பாடம் 10
உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?
1. உண்மை கிறிஸ்தவர்கள் யார்?
சாவே இல்லாத வாழ்க்கைக்குப் போகும் வழி ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்று இயேசு அவருடைய சீடர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அந்த வழியை ‘சிலர்தான் கண்டுபிடிப்பார்கள்’ என்றும் இயேசு சொன்னார். அந்த “சிலர்தான்” உண்மை கிறிஸ்தவர்கள். (மத்தேயு 7:14) பைபிள் சொல்கிறபடி கடவுளை வணங்கினால் மட்டும்தான் அவர் அந்த வணக்கத்தை ஏற்றுக்கொள்வார். உண்மை கிறிஸ்தவர்கள் தங்களுடைய இஷ்டத்திற்கு பைபிளில் இருக்கும் விஷயங்களை புரிந்துகொள்வதில்லை. பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறதோ அதைத்தான் எல்லாரும் நம்புகிறார்கள்.—யோவான் 4:23, 24; 14:6-ஐயும் எபேசியர் 4:4, 5-ஐயும் வாசியுங்கள்.
எல்லா விதமான வணக்கத்தையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா? என்ற வீடியோவைப் பாருங்கள்.
2. போலிக் கிறிஸ்தவர்களைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?
கடவுளைப் பற்றி பொய்யான விஷயங்களை சிலர் சொல்லிக்கொடுப்பார்கள் என்று இயேசு சொல்லியிருந்தார். ‘நாங்கதான் உண்மையான கிறிஸ்தவங்க’ என்று அவர்கள் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவர்கள் என்று நீங்களே கண்டுபிடித்துவிடலாம். எப்படி? அவர்கள் நடந்துகொள்வதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.—மத்தேயு 7:13-23-ஐ வாசியுங்கள்.
3. உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்?
கீழே சொல்லியிருக்கிற விஷயங்களை வைத்து உண்மை கிறிஸ்தவர்கள் யார் என்று கண்டுபிடித்துவிடலாம்.
-
பைபிளை கடவுள் தந்த புத்தகமாக ஏற்றுக்கொள்வார்கள். மற்ற மதத்தில் இருக்கிறவர்கள் மனிதர்களுடைய தத்துவங்களின்படி நடக்கிறார்கள். (மத்தேயு 15:7-9) ஆனால், உண்மை கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்கிறபடிதான் நடக்கிறார்கள். மற்றவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறார்களோ அதையே அவர்கள் வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறார்கள்.—யோவான் 17:17-ஐயும் 2 தீமோத்தேயு 3:16, 17-ஐயும் வாசியுங்கள்.
-
யெகோவா என்ற கடவுளுடைய பெயருக்கு மதிப்பு கொடுப்பார்கள். கடவுளைப் பற்றியும் அவருடைய பெயரைப் பற்றியும் இயேசு எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்தார். அதோடு, கடவுளுடைய பெயரை புனிதப்படுத்த வேண்டும் என்று ஜெபம் செய்யவும் சொல்லிக்கொடுத்தார். (மத்தேயு 6:9) இப்படி கடவுளுடைய பெயருக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார். உங்கள் ஊரில், யார் கடவுளுடைய பெயரை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறார்கள்?—யோவான் 17:26-ஐயும் ரோமர் 10:13, 14-ஐயும் வாசியுங்கள்.
-
கடவுளுடைய ஆட்சியைப் பற்றி சொல்வார்கள். கடவுளுடைய ஆட்சியைப் பற்றி சொல்வதற்காக இயேசுவை இந்தப் பூமிக்கு கடவுள் அனுப்பினார். அந்த ஆட்சிதான் நம் கஷ்டத்தை எல்லாம் தீர்க்கும். அதைப் பற்றித்தான் இயேசு இறக்கும்வரை எல்லாரிடமும் பேசினார். (லூக்கா 4:43; 8:1; 23:42, 43) அவருடைய சீடர்களும் அந்த ஆட்சியைப் பற்றி எல்லாருக்கும் சொல்வார்கள் என்று சொன்னார். நீங்கள் இருக்கும் இடத்தில், உங்களிடம் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி யார் சொல்கிறார்கள்?—மத்தேயு 24:14-ஐ வாசியுங்கள்.
-
இந்த உலகம் போகிற போக்கில் போகமாட்டார்கள். உண்மை கிறிஸ்தவர்கள் அரசியலில் தலையிட மாட்டார்கள், எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ள மாட்டார்கள். (யோவான் 17:16; 18:36) அதோடு, இந்த உலகத்தில் இருக்கிற கெட்ட ஜனங்களைப் போல நடந்துகொள்ள மாட்டார்கள்.—யாக்கோபு 4:4-ஐ வாசியுங்கள்.
-
ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பை காட்டுவார்கள். ஜாதி, மதம், நாடு, இனம் என எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார்கள். மற்ற மதங்கள் போருக்கு ஆதரவு கொடுத்தாலும், உண்மை கிறிஸ்தவர்கள் போர் செய்வதும் இல்லை, அதற்கு ஆதரவு கொடுப்பதும் இல்லை. (மீகா 4:1-3) அதற்குப் பதிலாக, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களுடைய நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் மற்றவர்களுக்காக பயன்படுத்துவார்கள். தேவையான சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலும் சொல்வார்கள்.—யோவான் 13:34, 35-ஐயும் 1 யோவான் 4:20-ஐயும் வாசியுங்கள்.
4. உண்மையான கிறிஸ்தவர்கள் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
எல்லா விஷயங்களையும் பைபிளிலிருந்து சொல்லிக்கொடுப்பவர்கள் யார்? கடவுளுடைய பெயருக்கு மதிப்பும் மரியாதையும் காட்டுபவர்கள் யார்? எல்லா பிரச்சினைகளையும் கடவுளுடைய ஆட்சிதான் தீர்க்கும் என்று சொல்பவர்கள் யார்? போருக்கு ஆதரவு கொடுக்காமல் இருப்பவர்கள் யார்? ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பை காட்டுபவர்கள் யார்? இதையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.—1 யோவான் 3:10-12-ஐ வாசியுங்கள்.