கொள்வதை தவிர்ப்பது ஞானமானது.

திருமண நோக்குடன் பழகுவதை மதிப்புக்குரியதாய் வையுங்கள்

20. திருமண நோக்குடன் பழகும் ஜோடிகள் தங்கள் ஒழுக்க சம்பந்தப்பட்ட நடத்தையை எவ்வாறு நிந்தனைக்குட்படாமல் வைக்கலாம்?

20 நீங்கள் எவ்வாறு திருமண நோக்குடன் பழகுவதை மதிப்புக்குரியதாய் வைக்கலாம்? முதலாவது, உங்களுடைய ஒழுக்கசம்பந்தப்பட்ட நடத்தை நிந்தனைக்கு அப்பாற்பட்டதாய் உள்ளதா என்பதை நிச்சயித்துக்கொள்ளுங்கள். நீங்கள் வாழும் இடத்தில், கைகோர்த்துக்கொள்வது, முத்தமிடுவது அல்லது தழுவிக்கொள்வது திருமணமாகாத ஜோடிகளுக்கு பொருத்தமான நடத்தையாக கருதப்படுகிறதா? அப்படிப்பட்ட காதல் வெளிக்காட்டுகளுக்கு சமுதாயத்தில் மறுப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலும், திருமணம் நிச்சயமாக திட்டமிடப்பட்டிருக்கும் கட்டத்தில் மட்டுமே அவை அனுமதிக்கப்பட வேண்டும். காதல் வெளிக்காட்டுகள் அசுத்தமான நடத்தைக்கோ அல்லது வேசித்தனத்துக்கோ சென்றுவிடாமல் இருக்க கவனமாயிருங்கள். (எபேசியர் 4:18, 19; ஒப்பிடுக: உன்னதப்பாட்டு 1:2; 2:6; 8:5, 9, 10.) இதயம் திருக்குள்ளதாய் இருக்கிறபடியால், நீங்கள் இருவரும் ஒரு வீட்டில், ஒரு அடுக்ககத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு காரில் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பத்தை அளிக்கும் வேறு எந்த இடத்திலும் தனிமையாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். (எரேமியா 17:9) திருமண நோக்குடன் பழகுவதை ஒழுக்கப்பிரகாரமாய் சுத்தமாக வைத்திருப்பது, உங்களுக்கு தன்னடக்கம் உள்ளது என்பதற்கும் உங்களுடைய சொந்த விருப்பங்களுக்கு மேலாக அடுத்த நபருடைய நலனின் பேரில் சுயநலமற்ற அக்கறையைக் காண்பிக்கிறீர்கள் என்பதற்கும் தெளிவான அத்தாட்சியை அளிக்கிறது. அதிமுக்கியமாக, சுத்தமானவகையில் திருமண நோக்குடன் பழகுதல் யெகோவா தேவனுக்குப் பிரியமாயிருக்கும், அவர் அசுத்தத்திலிருந்தும் வேசித்தனத்திலிருந்தும் விலகியிருக்கும்படி தம் ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறார்.—கலாத்தியர் 5:19-21.

21. திருமண நோக்குடன் பழகுவதை மதிப்புக்குரியதாய் வைப்பதற்கு என்ன நேர்மையான உரையாடல் அவசியமாயிருக்கலாம்?

21 இரண்டாவது, மதிப்புக்குரியவகையில் திருமண நோக்குடன் பழகும் சமயங்கள் நேர்மையான உரையாடலையும் உட்படுத்துகின்றன. உங்களுடைய திருமண நோக்குடன் பழகும் சமயங்கள் திருமணத்தை நோக்கி முன்னேறிச் செல்கையில், சில விஷயங்களை வெளிப்படையாக கலந்து பேச வேண்டியிருக்கும். நீங்கள் எங்கே வசிப்பீர்கள்? நீங்கள் இருவரும் வேலைக்குப் போவீர்களா? நீங்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவீர்களா? மேலும், திருமணத்தைப் பாதிக்கக்கூடிய கடந்த காலத்தில் நடந்த விஷயங்களை வெளிப்படையாக சொல்வது நேர்மையானது. பெரிய கடன்கள் அல்லது கடமைகள் அல்லது மோசமான வியாதிகள் அல்லது ஆரோக்கிய நிலை போன்ற உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதில் உட்பட்டிருக்கலாம். எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அநேக நபர்கள் உடனடியாக அறிகுறிகளைக் காண்பிக்க மாட்டார்கள். ஆகவே, கடந்த காலத்தில் வரம்புமுறையற்ற பாலுறவு அல்லது நரம்பின் வழியாக போதை மருந்து ஏற்றிக்கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தவரிடம், ஒரு நபரோ அல்லது அக்கறையுள்ள பெற்றோரோ எய்ட்ஸ் இரத்த பரிசோதனைச் செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்வது தவறாகாது. சோதனை பாசிட்டிவ் ஆக நிரூபித்தால், மணம்செய்துகொள்ள திட்டமிட்டிருப்பவர் அந்த உறவைத் துண்டித்துக்கொள்ள விரும்பலாம். அப்போது எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டிருப்பவர் அந்த உறவை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. தீங்குக்கு ஆளாகும் அளவுக்கு மோசமான வாழ்க்கை-பாணி நடத்தியிருப்பவர்கள் எவரும் திருமண நோக்குடன் பழக ஆரம்பிப்பதற்கு முன் எய்ட்ஸ் இரத்த பரிசோதனையை மனமுவந்து செய்துகொள்வது நல்லது.

திருமண விழாவுக்குப் பின்னான காலத்தைக் காண்பது

22, 23. (அ) திருமண விழாவுக்காக ஏற்பாடு செய்வதில் சமநிலை எவ்வாறு இழக்கப்படலாம்? (ஆ) திருமண விழாவைக் குறித்தும் திருமண வாழ்க்கையைக் குறித்தும் சிந்தித்துப் பார்க்கையில் என்ன சமநிலையான நோக்கைக் காத்துக்கொள்ள வேண்டும்?

22 திருமணத்திற்கு முன்பு எஞ்சியிருக்கும் மாதங்களில், நீங்கள் இருவரும் திருமண விழாவுக்காக ஏற்பாடு செய்வதில் அதிக சுறுசுறுப்பாயிருப்பீர்கள். மிதமாக இருப்பதன் மூலம் நீங்கள் அதிகமான மன இறுக்கத்தைத் தவிர்க்கலாம். கோலாகலமாக நடத்தப்படும் திருமணம் உறவினர்களையும் சமுதாயத்தையும் பிரியப்படுத்தக்கூடும், ஆனால் அது புதிதாக திருமணம் செய்துகொண்டவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் உடல்சம்பந்தமாக முழுவதும் சோர்வுறச்செய்து பணத்தை வடிகட்டி பிழிந்து எடுத்துவிடும். உள்ளூர் பழக்கவழக்கங்களை ஓரளவு கடைப்பிடிப்பது நியாயமானது, ஆனால் போட்டி மனப்பான்மையோடு அளவின்றி மிதமிஞ்சி ஏற்பாடு செய்வது அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துப்போட்டு நீங்கள் பெற வேண்டிய சந்தோஷத்தைக் குலைத்துப் போடலாம். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை நாம் சிந்திக்கவேண்டியிருந்தாலும், திருமண விருந்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தீர்மானிப்பதில் மணமகன் முக்கியமாய் பொறுப்புள்ளவராய் இருக்கிறார்.—யோவான் 2:9.

23 உங்கள் திருமண விழா வெறும் ஒரு நாள் மட்டுமே இருக்கும், ஆனால் உங்கள் திருமண வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். திருமண விழாவுக்கு அதிக கவனம் செலுத்துவதைத் தவிருங்கள். மாறாக, வழிநடத்துதலுக்காக யெகோவா தேவனை நோக்கியிருந்து, திருமண வாழ்க்கையைக் குறித்து முன்னமே திட்டமிடுங்கள். அப்போது ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு நீங்கள் நன்கு தயாராயிருப்பீர்கள்.

^ எதிர்பாலாரோடு பழகுவதற்கான சந்திப்புகள் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமானவையே என கருதப்படும் தேசங்களில் உள்ளவர்களுக்கு இது பொருந்தும்.

^ கிறிஸ்தவ சபையிலும்கூட சிலர் சபை நடவடிக்கைகளில் பட்டும்படாமலும் இருந்து கொண்டிருப்பர். கடவுளை முழு இதயத்தோடு சேவிக்கும் ஊழியர்களாய் இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் இவ்வுலகத்தின் மனப்பான்மையாலும் நடத்தையாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.—யோவான் 17:16; யாக்கோபு 4:4.