Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

11. விசுவாசதுரோகம்கடவுளிடம் செல்லும் வழி அடைக்கப்படுகிறது

11. விசுவாசதுரோகம்கடவுளிடம் செல்லும் வழி அடைக்கப்படுகிறது

அதிகாரம் 11

விசுவாசதுரோகம்—கடவுளிடம் செல்லும் வழி அடைக்கப்படுகிறது

கிறிஸ்தவமண்டலத்தின் முதல் 400 வருட கால வரலாறு ஏன் மிக முக்கியமாக இருக்கிறது? ஒரு குழந்தையின் வாழ்க்கையில் முதல் சில ஆண்டுகள் மிகவும் முக்கியம், ஏனென்றால் இதுவே எதிர்காலத்தில் அக்குழந்தை எப்படிப்பட்ட ஆளாகப் போகிறான் என்பதற்கு அஸ்திவாரமாக அமையும் காலம். அதுபோலத்தான் கிறிஸ்தவமண்டலத்தின் வரலாறும் முக்கியமாய் இருக்கிறது. அதன் ஆரம்ப நூற்றாண்டுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

2அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் முன் இயேசு கிறிஸ்து சொன்ன ஓர் உண்மையை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்: “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” கட்டுப்பாடற்ற சௌகரியமான வழி விசாலமானது; ஆனால் சரியான நெறிமுறைகளுடைய வழியோ குறுகலானது.​—மத்தேயு 7:13, 14.

3கிறிஸ்தவம் பிறந்த காலத்தில், அந்தச் சிறுபான்மை மதத்தை ஆதரிக்க விரும்பியவர்களுக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன​—ஒன்று, கிறிஸ்துவும் வேதவசனங்களும் கற்பித்த, சமரசத்திற்கு இடமளிக்காத போதனைகளையும் நியதிகளையும் நெருக்கமாக கடைப்பிடிப்பது; மற்றொன்று, அன்றிருந்த உலகத்தோடு சமரசம் செய்துகொண்டு சொகுசான, விசாலமான வழியில் ஈர்க்கப்பட்டு செல்வது. பெரும்பாலோர் எந்த வழியை இறுதியில் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை கிறிஸ்தவமண்டலத்தின் முதல் 400 வருடங்களின் சரித்திரம் காண்பிக்கிறது; அதைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

தத்துவஞானத்தின் கவர்ச்சி

4வில் டூரன்ட் என்ற சரித்திராசிரியர் இவ்வாறு விளக்கம் தருகிறார்: “கிறிஸ்தவத்துக்கு முன்னான காலத்தில் [புறமத] ரோமில் சர்வசாதாரணமாக இருந்த சில மதப் பழக்கங்களையும் முறைமைகளையும் சர்ச் ஏற்றுக் கொண்டது. அதாவது, புறமத ஆசாரியர்களைப் போல அங்கிகளையும் மற்ற உடைகளையும் உடுத்துவது, சுத்திகரிப்பு சடங்குகளுக்காக தூபவர்க்கத்தையும் புனித நீரையும் பயன்படுத்துவது, மெழுகுவர்த்திகளை ஏற்றுவது, பீடத்துக்கு முன் ஒரு விளக்கை எப்போதும் எரிய விடுவது, புனிதர்களை வழிபடுவது, ரோம பேஸிலிக்காவின் கலைவேலைப்பாடுகளைப் பின்பற்றுவது, ரோமாபுரியின் சட்டத்தை அடிப்படையாக வைத்து திருச்சபை சட்டத்தை அமைப்பது, பான்டிஃபெக்ஸ் மாக்சிமஸ் என்று போப்புக்கு பட்டப்பெயர் அளிப்பது, நான்காவது நூற்றாண்டில் லத்தீன் மொழியை பயன்படுத்த ஆரம்பிப்பது ஆகியவற்றை சர்ச் ஏற்றுக்கொண்டது. . . . பின்னர், வெகு விரைவிலேயே ரோமாபுரியில் அரசு அதிகாரிகளுக்கு பதிலாக, பிஷப்புகளே ஆணைகளை பிறப்பித்தனர், அதிகாரங்களை ஏற்றனர்; தலைமை குருக்கள், அதாவது தலைமை பிஷப்புகள் மாகாண அதிபதிகளை ஆதரித்தனர், அல்லது அவர்களது பதவிகளில் அமர்ந்தனர்; மாகாண அசெம்பிளிக்கு பதிலாக பிஷப்புகளின் பேரவை அதிகாரம் பெற்றது. ரோம அரசின் அடிச்சுவடுகளை ரோமன் சர்ச் அப்படியே பின்பற்ற ஆரம்பித்தது.”​—நாகரிகத்தின் கதை: பகுதி III​—இராயனும் கிறிஸ்துவும்.

5ரோம உலகோடு சமரசம் செய்துவிடுகிற அத்தகைய மனப்பாங்கு கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களுடைய போதனைகளுக்கு நேர்மாறாக இருந்தது. (பக்கம் 262-லுள்ள பெட்டியைக் காண்க.) அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு அறிவுறுத்தினார்: “பிரியமானவர்களே, . . . பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு”ங்கள். பவுல் மிகத் தெளிவாக புத்தி சொன்னார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொ”ள்வேன்.​—2 பேதுரு 3:1, 2, 17; 2 கொரிந்தியர் 6:14-18; வெளிப்படுத்துதல் 18:2-5.

6இப்படிப்பட்ட தெளிவான அறிவுரைகள் இருந்தபோதிலும் இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் புறமத ரோம வழிபாட்டு முறையிலிருந்து பல காரியங்களை ஏற்றுக்கொண்டனர். தூய்மையான பைபிள் போதகத்திலிருந்து வழிவிலகிச் சென்றனர்; புறமத ரோமர்களின் பாணியிலேயே அங்கிகளை விரும்பி அணிந்துகொண்டனர், பட்டப்பெயர்களை சூட்டிக்கொண்டனர், அதோடு கிரேக்க தத்துவஞானத்திலும் மூழ்கிப் போயினர். இரண்டாம் நூற்றாண்டின்போது “தத்துவஞானத்தில் கைதேர்ந்த புறதேசத்தார்” கிறிஸ்தவத்திற்குள் திரள்திரளாக வர ஆரம்பித்தனர் என கிறிஸ்தவத்தின் கடுஞ்சோதனை என்ற புத்தகத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் உல்ஃப்ஸன் விளக்குகிறார். கிரேக்கரின் தத்துவஞானத்தில் மயங்கிய இவர்கள் கிரேக்க தத்துவத்துக்கும் வேதாகம போதனைகளுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக எண்ணினர். உல்ஃப்ஸன் தொடர்ந்து சொல்கிறார்: “யூதர்களுக்கு எப்படி நேரடியான வெளிப்படுத்துதல் மூலம் வேதாகமம் கொடுக்கப்பட்டதோ அதே விதமாக கிரேக்கர்களுக்கு மனித சிந்தனை மூலம் தத்துவஞானம் கொடுக்கப்பட்டுள்ளது, அது கடவுளின் விசேஷித்த பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது என வெவ்வேறு விதங்களில் அவர்கள் கூறினர்.” “எளிய மொழியிலுள்ள வேதாகம கருத்துகளுக்குப் பின்னால் எப்படி தத்துவங்கள் மறைந்திருக்கின்றனவென்று அவர்களுடைய சர்ச் பிதாக்கள் படிப்படியாக கற்றுத்தர ஆரம்பித்தனர்; அவர்களுடைய முகப்பு மண்டபத்திலும் கல்விச் சாலையிலும் சொற்பொழிவுக் கூடத்திலும் [தத்துவங்களை விவாதிப்பதற்குரிய இடங்கள்] புதிதாக உருவாக்கப்பட்ட தெளிவில்லாத வார்த்தைகளில் அந்தத் தத்துவங்கள் மறைந்திருக்கின்றன என்பதை விளக்கும் பணியை . . . சர்ச் பிதாக்கள் மேற்கொண்டனர்” என்றும் அவர் தொடர்ந்து சொல்கிறார்.

7அத்தகைய மனப்பான்மை காரணமாக கிரேக்க தத்துவமும் கிரேக்க சொற்களும் கிறிஸ்தவமண்டலத்தின் போதனைகளுக்குள் வெகு எளிதாக நுழைய ஆரம்பித்தன; முக்கியமாக, திரித்துவ கோட்பாடு, ஆத்மா அழியாமை போன்ற நம்பிக்கைகள் அதனுள் ஊடுருவ ஆரம்பித்தன. உல்ஃப்ஸன் கூறுகிறபடி, “ஏராளமான தத்துவஞான சொற்களிடையே இரண்டு நுட்பமான பதங்களை [சர்ச்] பிதாக்கள் தேட ஆரம்பித்தனர். திரித்துவத்தின் அங்கமாக இருக்கும் ஒவ்வொரு நபரின் தனித்தன்மையை குறிப்பிடுவதற்காக ஒரு பதத்தையும் அவர்களுக்கு இடையே உள்ள அடிப்படை ஒற்றுமையைக் குறிப்பிடுவதற்காக மற்றொரு பதத்தையும் தேடினர்.” ஆனாலும், “திரித்துவ கடவுள் என்ற கருத்து மனித சிந்தனையால் விடுவிக்க முடியாத ஒரு புதிர்” என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருந்தது. இதற்கு நேர்மாறாக, இப்படி ‘சுவிசேஷத்தை புரட்டுவதும்’ கறைப்படுத்துவதும் எவ்வளவு ஆபத்தானது என்பதை தெளிவாக அறிந்திருந்த பவுல் கலாத்தியாவிலும் கொலோசெயிலும் இருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “லெளகிக ஞானத்தினாலும் [கிரேக்கு, ஃபிலோசோஃபியாஸ்], மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”​—கலாத்தியர் 1:7-9; கொலோசெயர் 2:8; 1 கொரிந்தியர் 1:22, 23.

உயிர்த்தெழுதல் நிராகரிக்கப்பட்டது

8மரணத்தோடு முடிந்துவிடுகிற, நிலையற்ற குறுகிய வாழ்க்கை மனிதனுக்கு எப்போதுமே புரியாப் புதிராக இருந்து வந்திருப்பதை இந்த முழு புத்தகத்திலும் நாம் பார்த்தோம். இருளிலிருந்து வெளியே வந்த கெல்டிக் இனத்தவர் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் ஜெர்மன் ஆசிரியர் கெர்ஹார்ட் ஹெர்ம் இவ்வாறு குறிப்பிட்டார்: “மரணத்திற்குப் பின் மேம்பட்ட ஒரு வாழ்க்கை உண்டு அல்லது மறுபிறப்பு உண்டு அல்லது இரண்டுமே உண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் என்றோ ஒரு நாள் தாங்கள் மரிப்பார்கள் என்ற உண்மையை மக்கள் ஏற்கும்படி மதம் செய்கிறது.” ஆத்மா சாகாது என்ற நம்பிக்கையிலும், மரணத்துக்குப் பின் அது மறுமைக்கு பயணப்படுகிறது அல்லது மற்றொரு உயிரினத்திற்குள் செல்கிறது என்ற நம்பிக்கையிலும்தான் கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே சார்ந்திருக்கின்றன.

9இன்று கிறிஸ்தவமண்டலத்தின் ஏறக்குறைய எல்லா பிரிவுகளும் இதையேதான் நம்புகின்றன. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற 20-ம் நூற்றாண்டு கல்விமான் மிகுயல் டி யுனாமுனோ இயேசுவைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “யூதரின் முறைமையின்படி சரீர உயிர்த்தெழுதலில் [லாசருவின் விஷயத்தில் இருந்தது போல (பக்கங்கள் 249-52-ஐ காண்க)] அவர் நம்பிக்கை வைத்திருந்தார்; [கிரேக்க] பிளேட்டோனிய முறைமையின்படி, ஆத்மா சாகாது என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கவில்லை. . . . ஒளிவுமறைவில்லாமல் எழுதப்பட்டுள்ள எந்தப் புத்தகத்திலும் இதற்கான ஆதாரத்தைக் காணலாம்.” அவர் இவ்வாறு முடிக்கிறார்: “ஆத்மா சாகாது என்பது . . . தத்துவஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புறமத கோட்பாடு.” (லா அகோனிய டெல் கிறிஸ்டியானிஸமோ [கிறிஸ்தவத்தின் வாதனை]) ஆம், “தத்துவஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புறமத கோட்பாடு” கிறிஸ்தவமண்டல போதனைக்குள் நுழைந்துவிட்டது; ஆனால் கிறிஸ்துவுக்கு இப்படிப்பட்ட கருத்து இருக்கவே இல்லை.​—மத்தேயு 10:28; யோவான் 5:28, 29; 11:23, 24.

10அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பின், கிரேக்க தத்துவஞானத்தின் சூட்சுமமான செல்வாக்கே விசுவாசதுரோகம் தலைதூக்க முக்கிய காரணமாக இருந்தது. ஆத்மா அழியாது என்ற கிரேக்க போதனையை கற்பித்ததால் அந்த ஆத்மாக்கள் எங்கு சென்றடையுமென்றும் அது கற்பிக்க வேண்டியிருந்தது; இப்படித்தான் பரலோகம், நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம், பரதீஸ், லிம்போ ஆகிய போதனைகள் ஆரம்பமாயின. a குருவர்க்கத்தினர் தங்கள் மந்தையை தங்களது கட்டுப்பாட்டில் வைப்பதற்கும், மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையைப் பற்றிய பயத்திலே அவர்களை வைப்பதற்கும், அவர்களிடமிருந்து பரிசுகளையும் காணிக்கைகளையும் பெற்றுக்கொள்வதற்கும் அத்தகைய போதனைகளை சூழ்ச்சித்திறனுடன் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். இது நம்மை மற்றொரு கேள்விக்கு வழிநடத்துகிறது: கிறிஸ்தவத்தில் ஆசாரியர் போன்ற தனி குருவர்க்கம் தோன்றியது எவ்வாறு?​—யோவான் 8:44; 1 தீமோத்தேயு 4:1.

குருவர்க்கம் உருவான விதம்

11இயேசுவும் அப்போஸ்தலர்களும் போதித்திருந்தபடி, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அந்த நிலைமை மாறி, கிறிஸ்தவமண்டலத்தில் குருவர்க்கமும் குருக்களாட்சி முறையும் தோன்றியது; இது விசுவாசதுரோகத்துக்கு மற்றொரு அடையாளமாக இருந்தது. (மத்தேயு 5:14-16; ரோமர் 10:13-15; 1 பேதுரு 3:15) முதல் நூற்றாண்டின்போது, இயேசுவின் மரணத்துக்குப் பின் அப்போஸ்தலர்களும் எருசலேமில் இருந்த ஆவிக்குரிய தகுதிபெற்ற மற்ற கிறிஸ்தவ மூப்பர்களும் கிறிஸ்தவ சபைக்கு அறிவுரை கூறி வழிநடத்தி வந்தார்கள். ஒருவரும் மற்றவர்களைவிட மேலானவர் போல் நடந்துகொள்ளவில்லை.​—கலாத்தியர் 2:9.

12பொதுவாகவே எல்லா கிறிஸ்தவர்களையும் பாதித்துக் கொண்டிருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பொ.ச. 49-ஆம் ஆண்டில் இவர்கள் எருசலேமில் ஒன்றாக கூடிவர வேண்டியிருந்தது. அனைவரும் அவரவருடைய கருத்துகளை வெளிப்படையாக சொன்னார்கள். அதற்குப் பின், பதிவு சொல்கிறபடி, ‘தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் [pre·sbyʹte·roi] சபையாரெல்லாருக்கும் நலமாகக் கண்டது. . . . இவர்கள் கையில் அவர்கள் எழுதிக் கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறோம்.’ எங்கும் பரவியிருந்த கிறிஸ்தவ சபைகளை நிர்வாகம் செய்ய அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் ஆளும் குழுவாக செயல்பட்டார்கள் என்பது இதிலிருந்து புலனாகிறது.​—அப்போஸ்தலர் 15:22, 23.

13எருசலேமிலிருந்த அந்த ஆளும் குழுவே எல்லா கிறிஸ்தவர்களையும் பொதுவில் மேற்பார்வை செய்வதற்கிருந்த ஆரம்பகால கிறிஸ்தவ ஏற்பாடாக இருந்தது; அப்படியென்றால் உள்ளூரில் ஒவ்வொரு சபையையும் வழிநடத்துவதற்கு என்ன ஏற்பாடு இருந்தது? சபைகளில் கண்காணிகள் (கிரேக்கு, எபிஸ்கோப்பாஸ், “எபிஸ்கோப்பல்” என்ற ஆங்கில வார்த்தையின் மூல வார்த்தை) இருந்தார்கள் என்பது தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய கடிதத்திலிருந்து தெள்ளத் தெளிவாகிறது. இவர்கள் ஆவிக்குரிய மூப்பர்களாக (பிரிஸ்பிட்டெராய்) இருந்தார்கள்; தங்கள் சக கிறிஸ்தவர்களுக்கு போதிப்பதற்கான ஏற்ற நடத்தையும் ஆவிக்குரிய தன்மையும் உடைய தகுதிவாய்ந்த ஆண்களாக இருந்தார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; 5:17) முதல் நூற்றாண்டில் அவர்கள் தனி குருவர்க்கமாகவும் செயல்படவில்லை, விசேஷ அங்கிகளையும் அணியவில்லை. அவர்களுடைய ஆவிக்குரிய தன்மையே அவர்களை வேறுபடுத்திக் காட்டியது. சொல்லப்போனால், ஒவ்வொரு சபையிலும் தனிப்பட்ட ஒருவரின் ஆட்சி இருக்கவில்லை, மாறாக மூப்பர்களின் (கண்காணிகளின்) குழு ஒன்று இருந்தது.​—அப்போஸ்தலர் 20:17; பிலிப்பியர் 1:1.

14காலம் செல்லச் செல்லத்தான், எபிஸ்கோப்பாஸ் b (கண்காணி, மேற்பார்வையாளர்) என்ற வார்த்தை “பிஷப்” என்பதாக மாறியது. தன்னுடைய பிராந்தியத்திலுள்ள மற்ற பாதிரிமார்களை மேற்பார்வை செய்யும் ஒரு குரு என்பது இதன் அர்த்தம். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜெஸ்யூட் பெர்னார்டினோ லோர்க்கா இவ்வாறு விளக்கமளிக்கிறார்: “ஆரம்பத்தில், பிஷப்புகளுக்கும் பிரிஸ்பிட்டர்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கவில்லை, இந்த வார்த்தைகளின் அர்த்தத்திற்கு மாத்திரமே கவனம் செலுத்தப்பட்டது: பிஷப் என்பது மேற்பார்வையாளர் என்றும் பிரிஸ்பிட்டர் என்பது மூப்பர் என்றும் கருதப்பட்டது. . . . ஆனால் அந்த வார்த்தைகளின் வேறுபாடு படிப்படியாக தெளிவானது. பிஷப் என்ற பெயர் மிக முக்கிய மேற்பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது; அவர்கள் மிக உயர்வான குருத்துவ அதிகாரத்தைப் பெற்றிருந்தனர், அதோடு, குருவர்க்கத்தாரை நியமிப்பதற்காக தங்கள் கைகளை அவர்களுடைய தலை மீது வைப்பதற்கு அதிகாரம் பெற்றவர்களாகவும் இருந்தனர்.” (ஹிஸ்டோரியா டி லா இக்லீஸியா கட்டோலிக்கா [கத்தோலிக்க சர்ச்சின் வரலாறு]) குறிப்பாக சொன்னால், நான்காம் நூற்றாண்டு முதற்கொண்டு பிஷப்புகள் முடிசூடா மன்னர்களைப் போல நடந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆளும் குருவர்க்க அமைப்பு நிறுவப்பட்டது. காலப்போக்கில், ரோமிலிருந்த பிஷப் தன்னை பேதுருவின் வாரிசு என அழைத்துக் கொண்டார்; பிற்பாடு, பலர் அவரை சுப்ரீம் பிஷப் என்றும் போப் என்றும் ஏற்றுக்கொண்டனர்.

15இன்று கிறிஸ்தவமண்டலத்தின் பல்வேறு சர்ச்சுகளிலுள்ள பிஷப்புகள் அந்தஸ்தும் அதிகாரமுமிக்க ஸ்தானத்தை பெற்றிருக்கின்றனர். பொதுவாக நல்ல சம்பளம் இவர்களுக்கு கொடுக்கப்படுகிறது, ஒவ்வொரு நாட்டிலும் இவர்கள் ஆட்சியாளர்களுக்கு இணையாக கருதப்படுகின்றனர். ஆனால், கிறிஸ்துவின் மேற்பார்வையிலும் ஆரம்பகால கிறிஸ்தவ சபைகளின் கண்காணிகளான மூப்பர்களின் மேற்பார்வையிலும் செயல்பட்ட அமைப்பின் எளிமைக்கும், பிஷப்புகளின் மேட்டிமைக்கும் உயர்ந்த அந்தஸ்துக்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருக்கிறது. பேதுருவின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு வத்திகனில் ஆடம்பரமான சூழலில் ஆட்சிசெய்து வந்திருப்பவர்களுக்கும் பேதுருவுக்கும் இடையே உள்ள பெரும் வித்தியாசத்தை என்னவென்று சொல்வது?​—லூக்கா 9:58; 1 பேதுரு 5:1-3.

போப்பின் அதிகாரமும் அந்தஸ்தும்

16எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் அறிவுரைகளைப் பெற்று அதற்கேற்ப செயல்பட்ட ஆரம்பகால சபைகளில் ரோமிலிருந்த சபையும் ஒன்று. சுமார் பொ.ச. 33-ம் ஆண்டு பெந்தெகொஸ்தே தினத்திற்குப் பின் கிறிஸ்தவ சத்தியம் ரோமில் பரவ ஆரம்பித்திருக்கலாம். (அப்போஸ்தலர் 2:10) அந்தச் சமயத்திலிருந்த மற்ற கிறிஸ்தவ சபைகளைப் போலவே அங்கும் மூப்பர்கள் இருந்தனர்; இவர்கள் கண்காணிகளாக, ஒரு குழுவாக சேர்ந்து சேவை செய்து வந்தனர்; இவர்களில் ஒருவருக்கும் முதன்மையான ஸ்தானம் இருக்கவில்லை. ரோம சபையின் ஆரம்பகால கண்காணிகளில் ஒருவர்கூட பிஷப்பாக அல்லது போப்பாக கருதப்படவில்லை, ஏனென்றால் குருமார் ஆட்சி என்ற ஒன்றே அப்போது ரோமில் உருவாகியிருக்கவில்லை. இப்படிப்பட்ட குருமார் ஒருவரின் முடியாட்சி எப்போது ஆரம்பமானது என்பதைத் துல்லியமாக அறிவது கடினம். என்றாலும், இரண்டாம் நூற்றாண்டில் அது ஆரம்பமானதென்று அத்தாட்சி காட்டுகிறது.​—ரோமர் 16:3-16; பிலிப்பியர் 1:1.

17“போப்” (கிரேக்கில் பேப்பாஸ், தந்தை) என்ற பட்டப்பெயர் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்படவில்லை. முன்னாள் ஜெஸ்யூட் மைக்கேல் வால்ஷ் இவ்வாறு விளக்குகிறார்: “மூன்றாவது நூற்றாண்டில்தான் ரோமிலிருந்த பிஷப் ‘போப்’ என்பதாக முதன்முறையாக அழைக்கப்பட்டார்; இந்தப் பட்டப்பெயர் போப் காலிஸ்டிஸுக்கு கொடுக்கப்பட்டது . . . ஐந்தாம் நூற்றாண்டின் முடிவிற்குள் ‘போப்’ என்பது பொதுவாக ரோமிலிருந்த பிஷப்பை மட்டுமே குறித்தது. என்றாலும், பதினோராம் நூற்றாண்டிலிருந்துதான் ‘போப்’ என்ற பட்டப்பெயர் இந்தப் பதவியிலிருந்தவர்களுக்கே உரிய ஒன்றாக பயன்படுத்தப்பட்டது.”—போப்புகளைப் பற்றிய ஒரு விளக்க வரலாறு (ஆங்கிலம்).

18ஆரம்ப கால ரோம பிஷப்புகளில் தன்னுடைய அதிகாரத்தை முதன்முதலாக செலுத்த ஆரம்பித்தவர் முதலாம் போப் லியோ (போப், பொ.ச. 440-461) ஆவார். மைக்கேல் வால்ஷ் இவ்வாறு தொடர்ந்து விளக்கம் தருகிறார்: “ஒரு காலத்தில் புறமதத்தினர் பயன்படுத்தி வந்த பான்டிஃபெக்ஸ் மாக்சிமஸ் என்ற பட்டப்பெயரை லியோ தனதாக்கிக் கொண்டார். நான்காவது நூற்றாண்டின் இறுதிவரை ரோமை ஆண்ட அரசர்கள் இந்தப் பெயரை ஏற்றிருந்தனர், இதையே இன்று வரை போப்புகளும் பயன்படுத்தி வருகிறார்கள்.” மத்தேயு 16:18, 19-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு கத்தோலிக்கர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் முதலாம் லியோ என்ன செய்தார்? (பக்கம் 268-ல் உள்ள பெட்டியைக் காண்க.) “புனிதர் பேதுருவே அப்போஸ்தலர்களில் முதன்மையானவராக இருப்பதால், செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்சுக்கே மற்ற சர்ச்சுகளைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று லியோ அறிவித்தார்.” (மனிதனின் மதங்கள்) கிழக்கே கான்ஸ்டான்டிநோப்பிளிலிருந்து அரசியல் அதிகாரத்தை செலுத்த அரசனுக்கு உரிமை இருக்கிறதென்றால், மேற்கே ரோமிலிருந்து ஆன்மீக அதிகாரத்தை செலுத்த தனக்கு உரிமை இருக்கிறதென இந்த நடவடிக்கை மூலம் முதலாம் லியோ தெளிவுபடுத்தினார். அதுமட்டுமல்ல, மூன்றாம் போப் லியோ பொ.ச. 800-ல் புனித ரோம சாம்ராஜ்யத்துக்கு அரசனாக சார்லிமேனை முடிசூட்டியது அப்படிப்பட்ட ஆன்மீக அதிகாரத்திற்கு கூடுதலான எடுத்துக்காட்டாக இருந்தது.

19ஆகவே, 1929 முதற்கொண்டு ரோமிலிருக்கும் போப்பை தனித்தியங்கும் வத்திகன் நகரின் ஆட்சியாளராகவே உலக அரசாங்கங்கள் கருதுகின்றன. இதன் காரணமாக, உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு அரசியல் பிரதிநிதிகளான போப்பின் பேராண்மை தூதுவர்களை (nuncios) அனுப்பி வைக்கும் உரிமை ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கு மட்டுமே இருக்கிறது, வேறெந்த மத அமைப்புக்கும் இவ்வாறு செய்ய உரிமை இல்லை. (யோவான் 18:36) போப்புக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பட்டப்பெயர்கள் ஏராளம்: இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி (Vicar of Jesus Christ), அப்போஸ்தலர்களின் இளவரசனுக்கு வாரிசு (Successor to the Prince of the Apostles), யுனிவர்சல் சர்ச்சின் போப்பாண்டவர் (Supreme Pontiff of the Universal Church), மேற்கத்தியரின் தலைவர் (Patriarch of the West), இத்தாலியின் முதல்வர் (Primate of Italy), வத்திகன் நகரின் பேரரசர் (Sovereign of the Vatican City) ஆகியவை இவற்றில் சில. அவர் ஆடம்பரத்தோடும் ஆரவாரத்தோடும் சுமந்து செல்லப்படுகிறார். நாட்டின் தலைவருக்குக் கொடுக்கப்படும் சகல மரியாதையும் இவருக்குக் கொடுக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, ரோமின் முதல் போப்பாகவும் பிஷப்பாகவும் கருதப்படுகிற பேதுருவை பற்றியென்ன? அவரை பணிந்துகொள்ள ஒருமுறை ரோம நூற்றுக்கதிபதியான கொர்நேலியு அவர் பாதத்தில் விழுந்தபோது அவர் என்ன செய்தார் என்பதை கவனியுங்கள்: “பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.”​—அப்போஸ்தலர் 10:25, 26; மத்தேயு 23:8-12.

20இப்போது கேள்வி என்னவென்றால்: அந்த ஆரம்ப நூற்றாண்டுகளில் விசுவாசதுரோக சர்ச்சுக்கு இத்தனை அதிகாரமும் அந்தஸ்தும் எப்படி கிடைத்தது? கிறிஸ்துவுக்கும் ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கும் இருந்த எளிமையும் மனத்தாழ்மையும் மறைந்து கிறிஸ்தவமண்டலத்தில் பெருமிதமும் ஆடம்பரமும் எவ்வாறு தலைதூக்கின?

கிறிஸ்தவமண்டலத்தின் அஸ்திவாரம்

21ரோம பேரரசின் இந்தப் புதிய மதத்துக்கு பொ.ச. 313-ஆம் ஆண்டு ஒரு திருப்புக்கட்டமாக இருந்தது; அந்த வருடத்தில்தான் கான்ஸ்டன்டீன் அரசன் “கிறிஸ்தவத்துக்கு” “மதம் மாறினார்.” இந்த மத மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? பொ.ச. 306-ல் கான்ஸ்டன்டீன் அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின், லிசினஸ் என்பவரோடு சேர்ந்து ரோம பேரரசை ஆட்சி செய்தார். கிறிஸ்தவ மதத்தில் தன்னுடைய தாய்க்கு இருந்த மிகுந்த ஈடுபாடும், தெய்வீக பாதுகாப்பில் தனக்கிருந்த நம்பிக்கையும் கான்ஸ்டன்டீன் மீது செல்வாக்கு செலுத்தின. பொ.ச. 312-ல் ரோமுக்கு அருகில் மில்வியன் பிரிட்ஜில் போர் தொடுக்கச் செல்வதற்கு முன் “கிறிஸ்தவ” அடையாளத்தை தன் படைவீரர்களின் கேடயங்களில் பொறிக்கும்படி தனக்கு சொப்பனத்தில் சொல்லப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கிறிஸ்தவ அடையாளம் கிரேக்க மொழியில் கிறிஸ்துவின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களான கை மற்றும் ரோ (khi and rho) என்பவையாகும். c ‘மந்திரசக்தி படைத்த’ இந்தப் ‘புனித அடையாளத்தின்’ உதவியால்தான் கான்ஸ்டன்டீனின் படைகள் அவருடைய விரோதியான மாக்ஸென்டியஸை தோற்கடித்தனவாம்.

22போரில் வெற்றி வாகை சூடியதற்குப் பின் சீக்கிரத்திலேயே, கான்ஸ்டன்டீன் தான் ஒரு கிறிஸ்தவராக மாறிவிட்டதாக அறிவித்தார்; ஆனால் சுமார் 24 வருடங்கள் கழித்துத்தான்​—மரிப்பதற்கு சற்று முன்னர்தான்—ஞானஸ்நானம் பெற்றார். “[கிரேக்க எழுத்துக்கள்] கை-ரோ [☧] என்பதை தன்னுடைய சின்னமாக ஏற்றுக்கொண்டு” தன் சாம்ராஜ்யம் முழுவதிலுமிருந்த ‘கிறிஸ்தவர்களின்’ ஆதரவை நாடினார். “எனினும் கை-ரோ என்பது ஏற்கெனவே புறமதத்தவர்களாலும் கிறிஸ்தவர்களாலும் ‘லிகேச்சர்’ எழுத்தாக [இரு எழுத்துக்களின் இணைவாக] பயன்படுத்தப்பட்டு வந்தது.”​—கிறிஸ்தவத்தின் கடுஞ்சோதனை, ஆர்னால்ட் டாயன்பீ என்பவர் திருத்தியமைத்தது.

23இப்படித்தான் கிறிஸ்தவமண்டலத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டது. கிறிஸ்தவமண்டலத்தின் முடிவு என்ற ஆங்கில புத்தகத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செய்தி ஒலிபரப்பாளர் மால்கம் மக்கரிட்ஜ் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்தவமண்டலம் கான்ஸ்டன்டீன் அரசனால் தோற்றுவிக்கப்பட்டது.” ஆனால் இந்தக் குறிப்பையும் அவர் பகுத்துணர்வோடு சேர்த்துச் சொன்னார்: “‘என்னுடைய ராஜ்யம் இவ்வுலகத்துக்குரியதல்ல’ என்ற கூற்றின் மூலம் கிறிஸ்துதாமே கிறிஸ்தவமண்டலத்தை​—அது தோன்றுவதற்கு முன்னரே​—ஒழித்துக்கட்டிவிட்டார் என்று சொல்லலாம்; அவர் சொன்ன கூற்றுகளில் அதுவே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிற கூற்றாகும், அது மிக முக்கியமான ஒரு கூற்றும்கூட.” வருத்தகரமாய், கிறிஸ்தவமண்டல மத தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வெகுவாக அசட்டை செய்திருக்கிற ஒரு கூற்றாகவும் அது இருக்கிறது.​—யோவான் 18:36.

24கான்ஸ்டன்டீன் ஆதரவோடு கிறிஸ்தவமண்டலம் ரோமின் அரசாங்க மதமானது. மத பேராசிரியர் எலேன் பேஜல்ஸ் இவ்வாறு விளக்குகிறார்: “ஒரு காலத்தில் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட கிறிஸ்தவ பிஷப்புகள் இப்போது வரிவிலக்கையும், அரசின் கஜானாவிலிருந்து பரிசுகளையும், அந்தஸ்தையும், ஏன், அரசவையில் செல்வாக்கையும்கூட பெற ஆரம்பித்தார்கள்; அவர்களுடைய சர்ச்சுகள் சொத்துக்களையும் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் புதிதாக பெற்றன.” அவர்கள் அரசனுக்கும், ரோம உலகுக்கும் நண்பர்களாக ஆனார்கள்.​—யாக்கோபு 4:4.

கான்ஸ்டன்டீன், மதபேதம், ஆர்த்தடாக்ஸ் நம்பிக்கைகள்

25கான்ஸ்டன்டீனின் “மத மாற்றம்” ஏன் அத்தனை முக்கியத்துவமுடையது? பேரரசனாக இருந்த காரணத்தால் “கிறிஸ்தவ” சர்ச்சின் விவகாரங்களில் இவருக்கு செல்வாக்கு அதிகமிருந்தது; வெவ்வேறு கோட்பாடுகளின் காரணமாக “கிறிஸ்தவ” சர்ச் அப்போது பிளவுபட்டிருந்தது; ஆனால் தன்னுடைய பேரரசில் ஒற்றுமை நிலவ வேண்டுமென கான்ஸ்டன்டீன் விரும்பினார். அந்தச் சமயத்தில் கிரேக்கு மொழி பேசும் பிஷப்புகளுக்கும் லத்தீன் மொழி பேசும் பிஷப்புகளுக்குமிடையே சூடான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. எதைப் பற்றிய வாக்குவாதம்? மனித உருவில் அவதரித்த ‘வார்த்தை,’ அதாவது ‘கடவுளுடைய குமாரனான’ இயேசுவுக்கும் ‘கடவுளுக்கும்’ இடையே உள்ள உறவைப் பற்றிய வாக்குவாதமாக அது இருந்தது; யாவே என்ற கடவுளுடைய பெயரை பொதுவாக மக்கள் மறந்துவிட்டிருப்பதால் இப்போது அவரை வெறுமனே ‘பிதா’ என்று அழைக்கிறார்கள்.” (த கொலம்பியா ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட்) லோகோஸ் என்ற கிறிஸ்து படைக்கப்பட்டவராக இருப்பதால் அவர் பிதாவுக்கு கீழ்ப்பட்டவர் என்ற பைபிளின் கருத்தை சிலர் ஆதரித்தனர். (மாற்கு 13:32; யோவான் 14:28; 1 கொரிந்தியர் 15:25-28) இவர்களில் ஒருவர் எகிப்தில் அலெக்ஸாண்டிரியாவிலுள்ள ஏரியஸ் என்ற பாதிரியார். இறைமையியல் பேராசிரியர் ஆர். பி. சி. ஹான்சன் என்பவர் இவ்வாறு கூறுகிறார்: “[நான்காவது நூற்றாண்டில்] ஏரியஸின் விவாதம் தொடங்குவதற்கு முன்னரே, குமாரன் ஏதோ ஒரு கருத்தில் தந்தைக்கு கீழ்ப்பட்டவராக இருந்தார் என்று கிழக்கத்திய சர்ச்சிலும் மேற்கத்திய சர்ச்சிலும் இருந்த இறையியல் வல்லுநர்கள் அத்தனை பேருமே கருதினார்கள்.”​—கடவுளைப் பற்றிய கிறிஸ்தவ கோட்பாட்டுக்கான தேடுதல்.

26ஆனால், பிதாவுக்கு கிறிஸ்து கீழ்ப்பட்டிருக்கிறார் என்பது மதபேதம் என்றும், “கடவுளின் அவதாரமாக” இயேசுவை வணங்குவதே சரியென்றும் மற்றவர்கள் கூறினர். என்றாலும், சர்ச்சைக்குரிய இந்தக் காலப்பகுதி (நான்காம் நூற்றாண்டு) “வெளிப்படையான மதபேத தாக்குதலை [ஏரியனிஸம்] எதிர்த்த ஒரு காலப்பகுதியாக, ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த பாரம்பரிய [திரித்துவ] கோட்பாட்டை ஆதரித்த ஒரு காலப்பகுதியாக இருக்கவில்லை. ஏனெனில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட அந்த விஷயம் ஒரு பாரம்பரிய கோட்பாடாகவே அப்போது இருக்கவில்லை” என பேராசிரியர் ஹான்சன் கூறுகிறார். அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “இரு தரப்பினருமே தாங்கள் சொல்வதற்கு வேதப்பூர்வமான ஆதாரம் இருப்பதாக நம்பினர். ஒரு தரப்பினர் மற்ற தரப்பினரை, ஸ்தாபிக்கப்பட்ட மதத்திற்கும் பாரம்பரியத்திற்கும் வேதாகமத்துக்கும் முரண்பட்டு நடப்பதாக குற்றஞ்சாட்டினர்.” திரித்துவம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் மத அங்கத்தினர்கள் முழுக்க முழுக்க பிரிவுற்றே இருந்தனர்.​—யோவான் 20:17.

27தன் ஆட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டுமென கான்ஸ்டன்டீன் விரும்பினார், ஆகவே பொ.ச. 325-ல் அவருடைய ராஜ்யத்தின் கிழக்கே கிரேக்க மொழி பேசும் பிராந்தியத்திலிருந்த நைசியா என்ற இடத்தில், பிஷப்புகளாலான ஆலோசனைக் குழு ஒன்றைக் கூட்டினார். இது கான்ஸ்டான்டிநோப்பிள் என்ற புதிய நகரிலிருந்து பாஸ்போரஸ் ஜலசந்திக்கு அப்பால் இருந்தது. சுமார் 250-லிருந்து 318 பிஷப்புகள் வரை அங்கு ஆஜராகியிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது; அன்றிருந்த பிஷப்புகளின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிட இது ஒரு சிறிய எண்ணிக்கையாக மட்டுமே இருந்தது. இவர்களில் பெரும்பாலோர் கிரேக்க மொழி பேசும் பிராந்தியத்திலிருந்து வந்திருந்தனர். போப் முதலாம் சில்வெஸ்டர்கூட இதில் கலந்துகொள்ளவில்லை. d எல்லா சர்ச் பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்யாத அந்தக் குழுவினர் காரசாரமாக விவாதம் செய்த பின் நைசியா விசுவாசப்பிரமாணத்தை இயற்றினர்; இந்தப் பிரமாணம் திரித்துவ கோட்பாட்டை பெரிதும் ஆதரித்தது. என்றாலும் கோட்பாடு சம்பந்தமான வாதத்தை தீர்த்து வைப்பதில் அதற்கு தோல்வியே மிஞ்சியது. ஏனெனில் திரித்துவ இறையியலில் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் பங்கை அது தெளிவுபடுத்தவில்லை. வாக்குவாதம் பல பத்தாண்டுகளுக்கு நீடித்தது. முடிவாக அனைவரையும் ஒத்துக்கொள்ள வைப்பதற்கு கூடுதலான குழுக்களை கூட்ட வேண்டியதாயிற்று, அதற்கு பல்வேறு அரசர்களின் செல்வாக்கு தேவைப்பட்டது, அநேகர் நாடு கடத்தப்படுவதும் அவசியமாயிற்று. அது இறையியலுக்கு வெற்றியாகவும் வேதாகமத்தைப் பின்பற்றியவர்களுக்குத் தோல்வியாகவும் அமைந்தது.​—ரோமர் 3:3, 4.

28நூற்றாண்டுகள் கடந்து சென்றபோது திரித்துவ போதனையால் ஏற்பட்ட ஒரு விளைவு, கிறிஸ்தவமண்டலத்தின் கடவுள்-கிறிஸ்து சம்பந்தப்பட்ட இறையியல் என்ற புதைகுழியில் ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவா மறைக்கப்பட்டுப் போனதுதான். e அந்த போதனையால் மற்றொரு கருத்து தோன்றியது, அதாவது, இயேசு உண்மையில் கடவுளின் அவதாரம் என்றால், இயேசுவின் தாயான மரியாள் “தெய்வத்தாயாக” இருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றியது. பல ஆண்டு காலமாக வெவ்வேறு முறைகளில் மரியாள் வழிபடப்பட்டு வந்ததற்கு இது காரணமாகி உள்ளது. ஆனால் மரியாள் எந்த முக்கிய ஸ்தானமும் வகித்ததாக வேதாகமத்தில் ஒரு இடத்தில்கூட குறிப்பிடப்படவில்லை, இயேசுவைப் பெற்றெடுத்த மனத்தாழ்மையுள்ள ஒரு பெண் என்பதாக மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. f (லூக்கா 1:26-38, 46-56) நூற்றாண்டுகள் செல்லச் செல்ல, தெய்வத்தாய் என்ற போதனையை கத்தோலிக்க சர்ச் மேன்மேலும் விரிவாக்கி மெருகூட்டியது; இதனால் கத்தோலிக்கர் பலர் கடவுளைக் காட்டிலும் மரியாளுக்கே அதிக கனத்தையும் மரியாதையையும் தருகின்றனர்.

கிறிஸ்தவமண்டலத்தின் உட்பிரிவுகள்

29விசுவாசதுரோகத்தின் மற்றொரு அம்சம் அது கிறிஸ்தவத்தில் பல பிரிவுகளையும் உட்பிரிவுகளையும் உண்டாக்கியிருப்பதாகும். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு முன்னுரைத்திருந்தார்: “நான் போன பின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” பவுல் பின்வருமாறு சொன்னபோது கொரிந்தியர்களுக்கு தெளிவான அறிவுரைகளைக் கூறியிருந்தார்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.” பவுல் இவ்விதமாக அறிவுரை கூறியிருந்தபோதிலும் விசுவாசதுரோகமும் பிரிவினைகளும் விரைவில் வேரூன்றிக் கொண்டன.​—அப்போஸ்தலர் 20:29, 30; 1 கொரிந்தியர் 1:10.

30அப்போஸ்தலர்கள் மரித்து சில பத்தாண்டுகளுக்குள் பிரிவினைகள் தோன்ற ஆரம்பித்தன. வில் டூரன்ட் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்தவர்கள் ‘அநேக பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர், ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு பிரிவை ஏற்படுத்திக்கொள்ள துடிக்கின்றனர்’ என்பதாக செல்சஸ் [இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவத்தின் எதிரி] கேலியாக குறிப்பிட்டார். சுமார் [பொ.ச.] 187-ல் ஐரேனியஸ் கிறிஸ்தவத்தில் இருபது பிரிவுகளை பட்டியலிட்டார்; சுமார் [பொ.ச.] 384-ல் எபிபேனியஸ் எண்பது பிரிவுகள் இருப்பதாக கணக்கிட்டார்.”​—நாகரிகத்தின் கதை: பகுதி III​—இராயனும் கிறிஸ்துவும்.

31கான்ஸ்டன்டீன் தன் ராஜ்யத்தின் கிழக்கே இருந்த கிரேக்க பகுதியில், அதாவது இன்றைய துருக்கியில், ஒரு பெரிய தலைநகரை புதிதாக உருவாக்கி அதை சிறப்பித்தார். அதற்கு கான்ஸ்டான்டிநோப்பிள் (இன்று, இஸ்தான்புல்) என்று பெயர் வைத்தார். இதன் விளைவாக நூற்றாண்டுகளினூடே கத்தோலிக்க சர்ச் மொழியாலும் நிலவியல் அமைப்பாலும் இரண்டாக பிளவுற்றது​—மேற்கே லத்தீன் பேசும் ரோமும் கிழக்கே கிரேக்கு பேசும் கான்ஸ்டான்டிநோப்பிளும் உருவாயின.

32இன்னமும் முழு விளக்கம் பெறாத திரித்துவ போதனையின் அம்சங்களைப் பற்றி நடைபெற்று வந்த விவாதங்கள் கிறிஸ்தவமண்டலத்தில் பயங்கர அமளியை கிளப்பின. கிறிஸ்துவின் வித்தியாசமான “இயல்புகளை” வரையறுப்பதற்காக பொ.ச. 451-ல் கால்ஸிடான் என்ற இடத்தில் மற்றொரு ஆலோசனைக் குழு கூடியது. இந்தக் குழுவின் விசுவாசப்பிரமாணத்தை மேற்கத்திய சர்ச்சுகள் ஏற்றுக்கொண்டன, ஆனால் கிழக்கத்திய சர்ச்சுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் எகிப்து மற்றும் அபிசீனியாவில் காப்டிக் சர்ச்சும், சிரியா மற்றும் அர்மீனியாவில் “ஜேக்கோபைட்” சர்ச்சுகளும் தோன்றின. புரிந்துகொள்ள முடியாத இறையியல் விஷயங்களின் பேரில், முக்கியமாக திரித்துவ கோட்பாட்டு விளக்கத்தின் பேரில் ஏற்பட்ட பிரிவினைகள் கத்தோலிக்க சர்ச்சின் ஐக்கியத்துக்கு எப்போதும் ஓர் அச்சுறுத்தலாகவே இருந்தன.

33பிரிவினைக்கு மற்றொரு காரணமாக இருந்தது உருவ வழிபாடாகும். எட்டாவது நூற்றாண்டின்போது, கிழக்கத்திய பிஷப்புகள் இந்த விக்கிரகாராதனைக்கு எதிராக கிளர்ச்சி செய்து சிலைகளை உடைத்து நொறுக்குவதில் முழுவீச்சுடன் இறங்கினர். என்றாலும், காலப்போக்கில், அவற்றை மறுபடியுமாக அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.​—யாத்திராகமம் 20:4-6; ஏசாயா 44:14-18.

34பரிசுத்த ஆவி என்பது தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வந்தது என்பதைக் காண்பிக்க மேற்கத்திய சர்ச், ஃபிலியோக்யு (“மகனிடமிருந்தும்”) என்ற லத்தீன் வார்த்தையை நைசியா விசுவாசப்பிரமாணத்தில் சேர்த்தது, இது மற்றொரு பெரிய சோதனையாக அமைந்தது. ஆறாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இந்தத் திருத்தத்தால் ஒரு பிளவு ஏற்பட்டது; “கான்ஸ்டான்டிநோப்பிளில் 876-ல் கூடிய [பிஷப்புகளின்] பேரவை போப்பை அவருடைய அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் மதபேதத்திற்கு வழிநடத்திய ஃபிலியோக்யு என்ற வார்த்தையை திருத்த தவறியதற்காகவும் கண்டனம் செய்தது. அனைத்து சர்ச்சுகளின் மீதும் தனக்கு அதிகாரமிருக்கிறது என்ற போப்பின் உரிமைபாராட்டுதலை கிழக்கத்திய பகுதி முற்றிலும் நிராகரித்ததன் ஒரு வெளிக்காட்டுதான் இந்தக் கண்டனம்.” (மனிதனின் மதங்கள்) கான்ஸ்டான்டிநோப்பிளில் இருந்த ஒரு தலைமை குருவை 1054-ஆம் ஆண்டில் போப்பின் பிரதிநிதி திருச்சபையிலிருந்து நீக்கினார், அவரோ பதிலுக்கு போப்பை சபித்தார். இந்தப் பகையின் காரணமாக இறுதியில் கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள், அதாவது கிரேக்க, ரஷ்ய, ரோமானிய, போலிஷ், பல்கேரிய, செர்பிய சர்ச்சுகளும், இன்னும் பிற தன்னாட்சி சர்ச்சுகளும் தோன்றின.

35மற்றொரு இயக்கமும்கூட சர்ச்சில் அமளியை உண்டுபண்ண ஆரம்பித்தது. 12-ஆம் நூற்றாண்டில், பிரான்சு நாட்டில் லயான்ஸ் என்ற நகரைச் சேர்ந்த பீட்டர் வால்டோ என்பவர் “தென் பிரான்சில் பேசப்பட்ட லாங்யு டாக் [ஒரு வட்டார மொழி] என்ற பாஷையில் பைபிளை மொழிபெயர்ப்பதற்கு சில அறிஞர்களை அமர்த்தினார். அந்த மொழிபெயர்ப்பை இவர் ஆர்வமாக படித்தார், அப்போஸ்தலர்களைப் போலவே கிறிஸ்தவர்கள் வாழ வேண்டும் என்றும், தனிநபர்கள் சொத்துபத்துகளை வைத்திருக்கக் கூடாது என்றும் முடிவு செய்தார்.” (விசுவாச சகாப்தம் [ஆங்கிலம்], வில் டூரன்ட் எழுதியது) பிறகு, ஓர் ஊழிய இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்; அது பிற்பாடு வால்டென்சஸ் என்றழைக்கப்பட்டது. இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், கத்தோலிக்க குருத்துவம், பாவ மன்னிப்புச் சலுகை, உத்தரிக்கும் ஸ்தலம், அப்பமும் திராட்சரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும் இரத்தமாகவும் மாறிவிடுகிறதென்ற கருத்து, பாரம்பரிய கத்தோலிக்க மதத்தின் மற்ற பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றையெல்லாம் ஏற்க மறுத்தனர். இவர்கள் மற்ற நாடுகளிலும் பரவினர். எந்த பைபிள் புத்தகத்தையும் யாரும் வைத்திருக்கக் கூடாது என்று டெளலோஸ் குழு தடை செய்ததன் மூலம் 1229-ல் இவர்களைக் கட்டுப்படுத்த முயன்றது. சடங்குகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் மாத்திரமே, அதுவும் புழக்கத்தில் இல்லாத லத்தீன் மொழியில் மாத்திரமே அனுமதிக்கப்பட்டன. என்றாலும், இன்னுமதிகமான பிரிவினைகளும் துன்புறுத்தல்களும் பிற்பாடு வரவிருந்தன.

ஆல்பிஜென்சிஸ் துன்புறுத்தப்படுதல்

36தென் பிரான்சில் 12-ம் நூற்றாண்டில் மற்றொரு இயக்கம்​—ஆல்பிஜென்சிஸ் (காத்தரி என்றும் அறியப்பட்டவர்கள்)​—தோன்றியது. இப்பிரிவினர் ஆல்பி பட்டணத்தில் அதிகமாக இருந்ததால் இப்பெயர் வந்தது. மணமாகாத குருமார் இவர்களுடைய இயக்கத்தில் இருந்தனர்; மக்கள் மதிப்பு மரியாதையோடு தங்களுக்கு வந்தனம் செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்த்தனர். கடைசி இராப் போஜனத்தின்போது இயேசு அப்பத்தைக் குறித்து, “இது என்னுடைய சரீரமாயிருக்கிறது” என்று சொன்னபோது அடையாள அர்த்தத்திலேயே பேசினார் என்பது இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. (மத்தேயு 26:26) திரித்துவக் கோட்பாடு, இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தது, நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம் ஆகியவற்றை இவர்கள் நம்ப மறுத்தனர். ஆக, ரோமிலிருந்து வந்த போதனைகளை இவர்கள் அதிகம் சந்தேகித்தார்கள். ஆல்பிஜென்சிஸ் துன்புறுத்தப்பட வேண்டும் என்பதாக போப் மூன்றாவது இன்னசன்ட் உத்தரவிட்டார். “தேவையிருந்தால் பட்டயத்தைப் பயன்படுத்தி அவர்களை அடக்கிவிடுங்கள்” என்பதாக அவர் சொன்னார்.

37“மதபேதமுள்ளோருக்கு” எதிராக ஒரு போராட்டம் நடத்தப்பட்டது, இதில் ஈடுபட்ட கத்தோலிக்க சிலுவைப் போர் வீரர்கள் பிரான்சிலுள்ள பெசியே என்ற இடத்தில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் உள்ளிட்ட 20,000 பேரை படுகொலை செய்தனர். இரத்தவெள்ளம் பெருக்கெடுத்தது; பிறகு, 1229-ல் ஆல்பிஜென்சிஸ் தோல்வியைத் தழுவியபோதுதான் அமைதி திரும்பியது. அதன்பின், நார்பான் ஆலோசனைக் குழு, “பைபிளின் எந்தப் பகுதியையும் பாமர மக்கள் வைத்திருக்கக் கூடாது என்று தடை விதித்தது.” மக்கள் தங்கள் தாய் மொழியில் பைபிளை வைத்திருந்ததே கத்தோலிக்க சர்ச்சின் எல்லா பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருந்தது.

38அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்ச்சானது, திருச்சபைக்கு மாறான கருத்துகளை அடக்க அதிகாரப்பூர்வ ஒடுக்குமுறை விசாரணையை (Inquisition) செயல்படுத்தியது. ஏற்கெனவே மக்கள் மத்தியில் மத சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருந்தது, மூடநம்பிக்கையுள்ள இவர்கள் “மதபேதமுள்ளவர்களை” விசாரணையின்றி தூக்கிலிட்டு கொல்லவும் தயாராக இருந்தனர். 13-வது நூற்றாண்டில் இருந்த நிலைமைகள், அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு சர்ச்சுக்கு சாதகமாக அமைந்தன. என்றாலும், “சர்ச்சினால் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்ட மதபேதவாதிகள் ‘அரசியல்வாதிகளிடம்’​—உள்ளூர் அதிகாரிகளிடம்​—ஒப்படைக்கப்பட்டனர், பின்பு உயிரோடு எரிக்கப்பட்டனர்.” (தி ஏஜ் ஆஃப் ஃபெயித்) குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் பொறுப்பை இப்படி உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவதன் மூலம் தன் மீது இரத்தப் பழியே இல்லாதது போல சர்ச் காட்டிக்கொள்ள நினைத்தது. ஒடுக்குமுறை விசாரணை மத துன்புறுத்தலுக்கான ஒரு சகாப்தத்தையே ஆரம்பித்து வைத்தது; துஷ்பிரயோகங்கள், பொய்யான, அநாமதேய கண்டன அறிவிப்புகள், கொலை, கொள்ளை, சித்திரவதை ஆகியவை சம்பவித்தன; அதோடு, சர்ச் கொள்கைகளிலிருந்து மாறுபட்ட கொள்கைகளை நம்பத் துணிந்த ஆயிரக்கணக்கானோர் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டனர். மத நம்பிக்கைகளைப் பற்றி தங்களுடைய கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மெய்க் கடவுளை தேடியவர்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருந்ததா? அதிகாரம் 13 அதற்கு பதிலளிக்கும்.

39கிறிஸ்தவமண்டலத்தில் இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கையில், மத்திய கிழக்கிலிருந்த ஓர் அரபியர், மத விஷயங்களில் அக்கறையற்றவர்களாயும் விக்கிரகாராதனையில் ஈடுபடுபவர்களாயும் இருந்த தன் சொந்த மக்களுக்கு எதிராக கொதித்தெழுந்தார். அவர் ஏழாம் நூற்றாண்டில் ஒரு மத இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்; நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்று அந்த இயக்கத்திற்கு கீழ்ப்பட்டும் அடிபணிந்தும் இருக்கிறார்கள். அந்த இயக்கமே இஸ்லாமாகும். அதன் ஸ்தாபகரும் நபியுமானவரின் சரித்திரத்தை எமது அடுத்த அதிகாரம் கலந்தாலோசிக்கும், அதோடு, அவருடைய போதனைகளில் சிலவற்றைப் பற்றியும் அவற்றின் ஊற்றுமூலத்தைப் பற்றியும் அது விளக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a “அழியாத ஆத்மா,” “நரக அக்கினி,” “உத்தரிக்கும் ஸ்தலம்,” “லிம்போ” ஆகிய வார்த்தைகள் பைபிளின் மூல எபிரெய மற்றும் கிரேக்க வேதாகமத்தில் எங்கும் காணப்படுவதில்லை. ஆனால் “உயிர்த்தெழுதல்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தை (அனாஸ்டாஸிஸ்) 42 தடவை உபயோகிக்கப்பட்டுள்ளது.

b எபிஸ்கோப்பாஸ் என்ற கிரேக்க வார்த்தையின் நேர்பொருள் ‘மற்றவர்களை கண்காணிப்பவர்’ என்பதாகும். லத்தீனில் அது எபிஸ்கோப்பஸ் என்றும் பழைய ஆங்கிலத்தில் அது “பிஸ்காப்” என்றும் மாற்றப்பட்டது, பிற்காலங்களில் இடைக்கால ஆங்கிலத்தில் அது “பிஷப்” என்று மாறியது.

c “In hoc signo vinces” (இந்த அடையாளத்தில் வென்று வா) என்ற லத்தீன் வார்த்தைகளோடு ஒரு சிலுவையை கான்ஸ்டன்டீன் தரிசனத்தில் பார்த்ததாக பிரபல கதை ஒன்று கூறுகிறது. “En toutoi nika” (இதோடு வென்று வா) என்ற கிரேக்க வார்த்தைகளாகத்தான் அது இருந்திருக்க வேண்டும் என சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். காலக் கணக்கில் முரண்பாடுகள் இருப்பதால் சில கல்விமான்கள் இந்தக் கதையை சந்தேகிக்கின்றனர்.

d முதலாம் சில்வெஸ்டர் பற்றி தி ஆக்ஸ்ஃபர்டு டிக்ஷ்னரி ஆஃப் போப்ஸ் இவ்வாறு சொல்கிறது: “மகா கான்ஸ்டன்டீனின் ஆட்சியில் (306-37) ஏறக்குறைய இருபத்திரண்டு ஆண்டுகள் கிறிஸ்தவ சர்ச்சில் பெரிய பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்தச் சமயத்தில் இவர் போப்பாக இருந்தபோதிலும் அன்று நிகழ்ந்து கொண்டிருந்த முக்கிய சம்பவங்களில் இவருக்கு எந்தப் பெரிய பங்கும் இருந்ததாக தெரியவில்லை. . . . கான்ஸ்டன்டீன் தனது நம்பிக்கைக்குரிய சில பிஷப்புகளுடன் சேர்ந்துதான் திருச்சபை சம்பந்தப்பட்ட கொள்கைகளை உருவாக்கினார்; ஆனால் [சில்வெஸ்டர்] இவர்களில் ஒருவராக இருக்கவில்லை.”

e திரித்துவத்தைப் பற்றிய விளக்கமான கலந்தாலோசிப்புக்கு யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற 32 பக்க சிற்றேட்டை காண்க.

f மரியாள் என்றோ அல்லது இயேசுவின் தாய் என்றோ நான்கு சுவிசேஷங்களில் மொத்தம் 24 இடங்களில் உள்ளது, அதோடு, அப்போஸ்தலர் புத்தகத்தில் ஒரு தடவை உள்ளது. அப்போஸ்தலர்கள் எழுதிய எந்தக் கடிதத்திலும் மரியாளின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

[கேள்விகள்]

1, 2. (அ) கிறிஸ்தவமண்டலத்தின் முதல் 400 வருட கால வரலாறு ஏன் மிக முக்கியமாக இருக்கிறது? (ஆ) தேர்ந்தெடுப்பதற்கான வழிகள் சம்பந்தமாக என்ன உண்மையை இயேசு வெளிப்படுத்தினார்?

3. கிறிஸ்தவம் பிறந்த காலத்தில் மக்களுக்கு முன்னால் என்ன இரண்டு வழிகள் இருந்தன?

4. சரித்திராசிரியராகிய டூரன்ட் கருத்துப்படி, புறமத ரோம் எவ்வாறு ஆரம்பகால சர்ச்சைப் பாதித்தது?

5. புறமத ரோம உலகோடு சமரசம் செய்துவிடுகிற மனப்பாங்கு எவ்வாறு ஆரம்பகால கிறிஸ்தவ புத்தகங்களில் சொல்லப்பட்டதற்கு நேர்மாறாக இருக்கிறது?

6, 7. (அ) கிரேக்க தத்துவஞானம் ஆரம்பகால சர்ச் “பிதாக்கள்” மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது? (ஆ) விசேஷமாக எந்தப் போதனைகளில் கிரேக்கரின் செல்வாக்கு தெளிவாக தெரிந்தது? (இ) தத்துவஞானத்தைப் பற்றி பவுல் என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்?

8. எது மனிதனுக்கு எப்போதுமே புரியாப் புதிராக இருந்து வந்திருக்கிறது, பெரும்பாலான மதங்கள் இதை எவ்வாறு தீர்க்க முயன்றிருக்கின்றன?

9. ஸ்பெயின் நாட்டு கல்விமான் மிகுயல் டி யுனாமுனோ, உயிர்த்தெழுதலில் இயேசுவின் நம்பிக்கையைப் பற்றி என்ன முடிவுக்கு வந்தார்?

10. ஆத்மா அழியாது என்ற நம்பிக்கையின் விளைவுகள் சில யாவை?

11, 12. (அ) விசுவாசதுரோகத்தின் மற்றொரு அடையாளம் என்னவாக இருந்தது? (ஆ) எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் வகித்த பாகம் என்ன?

13. (அ) ஆரம்பகால கிறிஸ்தவ சபைகள் ஒவ்வொன்றையும் நேரடியாக மேற்பார்வை செய்ய என்ன ஏற்பாடு இருந்தது? (ஆ) சபை மூப்பர்களின் தகுதிகள் யாவை?

14. (அ) கிறிஸ்தவ கண்காணிகளுக்குப் பதிலாக எவ்வாறு கிறிஸ்தவமண்டல பிஷப்புகள் தோன்றினார்கள்? (ஆ) பிஷப்புகளில் முதன்மை ஸ்தானத்துக்காக போட்டிபோட்டது யார்?

15. ஆரம்பகால கிறிஸ்தவ கண்காணிகளுக்கும் கிறிஸ்தவமண்டல குருமாருக்கும் இடையே என்ன மாபெரும் வித்தியாசம் இருந்து வருகிறது?

16, 17. (அ) ஆரம்பகாலத்தில் ரோமிலிருந்த சபை ஒரு பிஷப் அல்லது போப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) “போப்” என்ற பட்டப்பெயர் எவ்வாறு படிப்படியாக பயன்படுத்தப்பட்டது?

18. (அ) ஆரம்ப கால ரோம பிஷப்புகளில் முதன்முதலாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்த ஆரம்பித்தவர் யார்? (ஆ) எதன் அடிப்படையில் போப் தனது முதன்மை ஸ்தானத்தை நிலைநாட்டிக் கொண்டார்? (இ) மத்தேயு 16:18, 19-ன் சரியான விளக்கம் என்ன?

19, 20. (அ) நவீன காலங்களில் போப் எவ்வாறு கருதப்படுகிறார்? (ஆ) போப்பின் அதிகாரப்பூர்வ பட்டப்பெயர்களில் சில யாவை? (இ) போப்புகளின் நடத்தைக்கும் பேதுருவின் நடத்தைக்கும் இடையே என்ன வேறுபாட்டை காண முடிகிறது?

21, 22. கான்ஸ்டன்டீன் வாழ்க்கையில் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது, எவ்விதத்தில் அவர் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்?

23. (அ) கருத்துரையாளர் ஒருவரின்படி, கிறிஸ்தவமண்டலம் எப்போது தோன்றியது? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தை கிறிஸ்து ஸ்தாபிக்கவில்லை என்று நம்மால் ஏன் சொல்ல முடியும்?

24. கான்ஸ்டன்டீன் “மத மாற்றத்துக்குப்” பின் சர்ச்சில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

25. (அ) கான்ஸ்டன்டீன் காலத்திற்குள் இறையியல் சம்பந்தமாக என்ன சூடான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது? (ஆ) பிதாவோடு கிறிஸ்துவுக்குள்ள உறவைப் பற்றி நான்காவது நூற்றாண்டுக்கு முன் எத்தகைய புரிந்துகொள்ளுதல் இருந்தது?

26. நான்காவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் திரித்துவ போதனை சம்பந்தமாக நிலைமை எப்படி இருந்தது?

27. (அ) இயேசுவின் இயல்பைக் குறித்த விவாதத்தில் முடிவெடுக்க கான்ஸ்டன்டீன் எவ்வாறு முயற்சி செய்தார்? (ஆ) நைசியா ஆலோசனைக் குழுவில் சர்ச் எந்தளவு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருந்தது? (இ) வளர்ந்து வந்த திரித்துவ கோட்பாட்டைப் பற்றிய கருத்து வேற்றுமையை நைசியா விசுவாசப்பிரமாணம் தீர்த்து வைத்ததா?

28. (அ) திரித்துவ கோட்பாட்டால் ஏற்பட்ட சில விளைவுகள் யாவை? (ஆ) “தெய்வத்தாய்” என மரியாளை வணங்குவதற்கு பைபிளில் ஏன் ஆதாரம் எதுவுமில்லை?

29. எதைக் குறித்து பவுல் எச்சரித்திருந்தார்?

30. ஆரம்பகால சர்ச்சில் சீக்கிரத்தில் என்ன நிலைமை ஏற்பட்டது?

31. கத்தோலிக்க சர்ச்சில் எவ்வாறு ஒரு பெரும் பிளவு ஏற்பட்டது?

32, 33. (அ) கிறிஸ்தவமண்டலத்தில் பிரிவினைகளுக்கு வேறு என்ன காரணங்கள் இருந்தன? (ஆ) வழிபாட்டில் சிலைகளைப் பயன்படுத்துவது குறித்து பைபிள் என்ன சொல்கிறது?

34. (அ) கத்தோலிக்க சர்ச்சில் பெரும் பிளவு ஏற்படுவதற்கு வழிநடத்தியது எது? (ஆ) இந்தப் பிளவின் முடிவு என்ன?

35. வால்டென்சஸ் என்பவர்கள் யார், அவர்களுடைய நம்பிக்கைகள் எவ்வாறு கத்தோலிக்க சர்ச்சின் நம்பிக்கைகளிலிருந்து வித்தியாசப்பட்டன?

36, 37. (அ) ஆல்பிஜென்சிஸ் என்பவர்கள் யார், அவர்களது நம்பிக்கை என்ன? (ஆ) ஆல்பிஜென்சிஸ் எவ்வாறு அடக்கப்பட்டனர்?

38. ஒடுக்குமுறை விசாரணை என்பது என்ன, அது எவ்வாறு நடத்தப்பட்டது?

39. ஏழாவது நூற்றாண்டில் என்ன மத இயக்கம் தோன்றியது, எவ்வாறு?

[பக்கம் 262-ன் பெட்டி]

பூர்வ கிறிஸ்தவர்களும் புறமத ரோமும்

“கிறிஸ்தவ இயக்கம் ரோம பேரரசுக்குள் உருவெடுத்தபோது, புறமதத்திலிருந்து மதமாறியவர்கள்கூட தங்களுடைய மனப்பான்மையையும் நடத்தையையும் மாற்றிக்கொள்ள வேண்டிய சவாலை எதிர்ப்பட்டனர். புறதேசங்களில் திருமணம் ஒரு சமுதாய, பொருளாதார ஏற்பாடாக கருதப்பட்டது, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சி ஆண் கல்வியின் ஓர் அம்சமாக எண்ணப்பட்டது, ஆண்களும் பெண்களும் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவது சாதாரணமானதாகவும் சட்டப்படி சரியானதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மணவிலக்கு, கருச்சிதைவு, கருத்தடை, விருப்பமில்லாத சிசுக்களை [இறக்கும்படி] விட்டுவிடுதல் ஆகியவை நடைமுறையான வழிமுறைகளே என்று நினைக்கப்பட்டது; ஆனால் இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த புறமதத்தவர் இந்தப் பழக்கங்களையெல்லாம் தவறென கூறிய கிறிஸ்தவ போதனையை ஏற்றுக்கொண்டனர்; இது அவர்களுடைய குடும்பத்தினருக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.”​—எலேன் பேஜல்ஸ் எழுதிய ஆதாம், ஏவாள், சர்ப்பம்.

[பக்கம் 266-ன் பெட்டி]

கிறிஸ்தவம் Vs கிறிஸ்தவமண்டலம்

தீருவை சேர்ந்த போர்ஃபரி என்பவர் மூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி. இவர் கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தார். “தனித்தன்மை வாய்ந்த கிறிஸ்தவ மதம் தோன்றியதற்குக் காரணம் இயேசுவா அல்லது அவரை பின்பற்றினவர்களா” என்ற கேள்வியை இவர் எழுப்பினார். “இயேசு தம்மைக் கடவுளென அழைத்துக் கொள்ளவில்லை, அவர் தம்மைப் பற்றி பிரசங்கிக்கவில்லை, எல்லாருக்கும் கடவுளாக இருக்கும் ஒரே கடவுளைப் பற்றியே பிரசங்கித்தார் என்பதை புதிய ஏற்பாட்டின் அடிப்படையில் போர்ஃபரி (மற்றும் ஜூலியன் [நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோம பேரரசனும், கிறிஸ்தவத்தின் எதிரியுமானவர்]) சுட்டிக்காட்டினர். இயேசுவைப் பின்பற்றியவர்கள்தான், அவருடைய போதனையை ஒதுக்கிவிட்டு தங்கள் விருப்பப்படி ஒரு புதிய மார்க்கத்தை அறிமுகப்படுத்தி இயேசுவை (அந்த ஒரே கடவுளை அல்ல) வழிபட்டு துதித்தனர். . . . [போர்ஃபரி] கிறிஸ்தவ சிந்தனையாளர்களை கலங்கடிக்கும் ஒரு கேள்வியை சுட்டிக்காட்டினார்: கிறிஸ்தவ மதம் இயேசுவின் பிரசங்கத்தை ஆதாரமாக கொண்டிருக்கிறதா அல்லது அவர் மரித்து வெகு காலத்திற்குப் பின் வந்த அவருடைய சீஷர்கள் உருவாக்கிய கருத்துகளை ஆதாரமாக கொண்டிருக்கிறதா?”​—ரோமர்களின் பார்வையில் கிறிஸ்தவர்கள் (ஆங்கிலம்).

[பக்கம் 268-ன் பெட்டி]

பேதுருவும் போப் ஆதிக்கமும்

மத்தேயு 16:18-ல் அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் [கிரேக்கு, பெட்ராஸ்] இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் [கிரேக்கு, பெட்ரா] என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.” இந்த வசனத்தின் அடிப்படையில்தான், இயேசு தமது சர்ச்சை பேதுருவின் மீது கட்டினார் என்றும், பேதுருவின் வாரிசுகளாக தொடர்ந்து வரும் ரோம பிஷப்புகளின் வரிசையில் இவரே முதலாவதானவர் என்றும் கத்தோலிக்க சர்ச் உரிமைபாராட்டுகிறது.

மத்தேயு 16:18-ல் இயேசு குறிப்பிட்ட அந்தக் கல் யார், பேதுருவா இயேசுவா? “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என இயேசுவை அடையாளம் கண்டுகொள்வது பற்றியே அங்கு விவாதம் நடந்து கொண்டிருந்ததாக சூழமைவு காட்டுகிறது. இதை பேதுருவே ஒப்புக்கொண்டார். (மத்தேயு 16:16) ஆக, கிறிஸ்துதான் சர்ச்சின் உறுதியான அஸ்திவாரம், பிற்பாடு கிறிஸ்துவை மூன்று தடவை மறுதலித்த பேதுரு அல்ல என்பதே நியாயமான விளக்கம்.​—மத்தேயு 26:33-35, 69-75.

கிறிஸ்துவே அஸ்திவாரக் கல் என்பது நமக்கு எப்படித் தெரியும்? பேதுருவின் வார்த்தைகள் இதைத் தெரிவிக்கின்றன: ‘மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் நீங்கள் சேர்ந்திருக்கிறீர்கள்; . . . அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப் பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.’ பவுலும்கூட இவ்வாறு சொன்னார்: “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்.”​—1 பேதுரு 2:4-8; எபேசியர் 2:20.

சீஷர்கள் மத்தியில் பேதுரு முதன்மையானவராக கருதப்பட்டார் என்பதற்கு வேதாகமத்திலோ வரலாற்றிலோ எந்த அத்தாட்சியுமில்லை. அவர் எழுதிய நிருபங்களிலும் அதைப் பற்றி அவர் கூறவில்லை, (மாற்குவிடம் பேதுரு கூறியதாக தோன்றுகிற) மாற்கு சுவிசேஷம் உட்பட மற்ற மூன்று சுவிசேஷங்களில்கூட பேதுருவிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னதாக குறிப்புகள் இல்லை.​—லூக்கா 22:24-26; அப்போஸ்தலர் 15:6-22; கலாத்தியர் 2:11-14.

பேதுரு ரோமிற்கு சென்றார் என்பதற்கும் உறுதியான எந்த அத்தாட்சியுமில்லை. (1 பேதுரு 5:13) பவுல் எருசலேமுக்குச் சென்றிருந்தபோது “தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும் [பேதுரு], யோவானும்” அவருக்கு பக்கபலமாக இருந்தார்கள். எனவே, அந்தச் சமயத்தில் பேதுரு சபையின் குறைந்தபட்ச மூன்று தூண்களில் ஒருவராகத்தான் இருந்தார். அவர் “போப்”பாக இருக்கவில்லை, அவ்வாறு அறியப்படவுமில்லை, எருசலேமில் ஒரு தலைமை “பிஷப்”பாகவும் அவர் இருக்கவில்லை.​—கலாத்தியர் 2:7-9; அப்போஸ்தலர் 28:16, 30, 31.

[பக்கம் 264-ன் படம்]

கிறிஸ்தவமண்டலத்தின் புதிரான திரித்துவ முக்கோணம்

[பக்கம் 269-ன் படம்]

வத்திகன் (கொடி கீழே காட்டப்பட்டுள்ளது) உலகிலுள்ள அரசாங்கங்களுக்கு அரசியல் தூதுவர்களை அனுப்பி வைக்கிறது

[பக்கம் 275-ன் படங்கள்]

பிற்காலங்களில் உருவான திரித்துவ கோட்பாட்டுக்கு நைசியா ஆலோசனைக் குழு வித்திட்டது

[பக்கம் 277-ன் படங்கள்]

நடுவில், குழந்தையோடு நிற்கும் மரியாள், வெகு காலமாக இருந்துவந்த புற மத தேவதைகளின் வணக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது​—இடது, எகிப்தின் ஐசிஸ், ஹோரஸ்; வலது, ரோமின் மாட்டர் மாட்டுட்டா

[பக்கம் 278-ன் படங்கள்]

கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள்​—ஸ்வேடி நிகோலாஜ், சோஃபியா, பல்கேரியா; கீழே, செயின்ட் விளாடிமிர்ஸ், நியூ ஜெர்ஸி, அ.ஐ.மா.

[பக்கம் 281-ன் படம்]

எருசலேமை இஸ்லாமிடமிருந்து விடுவிப்பதற்காக மட்டுமல்ல, ஆனால் வால்டென்சஸ், ஆல்பிஜென்சிஸ் போன்ற “மதபேதமுள்ளோரை” படுகொலை செய்வதற்காகவும் “கிறிஸ்தவ” சிலுவைப் போர் வீரர்கள் ஒழுங்கமைக்கப்பட்டனர்

[பக்கம் 283-ன் படங்கள்]

கொடூரமான ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணைக்கு டாமினிக்கன் துறவி டோமாஸ் டி டார்குமாடா என்பவர் தலைமை தாங்கினார், அந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக சித்திரவதைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன